தலைப்பு

வியாழன், 29 ஜூலை, 2021

லிங்க அபிஷேக நீரால் தொழு நோயாளிகளை குணப்படுத்திய விநோத மருத்துவர் பாபா!

அன்னையர் கூட சில நேரங்களில் தமது பிள்ளைகளில் பேதம் காட்டலாம். ஆனால் ஆயிரம் அன்னைக்கு இணையான பாபாவின் பார்வையில் பக்தர்கள் அனைவரும் சமமே. பணம், பதவி, படாடோபம்  இவை அல்ல பாபா பார்ப்பது. குணம், உதவி, எளிமை இவைகளே பாபாவை ஈர்ப்பது.


🌹கடவுளாகிய பாபாவை ஈர்க்கும் காந்தம்  - சேவை:

நம்மில் பெரும்பான்மையோருக்கு ஒரு சந்தேகம். பலர் அதை மனதில் பூட்டி வைத்திருப்பர். சிலர் வெளிப்படையாக கேட்டதும் உண்டு. பாபா பிரபலங்களை அதிகமாக அருகில் அழைத்து அரவணைத்து அவர்கள் வீடுகளுக்கு  செல்வதுபோல் சாமானியர்களையும் தமது அண்மையில் அனுமதித்து அவர்கள் இல்லங்களுக்கு செல்வாரா? இதற்கான விடையை பாபா அவர்களே கூறுகிறார். அதைக் கேட்டபின் மேலோட்டமான இந்த கேள்வியின் அபத்தம் நமக்கு விளங்கும். பிறகு நாம் பாபாவின் பேதமற்ற அன்பை வியந்து அடி பணிவோம்.  வாருங்கள்,  இது சம்பந்தமான ஒரு நிகழ்வையும், அதற்கான பாபாவின் விளக்கத்தையும் காண்போம்... 

யாரும் அணுகிச் சென்று சேவை புரிய விரும்பாத பெருநோயாளியர்(lepor) இருக்கும் ஒரு காலனி, ஹைதராபாதில் இருந்தது. ஆனால் சாயி சேவாதளத் தொண்டர்கள், பகவான் அருளால், பிறவி என்னும் பெருநோயைக் கடக்க, அங்கு சென்று சேவையில் ஈடுபட்டனர். அதோடு மட்டுமல்லாமல் அந்த நோயாளிகள் சிலரை அழைத்துக் கொண்டு பகவான் பாபாவின் தரிசனம் காண வந்தனர். தன்னலமற்ற சேவை ஆற்றும் அந்த சேவாதளத் தொண்டர்களின் செயல் கண்டு, மனம் நெகிழ்ந்த பாபா தரிசனமும் தந்து, அனைவரையும்( நோயாளிகளையும் சேர்த்து) நேர்காணலுக்கு அழைத்தார். அனைவரிடமும் அளவளாவிய ஸ்வாமியின் அன்பு கண்டு உருகிய அந்த நோயாளிகளில் ஒருவர் , மனம் தாளாமல் கேட்ட ஒரு கேள்வியும் அதற்கான பாபாவின் பதிலும்தான் என்ன?

ஸ்வாமி நீங்கள் ஹைதராபாத் வரும் போது , எங்களது காலனிக்கு ஒருமுறை கூட வருகை தரவில்லை. ஆனால் மந்திரிகள், கவர்னர் போன்ற மிக முக்கியமானவர்கள் இல்லம் தானே தேடி செல்கிறீர்களே ஏன்? இதற்கு பகவான் கூறிய நெகிழ்ச்சியான பதில். பங்காரு, நான் உங்களை, அவர்களை விட அதிகமாக நேசிக்கிறேன். உண்மையில் உங்களைப் போன்ற  எளிய வர்களின் சேவையில் அவர்களின் மனதை திருப்பவே , அவர்களிடம் செல்கிறேன். அதில்  யாராவது ஒருவர் மனதில் மாற்றம் ஏற்படுத்திவிட்டால் கூட, அவர்கள் கீழ் பணிபுரியும் அனைவரும் மனம் மாறி, எளிய, உங்களைப் போன்ற,மக்களுக்கு உதவுவார்கள் அல்லவா.? நான் அடுத்தமுறை உங்கள் காலனிக்கு அவசியம் விஜயம் செய்கிறேன். பாபாவின் இந்த விளக்கம் கேட்டு, மனம் நெகிழ்ந்த அவர்கள்  ஸ்வாமியைப் பணிந்தனர்.


🌹அபிஷேக தீர்த்தமே அருமருந்து:

பிறகு அந்த  காலனி  மற்றும் நோயாளிகளின் நிலைமை பகவானிடம் விவரிக்கப்பட்டது. அதைக் கவனமுடன் கேட்ட பகவான், தமது கைஅசைவில் ஒரு சிவலிங்கத்தை சிருஷ்டித்து அளித்தார். கருமை நிறத்திலான அச்சிவலிங்கம் உடலில் வெண்புள்ளிகளோடு தோற்றம் அளித்தது. அந்த சிவலிங்கத்தை அவர்கள் குடி இருக்கும் காலனியில்  இருக்கும் குடிநீர் தொட்டியின் மெயின் குழாயில் பொருத்தச் சொன்னார் பாபா. அதிலிருந்து வீடுகளுக்குச் செல்லும் இணப்பு குழாய்களின் வழியாக, சிவனின் அபிஷேக தீர்த்தம் எல்லா வீடுகளையும் அடையும். அதை அவர்கள் உபயோகிக்க, உபயோகிக்க, அவர்களின் தீராத பெருநோய் தீரும் என பாபா விளக்கி அனுக்ரஹித்தார். 

பாபா கூறியபடி  அந்த பவித்ர சிவலிங்கத்தை மெயின் குழாய்க்குள் வைத்து பருத்தி, அதன் அபிஷேக தீர்த்தம் அனைத்து வீடுகளுக்கும் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டது. அந்த புனித அபிஷேகத் தீர்த்தத்தை அவர்கள் உபயோகித்த ஆரம்பித்த பிறகு, அந்த சிவலிங்கத்தின் மேல் இருந்த வெண் புள்ளிகள்  மெல்ல மெல்ல மறையத் தொடங்கி , முற்றிலுமாக அழிந்தன.  இந்த விந்தை நிகழ்வின் கூடவே பாபாவின் பெருங்கருணையால் அனைத்து தொழு நோயாளிகளும் தமது கொடிய நோயிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டு, பிறகு முற்றிலும் பூரண குணம் அடைந்து மகிழ்வுற்றனர். ஒரு கையசைவில், விபூதி சிருஷ்டித்து உடனடியாக பாபா அவர்களை குணப் படுத்தி இருக்க இயலும். ஆனாலும் அவர்களது கர்ம வினைகளை இப் பிறவியிலேயே அனுபவித்து முடிக்க பாபா திரு உள்ளம் கொண்டார் போலும். ஆகவே தான் இந்த அபிஷேக சிகிச்சை .

ஆதாரம்: 90 Divine Interactions - (Collection of Divine Interactions that Bhagawan Sri Sathya Sai Baba had with the youth) 

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 


🌻எங்கள் இல்லங்களுக்கு வாருங்கள் பாபா  என்ற கோரிக்கையைத் தான் அந்த துயருற்ற பிணியாளர்கள் வைத்தனர். ஆனால் கருணைக் கடலான பாபா அவர்களின் தீராப் பிணியையும் தீர்க்க திருவுள்ளம் கொண்டார்.தம்மை நோக்கி ஓரடி எடுத்துவைத்த அவர்களின் பக்தியை மெச்சி நூறடி எடுத்துவைத்து பிணி தீர்த்து அருளினார். பாபா அனைவருக்குமானவர் என்ற உண்மைமை இந்த அற்புத சம்பவம் நமக்கு விளக்குகிறதல்லவா?🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக