தலைப்பு

செவ்வாய், 18 மார்ச், 2025

இஸ்லாமிய பெண்ணின் வயிற்றுக் கட்டியை குணமாக்கிய பாபா!

பேரிறைவன் பாபாவின் தெய்வத் திருவாக்கு பொய்க்காது என்பதைப் பற்றியும் ஒரு இஸ்லாமிய பெண்மணிக்கு நிகழ்ந்த சாயி சிகிச்சைப் பற்றியும் சுவாரஸ்யப் பதிவாக இதோ...!

அவள் பெயர் ருக்மணி! மதுரையில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறாள்! சாயி பக்தை சகுந்தலா அம்மாளின் வீட்டின் அருகிலேயே தங்கி இருக்கிறாள்! ருக்மணியின் சிறுவயது அனுபவம் மகிமை வாய்ந்தது! சிறுவயதிலேயே தாயை இழந்திருந்ததால் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறாள்! மதுரைக்கு பாபா வந்திருக்கும் போதெல்லாம் ஒரு சாயி பக்தர் வீட்டில் தங்குகிறார்! அந்த வீட்டில் பாபாவை தரிசிக்க பாட்டியோடு ருக்மணியும் வருகிறாள்! "சுவாமி சுவாமி" என்று பாபாவின் பின்னாலேயே சுற்றித் திரிகிறாள்! இப்படி தாயில்லா பிள்ளையாக ருக்மணி இருக்கிறாளே! இவளது எதிர்காலம் என்ன ஆகும் - பாபா தான் அவளின் எதிர்காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற ஒரே அங்கலாய்ப்பு பாட்டிக்கு! அதை அந்தப் பாட்டி பாபாவிடமே ஒருநாள் சொல்லிவிடுகிறாள்! அதற்கு பாபாவோ "இன்றிலிருந்து 25 ஆண்டுப் பிறகு ருக்மணி மதராஸில் உள்ள ஒரு சகுந்தலா என்பவளின் வீட்டு அருகே வசிப்பாள்! அவளை நான் பார்த்துக் கொள்கிறேன்!" என்கிறார் பாபா! பாபாவின் சொல் பொய்க்கவில்லை! 25 ஆண்டுகள் உருண்டோடுகின்றன! பாபா சொன்னதற்கு இணங்க அப்படியே நிகழ்கிறது!


ஒருநாள் ருக்மணி தனது பூஜையறையில் பாபாவுக்கு பூஜை செய்து வருகிற போது பாபாவின் குரல் கேட்கிறது "உன் வீட்டு அருகே இருக்கும் சகுந்தலாவுக்கு உடல் நலம் சரியில்லை - என்னவென்று கவனி!" என்று பாபா அறிவிக்க - ஓடி வருகிறாள் ருக்மணி சகுந்தாலா அம்மாளின் வீட்டிற்கு! அதற்குப் பிறகு சகுந்தலாவின் உற்ற துணையாகி - சேவை ஆற்றுகிறாள் ருக்மணி! இப்படி ஒரு சேவையை ருக்மணியை தவிர வேறு எவராலும் செய்ய இயலாது என்று நெகிழ்ந்து போகிறார் சகுந்தலா! பாபா இப்படித் தான் ஒரு பக்தர் வழி தான் இன்னொரு பக்தருக்கு உதவுவார் என்று உண்மை பேசி புளகாங்கிதம் அடைகிறார்! 

மதராஸ் முனிசிபல் கார்ப்பரேஷனில் தலைமை அதிகாரியாக ஒரு இஸ்லாமியர் இருக்கிறார்! அவர் ஒரு சாயி பக்தர்! அவர் பக்தரானதற்குப் பிறகு ஒரு பெரிய மகிமை வாய்ந்த நிகழ்வு அவரின் குடும்பத்தில் அரங்கேறுகிறது! அந்த இஸ்லாமிய குடும்பம் மஸ்ஜித்'தை தவிற எங்கும் செல்லாத குடும்பம்! இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன் அதில் சாயியும் ஒருவர் என்ற உணர்வு மேலோங்கி இருந்தது அவர்களுக்கு!

ஒருமுறை அந்த இஸ்லாமிய தலைமை அதிகாரியின் உறவினர் ஒருவருக்கு அடிவயிற்றில் கட்டி ஏற்படுகிறது! அது டியூமர்! பாதிக்கப்ட்ட அந்தப் பெண்மணியின் வீட்டருகே சுலோச்சனா எனும் ஒரு பெண்மணி வசிக்கிறார்! அவரோ சகுந்தலா வீட்டு சாயி பஜனைக்கு அடிக்கடி வருபவர்! பாதிக்கப்பட்ட அந்த இஸ்லாமிய பெண்மணிக்கும் சாயி பஜனைக்கு வர வேண்டும் என்ற விருப்பம் வருகிறது! ஆனால் அவள் கணவரோ இதற்கு அனுமதி அளிக்கப் போவதில்லை - ஆயினும் மனதில் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தனக்கு வந்த நோயை பாபாவால் நிச்சயம் காப்பாற்ற இயலும் என்ற நம்பிக்கையோடு சகுந்தலா வீட்டுக்கு வருகிறார்! "அந்த முஸ்லீம் பெண்ணுக்கு விபூதியை வயிற்றில் தடவு! போ!" என்று பாபாவின் குரல் - சகுந்தலாவின் உள்ளுணர்வில் ஏற்படுகிறது! உடனே சென்று தனது வீட்டுக்குள் வந்திருந்த முஸ்லீம் பெண்ணின் வயிற்றில் பாபா விபூதியை தடவி விடுகிறார் சகுந்தலா!

அந்த நாளுக்கு மூன்றாவது நாள் இரவே அந்த முஸ்லீம் பெண்ணுக்கு கனவு வருகிறது! கனவில் பேரிறைவன் பாபா தோன்றுகிறார்! அதே நிகழ்வு தான்! விபூதியை வயிற்றில் தடவுவது - ஆனால் அதைக் கனவிலோ பாபாவே புரிகிறார்! மிகச் சரியாக அடுத்த நாளே உப்பி இருந்த அந்த பெண்ணின் வயிறு சரியாகிறது- நார்மலுக்கு வருகிறாள்! பூரணமாக குணமாகிறாள்! கத்தியின்றி ரத்தமின்றி பாபா நிகழ்த்தி வரும் பலகோடி அற்புதங்களில் இதுவும் ஒன்று!


(ஆதாரம் : "ஸ்ரீ சத்ய சாயி லீலாம்ருதம்" - பக்கம் 18 - 23 பதிப்பாசிரியர் - டாக்டர் கே.டி.குமார் - பதிவு ஆண்டு 2004)


பாபா நிகழ்த்தி வரும் பேரற்புதங்களுக்கு ஜாதி இல்லை - மதம் இல்லை - மொழி இல்லை - தேசம் இல்லை! அது சர்வ சகல ஜீவராசிகளையும் உள்ளடக்குகிறது! அப்படி பல கோடி அற்புதங்கள் அன்றாடம் புரிகிறார்! தானே புரிந்தேன் என்பதையும் பாபா வெளிக்காட்டிக் கொள்வதில்லை! விளம்பரமும் தேடுவதில்லை! ஏனெனில் பாபாவின் பேரன்பு அத்தகையது! அதற்கு ஒரு எல்லையே இல்லை! கலங்கரை விளக்கம் கண்ணில் படாமல் மலைக் குகைக்குள் இருக்காது - அப்படி இருப்பது கலங்கரை விளக்கமாக இருக்காது என்பது போல் காதும் காதும் வைத்தாற் போல் இயங்கும் சாயி இறை மாட்சி காலத்தின் தேவைக்கு ஏற்ப கரைபுரண்டு வெளியே ஒளிர்கிறது! அந்த ஒளி அவசியமே! அந்த சாயி ஒளியே உலகில் சாந்தியும் சமத்துவத்தையும் பிரேமை பொங்கப் பொங்க விரைவில் கொண்டு வரப் போகிறது!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக