தலைப்பு

ஞாயிறு, 18 ஜூலை, 2021

ஒரு நாத்திகரின் ஒட்டு மொத்த குடும்பமுமே பரம பக்தரான சுவாரஸ்ய சாயி அனுபவம்!


இறைவன் சத்ய சாயியை வழிபட வழிபட .. தீய வினைகள் வழிவிட வழிவிட ஆரம்பித்துவிடும். குணங்கள் நல்லனவாகும்... அசைவம் சைவமாகும் . குரூரம் சாந்தமாகும் .. கோபம் பணிவாகும்.. அகந்தை வாய்மூடி சாயிராம் சாயிராம் என அமைதியாகும். நாத்திகமோ வால் அறுந்து போய் பக்குவப்பட்டு ஆத்திகமாய் பின் ஆன்மீகமாய் ஜொலிக்கும். கடவுள் சத்ய சாயி மேல் பக்தியே இல்லா அப்படி ஓர் குடும்பமே பரம பக்தராய் மாறிய ஆச்சர்ய அனுபவம் இதோ...

திரு. ரமண ராவ், ஆந்திர அரசின் தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். நல்ல கவிஞர், இலக்கியவாதி. பிராமணரான இவர் நாத்திகவாதி. இவரின் உயிர் நண்பர் திரு. தேசிகாச்சாரி. ஒருமுறை தேசிகாச்சாரி, ரமண ராவை மிகவும் வற்புறுத்தி புட்டபர்த்தி அழைத்துச் சென்றார். ரமண ராவ் வேண்டாவெறுப்பாக நண்பருக்காக அங்கு சென்றார். இவர்கள் சென்ற 1966  ஆண்டுகளில் புட்டபர்த்தியில் தங்கும் வசதி குறைவு.

மணலில் துண்டை விரித்து இரவு படுத்து கொள்ளவேண்டும். இரவு 11 மணியளவில் கடுமையான தலைவலியால் ரமண ராவ் அவதிப்பட்டார். பக்கத்தில் தேசிகாச்சாரி நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். எரிச்சலான ரமண ராவ், "வீட்டில் நிம்மதியாக இருப்பதை விட்டு இங்கு வந்து மாட்டிக் கொண்டேன்."என கூறி, "பாபா! நீ கடவுளாக இருந்தால் என் தலைவலியைப் போக்கு" என்றார். சிறிது நேரத்தில் காற்று இதமாக வீசவே அப்படியே தூங்கி விட்டார்.

அதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு சுவாமியின் நேர்காணல் கிடைத்தது. நேர்காணல் அறையில் சுவாமி, ரமண ராவை நோக்கி, "உனது தலை வலி எப்படி இருக்கிறது?", எனக் கேட்டார். ரமணா ராவ்  முழித்தார். தேசிகாச்சாரி, "சுவாமி! அவன் உங்களை முதல் முறையாக பார்க்கிறான். அதனால் அவனால் பேசமுடியவில்லை." என்றார்.

அதற்கு சுவாமி, "சில மாதங்களுக்கு முன், நான் ஹைதராபாத்தில், ராமகிருஷ்ண ராவ் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அந்த வழியாக வந்த இவன், கும்பல் அதிகமாக இருப்பதை பார்த்து, "என்ன இங்கே கூட்டம்?" என கேட்க, "பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா, இந்த வீட்டிற்கு வந்து இருக்கிறார்." எனக் கூற, இவன் தூரத்திலிருந்து என்னை எட்டிப்பார்த்து போய்விட்டான். ஆகவே இவன் என்னை இரண்டாவது முறையாக பார்க்கிறான்.",என்றார். "சுவாமிக்கு நம் எல்லா விஷயமும் தெரிந்திருக்கிறது."என்று ரமண ராவ் திகைத்து நின்றார். பேட்டியின் முடிவில், சுவாமி கையசைத்து, விபூதியை தேசிகாச்சாரிக்கு கொடுத்தார்.


மீண்டும் கையை அசைத்து ஒரு இனிப்புப் பர்பியை வரவழைத்து, ரமண ராவுக்கு கொடுத்தார். அப்போது, "நீ பூணூல் அணியாத, விபூதி பூசாத நாத்திகன். எனவே உனக்கு பர்பி கொடுத்தேன்." என்றார். சுவாமி, ரமண ராவின் கன்னத்தில் தட்டி, "பங்காரு! கவலைப்படாதே! நீ என்னுடையவன்." என்று ஆசி கூறி அனுப்பினார். சுவாமியின் அன்பும் தெய்வீகமும் சேவை பணிகளும் ரமண ராவை பெரிதும் கவர்ந்து.

அவர் அடிக்கடி புட்டபர்த்தி சென்றார். ரமண ராவ் அடிக்கடி புட்டபர்த்தி செல்வதை அறிந்த அவரது தந்தையார், ரமண ராவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அவரது தந்தையார் அரசுத்துறையில் பிரதம பொறியாளராக பணியாற்றி 1952 இல் ஓய்வு பெற்று பின்னர் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணி செய்து வந்தார்.


அந்தக் கடிதத்தில், ரமண ராவை, "நீ அடிக்கடி புட்டபர்த்தி செல்வதாக கேள்விப்பட்டேன். நாத்திகனாக இருந்த நீ, ஆத்திகனாக மாறியது எனக்கு மகிழ்ச்சி. ஆனால் நம்முடைய குல தெய்வம், திருப்பதி வெங்கடரமணன். அந்தப் பெயரையே உனக்கு வைத்துள்ளேன்.  நமது கடவுளை விட்டுவிட்டு நீ சாய்பாபா போன்ற அரைகுறை கடவுளர்களை நம்பி சென்றால், பின்னால் வருத்தப்பட நேரிடும். எனவே நீ புட்டபர்த்தி செல்வதை விட்டு, திருப்பதி செல்வாயாக. 77 வயது நிரம்பிய உன் தந்தையின் பேச்சை நீ கேட்பாய் என நம்புகிறேன்." என்று எழுதியிருந்தார்.

ரமண ராவ், தந்தையிடம், "அப்பா! நீங்கள் ஒருமுறை புட்டபர்த்தி வந்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். அதன் பின்னர் நீங்கள் என்ன சொன்னாலும் அதன் படி நான் நடக்கிறேன். தயவுசெய்து வாருங்கள்" என்றார். தந்தையும் சரி என்று கூறவே ரமண ராவ் தனது தந்தையையும் தாயையும் அழைத்துக் கொண்டு புட்டபர்த்தி சென்றார்.

ரமண ராவின் தாயார் தனது தள்ளாத வயதில் தன்னை அறியாமல் சிறுநீர் கழித்துவிடும் ஒருவித வியாதியினால் பாதிக்கப்பட்டிருந்தார். ஹைதராபாத், சென்னை போன்ற பெரிய நகரங்களில், சிறந்த வைத்தியர்களை பார்த்தும், அவளது நோயை குணப்படுத்த முடியவில்லை. 15 குழந்தைகளை பெற்று, திருமணம் செய்து கொடுத்து இருந்தும், பேரன் பேத்திகள், சம்பந்திகள் என்று பெரிய உறவுகள் இருந்தும், எந்த மங்களகரமான விசேஷத்திற்கும் கோவிலுக்கும் கூட செல்ல முடியாமல் தவித்தாள், வேதனைப்பட்டாள் . அருவருப்பும் அசூயையும் பிறருக்கு ஏற்படும் என எண்ணி விரக்தியாக இருந்தாள்.

இவர்கள் புட்டபர்த்தி சென்ற மறுநாள் இவர்களை  பகவான் கருணையுடன் நேர்காணலுக்கு அழைத்தார். நேர்காணல் அறையில் முதல் வேலையாக பகவான், ரமண ராவின் தாயாருக்கு விபூதி வரவழைத்து கொடுத்தபடி கூறினார், "அம்மா!உன்னை அறியாமல் சிறுநீர் கழித்து விடும் உனது நோய் இந்தக் கணத்துடன் தீர்ந்து விட்டது நீ நினைத்த இடத்திற்கெல்லாம் போகலாம். உனக்கு எந்த  அசௌகரியமும் ஏற்படாது. அந்த நொடியிலிருந்து ரமண ராவின் தாயார், அடுத்து தாம் வாழ்ந்த, 13 வருடங்களில் அந்த பயங்கர நோயின் சாயல் சிறிது கூட இல்லாமல் சந்தோஷமாக எல்லா இடங்களுக்கும் சென்று நிம்மதியாக இருந்தார்.


சுவாமி, ரமண ராவின் தந்தையின் பக்கம் திரும்பி, கையசைத்து ஒரு தங்க பிள்ளையாரை வரவழைத்து, அவரது கையில் கொடுத்து,, "உனது தகப்பனார் பரம்பரை சொத்தாக உனக்கு கொடுத்தது இது. நீ இதை தொலைத்துவிட்டு  இன்றளவும் வருந்துகிறாய் என்பது எனக்குத் தெரியும். நான் அதை தேடி கொடுத்தேன்." என்றார். ரமண ராவின் தந்தை அதை வாங்கி, "அதே பிள்ளையார்!" என்று நெஞ்சில் அணைத்துக் கொண்டார். சுவாமி மேலும், " நீ 38 முறை திருப்பதி சென்று உள்ளாய். அந்த புண்ணியமே உன்னை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது* . நீ மிகவும் நல்லவன். நான் எப்பொழுதும்  உன்னுடன் இருக்கிறேன். கவலைப்படாதே!", என்று ஆசி கூறினார்.

ஆனந்தக் கண்ணீருடன் அவர்கள் சுவாமியிடம் இருந்து விடைபெற்றனர். அதன்பின் ரமண ராவின் தந்தை, அவர் வாழ்ந்த 14 வருடங்களில் ஒருமுறை கூட திருப்பதி செல்லவில்லை. புட்டபர்த்தி மட்டுமே சென்றார். "திருப்பதி வெங்கட்ரமணர் தான் பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா. அவரே நமது இஷ்ட தெய்வமும் குலதெய்வமும் ஆவார்", என கூறிவிட்டார். 

ஸ்ரீ வெங்கடேசா சாயீஸ்வரா!
திருமலைவாசா சாயீஸ்வரா!
பாலாஜி கோவிந்த சாயீஸ்வரா!

ஜெய் சாய்ராம்!

(பின்குறிப்பு : இதே B. V. ரமணா ராவ் அவர்கள் தான் பிற்காலத்தில் அவரின் பணி ஓய்வுக்கு பிறகு  ஆந்திரப்பிரதேச சத்ய சாயி நிறுவனத்தின் தலைவராக சேவையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.)



ஆதாரம்: Love is my Form by B. V. Ramana Rao.
தமிழாக்கம்: S. Ramesh, Ex-Convenor, Sai Samithi, Salem.

🌻 திருப்பதி பெருமாளும் இறைவன் சத்ய சாயியே... காசி விஷ்வநாதரும் இறைவன் சத்யசாயியே.. காலண்டரை பார்த்து பூஜித்து பழகியவர்கள் சாயி அனுபவத்திற்குப் பிறகு இறைவன் ஒன்றே.. அவர் கலியுகத்தில் ஷிர்டிக்கு பின் சத்யசாயியாய் அவதரித்திருக்கிறார் என்பதை உணர்வார்கள். அவரவர்களின் அகம் அனுபவிக்கும் சாயி அனுபவமே பக்தியை விதைத்து பரமசாந்தியை அறுவடை செய்து சரணாகதி எனும் மகா மகசூல் காணும்... 🌻



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக