தலைப்பு

திங்கள், 19 ஜூலை, 2021

நலிந்து போன ஒரு நேர்மையான வங்கி அதிகாரியை முன்னேற்றிய சாயி!


சுவாமி எவ்வாறு.. யாரை எந்த நேரத்தில் தன் பக்தராக ஈர்த்து அவரை முன்னேற்றுகிறார் என்பதில் அந்த தனிநபரின் குணத்தையும் வலியுறுத்தி அப்படிப்படட்ட முன்னாள் வங்கி அதிகாரியின் வாழ்வையே மாற்றிப்போட்ட ஒரு மகிமை அனுபவம் இதோ...

"பகவானை அடையும் பக்தி மார்க்கத்தை மனிதர்களுக்கு காட்டவே நான் அவதரித்திருக்கிறேன்... முனிவர்கள் , புண்ணிய புருஷர்கள் பிரார்த்தனைக்கு இணங்கவே நான் அவதாரம் செய்திருக்கிறேன்" என சத்தியம் பகர்கிறார் பகவான் ஸ்ரீ சத்ய சாயி. 

ஒவ்வொருவருக்கும் சமயம் பார்த்தே அவ்வாறு அருள்புரிகிறார். அப்படி அருள் பெற்றவர்களில் புதுடில்லி கைலாஷ் காலனி H-9 என்ற வீட்டை சேர்ந்த ஆர்.பி.குப்தா ஒருவர். 70 களில் நிகழும் பேரற்புதம் இது... 70 களில் என்றாலும் சுவாமியின் கருணையும் அருளும் காலம் கடந்து வியாபிக்கக் கூடியது.  1971 ம் ஆண்டு வரையில் குப்தா என்பவர் நேஷனல் அண்ட் கிரிண்ட்லேஸ் வங்கி (பிரிட்டிஷ் வங்கி) பணியாற்றிக் கொண்டு வருகிறார். சுளையாக மாதம் 3000 சம்பளம். வாழ்க்கை சுகமாக நகர்ந்து கொண்டிருந்தது.. எல்லோருக்கும் வாழ்க்கை இப்படியே நகர்வதில்லை. ஒருமுறை அவர் வங்கியின் பழைய கணக்குகளைப் பார்க்கையில் அது வருமானவரி கொடுக்காமல் 70 கோடி ரூபாயை அரசாங்கத்திடம் செலுத்தாமல் ஏமாற்றி இருப்பது அவருக்கு தெரியவருகிறது. நமக்கென்ன.. நமக்கு சம்பளம் வருகிறதே என அவர் சுயநலமாக வாழாமல் இதனை வெளிப்படுத்த வங்கியில் பணியாற்றிய அதிகாரிகளை கொண்டு ஒரு சங்கம் அமைத்தார். அதில் பலகோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த வங்கி இவரை வேலையில் இருந்து தூக்கி வீசி எறிந்தது.. 

எப்போதும் நேர்மைக்கு கிடைக்கும் எளிமையான பரிசு இது. ஆனால் அரசாங்கத்தின் பரிசாக 25,000 ரூபாய் இவர் பெற்றாலும் வேலையின்றி மிகவும் கடினப்பட்டார். நேர்மை எதற்கும் அஞ்சுவதில்லை. ஆயினும் பண நெருக்கடியில் குப்தா சிக்கிக் கொண்டார்.

இப்போது தான் எதிர்பாரா ஒரு சந்திப்பு நேர்கிறது. மிஸ்டர் சிங் எனும் சிறு தொழில் வியாபாரி தனக்கு வங்கியில் கடன் வாங்குவது குறித்து ஆலோசனை கேட்க முன்னாள் வங்கி அதிகாரியான குப்தாவிடம் வருகிறார். இப்படித் தான் ஒரு சம்பவம் நிகழ்த்தி.. ஒருவர் மூலமாக சுவாமி இன்னொருவருக்கு பல சந்தர்ப்பங்களில் அருள் பாலிக்கிறார். ஏதோ எதேர்ச்சையாக நிகழ்வது போல் சம்பவம் நடைபெறும்.. உண்மையில் சுவாமியின் அனுமதியோடே ஒவ்வொரு நிகழ்வும் அரங்கேறுகிறது. அந்த சிங் விரலில் ஒரு சுவாமி மோதிரம் அணிந்திருந்தார். சீதைக்கு கணையாழி தூது போன அனுமனாய் அந்த நேரத்தில் சிங் மூலம் சுவாமி கணையாழி வழி குப்தாவிற்கு சுவாமி முதல் தரிசனம் தருகிறார்.

இது பாபாவின் உருவம் என்று சுவாமியின் அருளைப் பற்றி விளக்குகிறார். தன்னையே அறியாமல் கடனுக்கான ஆலோசனை கேட்கப் போய் கடவுள் சாயியின் ஆன்மீக ஞானத்தை குப்தாவுக்கு அவர் வழங்குகிறார். குப்தா ஆரம்பத்தில் அதை பொருட்படுத்தவில்லை. இது தான் மனித சுபாவம். நல்லவர்களை சந்தேகிப்பதும்... தீயவர்களை தோரணம் வைத்து அழைப்பதும் மாயையின் திருவிளையாடல். மாயையின் தீவிரத்தைக் காட்டிலும் சுவாமியின் கருணைக்கு எப்போதுமே வலிமை அதிகம் என்பதால்...

மீண்டும் சிங் குப்தா வீட்டிற்கு படை எடுக்கிறார். அதே வங்கிக்கான கடன் விவகாரம் தான்.. ஆனாலும் மீண்டும் உரையாடல் சுவாமி பக்கம் திரும்புகிறது. "எங்கள் வீட்டில் பாபா படத்தில் தேனும் விபூதியும் விழுகிறது வந்து பாருங்கள்" என்கிறார். குப்தா தனது குடும்பத்தோடு வருகிறார். அந்தக் கண் கொள்ளா காட்சியை மனம் குளிர தரிசிக்கிறது குப்தா குடும்பம். அந்தப் பிரசாதம் கிடைக்கிறது.. பொழிந்த விபூதியையும் வழிந்த தேனையும் உட்கொள்கின்றனர்.. சுவாமியின் அருளுரையாடலை கேசட்டில் கேட்கிறார்கள்.. பஜனாவளியை வாசிக்கிறார்கள். பக்தராக மாறுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை எநதத் திட்டமிடலும் இல்லை.. ஆனால் சுவாமிக்கோ ஆயிரம் திட்டம் இருந்தது.. இவை அனைத்துமே சுவாமி நடத்திய முன் செயல்பாடுகளே...

1974 செப்டம்பர் மாதம்... ஒரு மாலை.. மஞ்சள் சூரியன் கசிந்து பூமியை கோலம் போட்டுக் கொண்டிருக்கையில் குப்தா வீட்டுத் தரையில் மஞ்சளால் சுவாமி திடீரென எழுத்தோவியம் வரைகிறார்..

"நான் உங்களிடம் வருகிறேன் .. கவலை வேண்டாம்.. - சாயிபாபா" என எழுதப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து விபூதி குங்குமம் அட்சதை போன்றவை வாட்ச், மோதிரம் ஆகியவற்றில் தோன்றியது... அதோடு அந்த வீட்டில் அமைதியும் தோன்றியது... கூடவே குடும்பக் கவலைப் பளு நீங்குகிறது.. 

குப்தா ஒரு சுயதொழிலை தொடங்க யாரும் எதிர்பாராத வகையில் நண்பர்களும் உறவினர்களும் உதவ முன்வருகிறார்கள். சுவாமி நிகழ்த்தும் அக மாற்றம் என்பது இது தான்... எரிந்த வீட்டில் கிடைத்தது லாபம் என உறவினர்களும் நண்பர்களும் ஓடிவிடும் இந்த சூழ்நிலையிலும் இப்படி ஒரு அக மாற்றம் குப்தா குடும்பத்திற்கும் குப்தாவை சுற்றியும் நிகழ்ந்தது எனில் அதுவே சுவாமியின் கருணை சங்கல்பம். 

விபூதி மஞ்சள் அட்சதை என சுவாமி நிகழ்த்த ஆரம்பித்த லீலை நிற்கவே இல்லை.. அது வளர்ந்தது.. குப்தா குழந்தைகள் சுவாமிக்காக ஒரு சிறு அறையை ஒதுக்கி.. இரண்டு பொம்மைகளை வைத்து.. ஒன்று ஷிர்டி சுவாமியாம்..இன்னொன்று நம் சுவாமியாம் ... என அந்த குழந்தைகளின் தூய இதயத்திற்கு இணங்க சுவாமிக்கான அந்த அறையில் லீலா விநோதங்கள் நிகழ ஆரம்பிக்கின்றன.. சுவாமி உண்கிறார்.. சுவாமி துண்டு காகிதங்களின் வழி செய்தி சொல்கிறார்.. குப்தா குடும்பம் குழந்தைகளை அதட்டினாலோ சுவாமிக்கு கோபம் வந்துவிடும்.. அதற்கு கண்டனத்தோடு கூடிய துண்டு சீட்டுகளை அந்த அறையில் அனுப்புவார். ஏதாவது கேள்வி எனில் ஒரு சீட்டில் எழுதி வைப்பர்.. அதற்கு சுவாமி பதில் எழுதி அனுப்புவார்.. இப்படி அந்த லீலைகளை விவரிக்க ஆரம்பித்தால் எழுதிக் கொண்டே இருக்கலாம்.. அருவமாக சுவாமி அவர்கள் வீட்டில் நிகழ்த்திய அற்புதம் கருணைக் கடலான சுவாமியை கருணை சுனாமி என்றே அழைக்கத் தோன்றுகிறது.

"என்னை நீங்கள் புரிந்து கொள்வது சிரமம் ஆனால் அன்பும் பக்தியும் நிறைந்த உள்ளத்தால் என்னை எளிதில் காணலாம்" என்கிறார் நம் சுவாமி.

ஆதாரம் : பகவான் பாபா.. பக்கம் : 12... ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமணியம்


🌻சுவாமி குப்தா குடும்பத்தில் ஆயிரமாயிரம் மகிமைகள் புரிந்ததற்கு எனக்கு இரண்டே இரண்டு காரணம் தான் தோன்றுகிறது. ஒன்று குப்தாவின் நேர்மை.. இன்னொன்று குப்தா குழந்தைகளின் கள்ளம் கபடமற்ற தூய உள்ளம். ஆகவே தான் அவரின் வாழ்வையே சுவாமி கருணை சரியப் போன சீனச் சுவரை தூக்கி நிறுத்துவது போல் நிறுத்தி பேரருளை தொடர்ந்து பாய்ச்சிக் கொண்டு வந்தது. *இது ஏதோ 70 களில் மட்டுமல்ல.. இன்றளவும் சுவாமியின் கருணை நீள் விசும்பாய் நீண்டு.. பக்தர்களின் ஆழ்மனதை ஆண்டு கொண்டு வருகிறது! 🌻


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக