தலைப்பு

செவ்வாய், 27 ஜூலை, 2021

தடியால் கை ஓங்கிய தந்தையை எதிர்த்து அதட்டிப் பேசிய ஒரு ஊமை பக்தை!


முடவரை நடக்க வைக்க... ஊமையைப் பேச வைக்க... இப்படி பலவித பிரச்சனைகளுக்கு சுவாமி தனியாக சிகிச்சை தர வேண்டிய அவசியமே இல்லை... பிறகு எவ்வாறு குணமாகும் என்பதற்கான உன்னத பதிவு இதோ...

சுவாமி அனைவரின் உடல் மற்றும் மன உபாதைகளும் அறிவார். அவை எதனால் வந்ததெனும் காரணமும் அவருக்கு தெரியும். ஆகவே என்ன வகை கர்மா .. எவ்வகையான கர்ம சமன் செய்தால் அது தீரும் ... அதற்காக பக்தர்களிடம் ஏதாவது கொடுப்பினை இருக்கிறதா? என்பதும் சுவாமி அறிகிறார் என்பதால் பக்தர்கள் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.. அவ்வாறே இருந்தாள் கர்நாடகாவை சேர்ந்த ஒரு பக்த பெண்மணி. கர்நாடகாவின் சிறு கிராமம் ஒன்றில் பிறந்தவள் அவள். 


ஷிர்டி சுவாமியின் தெய்வீக இருப்பை சுமந்து பேறு பெற்ற மராட்டியம் போல்... நம் சுவாமியின் தெய்வீக பிறப்பை சுமந்து சாபம் தீர்ந்த துவாபர யுக கோகுலமான பர்த்தி போல்... பிரேம சுவாமியின் பூரணம் ஏற்ற அதே கர்நாடகம் தான் இவள் பிறந்ததும். ஆனால் ஊமை. ஒரு விபத்தில் ஊமையானாள். தாய் இல்லை. தந்தை மட்டும் தான். தாய் இல்லா பிள்ளைகள் வளரும் பாடு பெரும்பாடு. அவர்களை வளர்க்கும் பாடும் பெரும்பாடே... தாய்ப்பாச ஏக்கமில்லாமல் வளர்ப்பது மிகவும் கடினம். ஆனால் இவளின் தந்தை தாயுமானவராகவும் இருந்தார். பொதுவாக தாயில்லாப் பிள்ளையை தேடிப் போய் அடைக்கலம் தருவார் சுவாமி. அப்படி அபயம் தந்ததில் இவளும் சுவாமி பக்தையானாள். 
       
உலகில் பணம் சம்பாதிப்பதை விட பக்தியை சம்பாதிப்பதே கடினம் என்கிற வகையில் பக்தியில் அரிதாய் தோய்ந்தாள் இவள். ஊமைக்கான பிரார்த்தனையின் ஊற்றுக் கண் மனமே... அவர்களால் எப்படி வாய் விட்டு பஜனை பாட முடியும்? அஷ்டோத்திரம் சொல்ல முடியும்? கண்களின் கண்ணீரே வார்த்தையற்றவர்களின் உன்னத வார்த்தைகள். எனவே மனதிற்குள் மட்டுமே வேண்டுவாள். சுவாமி இதயவாசி. வாய் விட்டு சுவாமியிடம் எதையும் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அப்படி கேட்டால் தான் சுவாமி அருள்வார் என்றால் இவளைப் போன்றவர்களால் என்ன செய்ய முடியும்? இவளின் வழிபாடுகள் எல்லாம் அந்தரங்கமானதாகவே இருந்தன...


ஒருமுறை இவளின் தந்தை வேலை மாற்றலாக பெங்களூர் வருகிறார். பெங்களூரில் தான் வொயிட் ஃபீல்ட் இருக்கிறது.. இப்போது சுவாமி அங்கே தான் வந்திருக்கிறார்.. அதுவும் அவளின் குடியிருப்புக்கு அருகே... இவளோ ஓசையின்றி சுவாமியை தரிசிக்க வேண்டும் என முடிவு செய்கிறாள். காரணம் சுவாமியை இவளின் தந்தைக்கு சுத்தமாக பிடிக்காது. கர்நாடகாவில் இருந்த போதே சமிதிக்கு செல்வதை கண்டித்திருக்கிறார். பெங்களூரோ புது இடம். அனுமதி கேட்டால் தருவாரா? தோட்டக்காரனின் அனுமதியை வாங்கிவிட்டா பூக்கள் பூக்கின்றன? பக்தி ஒரு பூ. வீட்டில் தான் வீசுவேன்... நந்தவனத்தில் வீச மாட்டேன் என காற்று சொல்லுமா? அவ்வாறே காற்றாய் இந்த ஊமைப் பூ சுவாமியை தரிசிக்க தந்தைக்கு தெரியாமல் தினந்தோறும் சென்று வருகிறாள். ஒரு நாள் தெரிந்து விடுகிறது. மின்னலையும் பக்தியையும் மறைத்து வைக்கவே முடியாது. ஆகையால் இவள் தந்தை மிகவும் கோபப்படுகிறார். கண்டிக்கிறார். தண்டிப்பேன் என மிரட்டுகிறார். 
எதற்கும் அஞ்சவில்லை இவள். எதற்கும் கலங்கவில்லை. மீரா அஞ்சினாளா? அரண்மனையை விட்டு கோவிலில் வசிக்க பயந்தாளா? இல்லை. பக்திக்கு பயமே இல்லை. தந்தையின் சொல்லை சட்டை செய்யாத இவளின் தினந்தோறுமான சுவாமி தரிசனம் நிற்கவே இல்லை...


ஒருநாள் சுவாமி தரிசனம் முடித்து விட்டு வீட்டிற்கு விரைந்து கொண்டிருக்கிறாள். வாசலிலேயே கடுங்கோபத்துடன் கையில் தடியோடு மகளை அடிப்பதற்காக காத்திருக்கிறார் தந்தை. வீட்டு வாசலுக்கு வந்து இவள் நேருக்கு நேராக தந்தையை எதிர் நோக்குகிறாள். "உன்னை என்ன செய்கிறேன் பார்" என கையில் வைத்த தடியை அவர் ஓங்க... உடனே இவள்
"என்னை ஏதாவது செய்தால் ... என் சுவாமியிடம் நான் சொல்லிவிடுவேன்" என சத்தம் போடுகிறாள்.
தடி கீழே விழுகிறது.. கண்களில் கண்ணீரும் சேர்ந்து விழுகிறது. தன் ஊமைப் பெண் பேசுகிறாளே என அவருக்கு ஒரே ஆச்சர்யம். அவளின் உதட்டிலிருந்து வந்த வார்த்தைகளை எண்ணி அவளுக்கே வியப்பாக இருந்தது. அவளும் சுவாமியின் கருணை எண்ணி கண் கலங்குகிறாள். தந்தை ஆரத்தழுவி மகளிடம் மன்னிப்பு கேட்க... பாஷை தந்த பகவானை நினைந்து இருவரும் ஏற்றி வைத்த மெழுகாய் உருகுகிறார்கள். 
அன்றுமுதல் அவள் தனியாக சுவாமி தரிசனம் செய்யச் செல்லவே இல்லை. தந்தையும் அவளுடன் இணைந்து கொள்கிறார்.

(ஆதாரம்: பகவான் பாபா / பக்கம் : 43 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமணியம்) 

மேலே விவரித்த இந்தப் பெண்ணின் பேசா தன்மையை சுவாமி தனியான எந்த வகையிலும் சரியாக்க வில்லை. வெறும் அவரின் திவ்ய தரிசனமும்.. இவளின் விடாப்பிடியான பக்தியும் மட்டுமே அதை சாதித்தது. மற்றவருக்கோ அல்லது உற்றவருக்கோ பயந்து பயந்து பக்தி செய்வது பக்தியே இல்லை என்பதை பேச்சு வந்த இந்த ஊமைப் பெண் உணர்த்துகிறாள். யார் என்ன நினைத்தால் என்ன? யார் என்ன சொன்னால் என்ன? என கவலைப்பட்டு தன் பக்திக்கு அவள் கடிவாளமே வகுக்கவில்லை. பிறரின் அபிப்ராயம் பக்தி இதயத்திற்கு ஒரு பொருட்டே இல்லை. பக்தி அனைத்தையும் சாதிக்கும். பக்தியே சுவாமிக்கான படையல் எல்லாம்...

   பக்தியுடன்
வைரபாரதி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக