தலைப்பு

வெள்ளி, 16 ஜூலை, 2021

சரி செய்யவே முடியாத உடைந்த முழங்காலை ஒரே ஒரு ஸ்பரிசத்தால் குணமாக்கிய சாயி!


பாலபட்டாபி பழம்பெரும் சுவாமி பக்தர். அசைக்க முடியா நம்பிக்கையை சுவாமி மேல் வைத்திருக்கும் ஆத்மார்த்த பக்தர். மருத்துவரால் கைவிடப்பட்ட அவர் மனைவியின் உடைந்த முழங்காலை சுவாமி சரிபடுத்திய அதிசயம் பதிவாக இதோ...     

1960களில் எண்ணற்றோர் சுவாமியை தரிசித்த வண்ணம் இருந்தனர். பொருளாதாரத்தில் எளிமையானவர்கள் முதல் வசதியானவர்கள் வரை சுவாமி எல்லோரையுமே ஒன்றாக பாவித்தார். சுவாமியை சாட்சாத் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா என உணர்ந்தவர்கள் பழங்காலத்து ஆத்ம பக்தர்கள். 

சுவாமியின் அருகாமையில் இருந்தாலும் சுவாமியின் பௌதீக தொடர்பை விட்டு தூர இருந்தாலும் பக்தியில் கிஞ்சித்தும் குறைவே இல்லாதவர்கள் அவர்கள். பலர் சந்தேகம் தெளிவு பெற்றும் சரணாகதி அடைந்தவர்கள். உள்ளக் கசடை நீக்குவதற்கே உயர் அவதாரம் நேர்கிறது என உணர்ந்தவர்கள். அப்படிப்பட்டவர்களில் பாலபட்டாபியும் ஒருவர்.   

1968ல் பட்டாபியின் மனைவியின் முழங்கால் எலும்பு முறிந்துவிட்டது.  அது ஒரு மல்டிபிள் ஃப்ராக்சர் (பல இடங்களில் உடைந்து விட்டிருப்பது) என்பதால், மேலும் வயதாகிவிட்டதால் எலும்பு சேருவது கடினம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.  பட்டாபி பர்த்திக்கு விரைந்து சென்றார்.  பாபாவை தரிசித்தார்.  ஆனால் விஷயத்தைக் கூறும் முன்பாக, பாபாவே “நான் அவசரமாக பாம்பே போய்க்கொண்டிருக்கிறேன்.  எல்லாம் சரியாகி விடும்” என்றார்!

20 நாட்கள் கடந்து விட்டன. எந்த முன்னேற்றமும் இல்லை!  எனவே பட்டாபி மனைவியை பர்த்திக்கு அழைத்துச் சென்றார். ஒவ்வொரு நாளும் தரிசனத்தின் போதும் நாற்காலியில் உட்கார வேண்டி இருந்தது. மிகுந்த சிரமத்துடன் அதே சமயத்தில் சுவாமி மேலான நம்பிக்கையுடன் அமர்ந்து சுவாமிக்காக காத்திருந்தார்.  உண்மையான பக்தி ஒருவருக்கு இருக்குமானால் சுவாமிக்கான காத்திருப்பில் சலிப்பே இருப்பதில்லை பல்லாண்டுகள் ஆனாலும் சரி.. பல ஜென்மம் ஆனாலும் சரி... சலிப்பும் ஏற்படுவதில்லை.. பக்தியும் குறைவதில்லை... அப்படி சலிக்காது காத்திருந்தது பாலபட்டாபி குடும்பம்.  

ஒரு வாரம் கழித்து பாபா அருகில் வருகிறார், அதுவரை தூர தரிசனமே தருகிறார்.. அவர் நெருங்குகையில் பட்டாபி மனைவியின் உள்ளம் உணர்ச்சியால் கொப்பளித்து கண்கள் குளமாகிறது.. வலி ஒரு புறம்... தீர வேண்டுமே என வேதனை ஒரு புறம்.. என்ன நேருமோ என்ற அங்கலாய்ப்பு ஒருபுறம்.. ஆனால் முப்புறத்தையும் எரித்தவர் அல்லவா சுவாமி... ஆக சுவாமி நெருங்கிவர... பட்டாபி மனைவியின் முழங்காலைத் தொடுகிறார். அந்த கருணை ஸ்பரிசம் ஒருகோடி சஞ்சீவி மூலிகைக்கும் மேலானதாக ஸ்பரிச சிகிச்சையை செய்கிறது.. அப்பெண்மணியின் கைளைப் பிடித்துக் கொண்டு எழுந்து நடக்கச் சொன்னார்.  சுவாமியின் அந்த சொல்.. அந்த ஒரே சொல்.. அதுவே உள்ளத்தில் உந்து சக்தியை ஏற்படுத்துகிறது... அப்பெண்மணியும் நடக்கத் தொடங்கிவிடுகிறார்! பாலபட்டாபியின் மனைவிக்கு தன்னையே நம்ப முடியவில்லை...ஆச்சர்யப்பட்டே ஒவ்வொரு அடியையும் அளந்து வைக்கிறார்... பாலபட்டாபி சுவாமி கருணையால் நிறைந்து போகிறார். மேலும் சுவாமி அவர்கள் இருவரையும் 1 வாரம் தங்கச் சொல்லி, பிறகு நிறைந்த ஆசிகளுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்.

ஆதாரம்: R Bala பட்டாபி - Nectarine Leelas of Bhagawan Sri Sathya Sai Baba – P119

தமிழில் தொகுத்தளித்தவர்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர். 


🌻சுவாமியின் ஒரே ஒரு ஸ்பரிசம்... தீர்க்க முடியாத பிரச்சனையை தீர்த்தது. சுவாமியின் ஒரே ஒரு ஸ்பரிசம் மட்டுமல்ல.. ஒரே ஒரு பார்வையே போதுமானது.. அது நம்மை சுத்தீகரிக்கிறது. சுவாமிக்கான சலிப்பற்ற ஆத்மார்த்த காத்திருப்பும்.... திடம் கலந்த ஆழமான பக்தியும் வீண் போவதே இல்லை.. நமக்கு தேவை எல்லாம் மன சுத்தீகரிப்பே... நமக்கு சுவாமி என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியல் இடுவதை விட்டுவிட்டு சுவாமிக்காக நாம் என்ன என்ன செய்ய வேண்டும்... எதை எதை தியாகம் செய்ய வேண்டும் என்பதில் மும்முரமாக அதுவும் இக்காலக்கட்டங்களில் இருப்பது மிக மிக அவசியம்!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக