தலைப்பு

செவ்வாய், 6 ஜூலை, 2021

EP 9: நாடிகள் போற்றும் நாயகன் சாயி! | இடைக்காடர் மகரிஷி நாடி & அகஸ்திய மகா சிவ நாடி

5000 ஆண்டுகளுக்கும் பழமையான ரிஷிகளின் ஞானத்தில் உதித்த பிரபஞ்ச ரகசியங்களை... ஓலைச்சுவடிகளில் அவர்கள் பதிந்ததை நாடிகளாக பாதுகாத்து வருகிறோம்... அதில் இறைவன் சத்ய சாயி பற்றி அத்தகைய இதிகாச ரிஷிகள் தியானத்தில் உணர்ந்ததை பல்வேறு நாடிகளில் பதிவு செய்திருக்கின்றனர்.. அந்த நாடிகளின் வரிசையில்... இடைக்காடர் மகரிஷி நாடி மற்றும் அகஸ்திய மகா சிவ நாடியை தான் வாசிக்கப் போகிறோம் இந்தப் பகுதியில்.... 


✋ நாடிகள்:

கடிகார நொடிகள் துடிப்பதிலிருந்து காலம் நகர்கிறது...மணிக்கட்டு நாடிகள் துடிப்பதிலிருந்து வாழ்க்கை நகர்கிறது. ஆக வாழ்க்கைக்கும் காலத்திற்கும் பெரிய சம்மந்தம் இருக்கிறது. 


ரிஷிகளின் ஞானப் பொக்கிஷங்களை நாடிகள் என அழைப்பதற்கான காரணம் காலத்திற்கும் வாழ்க்கைக்கும் இறைவன் இடும் சூட்சும முடிச்சுகளுக்குள் பொதிந்திருக்கும் காட்சிகளை முன்பே கண்கூடாகக் கண்டு மூன்று காலத்திற்கும் அவர்களே சாட்சியாக இருக்கிறார்கள். இறைவன் இயக்குநராக இருக்கிறார். ரிஷிகள் சாட்சிகளாக இருக்கிறார்கள். அதிலும் இறைவனே அவதாரம் எடுக்கையில் இவர்களின் நாடிப் பதிவுகளை ஆன்மீக இதயத் துடிப்புகளாகவும்... தெய்வீக நாடித் துடிப்புகளாகவும் அதை வாசிக்கும் போதே நம்மால் உணர முடிகிறது!


🌹இடைக்காடர் மகரிஷி:

இடைக்காடர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர்... 

இடைக்காடர் சித்தர்

இடைக்காடு என்ற ஊரில் பிறந்தவர். இடையர் குலம்.. ஆடு மாடு மேய்க்கும் தொழில்.. இறுதியில் மனதையும் மேய்த்து சித்தரானவர். தமிழரின் ஐவகை நிலமாகிய முல்லை நிலத்தில் முகிழ்த்தவர்.கிபி 10 முதல் 15 ஆம் நூற்றாண்டுக்குள் இவரது காலம் என்கிறார்கள். இவரின் குரு கொங்கண சித்தர் எனக் கூறப்படுகிறது. இவருக்கென வாழ்க்கை வரலாறு நூல் இல்லை.. மனிதன் வாழ்க்கையை நூலாக்குகிறான். சித்தர்கள் ஞானத்தை நூலாக்குகிறார்கள்.  இவரின் ஞான சூத்திரம் 70 மிகவும் சிறப்பானது. இவர் திருவண்ணாமலையில் சமாதியானதாக போகர் தன் ஜனனசாகரம் 500 என்ற நூலில் பதிவு செய்கிறார். ஒருமுறை திருவண்ணாமலைக்கு சுவாமி மாணவர் விஜயம் செய்த போது சுவாமியே அண்ணாமலையார் என கூறிய ஒரு ஜடாமுடி துறவி தனது பெயரை இடைக்காடர் என சொல்லி இருக்கிறார். இப்படி காலத்தைக் கடந்தவர்கள் சித்த புருஷர்கள். அவர் எவ்வாறு பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியை தனது நாடியில் பதிவு செய்கிறார் என்பதில் முக்கியமானவற்றையும் ... சுவாரஸ்யமானவற்றையும் வாசிப்போம்.. வாசி என்றால் மூச்சு.. வாசி வாசி எனில் சிவா சிவா என்றாகிறது.. வாசிப்பது தெய்வீகமானால் வாசியும் ஆன்மீகமாகும்!


🌹இடைக்காடர் மகரிஷி நாடி:


ஆனைமுகன் ஆறுமுகன் அடிகள் போற்றி என சிவ சக்தி மகன்களை துதித்தபடி சிவசக்தி அம்ச மகனை குறித்து நாடி பதிக்க ஆரம்பிக்கிறார்.. இங்கே மகன் என சுவாமியை ரிஷிகள் குறிப்பிடுவது அவரின் என்றும் மாறா இளமை தோற்றத்தை முன்நிறுத்தவே! 

அகவை தன் உகம் தன்னில் மகன் தனக்கு

சேவை தன்னில் உகம் உண்டு

இளமை பருவம் காலம் தன்னில்

தன்னிலை அமர்ந்த மார்க்கம்

தன்னிறைவு கொண்ட மகன் தனக்கு

மார்க்கமதுவும் எக்குறையும் நாடா வண்ணம்

என் நீளும் பாடல் வரிகளில்...

சுவாமியின் சிறு வயது முதலே சேவையில் புதியதொரு யுகத்தை மலரச் செய்வார் என்கிறார். சுவாமியால் மட்டுமே கலியுகம் சேவா யுகமாக மலர்ந்தது என்பதை அனைவரும் அறிவோம்! 


அகவை என்றால் வயது.. உகம் என்றால் யுகம். 

🌹தன்னிலை அமர்ந்த மார்க்கம்

தன் இறைத் தன்மையிலேயே நல்வழியை பக்தர்க்கு கொடுத்தவர் எனப் பொருள். மார்க்கம் என்பது வழி. சுவாமியின் வழி இரவல் வழியல்ல.. சுயமான வழி. சுவாமி வகுத்த ஆன்மீக நெறிமுறைகள் மிக எளிமையானதும்.. மிக சக்தி வாய்ந்ததும்..

சாதி/ மத/ இன/ மொழி / தேச பேதம் அற்ற மார்க்கத்தை சுவாமியே முதன்முதலில் உலகத்திற்கு அளித்தது!

இதில் மார்க்கமதுவும் எக்குறையும் நாடா வண்ணம் என்கிறார்.. சுவாமி செய்து வருகின்ற சேவைகளில் குறைபாடே இருந்ததில்லை.. தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.. இதையே எக்குறையும் நாடா வண்ணம் என்கிறார்.

பூண்ட மார்க்கம் தன்னில் மாயவனின்

காலமதில் பிறப்பு யோகம் பிறப்பதுவும்

என தொடரும் ஒரு பாடலில்.. திடீரென இடைக்காடர் தெய்வாவேசப்பட்டு 

சாயாக யுகம் தன்னில் உதித்திட்டேன் என சுவாமி சொல்வதாகவே சொல்கிறார்.

சாயாக என்பதில் சாயியாக எனவும் கொள்ளலாம்... சாயா என்பது நிழல். உடம்பு ஒரு நிழலே .. சுவாமி என்பவர் ஒளி ரூபமே.. சுவாமி உடல் கடந்தே எப்போதும் உதயமாக இருக்கிறார்.. அவர் எந்த வடிவமும் எடுப்பார் என்பதும் இதில் மறை பொருளாக உணர்த்தப்படுகிறது. 


🌹அவதாரம் தொடர்கிறது...

இந்த யுகத்தில் நானும் பிறப்பும் காலம் தன்னில்

இந்த யுகத்தில் நான் பிறந்த காரணம் முடியவில்லை என சுவாமி சொல்வதாக தெய்வாவேசத்தில் பதிவு செய்கிறார்.

நானும் பிறப்பும் என்பது இறை அவதாரம் தன்னை பிறப்பு இறப்பு என்பதோடு இணைத்துப் பார்ப்பதில்லை என்பதை உணர்த்துகிறது.


🌹சத்திய யுகம் பற்றி...

மறு யுகம் என்பது பூலோகத்தில் உண்டு

வந்துதித்த பின்னுமே எந்தனுக்கு யோகம் உண்டு

பின் பரிவாரங்கள் வந்து சேர்வர் என இடைக்காடர் சுவாமி மொழிகளை முன் மொழிகையில் சத்திய யுகத்தைப் பதிவு செய்வதோடு.. சுவாமியின் அடுத்த அவதாரத்தை உறுதிப் படுத்துவதோடு... சுவாமியோடு தொடர்புடைய பக்த ஆன்மாக்களும் பரிவாரங்களாய் அடுத்த அவதார அருட் செயலில் ஈடுபடுவர் என்பதை தெளிவுபடுத்துகிறார்.

(இடைக்காடர் நாடி படிக்கப்பட்ட நாள் : 14.06.2011/ நாடி படிக்கப்பட்டு இடம் : வைத்தீஸ்வரன் கோவில்) 


🌹அகஸ்திய மகா சிவநாடி:

அகஸ்திய மகா சிவநாடியில் சுவாமியின் ஜாதகம் அலசப்படுகிறது. அதில் முக்கியமானவற்றை மட்டும் வாசிப்போம்!

சுவாமிக்கு சக்தி ரேகை இருப்பதை பதிவு செய்வதோடு அவரின் ஜாதகம் கணிக்க கணிக்க வியப்பாகவே இருக்கிறது. 

ராசி மிதுனம்... லக்னம் துலாம் என விவரிக்கப்பட்டு... சுவாமியின் பாதத்தில் இருக்கும் சங்கு சக்கரமும் தெளிவாக எடுத்துரைக்கப்படுகிறது.

இவருடைய பாதத்தில் சங்கு சக்கரம்.. மார்புப் பகுதியில் மரு அதாவது மச்சம் இருந்தது.. இவர் அவதரிக்கையில் வான் மண்டலத்தில் ஓம்காரத்தின் இசை கேட்கும் என சுவாமியை வியக்கிறது அகஸ்திய‌ மகா சிவநாடி. மேலும் சுவாமியின் அவதார மாதம் .. நட்சத்திரம் போன்றவற்றை துல்லியமாக கணித்து பதிவு செய்கிறது.


🌹 முற்பிறவி ரகசியங்கள்:

முற்பிறவியில் வெண்ணை உண்டவரின் தோற்றமான கருநீலத்தோடு குழந்தையாக அவதரித்தார். இந்த ஜாதகரின் பெயர் திருமாலின் பெயரான சத்யநாராயணன். இந்த ஜாதகர் கிருஷ்ணரின் மறு அவதாரம். இவருடைய அவதார நோக்கம் கலிகாலத்தில் தீய சக்திகளை அழிக்கவே அவதாரம் எடுத்தவர். 

என அகஸ்திய மகா சிவநாடி சுவாமியின் பேரிறைவப் பேராற்றலை பட்டியலும் இட்டு.. சுவாமி உண்மையில் யார் என்பதற்கு இந்த நாடி முகக் கண்ணாடி போல் அகக் கண்ணாடியாகவே செயல்படுகிறது.

(அகஸ்திய மகா சிவநாடி படிக்கப்பட்ட நாள்:6.10.2008/ நாடி படிக்கப்பட்ட இடம் : கோயம்புத்தூர்)

சுவாமியை அவரின் பக்தர்கள் உணர்ந்து கொண்டது நாடிகளை வைத்து அல்ல.. அவரவர்களின் தனிப்பட்ட அனுபவங்களை வைத்தே! சுவாமி இறைவன் என்பதை உணர்ந்து கொண்டதற்கான சாட்சியாக நாம் அனுபவித்த சுவாமி அனுபவமே திகழ்கிறது. இப்போது நாடிகளை வாசிக்கையில் எல்லாமே சத்தியம் என்பதை ரிஷிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்திருப்பது ஆச்சர்யத்தையும்... பரப்பிரம்ம சுவாமியின் அளவிடமுடியா பேராற்றலையும்.. அதை அணு அணுவாய் அனுபவித்த ரிஷிகளையும் நமக்கு வியந்து வணங்கவே தோன்றுகிறது! நாடிகளின் இதயத் துடிப்பை நமது சுவாமி அனுபவம் எனும் நாடித்துடிப்பே யாவும் சத்தியம் என்பதை நமக்கு உணர்த்துகிறது. இதுவரை எழுந்த நாடிகள் சுவாமியை இறைவன் என்றே நாடி நாடி நம்மை தேடி உணர்த்துகிறது. சத்தியம் ஒன்றதான்.. அது ஸ்ரீ சத்ய சாயி என்பவர் இறைவன் என்பதே... அந்த சத்தியத்தை சுமந்த நாடிகள் சாஸ்வதமானவை.. அதற்கு காரணம் ரிஷிகள்/ சித்தர்கள். இவர்களும் சுவாமியோடு ஐக்கியமாகி சாஸ்வதமானவர்கள். நிரந்தரமானவர்களாலேயே நித்திய நிரந்தரமானதை பதிவு செய்து... அந்தப் பதிவை நிரந்தரமாக்க முடியும்... 

நித்தியத்துவத்தோடு கலப்பதற்கு நித்திய சாயியின் நிரந்தரத்துவத்தை பிரேமையோடு பதிவு செய்து நம் அகப்பயணத்திற்கு அஸ்திவாரமிட்டு அடிக்கல் நாட்டி.. அகச் சான்றாக அது இறுதியில் இதய உறுதியில் நிறைந்து போகிறது!! நன்றி!!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக