ஏன் மாணவனுக்கு ஒன்றல்ல இரண்டு ஜோடி காதணிகள் சுவாமி சிருஷ்டித்து தர வேண்டும்? அதன் பின்னணி சம்பவம் என்ன? என்பது சுவாரஸ்ய பதிவாக இதோ...
ஒரு முறை தரிசனத்தின் பொழுது, கேரளாவில் இருந்து வந்த படிக்கும் மாணவன் ஒருவன் முகத்தைத் தொங்கப் போட்டு அமர்ந்திருந்தான். கவலை எப்போதுமே வலை போல் மனதை பிடித்து இழுத்தபடி இருக்கிறது. மன பாரங்களை விழி ஈரங்களே பறைசாற்றுகின்றன.. அவன் சுவாமியைப் பார்த்தவாறு, ஆழ்ந்த யோசனையில் இருந்தான் சுவாமி அவனிடம், “ஏன் விளக்கெண்ணெய் போல் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறாய்?” என்று வினவியவாறே ஒரு ஜோடி காதணிகள் சிருஷ்டித்துக் கொடுத்தார். மீண்டும் இன்னொரு ஜோடி வரவழைத்து, அதே பையனிடம் கொடுத்தார். ஒரு ஜோடி காதணிக்கு இன்னொரு ஜோடி காதணியும் பெற்றுக் கொண்டான் அந்த அதிர்ஷ்ட மாணவன். ஆண் பிள்ளைக்கு எதற்கு அதுவும் இரண்டு ஜதை காதணிகள் என வியந்தனர். Prof. அனில்குமார் கேட்டே விட்டார்,
எனக்கு 3 பெண் குழந்தைகள், “எனக்கு கொடுத்தாலும் உபயோகமாக இருக்குமே!” ஆனால் சுவாமியோ "யாருக்கு, ஏன் எதை, எப்பொழுது, எங்கு கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்" என்று கூறினார். ஆம் ! சுவாமிக்கு மட்டுமே நன்று தெரியும் எதை எப்போது எதற்காக எவருக்கு கொடுக்க வேண்டும் என்பது... அதன் படியே அவரவர் வாழ்க்கை அமைகிறது. மேலோட்டமாக பார்த்தால் மனிதனே அனைத்தையும் சாதிப்பது போல் தோன்றும்.. ஆனால் மிக ஆழமாகப் பார்த்தால் சுவாமியே அவரவர் கர்மா படி அனைத்தையும் இசைவிக்கிறார். ஓடும் தேரில் சக்கரங்களே பார்வைக்கு வெளியே சட்டென தெரிகின்றன.. ஆனால் அது அசைவதற்கு பிடிமானமான அச்சாணி வெளியே தெரிவதில்லை.. அது போலவே சுவாமி சங்கல்பமும்... மேலும் சுவாமி எதனால் அந்த இரண்டு ஜோடி காதணிகளை சிருஷ்டித்து அளித்தார் என்பதை விளக்கினார். “இவனது தாயார் 2 பெண் குழந்தைகளை விட்டு விட்டு இறந்துவிட்டாள். பெண்கள் இருவருக்கும் காதணிகள் செய்ய ஆசைப்பட்டாள், அது நிறைவேறவில்லை! எனவே தான் தாயாக இருந்து அந்த ஆசையை நிறைவேற்றுகிறேன்” என்றார். உண்மையை செயல் வடிவில் வெளிப்படுத்தலே உண்மையான தாயன்பு எனப்படும். இதை உணர்ந்த மாணவர்கள் சுவாமியின் கருணையை எண்ணி கண்களில் நீர் பெருக்கினர்.
ஆதாரம்: Vidya Giri, Divine Vision, P 143
தமிழில் தொகுத்தளித்தவர்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர்
🌻பிரிந்த போன தாயின் கடைசி ஆசையை என்றும் பிரியாத மிகப் பிரியமான சத்ய சாயி தாய் நிறைவேற்றினாள் என்றால் அது தான் தெய்வ சுவாமியின் பிரம்மாண்ட பேரன்பு... சுவாமிக்கே அனைத்தும் தெரியும் என்பதால் அவரிடம் சரணாகதி அடைவது மட்டுமே நமது செயலாக இருக்க வேண்டும்.. அவர் முன் கோரிக்கை வைப்பதல்ல... நம் ஆழ்மனதில் அகலமான சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் ஆண்டவ சுவாமி அனைத்தையும் நடத்துகிறார்.. ஆகவே கவலையின்றி... பாரமின்றி... முகமலர்ச்சியோடு அகமலர்ச்சியை நோக்கி ஆத்ம சாதனை புரிய வேண்டும்!!! 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக