தலைப்பு

திங்கள், 5 ஜூலை, 2021

தியான நிலையில் இருக்கும்போது நம்முடைய எண்ண ஓட்டத்தை எப்படி குறைப்பது?

பக்தர் கேட்டவை பாபா அருளியவை

ஹிஸ்லாப்: எண்ண ஓட்டங்கள் நம்முடைய ஒருமுக தியான நிலையில் குறுக்கிடுகின்றன. எண்ண ஓட்டத்தை எப்படி குறைப்பது?

பாபா: சிந்தனை செய்வது என்ற பழக்கம் வெகு காலமாக இருந்து வருகிறது. இப்பழக்கத்தை ஒதுக்கி விட்டாலும். அதை மெள்ளவே நிறுத்த முடியும்.
உதாரணமாக ஒரு மின்விசிறியின் பொறியை அணைத்து விட்டால் கூட,அது சிலகணங்கள் சுழன்று கொண்டே இருக்கும். ஆனால் எண்ணத்தொடரை மாற்ற முடியும்.  ஒரு எண்ணத்தொடர், மற்றொரு எண்ணத்தொடரை நிறுத்தி விட முடியும். இதில் மிகவும் நல்ல வழி, நம் எண்ண ஓட்டத்தை ஆன்மீக விஷயங்களுக்கு மாற்றுவதாகும். இறைவனுக்கான இந்த ஈடுபாடு இயல்பானதாகும். அது பிறந்த இடத்திற்கு திரும்புவதாகும். மற்ற எல்லா ஈடுபாடுகளும், நம்மால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவைகளாகும்.விலை மதிக்கவொண்ணா ரத்தினங்கள் இழைக்கப்பட்ட ஒரு தங்கத் தொட்டியில் மீனை வைத்திருந்தாலும், அதற்கு அந்தத்தங்கத்திலும், ரத்தினங்களிலும் எதுவும் விருப்பம் கிடையாது; அது விரும்புவதெல்லாம் மறுபடி கடலைச் சேருவதே. மனிதன் தன்னுடைய குடியிருப்பிலிருந்து, வரம்புகளுக்குட்பட்ட வாழ்வுக்கு வருகிறான். அவன் உண்மையில், இயற்கையிலேயே, தெய்வத் தன்மை உடையவன்;அவனே ஆனந்த சாகரம். அவனே எல்லோரையும் வசீகரிக்கும் ராமன்.ஆத்மா நம்மைக் கவருகிறது. மனித உருவில் வந்த ஆனந்தசாகரமான இறைவன் ராமனுடன் ஒவ்வொருவரும் நெருக்கமாக இருக்கவும், அவனை தரிசித்துக் கொண்டே இருக்கவும் விரும்பினர்.


ஹிஸ்லாப்: நன்று ஸ்வாமி! ஒருவேளை, எண்ணங்களை ஒருவன் உள்முகமாக பின்தொடர்ந்து, அதன் உற்பத்தி ஸ்தானத்திற்கு சென்று, எண்ணங்களின் மூலக்கூறை கவனித்தால், பிறகு ஒருவனுக்கு அமைதியான மனம் கிட்டுமா? உலக விவகாரங்களில், எண்ணங்கள் ஒரு அவசியமான, மற்றும் நடைமுறைக்கு தேவையான ஒன்றாகும். ஆனால் சிந்திப்பது என்பது அவசியமில்லாத பொழுதுகூட மனம் அவசியமற்ற எண்ணங்களை தோற்றுவித்து, இயங்கிக்கொண்டிருக்கிறது; உண்மையில் மனது சலனமற்று அமைதியாக இருந்தால் அதனால் அம்மனிதனுக்கு எவ்வளவோ சிலாக்கியமாகும்.

பாபா: இந்த பிரச்சினையை அணுகுவதற்கு, இது உண்மையில் ஒரு தவறான வழியாகும். ஒரு எலியின் இயற்கை எப்பொழுதும் எதையாவது கொறித்துக்கொண்டே இருப்பதாகும். ஒரு பாம்பின் இயற்கை எப்பொழுதும் எதையாவது கடித்துக் கொண்டே இருப்பதாகும்.அம்மாதிரியே மனதின் இயற்கை எப்பொழுதும் அமைதியின்றி இயங்கிக் கொண்டிருப்பதாகும்.  எப்பொழுதும் செயல்படல் மனதின் இயற்கை. அமைதியாக இருக்கும்பொழுது கூட மயிலின் தோகையைப் போல, ஒரு சிலிர்ப்பு, புலனாகாத ஒரு இயக்கம் மனதில் இருந்துகொண்டே இருக்கும். அமைதியான வைகறைப் பொழுதில் கூட ஒரு aspen மரத்தில் இலைகள் நடுங்குவது போலவும், அசைவது போலவும் தோற்றமளிப்பது போல, பொருட்களை பற்றிக் கொண்டு மேய்ந்து கொண்டிருப்பது, மனதின் இயற்கையாகும். ஆகையால் மனதை சரியாக செலுத்தும் வழி என்னவென்றால், அதன் செயல்பாட்டை நல்ல காரியங்களுக்கு திருப்புவதும், நல்லவற்றை எண்ணுவதும், கடவுளின் நாம ஜெபமும், மனதை தீய விஷயங்களை நோக்கி செலுத்தாமல் இருப்பதும், தீய எண்ணங்களை முளைவிடாமலும், தீய காரியங்களை செய்யாமல் இருப்பதுமாகும். அவ்வழியில், மனதின் இயற்கை குணமான ஓய்வில்லா செயல்படலுக்கு ஒரு வடிகாலாக அமைவதுடன், அது தீய வழியில் செல்லாமல் தடுக்கப்படுகிறது. மனதை தீயவழி நடவாமல் திருப்ப வேண்டியதற்கான மற்றொரு முக்கிய உபாயம், பணிசெய்து கொண்டிருப்பதாகும். மனிதன் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது. ஒருவன் இறைவனின் சேவையில் ஏதோவொரு விதமாக கடுமையாக உழைப்பை மேற்கொண்டால், அப்பொழுது மனதிற்கு உபயோகமற்ற, சம்பந்தமற்ற எண்ணங்களை வளர்த்திக் கொண்டிருக்க காலம் இருக்காது. இம்மாதிரி சமூகத்தில் செய்ய வேண்டிய பணி இல்லாவிட்டால், தியானம் செய்தல், இறைவனின் நாம ஜபம், நல்ல நூல்களைப் படித்தல், நன்மக்களுடன் அளவளாவுதல், இன்ன பலவழிகளில் காலத்தை உபயோகிக்க வேண்டும். கடவுளிடம் சரணாகதி அடைவதென்பது ஒரு கடினமான காரியமாக தோன்றினாலும், ஒவ்வொரு மனிதனும் காலத்திடம் சரணாகதியாகிறான். காலமே கடவுளாகும். ஒவ்வொரு நாளும், ஒருவனின் வாழ்க்கை சுருங்கி வருகிறது. ஒருவன் தன் வாழ்வை காலத்திற்கு அர்ப்பணிக்கிறான்.   காலம் ஒருவனின் வாழ்க்கையை வெற்றி கொள்கிறது. அக்காலமே கடவுளாகும். ஆகையால் முதலில் பணி செய்தல், பிறகு விவேகம், பிறகு அன்பு; இத்தொடரில் ஒரு காலகட்டத்தில், ஒருவன் வாழ்க்கையில், பணியே அன்பாகவும், அல்லது அப்பணியே கடவுளாகவும் ஆகும்.


ஹிஸ்லாப்: ஆனால் பிறிதொரு நாள் ஸ்வாமி சொன்னது "மனது அமைதியாகவும், ஈடுபாட்டுடன் இருந்தால், அப்பொழுது ஸ்வாமியே மனதிற்குள் வந்து பேசுவார்" என்பதாகும்.

பாபா: ஸ்வாமியுடன் பேச வேண்டும் என்ற விருப்பம் தீவிரமாகவும், பலமாகவும் இருந்தால், அப்பொழுது மனது ஸ்வாமி வந்து பேசுவதற்கான அளவு அமைதி அடையும்; ஆனால் இதில் பிரச்சினை என்னவென்றால், நம் வாழ்க்கையில் அம்மாதிரி தீவிர விருப்பம் இல்லாதது தான்.

ஹிஸ்லாப்:  மன இயக்கத்தை தாமதப்படுத்துவதான புத்தரின் வழிக்கு,பர்மாவில்  மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது. இதைவிட சிறந்த முறை ஸ்வாமியிடம் இருக்கவேண்டும்

பாபா: சுவாசமானது,நாசியில் நுழைவதையும், வெளியேறுவதையும் கவனிப்பதென்ற புத்தரின் முறை, தியானம் செய்ய ஆரம்பிக்குமுன் ஒரு சில நிமிடங்களே அனுசரிக்க வேண்டிய ஆரம்ப முறையாகும். மனதை சமனப்படுத்த இதைவிட 'சிறந்த' முறை எதுவுமில்லை. அந்த ஒரே ஒரு முறையே இருக்கிறது. தியானத்தில் உட்காருமுன் எழும் கேள்வி "எவ்வளவு காலம் உட்கார வேண்டும்" என்பதாகும். இதற்கு ஒரு விடை இல்லை. குறிப்பிட்ட கால அளவு எதுவுமில்லை. தியானம் எனப்படுவது உண்மையில் நாள் முழுதும் நீடிக்கும் ஒரு வழிமுறையாகும். சூரியன் பிரகாசிக்க, சூரிய ஒளி இங்குமங்குமாக விழுகிறது. சூரியனுக்கும் அதன் ஒளிக்கும் என்ன பேதம் இருக்கிறது?


ஹிஸ்லாப்: இதில் பேதம் எதுவும் இல்லை ஸ்வாமி


பாபா: அம்மாதிரியே எல்லாமே இறைவன். எண்ணங்கள், விருப்பங்கள் எல்லாமே இறைவன். எண்ணங்கள் யாவும் இறைவனாக, கருதப்பட வேண்டும்.

ஹிஸ்லாப்: ஆனால் ஸ்வாமி, மனதின் செயல் வேகத்தை தாமதப்படுத்துவது எப்படி என்ற பிரச்சினை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

பாபா: உண்மையில் மனது என்பதே இல்லை; என்ன வேண்டும் என்ற விருப்பங்களே அது. இறைவன் ஒருவனே நம் விருப்பம் என்ற நிலையில், எல்லாமே நன்றாகி விடும்.

ஹிஸ்லாப்: ஆனால் தியானம் செய்யத் தொடங்கும் பொழுது, எண்ணங்களும், அதன் உருவகங்களும், மனதின் கண்மாயில் துள்ளிப் பாய்கின்றன. தியானம் சலனமில்லாமல் இருக்க வேண்டி, இந்த ஓட்டத்தை தாமதிக்கச் செய்வது அவசியமல்லவா?

 
பாபா:  ஆம்! மனது தன் இயக்கத்தை தாமதிக்கச் செய்ய வேண்டும். ஒரு நிலையில் அது நின்றுவிடும். தியானத்தில் எழும் விருப்பத்தை, இறைவனுடன் சேருவதற்கான வழியில் செலுத்தினால், மனது இயற்கையாக அமைதியாகும். இதற்கான வழிமுறைகள் எதையும் உபயோகிக்கக்கூடாது. இதில் பலவந்தம் எதையும் உபயோகிக்கக்கூடாது. விருப்பம் எதுவும், மிகவும் வேகமாகவோ, பலமாகவோ எழக்கூடாது. இறைவனுக்கான விருப்பம் கூட மிகவும் பதட்டமாகவும், துரிதமாகவும் இருக்கக்கூடும். முன்பே தொடங்கி, மெதுவாக இயங்கி,பத்திரமாக சேரவேண்டும். மிகுந்த சோம்பலும் கூடாது. வேகத்துடன் துவங்கி பின் தாமதமாகச் செல்வது கூட தீமை பயக்கும். நிதானமே பிரதானம்.

ஆதாரம்: பகவானுடன் உரையாடல்  என்ற புத்தகத்திலிருந்து... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக