எவ்வாறு பேரிறைவன் பாபா தனது பேரிருப்பை சிறிதோ பெரிதோ எந்தந்த வகையில் எல்லாம் உணர்த்துகிறார் என்று ஆழ்ந்து பார்க்கிற போது அகம் சிலிர்க்கும் சுவாரஸ்யப் பதிவு இதோ...!
அது 1990. பேரிறைவன் பாபாவின் அவதார ஜெயந்தி வைபவம்! சகுந்தலா அம்மையாரும் சாயி சேவாவுக்கு செல்கிறார்! முதுமையின் காரணமாக அவரை வரவழைத்து தங்க நல்ல அப்பார்ட்மெண்ட் அமைத்துக் கொடுத்தது வெங்கட்ராமன் எனும் ஒரு ஹோமியோபதி டாக்டர்!
அந்த வயதான மூதாட்டி சகுந்தலா அம்மையார் அங்கே தங்கிய முதல் நாள் ஒரு டம்பளர் பால் காய்ச்சி எடுத்து வருகிறார் சேவைப் பரிவோடு டாக்டர் வெங்கட்ராமன்! மிகுந்த நன்றி உணர்வோடு கையெடுத்து வணங்குகிறார் சகுந்தலா!
கொடுத்து விட்டு தான் தங்கிய அறைக்கு வருகிறார் டாக்டர்! அங்கே நிகழ்ந்ததைக் கண்டு ஆச்சர்யப்படுகிறார்!
சேவை நிமித்தமாக தான் தங்கிய அறையில் அவரால் வைக்கப்பட்டிருந்த பேரிறைவன் பாபாவின் திருப்படத்தில் சிருஷ்டி கற்கண்டு! அதைக் கண்டு ஆனந்திக்கிறார்! உடனே பாபா பேசுவது காதுகளில் அவருக்குக் கேட்கிறது
"நீ அவளுக்கு சேவையாக பால் தந்தாய் - அதற்குப் பதிலாகத் தான் நான் உனக்கு கற்கண்டு கொடுத்தேன்!" என்று!
இதை ஏதும் அறியாத சகுந்தலா - பிறகு டாக்டரே நிகழ்ந்தவற்றை விவரிக்கும் போது பாபாவின் பரிவை நினைத்து பரவசப்படுகிறார்!
அதே டாக்டர் வெங்கட்ராமன் மிகுந்த சாயி பக்தர்! ஹோமியோபதி மருத்துவம் ஆயினும் தான் மருந்து தருவதில்லை தனக்குள்ளே பாபாவே இயக்கி அந்த மருந்துகளை தருகிறார் என்பதை நன்கு உணர்ந்தவர்! மருத்துவத்தை ஒரு சேவை நிமித்தமாக முன்னிலைப்படுத்துபவர்!
ஒருமுறை அவருக்கு ஒரு நண்பர் அன்னாசிப்பழங்களை (Pineapples) பரிசளிக்கிறார்! அதை எப்படி நறுக்குவது என்பது டாக்டருக்குத் தெரியவில்லை! முன் முட்கள் களைய வேண்டும் - நேரம் எடுக்குமே என்று சற்று தயங்குகிறார்! ஆகவே அந்த பைனாப்பிள் பழங்களை டேபிள் மேலேயே வைத்துவிட்டு மருத்துவம் பார்க்கச் செல்கிறார் டாக்டர்!
வீட்டுக்குத் திரும்பி வருகையில் ஆச்சர்யக்கள் அன்னாசிப் பழ வாசனையாய் ஆரம்பிக்கின்றன!
அறைக்கு வந்து பார்க்க ரெட்டிப்பு சந்தோஷம்! ஒரு தட்டில் அந்தப் பழங்கள் அழகாக ஒரே அளவில் சிறிது சிறிதாக நறுக்கப்பட்டிருக்கிறது! அதில் பாதி குறைந்தும் காணப்படுகிறது! அவர் வீட்டில் அவரைத் தவிர ஆள் இல்லை! பூட்டியபின் திறந்தே உள்ளே நுழைந்திருக்கிறார் டாக்டர்!
அப்போது அங்கே மாட்டப்பட்டிருந்த பேரிறைவன் பாபாவின் திருப்படம் பேசுவது அவரது காதுகளில் தெளிவாய் விழுகிறது
"நான் தான் கட் பண்ணேன் பங்காரு ! உனக்கு கஷ்டமா இருந்துச்சு - அதான்! அதுல நான் பாதி சாப்டுட்டேன் - மீதி உனக்கு! பழம் நல்லா இருக்கு!" என்கிறார் பாபா!
அப்போது டாக்டரது உள்ளம் பக்தியால் கனிந்து போயிருந்தது! அந்த அன்னாசிப் பழங்களின் முட்கள் கூட பாபா கரம் பட மலராகி மோட்சம் அடைந்திருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை!
ஒரு நாள் அந்த ஹோமியோபதி மருத்துவரை தேடி ரஷ்யாவில் இருந்து ஒரு பெண்மணி வருகிறார்! வரும் வழியே சகுந்தலா அம்மையாரின் வீட்டை கடந்து போகையில் - நல்லதொரு அதிர்வலைகள் நிரம்பிய வீடு போல் அந்த வெளிநாட்டுப் பெண்ணுக்கு மனதில் தோன்றுகிறது! பிறகு டாக்டரை அவரது வீட்டில் சந்திக்கிறார்! டாக்டரே அவரை சகுந்தலா வீட்டிற்கு அழைத்துப் போகிறார்!
அழைத்துப் போனதுதான் தாமதம் அந்த ரஷ்ய பெண் பரவசமாகி "நீங்கள் தான் எனது கனவில் தோன்றினீர்கள் - கனவில் தோன்றி ரிஷிகேசத்தில் இருந்த என்னை புட்டபர்த்திக்கு வரச் சொன்னீர்கள்!" என்கிறார்!
அதற்கு பரவசமாய் நெகிழ்ந்து கண்களை மூடுகிறார் சகுந்தலா! அது பாபாவின் லீலை என்று மனதிற்குப் புரிகிறது!
பாபாவின் குரலும் சகுந்தலாவிற்கு கேட்கிறது - "அவள் தனது மகனை பற்றி கவலைப்படுகிறாள்!" என்று பாபா சொன்னவுடன்...
அதையே அந்த ரஷ்ய பெண்ணிடம் தெரிவிக்க - மேலும் அவர்கள் நெகிழ்ந்து போக..
அவர்களை சமாதானப்படுத்தி பேரிறைவன் பாபாவின் மேல் அதிக நம்பிக்கை விதைத்து - கவலைகளை தேற்றி நம்பிக்கையை ஊற்றி சமாதானப்படுத்தி அந்த ரஷ்ய பெண்மணியை வழி அனுப்புகிறார் மூதாட்டி சகுந்தலா!
இது கூட ரஷ்ய - இந்திய சமாதான ஆன்மிக உடன்படிக்கை தான்! ஏனெனில் ஒவ்வொருவரையும் சரிசமமாகப் தாங்குவது தான் ஒரு தேசம் அல்லவா! அப்படியே பாபாவும்!
(ஆதாரம் : "ஸ்ரீ சத்ய சாயி லீலாம்ருதம்" - பக்கம் 36 - 39 பதிப்பாசிரியர் - டாக்டர் கே.டி.குமார் - பதிவு ஆண்டு 2004)
அதெப்படி பாபாவின் குரல் கேட்கும்? என்பவர்களுக்கு - மனம் அமைதி அடைந்துவிட்டால் பிரபஞ்சமே பதில் அளிக்கிற போது பிரபஞ்ச அதிபதியான பாபா பதில் அளிக்க மாட்டாரா? நாம் முதலில் செய்ய வேண்டியது நமது அகத்தை சுத்தப்படுத்துவதே! அந்த சுத்தீகரிப்பு தான் பாபாவை வரவழைப்பதற்கான ஸ்வீகரிப்பு!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக