தலைப்பு

செவ்வாய், 20 ஜூலை, 2021

ஒரு ஏழை விவசாயியின் முற்றிய புற்றுநோயை குணமாக்கியது சிறிய சுவாமி படமும்... ஒரு டம்ப்ளர் தண்ணீரும்...!


சுவாமிக்கு தீனதயாளன் என்ற பெயர் இருக்கிறது. இரக்கமே வடிவான இறைவன் ஸ்ரீ சத்ய சாயி எவ்வாறு ஏழையைக் கண்டு இரங்குகிறார் என்ற சத்தியம் விளக்கும் பதிவு இது... 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருளில்லார்க்கு எவ்வுலகமும் இல்லை' என்பதாக சுவாமியின் இந்தப் பதிவை வாசித்திருந்தால் புலவர் தனது தமிழ் கூற்றை மாற்றி எழுதி இருப்பார்...


சுவாமியே பூலோகத்திற்கு சோறிடுகிறார்.. இல்லை எனில் விவ என்ற எழுத்துக்களோடு சாயி என்ற பெயர் சேர்ந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை... 

இறைவனே அவதாரனே நீ சாயி..

தர்மங்களை மண்ணில் விதைப்பதால் நீ விவசாயி என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப சுவாமி எப்போதுமே தலைசிறந்த பரப்பிரம்ம விவசாயி. சுவாமியே விதைக்கிறார்.. வளர்க்கிறார்.. விளைச்சல் பெருக்குகிறார்.. அதோடு கூட வேண்டாத களைகளை அகற்றுகிறார்..

இவர் ஒரு விவசாயி.. விவசாயிகள் தியாகிகள். தன்னை அழுக்காக்கி நிலத்திற்கு பச்சை வண்ண ஆடை அணிவிப்பவர்கள். சுவாசத்தை இறுக்கிப்பிடித்து  தேசத்தில் பரவிடும் காற்று வயிறை நாற்று வயிறாக மாற்றுபவர்கள். இந்த விவசாயி திண்டிவனத்துக்காரர். அதில் ஒரு சிறு கிராமத்தில் வசிப்பவர். கிராமத்தில் வசிப்பவர்கள் சொர்க்கத்தில் வாழ்வதற்கு ஆசைப்படுவதே இல்லை. ஏற்கனவே அவர்கள் அதில் தான் வாழ்கிறார்கள். இந்த விவசாயி நாள் முழுதும் கடுமையாக உழைப்பவர். இப்படித்தான் பல விவசாயிகளும்... தலைவலி என்று ஒரு நாள் கூட அவர் முடங்கியதே இல்லை. 

பயிர்களை தின்னும் பூச்சிகள் போல் கர்மா இவரின் வாழ்வை தின்ன ஆரம்பித்த தருணம் அது. ஒரு நாள் இவருக்கு உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. ஊருக்கே சோறிடுபவர் சோறு உண்ண முடியாமல் சிரமப்படுகிறார். 


கர்மா என்பது கண்களை கட்டிக் கொண்டிருக்கும் நீதி தேவதையின் தாய். அது நல்லவர் .. வல்லவர் .. தீயவர் என யாரையும் விடுவதில்லை. பூர்வ வாழ்வில் எதை விதைக்கிறோமோ அதையே அறுக்கிறோம் என்ற விவசாயக் கணக்குப்படி கர்மாவின் செயல்பாடுகளும் ஒருவகையில் விவசாயம் தான். 

இந்த விவசாயி டாக்டரிடம் போகிறார். அவர் சோதனை செய்து பார்த்துவிட்டு தொண்டையில் புற்று நோய் என்கிறார். 

மண்ணில் புற்றுகளை நீக்கி பச்சை பசேல் வைத்தியம் பார்ப்பவர்க்கு தொண்டையில் புற்று நோய். இதற்கு சென்னையில் தொடர்ந்து சில மாதங்கள் தங்கி வைத்தியம் பார்க்கலாம்.. புற்று முற்றிலும் முற்று பெறுமா என்பதை சொல்ல முடியாது என்கிறார் அந்த மருத்துவர். முயன்று பாருங்கள் என்ற ஆலோசனையைக் கேட்டு... இந்த விவசாயியோ ஆபரேஷன் செய்ய முடியுமா? எனக் கேட்கிறார். புற்று நோய் முற்றி இருப்பதால் ஆபரேஷன் செய்வதில் சில சிக்கல்கள் வரலாம் என தன் மூக்கு கண்ணாடியை கழட்டுகிறார் மருத்துவர். 

பொருளாதார சிக்கலால் தன்னால் தொடர்ந்து சென்னையில் தங்க முடியாது என்பதால் திரும்பி விடுகிறார். 

இந்தக் காலத்தில் புற்று நோய் பணக்கார நோயாகிவிட்டது. நிறைய சம்பாதிப்பது முதல் நீட்டி மருத்துவமனையில் படுப்பது வரை மட்டுமே வாழ்வில் அ முதல் ஃ வரை என்பதாகிவிடுகிறது பலருக்கு... இந்த விவசாயிக்கு சுவாமியை பற்றி எதுவுமே தெரியாது.. அதுவரை அவர் சுவாமியை கேள்விப்பட்டது கூட இல்லை. சென்னையிலிருந்து திண்டிவனத்திற்கு வந்து இறங்கிய அவருக்கு தெய்வீக தருணம் நெருங்கியது... சுவாமியை பற்றி கேள்விப்படுகிறார். கடையில் ஒரு சுவாமி படத்தை வாங்கிக் கொண்டு தனது கிராமத்திற்கு திரும்பச் செல்கிறார்.. அவர் வாங்கியது இறைவனின் படம் மட்டுமில்லை அவரது முற்றிய புற்று நோய்க்கான மருந்து என்பதை அப்போது அவர் அறிந்திருக்க நியாயமில்லை. 

மருத்துவ சிகிச்சை செய்ய வசதி இன்றி ஊர் திரும்பியதும் கையில் வைத்திருந்த சுவாமி படத்தை பூஜையில் வைக்கிறார். சுவாமியை பற்றிய மந்திரமோ .. பஜனையோ எதுவுமே அவர் அறிந்திருக்கவில்லை. பூஜையில் மாட்டிய படத்தை தினந்தோறும் படுக்கப் போகும் முன் படம் மாட்டியிருக்கிற இடத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கிவிட்டு.. கொஞ்சம் தண்ணீர் அருந்தி விட்டு தூங்கி விடுவார்.  எப்படி பிரார்த்திக்க வேண்டும்.. அதற்கு என்ன மந்திரம் சொல்ல வேண்டும் என எதையுமே அறியாத எளிய விவசாயி அவர். சாயி ராம் என்று சொல்ல வேண்டும் என்பதையும் அறியாதவர்.‌ *சுவாமியை வணங்குவதும், தண்ணீரை விழுங்குவதும் என இப்படியே சில நாட்கள் கழிய இவருடைய தொண்டையில் மாறுதல் தெரிய ஆரம்பித்தது...* உடனே சென்னைக்கு எந்த மருத்துவர் சிக்கல் பிக்கல் என சிகிச்சைக்கு கையை விரித்தாரோ அவரிடமே பரிசோதனைக்கு வருகிறார்.. 

 கையை விரித்த மருத்துவர் அந்த கையை தனது மூக்கின் மேல் விரல் வைத்தாற்போல் ஆச்சர்யப்பட்டு "உங்களுக்கு புற்று நோய் இருப்பதற்கான சுவடே தெரியவில்லையே.. என்ன ஆனது?" என வியந்து கேட்க...

விவசாய சொட்டுநீர் பாசனம் போல் விவசாயியின் கண்களில் இருந்து வழிய ஆரம்பித்த நீர் நீர்மாலையாய் தோள்களை நனைத்தது...பேச முடியவில்லை. தான் நடந்ததை கூறினால் மருத்துவர் நம்பமாட்டாரோ என கைகூப்பி விடைபெறுகிறார். இதே மருத்துவமனையிலிருந்து அப்போது  விடைபெற்ற போது இவரின் நெஞ்சில் பாரம் இருந்தது.. இப்போதோ கண்களில் ஈரம் இருந்தது.

ஊர் திரும்பிய விவசாயி உடனே தீர விசாரித்து புட்டபர்த்திக்கு கிளம்பிச் செல்கிறார். சுவாமிக்காக கூடிய பக்த கோடிகளோடு இந்த விவசாயியும் அமர்ந்திருக்க.. அவரை தனிப்பேட்டிக்கு அழைக்கிறார் சுவாமி.. உள்ளே சென்றவர் நெடுஞ்சாண்கிடையாய் சுவாமியை விழுந்து வணங்குகிறார்...

"நீ தினமும் தான் உன் வீட்டில் என்னை வணங்குகிறாயே" என்கிறார்.  

உடனே தெளிந்த இதயத்தோடும் கலங்கிய கண்களோடும் விவசாயி "சாமி...ஊரிலிருந்து நாலு மூட்டை அரிசி கொண்டு வந்து இங்கே உள்ள பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் தர விரும்புகிறேன்" என்கிறார்.

அதற்கு சுவாமியோ "உன்னுடைய கிராமத்தில் ஏழை எளியவர்கள் இருக்கிறார்களா?" என கேட்க 

"இருக்கிறார்கள் சாமி" என்கிறார் விவசாயி.

"அப்படியானால் அவர்கள் பசியாற அங்கேயே அந்த உணவை வழங்கு... ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் தொண்டு" என்று ஆசீர்வதித்து அனுப்புகிறார் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி. 

தனது தொண்டை சூழ்ந்த புற்றை மட்டுமல்ல தனது தொண்டை சூழ்ந்த பற்றையும் சுவாமி நீக்கியதால்.. எங்கேயும் சுவாமி நிறைந்திருக்கிறார் என்ற தெளிவோடு ஊர் திரும்புகிறார் இந்த எளிய விவசாயி.

(ஆதாரம் : பகவான் பாபா -- பக்கம் : 21 ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமணியம்) 

இப்படித் தான் இறைவனின் கருணை.. மேட்டிலிருந்து பள்ளத்திற்கு பாயும் வெள்ளம் போல் தான் சுவாமியின் உள்ளம். சுவாமியை போன்ற ஒரு பிரத்யட்ச பரம்பொருளை அடியேன் எங்கேயும் கண்டதில்லை. இந்த மகிமை மூலம் சுவாமி தனது படத்திலும் இருக்கிறார் என்பதும்.. எளிமையான உள்ளத்தை மட்டுமே சுவாமி பார்க்கிறார் என்பதும்... சுவாமிக்கு விபூதி கூட அவசியமில்லை வெறும் தண்ணீரால் கூட கொடிய கர்ம நோய்களை குணமாக்க முடியும் என்பதும் இப்படி எண்ணற்ற அனுபவங்கள். நான்.. எனது என்ற பதத்தை அல்ல  இறைவன் என்ற பதத்தையே சுவாமி அதிகம் பயன்படுத்தி இருக்கிறார்.. அதற்கு காரணம் அவர் வேறு இறைவன் வேறு என்பதற்காக அல்ல... நீ எந்த வடிவிலும் இறைவனை வணங்கு அது என்னைத் தான் வந்து சேர்கிறது என்பதை உணர்த்தவே! சுவாமியே இறைவன்‌... இல்லை என்றால் ஊருக்கெல்லாம் தானிய செழிப்பை தரும் விவசாயியின் உள்ளத்தில் தெய்வ செழிப்பை வளர்த்தெடுத்திருக்க முடியுமா! 


பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக