தலைப்பு

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

விஸ்வரூப சாயி சேவகர் விஸ்வநாதனின் அழகி!

யார் இந்த விஸ்வநாதன் ?  யார் அந்த அழகி ? 

    இன்டர்நெட் புழக்கமும் இல்லந்தோறும் கைப்பேசிகளும் பல்கிப் பெருகிய  இன்றைய சூழலில் வேண்டுமானால் இந்திய மொழிகளில் தட்டச்சு செய்வது சுலபமாக உணரப்படலாம்! ஆனால் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில்... நமது பாரதம் மென்பொருள் சேவைத் துறையின்  வானத்தில் சூரியனாய் சுடர்விட ஆரம்பித்த புதிதில், ஏறத்தாழ ஒவ்வொரு இந்தியனும் தாய்மொழியில் தட்டச்சு செய்து கணினியை இயக்கத் துடித்துக் கொண்டிருந்தான்.  அந்த சமயத்தில், தமிழ் மற்றும் இந்திய மொழிகளுக்கான ஒலிபெயர்ப்புக் கருவிகளில் (Transliteration Software) ஒரு புரட்சியைச் செய்து **'அழகி' (Azhagi)** என்ற அற்புத மென்பொருள் உருவாக்கியவர் தான் இந்த திரு. விஸ்வநாதன்! இந்தக் கட்டுரையை வாசிக்கும் நீங்கள் ஒரு தமிழ் தட்டச்சு தொடர்பான பணியில் இருப்பவர் என்றால் அழகி மென்பொருளை உங்களுக்கு அறிமுகம் செய்யவோ அதன் மேன்மையை விளக்கிச் சொல்லவோ வேண்டிய அவசியமே இல்லை!  


முற்றிலும் இலவசம்! 


    கணினி உலகில் இந்தியப் பொறியாளர்களில்,  பல்லாயிரக் கணக்கானோர் சாதித்துள்ளனர்! புதுமைகளும் அற்புதங்களும் பலருமே படைத்துள்ளனர்! ஆனால் படைத்த மறுநாளே பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலைபேசி விற்கவோ, அவர்களிடம் வேலை பார்க்கவோ கிளம்பிடுவர்! கோடியில் ஒருவரே அதைக் கொடையாகத் தரும் பெருந்தன்மையைப் பெற்றிருப்பர்.  அப்படி, கோடியில் ஒருவராய்த் திகழும் புண்ணியாத்மா  திரு விஸ்வநாதன் அவர்கள். ஆம்! அவர் உருவாக்கிய  'அழகி' மென்பொருளின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் அது  *"முற்றிலும் இலவசமாக (100% FREE)"* வழங்கப்படுவதுதான்.  2000-ஆம் ஆண்டு முதல் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டு, இடையில், சூழ்நிலை கட்டாயத்தால், அதில் ஒரு பகுதி வணிகமயமாக்கப்பட்டாலும், 2008 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து மீண்டும் முழுவதும்-இலவச-மென்பொருளாக (Freeware) மாற்றப்பட்டது. அழகி மென்பொருள் வெளியான ஆரம்ப காலத்திலேயே தி இந்து (The Hindu), சன் டிவி, ஜெயா டிவி போன்ற முக்கிய ஊடகங்கள் திரு. விஸ்வநாதன் அவர்களின் மகத்தான பணியைப் பாராட்டிச் செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் வெளியிட்டன. 2006ஆம் ஆண்டுக்கான மந்தன்(Manthan) விருதையும் வென்றது அழகி!

ஸ்ரீ சத்யசாயி போதனைகளின் பாதையில்... 


    திரு. விஸ்வநாதன் அவர்களின் அடிப்படை  வாழ்க்கைத் தத்துவம் மற்றும் அவரது சேவை மனப்பான்மையின் மையமாக விளங்குவது ஸ்ரீ சத்யசாயி பாபாவின் போதனைகளும், அவரிடத்திலான ஆழமான பக்தியுமே ஆகும்.

பாபாவின் தீவிர பக்தரான இவர், தனது மென்பொருள் மற்றும் சேவைப் பணிகள் அனைத்தையும் "கடவுளின் சொந்தப் படைப்புகள்" (God's Own Apps) என்றே கருதுகிறார். பாபாவின்  முக்கிய  உபதேசமான  "அனைவரிடமும் அன்பு செய், அனைவருக்கும் சேவை செய்! எப்போதும் உதவி செய், ஒருபோதும் காயம் ஏற்படுத்தாதே!" (Love All Serve All. Help Ever Hurt Never.) என்பதே திரு . விஸ்வநாதன் அவர்களின்  அடிப்படைக்  கொள்கையாகும். தனது மென்பொருளின் பிரதான தமிழ் எழுத்துருவுக்கு, தன் அன்னை இந்திரா மற்றும் பாபா இருவரின் நினைவாகவே  'சாய் இந்திரா' (Sai Indira) என்று பெயரிட்டுள்ளார். நடைமுறை ஞானத்தை செயல்முறைப் படுத்துகின்ற சேவைச் செம்மல் இவர்! தட்டச்சுப் பலகையில் சேவைத் தவம் இயற்றும் ராஜயோகி இவர்! இவரைப் போன்ற இறைவனின் இனிய கருவிகள், இவ்வுலகின் இன்னல்களைத் தாங்குவது மட்டுமல்ல! இம்மியும் அஞ்சாமல்... சோதனைகளை சாதனைகளாக மாற்றி இறைவனையே புன்முறுவல் பூக்கச் செய்வர்!  - - - என்று இவரின் பின்புலம் அறிந்த அனைவரும் தயக்கமின்றிக் கட்டியம் கூறுவர்! ஏனென்றால்...


சோதனையை சாதனையாய் மாற்றிய சாதகர்! 


    திரு. விஸ்வநாதன் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர்  கோழிக்கோடு Regional இன்ஜினியரிங் கல்லூரியில் "Production Engg. & Management"-உம் பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் கணினி மேற்கல்வியும் கற்றவர். பஜாஜ் ஆட்டோ லிமிடெட் மற்றும் TCS  போன்ற நிறுவனங்களில் தனது தொழில் வாழ்க்கையை வெற்றிகரமாகத் துவங்கியவர்.  ஆண்டவனை அடையும் பாதைக்கு ஆடம்பரம் தடை என்பதால் ஆன்மாவை விழித்தெழச் செய்ய அண்டம் அதிர்ச்சி தராமல் விடுவதில்லை!  பக்குவப்படும் ஆன்மாக்களை ஆன்மீகப் பேருலகம் பட்டுமெத்தையில் உறங்க விடுவதில்லை! ஆம்!  மிகப்பெரும் இடியாய் இறங்கியது 1989-ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட அபூர்வ உடல்நோய்! Colitis (பெருங்குடல் அழற்சி) என அறியப்படும் குணப்படுத்த முடியாத நோய் அவரைத் தாக்கியது. 

உபாதைகளை உதாசீனம் செய்த உதாரண புருஷர்! 


        ஒரு ஐந்துநாள் தலைவலிக்கே... அய்யோ சுவாமி சோதிக்கிறார் என்று அலறுவோர்  மத்தியில்... பதவி உயர்வு தவறிப்போனால் பகவானைத் திட்டும் பதர்கள் மத்தியில்...  1989-ல் தொடங்கி பல வருடங்களாக பலமுறை ஏற்பட்ட Colitis மற்றும் அமீபியாசிஸ்-சின் தீவிரத் தாக்கம், அத்துடன் சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட ஸ்டீராய்டுகள்/ஆன்டிபயாடிக்ஸ் காரணமாக, நோய் எதிர்ப்பு சக்தி பாழாகி, இன்றுவரையிலும், தினசரியாகவோ அல்லது வெவ்வேறு கால இடைவெளிகளிலோ, ஒவ்வாமை, நாசியழற்சி (Allergic Rhinitis), நாசி ரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகளும், அடிக்கடி மற்றும் கட்டுப்பாடற்ற குடல் இயக்கங்களும் (Frequent and Uncontrollable Bowel Movements) ஏற்பட்டபோதும்.... மென்பொருட்களுக்கான மேம்பாடுகளில் நீண்ட நேரம் உழைத்ததால், கண் அழற்சி (UVEitis) என்கிற  புதிய நோய் ஏற்பட்ட போதும்.... தன்னைவிடவும் பல மடங்கு துன்பப்படும் எண்ணற்ற உயிர்கள் இருப்பதாகக் கூறி, தனது துன்பங்களைப் பற்றிக் குறைபடாமல், துன்பப்படும் அனைவரும் குணமாக வேண்டும் என்று மௌனமான பிரார்த்தனையை மட்டுமே அவர் மக்களிடம் கோருகிறார்.


    2025-ல் இன்றும் கூட இறைவனைக் குறை கூறித் திட்டாமல் தியானப் பாதையில்… ஞானப் பாதையில்… சேவைப் பாதையில்… அன்புப் பாதையில்… ராஜநடை போடுகிறார் உலகத்திற்கே ஒரு உதாரண புருஷராய்! கடுமையான இரத்தப்போக்கு, வலி மற்றும் வேதனைகள் காரணமாக, அவர் 1997-ல் தனது வேலையை ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.   தனக்கு ஏற்பட்ட துன்பங்களுக்கு மத்தியிலும், தமிழ்ச் சமூகத்துக்கு உதவும் நோக்குடன் தமிழ் ஒலிபெயர்ப்பு மென்பொருளை உருவாக்கினார். இடரினும் தளரினும் எனதுரு நோய் தொடரினும் எனக்கு அன்பும் ஆறுதலும் தந்த மாதரசி என் மனைவி மீரா என்று நன்றிப்பெருக்கில் வாழ்ந்தார். ஆன்மாவின் அழகைக் கண்டு தனக்கு அன்பு செய்யும் மனைவி மீராவைக் குறிக்கும் வகையில்  2000-ஆம் ஆண்டில் தான் படைத்த   மென்பொருளுக்கு  'அழகி' (Azhagi)** என்று  பெயரிட்டு வெளியிட்டார். இந்தச் செயலியானது, தமிழ் விசைப்பலகை அல்லது இணைய இணைப்பு இல்லாமலேயே, ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் அதைத் தமிழாக மாற்றும் புரட்சிகரமான வசதியைக் கொண்டிருந்தது. 


சத்கர்மம் நிகழ்த்தும் சத்யசாயி தொண்டர்!


    திரு. விஸ்வநாதன் அவர்களின் பணி வெறும் தொழில்நுட்பப் பங்களிப்பாக மட்டும் இல்லாமல், அவரது ஆழமான ஆன்மீக நம்பிக்கையிலிருந்து பிறந்த தன்னலமற்ற சேவைப் பணியாகத்  திகழ்கிறது. Credits, Copyrights, Intellectual Property, Attribution  என்று ஆர்ப்பரிக்கும் அற்பப் பணப்பேய்கள் நிறைந்த இன்றைய சமூகத்தில் இவரின் இந்தச் செயலிகள் (APPS) அனைத்தையும் *"கடவுளின் சொந்தப் படைப்புகள்*" (God's Own Apps) எனப் பிரகடனம் செய்து இலவசமாகத் தருகிறார்.


திரு. விஸ்வநாதன் (சமீபத்திய படங்கள்- 2024/25) 

தன்னை ஒரு Nothing என்றும், கடவுளே Everything என்றும் அறிவிக்கிறார். இந்த மென்பொருட்களை மக்களுக்கு வழங்கி சேவை செய்யவே... கடவுள் தன்னை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகவும் விஸ்வநாதன் உறுதியாக நம்புகிறார். மேலும் சேவை செய்வதே வாழ்வின் இலக்கான 'சுய-உணர்தல்' (Self-Realization) நோக்கிப் பயணிக்க உதவும் மிகச்சிறந்த வழி என்று கருதுகிறார்.


    'அழகி' தற்போது 15-க்கும் மேற்பட்ட உலகத் தரம் வாய்ந்த இலவசச் செயலிகளின் தொகுப்பாக உருவெடுத்துள்ளது (சமீபத்திய வெளியீடான "macOS கணினிகளுக்கான அழகி" உட்பட). இவ்வனைத்து செயலிகளையும் இவர் வீட்டிலிருந்தபடியேதான் செய்துள்ளார்.  இவர் வீட்டை விட்டு வெளியே செல்வது என்பதே அரிது. 'அழகி' சத்கர்மாவிலேயே... தான் தொடர்ந்து இடைவிடாமல் பணியாற்ற, கடந்த சில வருடங்களாக, "பசியா வரம், தூங்கா வரம், தாகம் எடுக்கா வரம்" முதலியவற்றை... "சீரிய ஆரோக்கியத்துடனும், நிலையான மனதுடனும்" தனக்குக் கொடுக்குமாறு இறைவனிடம் மனதாரப் பிரார்த்தனை செய்து வருவதாகக் கூறுகிறார்.      மேலும், தாம் கண்ட பேருண்மையை  தனது மகன் வ்ரிஷின்-க்கும் எடுத்துக்கூறி  அவருக்கும் “சாயி சேவையில் சுகம் காணும்  கலை!”-யைக் கற்றுக் கொடுத்துள்ளார் திரு.விஸ்வநாதன். சென்னை மெட்ரோ(மேற்கு) T Nagar சமிதியின் Youth coordinator வ்ரிஷின் என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. பிள்ளைக்கு நல்வழிகாட்டும் பெற்றோர்; பெற்றோருக்கு அன்பு சேவை புரியும் பிள்ளை எனும் விதமாக இந்தக் குடும்பம் புண்ணியாத்மாக்களின் புனிதக் கூட்டணியாக  சாயி-ஸத்-குடும்பமாக  விளங்குகிறது. இந்த விஸ்வரூப சாயிசேவகர் விஸ்வநாதன் அவர்களின் வாழ்வும் சேவையும்… அவர் அடைந்திருக்கும் பக்குவ-ஞானமும், கர்மச் சுழலில் அகப்பட்டு ஆண்டவனைப் பற்றமுடியாமல் திணறும் எண்ணற்ற மனிதர்களுக்கு ஒரு அற்புதமான உத்வேகமாக அமைந்துள்ளது என்பது பரம சத்தியம்!


ஸ்ரீ சத்ய சாயி யுகம் தொகுத்தளிக்கும் இந்தக் கட்டுரை இயற்றிய கணினியிலும் இவரது அழகி (Azhagi) வெற்றிகரமாகத் தனது பணியைச் செய்துகொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


அழகி(Azhagi) செயலிகளைப் பற்றி மேலும் அறிய: https://www.azhagi.com/index.php


தொகுத்தளித்தவர்: 

கவிஞர் சாய்புஷ்கர்



குறிப்பு : Azhagi/அழகி குறித்த சில முக்கிய/தொழிநுட்ப மற்றும் சுவாரஸ்ய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது! தொழிநுட்பத் தகவல்களில் ஆர்வமும் தேவையும் உள்ளோர் தவறாமல் வாசிக்கவும்.


+_+_+_+_+_+_+_+_+_+_ +_+_+_+_+_ +_+_+_+_+_ +_+_+_+_+_ +_+_+_+_+ 



🛠️ தற்போதைய மென்பொருள் செயலிகள் மற்றும் ஆதரவு (Current Toolsets & Support)


முக்கியக் கருவிகள்:

    **அழகி+ (AzhagiPlus):** 100-க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் (தமிழ், சம்ஸ்கிருதம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, பெங்காலி, பஞ்சாபி, ஒரியா, அசாமீஸ், சௌராஷ்ட்ரா, தேவநாகரி, கிரந்தம், லத்தீன், அரபிக், க்ரீக், ..., .., .) — நேரடியாகவே எல்லா செயலிகளிலும் (MS Word, Facebook, WhatsApp, Quora, Gmail, Twitter, PhotoShop, PageMaker, InDesign, CorelDraw, Excel, PowerPoint, etc.) எளிதாகவும் வேகமாகவும் ஒலிபெயர்ப்பு மற்றும் தட்டச்சு செய்ய உதவும் சிறப்புமிகு மென்பொருள்.

    * **அழகி++ (AzhagiPlusPlus):** ஒலிபெயர்ப்பு மட்டுமல்லாது, மிக வேகமான தமிழ் எழுத்துரு மாற்றி (Tamil Fonts Converter), Sanskrit Tamil Colorizer போன்ற அரிய பல கருவிகள் உள்ளடக்கிய செயலி.

    * **I AM That Word:** தமிழ் வார்த்தைகளுக்கான பரிந்துரைப்பான், எழுத்துப்பிழை திருத்தி, வார்த்தைத் தேடல் போன்ற பல வசதிகளைக் கொண்ட தனித்துவமான கருவி.

    * **AAW / AAE:** MS Word மற்றும் MS Excel கோப்புகளில் உள்ளடக்கப்பட்ட (InBuilt) தமிழ் தட்டச்சு மற்றும் தமிழ் எழுத்துரு மாற்றம் செய்ய உதவும் துணை நிரல்கள் (Addins).

    * **SITA Fonts:** அழகியின் முதல் வகையான, புரட்சிகரமான **'நூதன' தானியங்கி எழுத்துருக்கள் (Self-Typing Fonts)**.


இலவச ஆதரவு:        இந்த இலவசச் செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்களுக்கு அவர் தனிப்பட்ட முறையில் **தொலைபேசி, வாட்ஸ்அப், முகநூல் குழுமம் (https://facebook.com/groups/Azhagi), FB Messenger மற்றும் மின்னஞ்சல் மூலம் 100% இலவச ஆதரவை** (100% Free Support) தாமே நேரடியாக வழங்கி வந்துள்ளார், இதுநாள்வரை. இந்த அர்ப்பணிப்பு பல இலட்சக்கணக்கான பயனர்களுக்குப் பெரும் உதவியாக உள்ளது. 2021-ஆம் ஆண்டு முதல், பயனாளர்களுக்கு Free Support வழங்கும் பணியில், எவ்வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், அழகியின் தீவிர பயனாளர் திரு. கோபாலன் ஐயா அவர்களும் அயராது தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!


AI பரிந்துரை:

        நீங்கள் பிரபலமான AI இயந்திரங்களிடம் (ChatGPT, Perplexity, Gemini, முதலியன) இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய பரிந்துரைக்கப்பட்ட சிறந்த மென்பொருள் என்ன? என்று வினவினால், இன்றைய தேதியில்  அவை அனைத்துமே  'அழகி'-யைத் தான் பரிந்துரைக்கின்றன! 



ChatGPT மற்றும் Perplexity இன் பரிந்துரைகள்!


3 கருத்துகள்:

  1. "A Beautiful Soul" is a rarity in these days of "Self Promotion" and "Money Over Everything". Yet, on those rare occasions when we sense it, it is only appropriate that we delve deeper and recognize it, and appreciate and celebrate it.

    We have been neighbors of Mr. Viswanathan for multiple decades and our family has gotten to know a lot of these pleasantly surprising traits of Mr. Viswanathan.

    In these days when commercial considerations top the chart of every software developer - individual and corporate - Mr. Viswanathan not only has developed many applications that help countless people but also has ensured his applications are available cost free, including support of the applications.

    We pray that God bless him and his family for the yeoman service he has provided to simplify many complicated / time-consuming / cost-intensive tasks, appreciated by and benefited by countless people.

    Sashi Gajendran, Shashank Solomon, & Solomon Kishore

    பதிலளிநீக்கு
  2. வணக்கம். என் பெயர் முரளிதரன். நான் பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் computer operator ஆக தற்காலிக பணியாளராக பணிபுரிகிறேன். நான் தமிழ் தட்டச்சு பயின்று உள்ளேன். இருப்பினும், தமிழில் உள்ள பல எழுத்துருக்கள் வெவ்வேறு கீபோர்ட் லேஅவுட் இல் இருப்பதால், தமிழ் எழுத்துருக்களை தட்டச்சு செய்வது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. தற்செயலாக அழகி ஆசிரியர் விஸ்வநாதன் சாரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. விஸ்வநாதன் சார், இதற்கு தீர்வாக அழகி பிளஸ் என்ற இலவச சாஃப்ட்வேர் இருப்பதை பற்றி கூறினார். நானும்.அழகி+ சாப்ட்வேர் இல் இருக்கக்கூடிய பல்வேறு தனித்துவமான சிறப்பு அம்சங்களை பற்றி விஸ்வநாதன் சார் மூலம் தெரிந்து கொண்டு பயன்படுத்த தொடங்கினேன். அதன் பின்னர் தமிழ் தட்டச்சு குறித்து என்னிடம் உதவி கேட்கும் பலருக்கும் நான் அழகி பிளஸ் சாஃப்ட்வேரை பரிந்துரைத்து உள்ளேன். மேலும் பல சமயங்களில் அழகி பிளஸ் சாஃப்ட்வேரில் இருக்கக்கூடிய direct word conversion tool ஐ பயன்படுத்தி ஒரு தமிழ் font ஐ வேறொரு தமிழ் font ற்கு கன்வெர்ட் செய்து கொடுத்துள்ளவணக்கம். என் பெயர் முரளிதரன். நான் பெரியகுளத்தில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் computer operator ஆக தற்காலிக பணியாளராக பணிபுரிகிறேன். நான் தமிழ் தட்டச்சு பயின்று உள்ளேன். இருப்பினும், தமிழில் உள்ள பல எழுத்துருக்கள் வெவ்வேறு கீபோர்ட் லேஅவுட் இல் இருப்பதால், தமிழ் எழுத்துருக்களை தட்டச்சு செய்வது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. தற்செயலாக அழகி ஆசிரியர் விஸ்வநாதன் சாரிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. விஸ்வநாதன் சார், இதற்கு தீர்வாக அழகி பிளஸ் என்ற இலவச மென்பொருள் (software) இருப்பதை பற்றி கூறினார். நானும்.அழகி+ சாப்ட்வேர் இல் இருக்கக்கூடிய பல்வேறு தனித்துவமான சிறப்பு அம்சங்களை பற்றி விஸ்வநாதன் சார் மூலம் தெரிந்து கொண்டு பயன்படுத்த தொடங்கினேன். அழகி+ சாப்ட்வேர் ஐ பயன்படுத்தி, நான் தமிழ் தட்டச்சு பயின்ற அதே கீபோர்டு லேஅவுட்டில் அனைத்து தமிழ் font களையும் என்னால் எளிமையாக type செய்ய முடிந்தது. அதற்குப் பிறகு, தமிழ் தட்டச்சு குறித்து என்னிடம் உதவி கேட்கும் பலருக்கும் நான் அழகி பிளஸ் சாஃப்ட்வேரை பரிந்துரை செய்துள்ளேன். மேலும் பல சமயங்களில் அழகி பிளஸ் சாஃப்ட்வேரில் இருக்கக்கூடிய direct word conversion tool ஐ பயன்படுத்தி ஒரு தமிழ் font ஐ வேறொரு தமிழ் font ற்கு கன்வெர்ட் செய்து கொடுத்துள்ளேன். இதனால் என்னிடம் உதவி கேட்டு வரும் பலர் அவர்களுடைய தேவை நிறைவடைந்து மிகவும் மகிழ்ச்சியுடன் சென்றுள்ளனர். இதற்கு முழுமுதல் காரணம் அழகி சாஃப்ட்வேரும், அழகி சாஃப்ட்வேர் ஐ உருவாக்கி இலவசமாக மக்களுக்கு கொடுத்த விஸ்வநாதன் சார் அவர்களும் தான். மேலும் தற்போது விஸ்வநாதன் சார் அவர்கள் அழகி++ சாப்ட்வேரையும் மக்களுக்கு இலவசமாக உருவாக்கிக் கொடுத்துள்ளார். அழகி சாப்ட்வேர் ஆசிரியர் விஸ்வநாதன் சார் அவர்களுக்கு என் சார்பாகவும், பயனாளிகள் சார்பாகவும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமில்லாமல், அழகி+ மற்றும் அழகி++ மென்பொருள் ஆசிரியர் விஸ்வநாதன் சார் அவர்களும், அவர்களது குடும்பத்தாரும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் நீண்ட ஆயுளை பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம். என் பெயர் கோபாலகிருஷ்ணன். நான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவன். நான் சிறு வயது முதல் typing செய்து வருகிறேன். இங்கிலீஷ் மற்றும் தமிழ் அதிவேக தட்டச்சர் என்று சான்று பெற்றுள்ளேன். மேலும் godrej சாம்பியன் 1982 வருடத்தில். முதன் முதலில் அழகி மென்பொருள் 2002 வருடம் உபயோகிக்க ஆரம்பித்தேன். மிகவும் எளிய முறையில் வேகமாக தட்டச்சு செய்துள்ளேன்.

    நான் தமிழ் தட்டச்சு பயின்று இருப்பினும், தமிழில் உள்ள பல எழுத்துருக்கள் வெவ்வேறு கீபோர்ட் லேஅவுட் இல் இருப்பதால், தமிழ் எழுத்துருக்களை தட்டச்சு செய்வது எனக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அழகி+ சாப்ட்வேர் ஐ பயன்படுத்தி, நான் தமிழ் தட்டச்சு பயின்ற அதே கீபோர்டு லேஅவுட்டில் அனைத்து தமிழ் font களையும் என்னால் எளிமையாக type செய்ய முடிந்தது. அதற்குப் பிறகு, தமிழ் தட்டச்சு குறித்து என்னிடம் உதவி கேட்கும் பலருக்கும் நான் அழகி பிளஸ் சாஃப்ட்வேரை பரிந்துரை செய்துள்ளேன். இதற்கு முழுமுதல் காரணம் அழகி சாஃப்ட்வேரும், அழகி சாஃப்ட்வேர் ஐ உருவாக்கி இலவசமாக மக்களுக்கு கொடுத்த விஸ்வநாதன் சார் அவர்களும் தான். மேலும் தற்போது விஸ்வநாதன் சார் அவர்கள் அழகி++ சாப்ட்வேரையும் மக்களுக்கு இலவசமாக உருவாக்கிக் கொடுத்துள்ளார்.



    நான் சம்ஸ்கிருதம் type செய்யும்போது பல சந்தேகங்கள் வந்து அதை திரு விஸ்வநாதன் சார் திருத்தி கொடுத்துள்ளார்.

    முக்கியமாக திரு கோபால் ஐயா மற்றும் முரளிதரன் அவர்களுக்கும் மிக கடமைப்பட்டுள்ளேன். பல சந்தேகங்களுக்கு இருவரும் நிவர்த்தி செய்தார்கள்.

    இதுவரை 40 புத்தகங்களுக்கு மேல் தட்டச் செய்து புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன.

    தொடர்ந்து அழகி மெனூரும் உபயோகித்துகொண்டிருக்கிறேன்.


    அழகி சாப்ட்வேர் ஆசிரியர் விஸ்வநாதன் சார் அவர்களுக்கு என் சார்பாகவும், பயனாளிகள் சார்பாகவும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமில்லாமல், அழகி+ மற்றும் அழகி++ மென்பொருள் ஆசிரியர் விஸ்வநாதன் சார் அவர்களும், அவர்களது குடும்பத்தாரும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் நீண்ட ஆயுளை பெற்று வாழ சாய்ராம் மூலமாக இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி.
    கோபாலகிருஷ்ணன்
    ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி.

    பதிலளிநீக்கு