(வாழும் கலை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியை நோக்கிய ஸ்ரீ சத்ய சாயி யுகத்தின் பயண அனுபவக் கட்டுரை)
ஸ்ரீ சத்ய சாயி யுகம் டீம் வாழும் கலை மகான் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருதேவரை சந்தித்த நாளில் ஏற்பட்ட சுவாரஸ்யமும் - குருதேவ் கொடுத்த ஆச்சர்ய அனுகிரக மொழியும் - நூற்றாண்டு செய்தியாக அதுவும் சுவாரஸ்யமாக இதோ...!
"ஆ... இவரை எங்கேயோ பார்த்திருக்கேனே!" என விளம்பர சுவரொட்டியில் ஸ்ரீ ஸ்ரீ குருதேவரை முதன்முறையாக தரிசனம் செய்தது முதல் ஆரம்பித்தது அடியேனுக்கு அவர் மேலான இந்த ஜென்மத்து காதல்! அது ஆண்டு 2000! பூர்வ ஜென்மத் தொடர்பு தான் - சந்தேகமில்லை! ஒரே பார்வையில் என்னை அவர் தன்பால் நேசிக்க வைத்தார்!
அப்படியே வாழும் கலை ஆரம்ப வகுப்பு- ஒரு பாபா நாளில் (வியாழக்கிழமை) அவர் சிருஷ்டித்த சுதர்ஷன் கிரியாவோடு ஆன்மத் தொடர்பு ஏற்பட்டதும் அதே ஆண்டுதான் ! பிறகு தான் குருதேவர் பாபாவின் பாலவிகாஸ் வகுப்புக்கும் தனது சிறுவயதில் சென்றிருக்கிறார் என்பதை அறிந்து கூடுதல் பரவசம் அடைந்திருக்கிறேன்! எனக்கு இந்த ஆண்டு (2025) சுதர்ஷன் கிரியா யோகக்கலையின் வெள்ளி விழா ஆண்டு என்பதும் எனக்கு பாக்கியமானது! சுதர்ஷன் கிரியா தான் என் இளகுத் தன்மைக்கான - இதயத் திறப்புக்கான - மனக் குழைவுக்கான - ஆன்ம தெளிவுக்கான சாவியே! இப்படித் தான் என் சுவாமி பாபா என்னை ஆன்மிக வாழ்வில் சிறுவயது முதல் செதுக்கிக் கொண்டு வந்தது!
"ஆ வந்துட்டியா வா!" என்று ஸ்ரீ ஸ்ரீ குருதேவர் முதல் பார்வையிலேயே அதே 2000 ஆண்டு - அப்படி அழைத்தது முதல் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்! அந்த ஆச்சர்யம் இந்த முறையும் தொடர்ந்தது- எப்போதும் சிரித்த முகத்தோடு இருக்கும் சூட்சுமம் அவரது தனித்துவம்! அவரது கண்களில் எப்போதும் கள்ளம் கபடமற்ற குழந்தையே எட்டிப் பார்க்கும்! பேரிறைவன் பாபாவின் கண்களை கவனித்திருக்கிறீர்களா? கண்களில் கருணைக் கடல் ததும்பி நிரம்பி இருக்கும்! கண்கள் தான் ஆன்மாவின் வாசல்! ஆக இருவரின் கண்களும் என்னை அப்படியே அடைக்காத்துக் கொண்டன!
பள்ளி பருவம் முடிந்த எனது பால் வடியும் பருவம் அது - ஸ்ரீ ஸ்ரீ குருதேவரோடு நடனம் ஆடி இருக்கிறேன் - உணவு பரிமாறி இருக்கிறேன்! பாதத்தில் முத்தம் பதித்து இருக்கிறேன்! ஆரத் தழுவி இருக்கிறேன்! அதற்கெல்லாம் என் சுவாமி பாபா தான் காரணம்! எனக்கு அத்வைதம் எனும் ஆன்ம ஞானத்தை அப்படித் தான் பழக்க ஆரம்பித்தார்!
உணவு - உடை விஷயத்தில் பல்வேறு தேசங்களின் பொருட்களை நுகரும் நாம் ஏன் ஆன்மிகம் என்று வரும்போது பலவித மதங்களை ஒருங்கிணைத்து ஏற்காமல் வெறுத்து ஒதுக்குகிறோம் - இது நியாயம் இல்லையே என்று பாபா வலியுறுத்தும் அதே சர்வ மத ஏக உணர்வையே குருதேவரும் வலியுறுத்துகிறார்! உலகளாவிய ஆன்மிக ஞானத்தை நுகர வேண்டும் என்கிறார் குருதேவர்!
அதை அடியேன் இன்னும் விரிவுபடுத்தி - அனைத்து உண்மையான ஆன்மிக மகான்களின் ஞானத்தையும் பேதமின்றி நாம் நுகர தயாராக இருக்க வேண்டும் என்கிறேன்!
சரி! இது பாபாவின் நூற்றாண்டு - அவரிடம் பேரிறைவன் பாபாவை பற்றி ஏதேனும் கேட்போமே என்று எண்ணம் எங்களுக்கு உதயமானது! ஞானிகளின் நோக்கு கூட நம்மால் உணர முடியும் - ஆனால் போக்கு உணர்வது கடினமே! ஏனெனில் குருதேவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேசத்தில் அருள் பாலிப்பவர்! நம்மால் அவரை தரிசிக்க இயலுமா? தெரியவில்லை! முயற்சிப்போம் என்று அதற்கான வழிமுறையை தேடித் தேடி அறிந்தோம்! பாபா உதவினார்! பாபாவின் உதவிக்கரம் இல்லாமல் எதுவும் ஸ்ரீ சத்ய சாயி யுகத்தில் உதயமாவதில்லையே!
பிறகு தொடர்பு கிடைத்தது! அனுமதியும் கிடைத்தது! சாதாரண நேர்காணல் அல்ல பிரேத்யேக நேர்காணல்! பலர் வெளி நிற்க உள்ளே நடந்த தரிசன உரையாடல்! பாக்கியத்தோடு பெங்களூர் பயணித்தோம் (6/09/2025)! அடியேன் - சாயி புஷ்கர் - யுகத்தில் பல்வேறு மொழி மாற்றம் சேவை செய்யும் ஸ்ரீமதி வரலக்ஷ்மி சாயிராம் - இப்படி மூவர் கூட்டணி! கார் அதிகாலை பயணித்தது! வாழும் கலையில் நுழைந்தோம்! அது ஒரு தனி சாம்ராஜ்யம்!
உள்ளேயே எல்லாம் உயிர்ப்பாக இருக்கிறது! தியான மண்டபம் உருவாகிக் கொண்டிருக்கிறது! மகாமேரு வடிவத்தில் தனது ஆள்காட்டி விரலால் ஆகாயம் தொடும் விசாலாட்சி மண்டபம் தரிசித்தோம்! குருதேவரின் தாய்ப் பெயர் பூஜ்ய ஸ்ரீ விசாலாட்சி'மா! விசாலமான அருளாட்சி அங்கே ததும்பியதை உணர்ந்தேன்! சென்று பல்லாண்டு ஆனதில் பல்வேறு புற மாற்றங்கள் அங்கே! குளிரில் தவழும் காற்றலைகளில் கூட யோகக் கலையே தவழ்ந்ததை உணர முடிந்தது! ஓய்வெடுக்க அறை எடுத்தோம்!
எனக்கு ஓய்வு வராமல் யோகத்தின் மேல் சாய்வே தோய்ந்தது! தினசரி இல்லத்தில் பயிற்சி செய்யும் யோகப் பயிற்சியை அந்த அறையில் ஆரம்பித்தேன்! தியானம் அமர்ந்தேன்! கூடுதல் பரவசம் தொற்றிக் கொண்டது! கார் பயணக் களைப்பெல்லாம் காணாமல் போனது! பிறகு மதிய உணவுக்குச் சென்றோம்! மூன்று வேளையும் அங்கே உணவு இலவசம்! எந்த நிபந்தனையும் இல்லை! ஆசிரமப் பகுதிக்கு இலவசமாக உள்ளே அழைத்துச் செல்ல இலவச ஆட்டோ! விமான நிலையத்தில் இருந்து ஆசிரமம் வர இலவசப் பேருந்து - இயற்கை எழில் - கைகளைக் கழுவும் சோப்பு நீர் கூட ஆசிரமமே தயாரிக்கும் சுயதொழில் - குருதேவர் நடத்தி வரும் கோசாலை - வேத பாடசாலை - பள்ளி (இலவசக் கல்வியும் பலருக்கு உண்டு) என்று ஆச்சர்யப்பட அங்கே நிறைய இருக்கிறது! மகாத்மா காந்தி சபர்மதி ஆசிரமம் பற்றி படித்திருக்கிறேன் - அதை குருதேவர் இன்றளவும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் எனும்போது எனது பாட்டன் பாரதியின் சுதேச கீதங்களாய் அது மனதில் சுடர்விட்டன!
இதுவரை எந்த ஆசிரமம் சென்று வசித்தாலும் புசித்தாலும் ஆன்மா பசித்தாலும் எனக்கு இதுவரை பேதமே தோன்றியதில்லை! உலகமே என் குடும்பம் என்கிறார் பாபாவோடு சேர்த்து குருதேவரும் கூட! அதேபோல் எல்லா மெய் ஆன்மிக ஆசிரமமும் என்னுடைய சொந்த வீடே! மெய் மகான்கள் மட்டுமே எனது உறவினர்கள்! பேரிறைவன் பாபா மட்டுமே எனது தாய்! இதில் நான் இன்றுவரை தடுமாறியதே இல்லை! மகான்கள் மேலான என்னுடைய தீரா காதலை எனது தாயான சாய் மட்டுமே அறிவார்! வேறு யாருக்கு அந்த அக அத்வைதம் விளங்கும்?! குருதேவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை முன்பே தயாரித்திருந்தேன்! அவருக்கு கொடுப்பதற்காகவே சிறப்புப் பரிசை கைகளில் ரேகையைப் போல் சிக்கெனப் பிடித்திருந்தேன்! ஆசிரமத்தில் வெளிச்சம் இருந்ததே தவிர வெய்யில் இல்லை! தட்ப வெப்பமும் குருதேவர் குணம் போலவே குளிர்ந்து காட்சி அளித்தது! பிறகு மாலை கனிந்தது!
குருதேவருக்காக காத்திருந்தோம்! சந்தியா வந்தனத்திற்கு காத்திருக்கும் அந்தணன் போல பக்தியோடு காத்திருந்தேன்! ஆதவன் எனும் ஸ்ரீ ஸ்ரீ குருதேவர் சந்திப்பதற்கு முன் அந்தி எங்களை சந்தித்தது!
குருதேவரை சிறுவயதில் பால விகாஸ் வகுப்பில் அவரது தாய் அழைத்துச் சென்று விட்டபோது - பால விகாஸ் குரு கீதை சுலோகம் முதலடி சொன்ன போது கடகடவென எல்லா கீதை சுலோகங்களையும் மறுமொழியாய்ப் பேசி அந்த சின்னஞ்சிறு வயதிலேயே அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தாரே - அவை எல்லாம் அவருக்காக காத்திருந்த போது நெஞ்சில் நிழலாடியது!
பேரிறைவன் பாபாவை புட்டபர்த்தியில் சந்தித்து கை எடுத்து வணங்கினாரே - படம் கூட பதிவாகி இருக்கிறதே - அவை எல்லாம் கண்முன் தோன்றி மயிலிறகாய் இமைகளை வருடியது! விழிகள் அங்கும் இங்கும் திரும்பினாலும் கூட உலகத்தை முதன்முதலாக உற்றுப் பார்க்கும் குழந்தை போல் வேறு எண்ணமற்று காத்திருந்தேன்! கதவு திறந்தது!
ஆன்மத் தொடர்பை விளக்க இயலுமா? என்று கேட்டது தான் தாமதம்!
"அதை எப்படி வார்த்தைகளால் விளக்க இயலும்!!" என்று ஸ்ரீ ஸ்ரீ குருதேவர் எங்களிடம் திருப்பிக் கேட்டார்! அடியேன் பிரம்மித்துப் போனேன்! உன்னதத்தில் உறைந்தேன்! எவ்வளவு சத்தியமான மொழிகள் அவை! ஆம்! கடவுளை எப்படி வார்த்தைகளால் விளக்க இயலும்? ஆகவே தான் புத்த பிரான் ஞானம் அடைந்தது முதல் கடவுளைப் பற்றி எதுவுமே பேசவில்லை! புத்தரது பேரிருப்பே பேரிறைவனின் விளக்கமாக அமைந்தது! அப்படித் தான் அந்த நொடியில் ஸ்ரீ ஸ்ரீ குருதேவர் புத்தராக அடியேனுக்குக் காட்சி அளித்தார்!
"அதை எப்படி வார்த்தைகளால் விளக்க இயலும்?" அதாவது பேரிறைவன் பாபாவை பற்றி எப்படி வார்த்தைகளால் விளக்க இயலும் என்று திருப்பி கேட்டதோடு - கோபுர கலசமாக ஒன்று சொன்னார் - அது காற்றை கைகளால் வரைந்து காட்டியது போல் உணர்வு மயமாக இருந்தது! "மௌனத்தாலேயே அதை அணுகுவேன்!" என்றார்! அதாவது பாபா எனும் பரம்பொருளை அணுக மிகச் சரியான அணுகுமுறை மௌனம் தான்! மௌனத்தில் தான் கடவுளின் காலடி தடத்தை கேட்கலாம் என்று பாபாவும் முன்பே மொழிந்திருக்கிறார்! மௌனம் என்பது வெறும் வாய்மூடி இருத்தல் அல்ல - மனம் மூடி இருத்தல் - அதாவது எண்ணமற்ற உணர்வு நிலை! இதைத் தான் அஷ்டாவக்ரரும் பதஞ்சலியும் ஞானத்தில் நமக்கு முன்மொழியும் ஆன்மிக சாராம்சமே! அந்த இருவரின் ஒற்றை வடிவமாய் ஸ்ரீ ஸ்ரீ குருதேவர் என் கண்களுக்கு "மௌனத்தால்..." எனும் வாக்கியத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் போது காட்சி அளித்தார்! அந்த நொடியே அடியேன் குருதேவரை கேட்பதற்காக எழுதி வைத்த அத்தனை கேள்விகளுக்கும் விடை வந்தது! இப்படித் தான் பகவான் ரமணரிடம் கேட்பதற்காக கேள்விகள் பல தயாரித்து அவர் முன் தரிசித்து அமர்ந்த பத்திரிகையாளர் பால்பிரன்டனுக்கு அடியேனுக்கு வாய்த்த அதே அனுபவம் வாய்த்தது!
"குருதேவ்! இது உங்களுக்குத் தான் குருதேவ்!" என்று அடியேன் ஒரு பரிசு கொடுத்தேன்! அதில் குருதேவரும் பாபாவும் கைக் கோர்த்து நின்று இருப்பது போல் ஒரு தொழில்நுட்பப் படம்! அதை பிரேமையோடு வாங்கி அதையே புன்னகையோடு உற்று நோக்கினார்!
சட்டென அடியேன் தலை உச்சியில் ரோஜா இதழ்களை தனது வரம் தரும் கைகளால் தூவினார்! விக்கித்துப் போனேன்!
ஆயிரம் இதழ்கள் சஹஸ்ரஹாரத்தில் திறந்து கொண்டதைப் போன்ற பேரானந்த உணர்வு! செய்வதறியாது திகைத்துப் போனேன்! அழுகையும் புன்னகையும் அற்ற சம உணர்வில் அலையற்ற சமுத்திரமானேன்! சட்டென குருதேவரின் பஞ்சு மிகுந்த மலர்ப் பாதங்கள் இரண்டையும் கீழ் விழுந்து வருடி கண்களில் ஒற்றிக் கொண்டேன்! உலகம் முழுக்க நடந்து வந்த பாதம் அது அல்லவா! எத்தனை பாத பூஜைகளை ஏற்ற பாரிஜாத பாதம் அது!
ஏற்கனவே வியப்பின் உச்சியில் இருந்த அடியேனுக்கு தங்க நிறத்தில் அங்க வஸ்திரத்தை தனது வரங்கள் எனும் கரங்களாலேயே அணிவித்து திக்குமுக்காட வைத்தார்! குருதேவர் சொன்ன அந்த "மௌனத்தால்" எனும் வார்த்தை ஆன்மாவையே அப்பிக் கொண்டது! இரட்டிப்பு ஆச்சர்யம்! எதிரே பார்க்காத ஏகாந்த வைபவம்! பக்கத்தில் இருப்பவர்களை எல்லாம் உணர்வு ரீதியாக மறக்கடித்தார் குருதேவர்! சாயி புஷ்கருக்கும் இந்த யோக வைபவம் நிகழ்ந்தது! வர லஷ்மி சாயிராமுக்கு அங்கவஸ்திர பாக்கியம் அருளினார் குருதேவர்!
"எங்கிருந்து வரேள்!?" என்று கேட்டார்!
சென்னையில் இருந்து என்றோம்! இது கேள்விக்கான பதில்! ஆனால் உண்மையான பதில் பேரிறைவன் பாபாவின் பாதத்தில் இருந்து தான் வருகிறோம்! இது தான் உண்மையான பதில்! பாபாவின் பாதங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூசிகள் தான் நாங்கள் மூவரும்!
குருதேவரிடம் "உலகம் பாபாவை எப்படிப் பார்க்க வேண்டும்?" என்ற எழுதி வைத்த கேள்விக்கு! பாபா ஒரு நிலைக்கண்ணாடி - அவரவர் பக்குவத்திற்கு ஏற்றார்ப் போல் பாபாவை பார்க்கிறார்கள்!
சாயி சிருஷ்டி பற்றிய கேள்விக்கு - அவர் அன்பை மட்டுமே சிருஷ்டித்தார்!
பாபாவிடம் நீங்கள் பெற்ற inspiration - என்ற கேள்விக்கு - "இந்த வாழ்க்கையே!"
என்று எதையும் குருதேவர் வாய்மொழியாக சொல்லாத பதில்களை அவரது அனுகிரகம் நிரம்பிய அந்த ஆன்ம உணர்வுப் பொழுதில் மீண்டும் அந்தக் கேள்விகளை உற்று நோக்குகிற போது விடை ஒவ்வொன்றாக திறந்து கொண்டது! பரவசப்பட்டேன்! இப்படித் தான் பால்பிரன்டனுக்கும் இருந்திருக்கும் என்று அவரது ரமண அனுபவம் புரிந்தது!
ரமண அனுபவம் - ஸ்ரீ ஸ்ரீ அனுபவம் எல்லாம் ஒரே அனுபவமே! பாத்திரங்களே வேறு வேறு பாயாசத்தின் இனிப்பு ஒன்றே!
உலகம் முழுக்க வியாபித்திருக்கும் மகான்களில் பேரிறைவன் பாபாவின் சமாதி ரகசியத்தை முதன்முதலாக தனது இணையதளத்தில் பதிவு செய்தவர் ஸ்ரீ ஸ்ரீ குருதேவர் மட்டுமே!
"பாபா விரைவில் சென்றது - விரைவில் திரும்பி வரவே!" எனும் அந்த பரவசச் செய்தியை இதயத்தில் தாங்கியபடி - விரைவில் வெளிப்பட இருக்கும் ஸ்ரீ சத்ய சாயியின் நிறை அவதாரமான ஸ்ரீ பிரேம சாயி பற்றிய ஆன்ம உணர்வை இதயத்துடிப்பில் ஏந்தியபடி - ஸ்ரீ ஸ்ரீ குருதேவருடைய தரிசனம் - பாத நமஸ்காரம் - சம்பாஷனம் - ஆசீர்வாதம் என்கிற அமரத்துவ அனுகிரகம் - இந்த இதயத்துவ ஆன்ம ரசவாதம் தொடரும் என்கிற ஆழமான நம்பிக்கையில் ஒரு பெருமூச்சு விட்டேன்!
அதன் மேல் மூச்சு ஜெய் குருதேவ் எனவும்
கீழ் மூச்சு ஜெய் சாயிராம் எனவும் எதிரொலித்தது!
ஜெய் குருதேவ்
ஜெய் சாயிராம்
பக்தியுடன்
வைரபாரதி
















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக