மருமகனும் மகளும் அமெரிக்காவில் வசதியாக செட்டில் ஆக...1988ல் இந்தியாவின் மும்பையில் (அப்போது பம்பாயில்) பெரிய கம்பெனியை நிறுவி தொழில் செய்ய நிரந்தரமாக வருகிறார்கள்.
26 ஏப்ரல் 1993ல் டெல்லியை சுற்றிப் பார்க்க மும்பையிலிருந்து பயணமாவதற்கு முன் தனது பிள்ளைகளை தந்தையின் சகோதரி வீட்டில் விட்டுவிட்டு செல்கிறார்.. ஔரங்காபாத் விமான நிலையத்தில் ஃபிளைட் கிளம்புகையில் (Indian Airlines -- 491 -- Take off) விபத்துக்குள்ளாகிறது... 55 பேர் இறக்கிறார்கள்.. 63 பேர் தப்பிப் பிழைக்கிறார்கள்.
அதில் அவரின் மருமகனுக்கு பலத்த காயம். கால் கையில் பெரும் சேதம். உயிர் போகிற நிலைமை. உடனே அவர் மருமகனை காப்பாற்ற வேண்டி சுவாமியை தரிசிக்க விரைகிறார். சுவாமி அவரை தனிப்பட்ட வகையில் சந்திக்காமல் 30 ஆண்டுகள் கழித்து வா எனச் சொல்லி கடந்து விடுகிறார். சுவாமி சொல்லியது அவருக்கு மிக மென்மையாக கேட்டதால் 20 ஆண்டுகள் என தவறாக புரிந்து கொள்கிறார்.
அவரும் வெறுங்கையோடு திரும்ப அவரின் மருமகனின் ஒரு கால் அகற்றப்படுகிறது.. மேலும் அவருக்கு சரியாகப் பேசும் இயல்பும் போய்விடுகிறது. சுவாமி தன் சொல்லைக் காப்பாற்றவில்லை என்ற கோபம் அவருக்கு... சுவாமி இறைவனே இல்லை என்று சுவாமி படங்களை எல்லாம் கோவலில் வீசிவிடுகிறார். ஆனால் முப்பது வருடம் கடந்து வருவேன் என தான் அன்று அவரிடம் சொன்னதை அப்போதே அவரது மகளின் கனவில் வந்து மீண்டும் முப்பது என செய்கை காட்டி உறுதி செய்திருக்கிறார். அதை அவரிடம் அவரது மகள் சொல்லிய போதும்.. இருபது ஆண்டுகள் கடந்தே வரவில்லை.. முப்பது ஆண்டுகள் கடந்து வந்துவிடுவாரா? என்ற சந்தேகக் கனலில் இப்போதும் இருக்கிறார். இருபது அல்ல முப்பது ஆண்டுகள் எனவும் அவர் இன்றுவரை புரிந்து கொள்ளவில்லை. அந்த சந்தேக கனலின் தகிப்பு என்னையும் சுட்டது. மனதிற்குள் இவரின் அறியாமையை நினைத்து நொந்து கொண்டேன்.
சுவாமி தான் தன் ஒரே மகளுக்கு திருமணம் புரிந்து வைத்தது .. கடைசியில் இப்படி ஆகிவிட்டதே என கர்மக் கணக்கை இன்றளவும் புரிந்து கொள்ளாமல் கொந்தளிப்புடன் இருக்கிறார். அன்றே தனிப்பேட்டி தராமல் மீண்டும் பல ஆண்டுகள் கடந்து வரச்சொல்லிவிட்டு இப்படி சமாதி ஆகிவிட்டாரே என்ற அதிர்ச்சி வேறு அவரை வாட்டிக் கொண்டிருக்கிறது. ஒன்றை அனைவரும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்... பொதுவாக....
கொடூரமான கர்மாவின் வீர்யத்தை தனது பக்தர்களுக்காக சுவாமி குறைக்கவே செய்கிறார். அதை நூறில் பத்து பேராவது உணர்கிறார்களா? தெரியவில்லை.
மூன்று சாயி அவதாரமும் ஒன்று தான்.. சுவாமி முப்பது ஆண்டுகள் என்றபோது அது பிரேம சுவாமியை குறிப்பிடுகிறது என்பதை அவர் கிஞ்சித்தும் உணராததை எண்ணி வருந்தினேன். சுவாமி தனது அடுத்த அவதார விஜயத்தை பற்றி எண்பதுகளிலேயே வெட்ட வெளிச்சமாய் சொல்லி இருக்கிறார். பிரேம சுவாமியின் திருவுருவத்தையும் சிருஷ்டித்திருக்கிறார். இது சிறு குழந்தைக்கும் தெரியும். ஆயினும் அவர் சுவாமி சொன்ன வார்த்தையை நம்ப மறுக்கிறார் என்றால் இது தான் பக்தியா?
இன்று கிளம்பாதே நாளை கிளம்பு என அவரின் மகளுக்கு திருமணம் நடந்த புதிதில் சுவாமி சொன்ன சொல் மட்டும் உண்மை.. அதற்கு பிறகு சுவாமி சொன்ன சொல் பொய்யா? என்ன மாதிரியான அறியாமை இது!
விதவை ஆக வேண்டிய அவரின் ஒரே மகள் இன்னமும் சுமங்கலியாக இருப்பது சுவாமியால் என இதுவரை ஏன் அவர் உணரவில்லை என ஆச்சர்யப்பட்டேன்.
அவரின் குடும்பத்தில் ஒருவர் பாக்கி இல்லாமல் சுவாமி அனைவருக்கும் கருணை காட்டி இருக்கிறார். அந்த விஸ்வாசமே அவருக்கு இல்லை என வருத்தப்பட்டேன்.
சுவாமி கனவில் வருவது கனவல்ல நிஜம். இதுவும் நாம் உணர்ந்ததே.. மகளுக்கு வந்த கனவையும் நம்ப மறுக்கிறார் என்றால் அவரின் புரிந்துணர்வை என்ன சொல்வது?
இப்படியே அமெரிக்க சாயி தம்பதியான ஜெயந்தி மோகனுக்கு சுவாமி கனவில் வர "நான் உன் வீட்டிற்கு வருவேன்.. வந்து தங்குவேன்" என்று சுவாமி சொன்ன அந்த ஒரே சொல்லுக்காக இந்த நொடி வரை... 18 வருடங்களாக காத்திருக்கிறார்கள். கடைத் தெருவுக்குப் போனால் தனக்கென எதையும் வாங்கிக் கொள்ளாமல்.. சீப்பு என்றாலும் சரி செருப்பு என்றாலும் சரி.. பல விலை உயர்ந்த பொருட்கள் வரை இது சுவாமிக்கு நன்றாக இருக்கும் என பார்த்துப் பார்த்து வாங்கி வைத்து சுவாமிக்காக காத்திருக்கிறார்கள்.. இது பக்தியா? அது பக்தியா? என்றே நினைக்கத் தோன்றியது.
வாழும் கலை நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருதேவரும் சுவாமி விரைவில் சென்றதால் விரைவில் திரும்புவார் என்பதனை தன் இணைய தளத்திலேயே பதிவு செய்திருக்கிறார்.
சுவாமி சொல்லி ஒரு விஷயம் நடந்து அதற்கு பின் வருவது பக்தியா? சுவாமி ஒரு விஷயம் சொல்லி அது நிகழாமல் போயினும் அவர் மேல் விடாப்பிடியாக மனம் நிலைத்திருப்பது பக்தியா?
நாம் தெளிவாக உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவரின் மருமகனைப் பார்த்துக் கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை.. எந்தப் பொருளாதாரத் தடையும் இல்லை... கவனிக்கும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை.
நாம் ஜென்ம ஜென்மமாய் செய்த கர்மா எப்போதும் நம்மை கொஞ்சிக் கொண்டே இருப்பதில்லை என்பதனை நாம் புரிந்துணர வேண்டும். தங்கத்தை கொஞ்சிக் கொண்டே இருந்தால் எப்படி நகையாகும்?
சுவாமி இறைவன். இறை சங்கல்பத்தை மனிதனால் எப்படி உணர்ந்து கொள்ள முடியும்? மகான்களாலேயே அதனை புரிந்து கொள்ள முடியாது. சுவாமியின் சங்கல்பமே இந்த பூமியும்.. நம் வாழ்க்கையும்.. நமது கர்மாவை அனுபவிக்கவே நாம் பூமியில் வருகிறோம்... அதில் சுவாமியின் சொல்படி நாம் நடந்தால் மட்டுமே நம்முடைய வாழ்க்கை சுத்தீகரிக்கப்படுகிறது.
சுவாமி தன்னையே தியாகம் செய்தவர். அவர் அவதாரம் செய்ததே அதற்குத் தானே.. பக்தர்களுக்காக இன்றி ஒரு நொடி கூட சுவாமி தனக்காக வாழ்ந்ததே இல்லை.. அப்படி சுயநலமாக வாழவேண்டுமானால் அவர் ஏன் அவதாரங்கள் எடுக்க வேண்டும்?
அவர் பாம்பணையிலேயே கால்நீட்டி திருமாலாய் என்றும் திகழ்ந்திருக்கலாம். அவர் பூலோக மனிதர்களோடு மல்லு கட்ட வேண்டிய அவசியமே இல்லை.
மனதை பக்குவப்படுத்தி ஆன்மாவை தூய்மைப்படுத்தவே துயரம் எல்லாம் நிகழ்கிறது என்பதை மனிதர்கள் உணர்கிறார்களோ இல்லையோ சுவாமி பக்தர்களாவது உணர வேண்டும்.. அறுவை சிகிச்சை செய்த பிறகு "அய்யய்யோ வலிக்கிறதே... நீ எல்லாம் டாக்டரே இல்லை" என மருத்துவர்களிடம் நாம் சொல்வதே இல்லை...ஆனால் துயர சம்பவம் நிகழ்ந்தால் மட்டும் "அய்யய்யோ.. இப்படி ஆகிவிட்டதே... நீ எல்லாம் இறைவனே இல்லை!" என சுவாமியிடமே சொல்கிறோம்.. நாம் எல்லாம் என்ன பக்தர்கள்?!
சுவாமி ஏற்கனவே நமக்கு ஏராளமாய் செய்த மகிமைக்கே... புரிந்த கருணைக்கே நன்றிக்கடன் செலுத்துவதாக இருந்தால் இந்த ஒரு ஜென்மமே போதாது... அப்படி இருக்கையில் மாயையில் சிக்கிய அறியாமை மனம் எதற்கு எடுத்தாலும் குறைபட்டுக் கொண்டே இருக்கிறது. சுவாமி சொல்லிய உபதேசங்களை நாம் தெளிவுற கடைபிடித்தால் போதும்... வராத மனப் பக்குவமும் தானாக வந்துவிடுகிறது. அப்போதே ஏன்? என்று வளையும் கேள்விக்குறி எல்லாம் ஆம்! என்ற ஆச்சர்யக்குறியாக நிமிர்வதற்கான ஞானம் வாய்க்கிறது. அதை நோக்கியே வாழ்க்கை நகர்ந்தாக வேண்டும். எல்.கே.ஜி'யிலேயே எத்தனை ஆண்டுகள் படித்துக் கொண்டே இருப்பது? நாம் ஆன்மீக பி.எச்.டி முடிக்க வேண்டாமா?
நிச்சயம் இதை அவர் என்றாவது ஒருநாள் வாசிப்பார் என்ற சுவாமி மேல் அடியேன் கொண்ட நம்பிக்கையில் இதனை பதிவிடுகிறேன். என்ன உலகம் இது என கோவிலை விட்டு திரும்பினேன்... தூரத்திலிருந்து ஒரு பாடலின் சரணத்தில் ஒரு வரி காதுகளில் ஒலித்தபடியே குமரிக் காற்று என் மிதிவண்டியின் பின்னால் அமர்ந்தபடி வந்தது...
"....…........ நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்!"
நானோ "சாயி புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்" என்று பாடியபடி வீடுவந்து சேர்ந்தேன்!!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக