தலைப்பு

திங்கள், 5 ஜூலை, 2021

பக்தையின் தொலைந்து போன ஜபமாலையை சித்ராவதி மணலில் இருந்து மீட்ட சாயி மாதவன்!

சுவாமி அனைத்தையும் அறிபவர். சுவாமியின் திருச்செயல் யாவும் நேரத் துல்லியம் நிறைந்தது. கால இயந்திரத்தை முன்னுக்கும் பின்னுக்கும் அசைக்கும் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி தொலைந்த வாழ்வையே மீட்டுத் தருபவர்.. இதோ தொலைந்த ஜபமாலையை மீட்டுத் தரும் விசேஷ பால லீலா பதிவை வாசிக்கப் போகிறீர்கள்...  

ஆரம்ப காலங்களில் பாபா பக்தர்களை அழைத்துக் கொண்டு மாலை வேளைகளில் சித்திராவதி நதிக்கரைக்குச் செல்வது வழக்கம். அங்கே சுவாமி புரியாத திருலீலைகளை இல்லை. சித்ராவதி நதி கங்கை நதி போல் தூய்மையானது. இறைவன் தீர்த்தம்.. ஸ்தலம்.. விருட்சம் யாவையும் தேர்ந்தெடுத்தே அவதரிக்கிறார். ஷிர்டி சாயியாக கோதாவரி நதியையும் .. வேப்ப மரத்தையும் தேர்ந்தெடுத்தவர்... சத்யசாயியாக சித்ராவதியையும்... கல்ப விருட்சத்தையும் தேர்ந்தெடுத்தார்... எத்தனை மகிமைகள்.. எத்தனை லீலைகள்... எத்தனை விசித்திரங்கள்... அத்தனைக்கும் சாட்சியாய் அலையாடிக் கொண்டிருக்கிறது சித்ராவதி நதி. ஒருமுறை  ஒரு குறிப்பிட்ட நாளில், அதாவது திரு. கஸ்தூரி அவர்கள் பழைய மந்திரில் பாபாவை முதல் தரிசனம் செய்த அன்று, பாபா நதிக்கரைக்குச் சென்றார். பெரும் பக்தர் கஸ்தூரி புடம் போட்ட தங்கமாய் மாறுவதற்கு சித்ராவதியும் சாட்சியாகவே இருந்திருக்கிறது. 

அந்த நேரத்தில் பாபா பக்தர்களுக்கு அமைதி (சாந்தி) கிடைக்கும் பொருட்டு அனைவரும் ஜபம் செய்யவேண்டும் என்றார். திடீரென்று ஒரு பெண்மணியைப் பார்த்து, “நீ ஜெபம் செய்கிறாயா?” என கேட்டு விட்டு, அவரது பதிலுக்கு காத்திராமல், “நீ தான் ஜபமாலையை தொலைத்து விட்டாயே... எப்படி ஜெபம் செய்வாய்?” எனக் கேட்டு, தனது கையை மணலில் நுழைத்து ஒரு மாலையை எடுத்து “இந்தா உனது தொலைந்த ஜபமாலை” என்று கூறினார்.

தொலைந்து போன தர்மத்தை மீட்க வந்த பேரவதாரம் ஸ்ரீ சத்ய சாயி. தொலைந்த ஜபமாலையை மீட்டு ஆன்ம சாதனைக்கு மீண்டும் சாயி சுழி இடுகிறார் அந்தப் பெண்மணிக்கு. எப்பேர்ப்பட்ட கருணை!! அப்பெண்மணி அதை வாங்க வந்தார். பாபா மீண்டும், “இது எந்த ஜெபமாலை சொல் பார்ப்போம்” என சுவாமி கேட்கிறார்.  அப்பெண்மணி 4 வருடங்களுக்கு முன்பு தொலைந்த ஜபமாலை, தன் தாயார் தனக்கு இறக்கும் தறுவாயில் கொடுத்தது என்கிறார்!!

பாபா அனைவரையும் பார்த்து “இவரது தாயார் மிகுந்த பக்தியுடன் ஜபம் செய்வார்...சாதனாவும் செய்தவார்” என்றார். தனக்காக சுவாமி அம்மாலையை நதிக்கரையில் கண்டெடுத்து கொடுத்ததில் மனம் நெகிழ்ந்து போனார் அந்த பக்தை என கூறவும் வேண்டுமா??

ஆதாரம்: Sathyam Sivam Sundharam  - Vol I P 117

தமிழில் தொகுத்தளித்தவர்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர். 


🌻சுவாமியின் பெருங்கருணை என்பது நம் சிறு சிறு விஷயத்திலும் அக்கறை எடுத்துக் கொள்வது.. அப்படி எடுத்துக் கொண்டுதான் சம்சார சாகரத்திலிருந்து முக்தி எனும் அக்கரைக்கு நம்மை படிப்படியாக அன்போடு... தாயினும் பரிவான அரவணைப்போடு அழைத்துச் செல்கிறார். அது தான் ஸ்ரீ சத்ய சாயி பேரன்பு. அந்த பேரன்பிற்கு பேதம் இல்லை.. அந்த பேரன்பை விட உயர்ந்த வேதம் இல்லை. அந்த பேரன்பை காட்டிலும் பூமிக்கு வேறு போதம் இல்லை.. அவரின் பேரன்பே அத்தனை சிருஷ்டிக்கும் ஆணி வேராக ... நமது வாழ்வின் அஸ்திவாரமாக... ஆன்மீக அஸ்திரமாக அமைந்து வருகிறது!!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக