தலைப்பு

வியாழன், 1 ஜூலை, 2021

தன் கையாலேயே அறுவை சிகிச்சை செய்த தெய்வ சாயி!


உண்மையான மருத்துவர் இறைவன் ஒருவரே.. வலிகளின்றி அறுவை சிகிச்சை செய்வதென்பது இறைவனுக்கே உரித்தான கருணை.. அப்படி ஒரு அற்புத சிகிச்சையை இறைவன் சத்ய சாயி ஆற்றிய மகத்துவப் பதிவு இதோ... 

திருமதி நாகமணி பூர்ணய்யா என்கிற, பாபாவின் இளம் வயது முதலே பக்தையாக இருந்தவர், இச்சம்பவத்தை விவரிக்கிறார்.ஒரு நோயாளிக்கு பாபா அன்பின் காரணமாக அறுவை சிகிச்சை செய்தார்.. இதை விளக்குகிறார்.

 பயங்கரமாக வயிறு வீங்கிய நிலையில் ஒருவர் தன் மனைவியுடன் புட்டபர்த்தி வந்தடைந்தார். அவரால் சாப்பிட, அருந்த எதுவும் முடியாமல் படுத்த வண்ணமே இருந்தார். நாகமணி இவரை கண்ணுற்று, மிகவும் இரக்கம் கொண்டார். ஸ்வாமியிடம் கூறி அவரை குணப்படுத்துமாறு வேண்டினார்.பாபா ஒன்றுமே கூறவில்லை! மேலும் நாகமணியிடம் புன்னகையோடு தனது இடம், மருத்துவமனை அல்ல என்றார்.

ஒரு நாள் மாலையில் பாபா அனைவரையும் சித்ராவதி நதிக் கரைக்கு அழைத்துச் சென்று, அழகான கதைகள் கூறி, பஜனை பாடல்கள் பாடினார். எல்லோரும் மந்திருக்கு திரும்பியதும் பாபாவின் பாதங்களை அலம்ப நாகமணி வெந்நீர் சுட வைக்கலானார்.


 ஒருவரும் கவனிக்கா வண்ணம் பாபா, அந்த நோயாளி இருந்த அறைக்குள் சட்டென்று நுழைந்தார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து, நாகமணி தனக்கு கைகழுவ வெந்நீர் கொடுக்கும்படி கேட்டார். அந்த மங்கிய வெளிச்சத்தில், பாபாவின் வலதுகரம் ரத்தம் தோய்ந்திருந்ததையும், ஒரு பழைய வாழை இலையில் பந்துபோல் உருண்டையாக அசிங்கமான நிறத்தில் இருப்பதையும் பார்த்து விட்டார். அதை தூக்கி எறிந்துவிட்டு கைகளை அலம்பிக் கொண்டார். நாகமணியை பார்த்து, பரிகாசமாக, "நீ வற்புறுத்திக் கொண்டே இருந்ததால் இந்த இடத்தை ஆஸ்பத்திரியாக மாற்றி விட்டேன். எனவே இவருக்கு செய்ய வேண்டிய ஆபரேஷனை செய்து முடித்தேன்" என்றார்.

நாகமணி அவர்களுக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை. ஆனால் பாபாவின் வலதுகரம் ரத்தமாக இருந்ததையும் வளர்ந்திருந்த சதை உருண்டையையும் தூக்கி எறிந்ததை பார்த்ததால், உண்மையை புரிந்து கொண்டார். அது அந்த மனிதனின் வயிற்றுக்குள் வளர்ந்திருந்தது!

அவரது (நாகமணியின்) மனதை படித்தவராக ஸ்வாமி, "நீங்கள் போய் அந்த மனிதரை பார்த்து வாருங்கள்" என்று கூற, தயங்கியவாறே அந்த அறைக்குள் நாகமணி அவர்கள் சென்று பார்த்தார்கள். நோயாளி தரையில் படுத்திருந்தார். அவரது மனைவி அருகில் அமர்ந்திருந்தார். பாபா நோயாளியின் சட்டையை தூக்கி ஆபரேஷன் செய்த இடத்தை காண்பித்தார். ஆபரேஷன் பண்ணி இடத்தில் ஒரு பேண்டேஜ் கூட இல்லை. வயிற்றின் குறுக்கே கத்தியால் கீறிய இடம் நன்கு ஆறி வெறும் கோடாக தெரிந்தது.

மறுநாள் அந்த மனிதர், நாகமணி அவர்களிடம் விவரங்கள் யாவையும் கூறினார். முந்தைய நாள் மாலை பாபா வந்து தன் கைகளைக் காற்றில் வீச, ஒரு கத்தி மற்றும் சில கருவிகளை வரவழைத்தார். விபூதியை என் நெற்றியில் பூச அது மயக்க மருந்தாக வேலை செய்து விட்டது! நான் மயக்கமாகி விட்டேன். நான் கண்விழித்தபோது, ஸாயி என்னிடம் எல்லாம் நன்றாக ஆகிவிட்டது என்றார். ஆபரேஷன் முடிந்ததும் கை விரல்களாலேயே காயத்தை மூடி விட்டார். அதன்மீது விபூதியை தூவ,சதை சேர்ந்து கொண்டு விட்டது. உடனே ஆறியும் போய்விட்டது. பாபாவின் அன்பு ஒன்றாலேயே இத்தகைய நிகழ்வுகள் நிகழ்கின்றன என்று நாகமணி உணர்ந்துகொண்டார்.
                   
ஆதாரம்: SAI BABA: Man of Miracles by Howard Murphet 
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 

🌻 பக்தர்களே! இறைவன் சத்ய சாயி பாதம் ஒன்றே நமக்கான மாமருந்து... அதுவே எந்த கொடிய அகம் மற்றும் புறத் தொற்றிலிருந்தும் நம்மை பாதுகாக்கும். இறைவன் சத்யசாயி நாமத்தை உச்சரிப்பதும்.. அவரின் விபூதியை அகம் மற்றும் புறத்தில் இடுவதுவமே  நமக்காக அவர் ஆற்றும் வலிகளில்லா அறுவை சிகிச்சை. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக