தலைப்பு

வியாழன், 8 ஜூலை, 2021

ஸ்ரீ சத்ய சாயி பற்றி பிரபல அமெரிக்கன் நியூஸ்வீக் பத்திரிகை!


50 வருடங்களுக்கு முன் அமெரிக்காவின் பிரபல நியூஸ்வீக் பத்திரிகை சத்ய சாயி பாபாவைப் பற்றி வியந்து வெளியிட்ட செய்தியின் தொகுப்பு இதோ... 

இறைவன் சத்ய சாயியின் அற்புதங்கள்.. லீலா விநோதங்கள் எல்லாம் தொகுத்து எழுதிட ஆகாயமே பத்திரிகையாக மாறினாலும் பக்கங்கள் தீராது எனும் பரம சத்தியம் எப்போதுமே வியக்க வைக்கிறது.

அண்டம் பகிரண்டம் அனைத்துமே ஆண்டவன் அற்புத களியாட்டமே அது ஆனந்த நடமாட்டமே... ஆதவன் கிரணங்கள் அங்கிங்கெனாதபடி ஒளிவீசி பரவிநிற்கும். அம்புலியின் தண்ஒளியும் அவ்வாறே மனம் மயக்கும். அதுபோன்றே நம் சாயிநாதரின் புகழ் இந்த நிலவுலகெங்கும் பரவி நிலைத்து நிற்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்த வகையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகை.. நியூஸ்வீக்.. 50 ஆண்டகளுக்கு முன்னதாக நமது பகவானைப்  பற்றி ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது . அதன் பதிவு இணையத்தில் இல்லை. ஆயினும் அன்பர் முயற்சியால் அதன் பிரதிகிடைக்கப் பெற்று பதிவுக்கு வந்துள்ளது.

பகவானது 44வது பிறந்த நாள்(1969)
இதை ஒட்டி  .. நியூஸ் வீக்...பத்திரிகை தனது  17.11.1969  பதிப்பில் வெளியிட்டுள்ள கட்டுரை. 




ஒரு இந்திய புனிதரின்... வியத்தகு செயல்கள்:

சத்ய நாயாயணன் பிறந்த போது இல்லத்தில் இருந்த தம்புரா தானாக இசை எழுப்பியது. குழந்தை படுத்திருந்த துணியின் அடியில் ஒரு நாகம் அசைந்து நெளிந்ததாக அவரது அன்னை ஈஸ்வராம்பா கூறினார். சிறு வயது முதற்கொண்டே பாபா தமது தெய்வீகத்   தன்மையை உணர்த்தி இருக்கிறார். நமது வேத நூல்களின் மேல் ஆழ்ந்த அன்பை வெளிப்படுத்தி   இருக்கிறார். தம்முடைய 13 வது வயதில் பள்ளிப் படிப்பை துறந்த பாபா அன்னையிடம் கூறியதாவது. "நான் சாயிபாபா. உங்கள் சத்யா அல்ல.நான் ஆற்றவேண்டிய பணிகள் பல காத்திருக்கின்றன. என் பக்தர்களும் எனக்காக ஏங்கி காத்திருக்கின்றனர். சென்று வருகிறேன். வியாழக்கிழமைகளில் என்னை வழிபாடு செய்யுங்கள்." இவ்வாறு கூறி பாபா வீட்டைவிட்டு வெளி வந்தார். 


தெய்வீகம்:

அவரை அப்போது நாடிவந்த பக்தர்கள்.. பாபா ஒரு நடமாடும்  கடவுள் என்று   உணர்ந்து வழிபட்டனர். இந்தியாவில்   இது போன்ற குருமார்கள் ஏராளமாக உண்டு ஆனால் பாபா அவர்களிடமிருந்து வேறுபட்டவர். தனித்துவம் வாய்ந்தவர். அவர் பகவான்  ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரமாகவே அறியப்படுகிறார். அந்த செய்தி தொகுப்பு மேலும் கூறுவதாவது...... ஒளி பொருந்திய கண்களும், மணி ஓசை போன்று இனிமையாக ஒலிக்கும் குரலும், சுருட்டை முடியும் கொண்ட 42 வயதான பாபா, பல அற்புதங்களை நிகழ்த்த வல்லவர் என அவரது பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர். நோய்களை குணமாக்குதல், நேரத்தையும் தூரத்தையும் கடக்கும் ஆற்றல் போன்ற பல வியத்தகு சக்திகளை அவர் பெற்றுள்ளார். அவரது பிறந்த நாள் விழாவில் 50000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடுகின்றனர். 

முன்னாள் இந்திய பாதுகாப்பு துறையின் தலைமை விஞ்ஞானி. திரு டாக்டர்  பகவந்தம்

இந்திய பாதுகாப்பு துறையின் தலைமை விஞ்ஞானி டாக்டர்  பகவந்தம் பாபாவைப் பற்றி இவ்வாறு கூறுகிறார். "பாபா விஞ்ஞானத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர் அவர்  ஒரு  தெய்வீக   தத்துவம். உண்மையில் அவர் ஒரு அவதார புருஷர் " பாபாவின் அற்புதங்கள் பலதரப்பட்டவை. அவற்றில் சில.... ஒருவழக்கறிஞ்ஞரின் நோயை( parkinson disease) கை அசைவில் குணமாக்கியது... கன்னியாகுமரி கடற்கரையில் அவர் நடந்து சென்றபோது, அவரது ஒவ்வொரு காலடியின் அடியிலும் ஒரு ஜெப மணி தோன்றச் செய்தது..... ஆற்று மணலை குவித்து அதிலிருந்து  சந்தன மரத்திலான கிருஷ்ணர் சிலையையும்  , பகவத் கீதை புஸ்தகத்தையும் எடுத்து தந்தது. ......பெட்ரோல் தீர்ந்ததால் நின்று போன காரை தண்ணீர் ஊற்றி ஓட வைத்தது.... சந்நியாசியாக வேடமிட்டு தம்மிடம் வந்த ஒரு கொலையாளியின் மனதை மாற்றி   போலீஸில் சரணடையச்     செய்தது.... தரையில் விழுந்து நொறுங்க இருந்த விமானத்தின் விமானியை (சார்லஸ் பென்)காப்பாற்றியது. ....தனக்கு வரவழைத்துக் கொண்ட பக்கவாத நோயை  பாபா எவ்வாறு குணப்படுத்திக் கொண்டார் என்பதையும் இந்த செய்தி தொகுப்பு கூறுகிறது.

பக்கவாதம்:

1963 ம் ஆண்டு. பாபாவின் இடதுபுற உடல் உறுப்புகள் செயலிழந்து பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இந்த நிலை ஒருவார காலம் நீடித்தது. பாபா எந்தவித மருத்துவ சிகிச்சைக்கும் உடன்படவில்லை.


பிறகு  தம்மை  தம்  பக்தர்கள் கூடியிருந்த ஹாலுக்கு அழைத்துச் செல்ல கட்டளையிட்டார். அவரால் நடக்க இயலாததால் ஒரு நாற்காலியில் அமரவைத்து அழைத்துச் சென்றனர். பக்தர்களின் கண்ணீர் பெருக்குக்கு இடையில் , பாபா தம் தொண்டரிடம் ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து வர பணித்தார். தமது வலது கையை  அதில்   இட்டு   உடலின் இடதுபுற பாகத்தில் தண்ணீரை தெளித்துக்கொண்டார். நாற்காலியில் வைத்து கொண்டுவரப்பட்டவர் ஒரு நொடியில் எழுந்து  நின்றார். பக்தர்களின் கரகோஷத்திற்கிடையே பாபா கூறியதாவது. "ஒரு பக்தரின் இந்த உபாதையை நான் ஏற்றுக் கொண்டேன். அவருக்கு கடுமையான இதய நோயும் நான்கு முறை  மாரடைப்பும்   ஏற்பட்டது. அவரால்   இந்நோயிலிருந்து மீண்டிருக்க  முடியாது." பாபாவின் இந்த அற்புதங்கள் அவரின் இறைத்    தன்மையை உறுதி செய்கின்றன. எதையும்  ஆராய்ந்து விஞ்ஞானக் கண் கொண்டு நோக்கும் மேலை நாட்டவரும் பாபாவின் சர்வ வியாபகத் தன்மையைக் கண்டு வியந்துள்ளனர். மெய்ஞானம்   ஆராய்ச்சிக்கு உட்பட்டதல்ல  அது உணரத்தக்க ஒன்று.


பாபா தமது தெய்வீகத்தை சிறு வயது முதலே வெளிப்படுத்தினார். பள்ளி நண்பர்களுக்கு பேனா , பென்சில் மற்றும் புத்தகங்களை கை அசைவில் வரவழைத்து அவர்களை வியப்பில் ஆழ்த்தினார். ஆசிரியர் ஒருவரை நாற்காலியிலிருந்து சிறிது நேரம் எழ முடியாமல் அமர வைத்தார். பாபவின் தினசரி வாழ்க்கை பிரமிப்பானது. காலையில் பிரம்ம முகூர்த்தத்தில்  எழும் அவர் தம் பக்தர்களை ஆன்மீக துதிப் பாடல்களை இசைக்க வைக்கிறார். ( ஓம்காரம் சுப்ரபாதம் நகர் சங்கீர்தனத்தை குறிப்பிடலாம்). அதன்பின் தம்மை தனிமைப் படுத்திக் கொள்கிறார்.அவரது ஆகாரமாக பாலும் சிறிது இனிப்பும் உட்கொள்கிறார். ஒவ்வொருநாளும் சிலரை தேர்வுசெய்து  ( Interview ) அவர்களுடன் உரையாடுகிறார். தினமும் காலையிலும், மாலையிலும் அவரது மாணவர்கள் பஜன் என்னும் இறைவன் நாம சங்கீர்த்தனம் செய்கிறார்கள். மாணவர்களுக்கு அவர் கூறும் நல் ஒழுக்க  உபதேசமாவது.. தூய்மையான வாழ்க்கை... அமைதியைக் கடைபிடித்தல்... பிறர் பற்றி புறம் பேசாமை... தெய்வீக நூல்களை பயிலுதல்... ஆகியவை ஆகும். மேலும் பாபா ஒரு போதும் அன்பளிப்பையோ நன்கொடைகளையோ ஏற்பதில்லை.


பாபா காட்டும் வழி:

மேலை நாட்டவர் பாபாவின் அற்புதங்களை நம்பாமல் போகலாம்.ஆனால் அவரது போதனைகளின் தாக்கத்தை குறைத்து மதிப்பிட இயலாது. பாபா கூறுவதாவது... "எனது அவதார நோக்கமே தர்மத்தை நிலைப்படுத்துவதுதான். உலகத்தோர் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி வாழ நான் உபதேசிக்கிறேன்." பாபா உபதேசங்கள், புனித நுல்களின் சாரமும், வாழ்க்கையின் யதார்த்த உண்மைகளும்  கலந்து   இதயத்தில் பதியுமாறு இருக்கும். ஒரு சமயம் பாபா கூறியதாவது.. உலகத்தின்மீது  அதீத  பற்று வைக்காதீர். அது பித்தர்களாலும் குறை மதியாளர்களாலும்  நிறையப் பெற்றது. உலகை உன் பயிற்சி களமாக்கி ஆன்ம விடுதலையை நாடு. இவ்வுலக நாடகத்தையும், அதன் இயக்குனரையயும், சற்றே விலகிநின்று கவனி.

பாபாவின் ஆகர்ஷணம்:

பாபாவின் ஈர்ப்பு அவரது அற்புதங்களிலோ, அவதாரம் எனப்படுவதிலோ இல்லை. நம்பிக்கையை விதைக்க அவர், மனித நேயம் மற்றும் மனித  மனத்தை ஈர்த்து செயல் படுகிறார். அவரது பக்தர்களில் ஒருவரின் கூற்று.. "பாபா என் கடவுள்.  அவர் ஒரு  தெய்வீக சக்தி. வேறென்ன வேண்டும்."

ஆதாரம் : 17 நவம்பர் 1969 நியூஸ்வீக் இதழ்.  
தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.

🌻 இறைவன் சத்ய சாயியை பரிபூரண பரம்பொருள் என முழுமையாக உணர்ந்தவர்கள் பாக்கியசாலிகள். அவர்கள் எதற்கும் பயப்படுவதும் இல்லை.. எதை குறித்தும் கவலைப்படுவதும் இல்லை.. அதற்கான சாட்சியமாக இதயம் எனும் காகிதங்களால் பக்தி எனும் பேனாவினால் அனுபவம் எழுதும் பத்திரிகையே இதர பத்திரிகைகளை விட உயிரோட்டமானது. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக