தலைப்பு

செவ்வாய், 25 மார்ச், 2025

கிறிஸ்துவ பாஸ்டருக்கு பாபா புரிந்த அற்புதம்!

எவ்வாறு கிறிஸ்துவ பாதிரியாரை ஆற்றுப்படுத்தி புட்டபர்த்தி வரவழைத்தார் பாபா எனும் ஓர் ஆச்சர்ய சுவாரஸ்யப் பதிவு இதோ...!


அவர் பெயர் ஜே.நுக்ருமாஹ் ! ஒரு கிறிஸ்துவ பாஸ்டர்! ஆப்ரிக்க கானா தேசத்து அப்திஜான் எனும் இடத்து தேவாலயத்தில் இயேசுவுக்காக ஊழியம் செய்பவர்! புரொடஸ்டன்ட் கிறிஸ்துவ பாதிரியார்களை பாஸ்டர் என்றும் அழைப்பது வழக்கம்! ஆச்சர்யமே ஆச்சர்யப்படும் வகையில் ஒருமுறை அவருக்கு பாபா கனவில் தோன்றுகிறார்! கனவில் தோன்றி இந்தியாவில் உள்ள புட்டபர்த்திக்கு வருமாறு அழைக்கிறார்! முன் பின் பாபா என்றால் யாரென்றே தெரியாதவர் அந்த பாஸ்டர்! ஆக அந்தக் கனவு அவருக்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையுமே அளிக்கிறது! அவரால் அத்தனை பணம் செலவழித்து இந்தியா செல்லும் அளவிற்கு பொருளாதார சூழ்நிலை இடம் கொடுக்கவில்லை! ஆனாலும் அந்தக் கனவு அழைப்பு காந்த சக்தி மிகுந்ததாக அவருக்கு அமைகிறது! 


ஒரு நாள் அந்த பாஸ்டர் மார்க்கெட் செல்கிறார்! அப்போது முன்பின் தெரியாத ஒரு நபரை அந்த இடத்தில் சந்திக்கிறார்! அந்த நபர் திடீரென அவரிடம் 

"நீங்கள் இந்தியாவுக்கு செல்ல வேண்டும் தானே?" என்று ஒரு கேள்வியை கேட்கிறாரே பார்க்கலாம்!

அந்த பாஸ்டரோ அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவே இல்லை! ஆனால் ஆம் என்று உண்மையை சொல்லிவிடுகிறார்! அதெல்லாம் ஒன்றுமில்லை - நீங்கள் யார்? - தேவையில்லாமல் என்னிடம் ஏன் பேசுகிறீர்கள்? என்றெல்லாம் அந்த நேர்மையான பாஸ்டர் கேட்கவே இல்லை! 

அதற்கு அந்த மார்க்கெட்டில் சந்தித்த மூன்றாம் நபர் -

"அதற்கு பணம் தேவை அல்லவா!" என்று இரண்டாவது கேள்வி கேட்கிறார்!

பாஸ்டருக்கு ஒரே ஆச்சர்யம்! அதற்கும் ஆம் என்றே உண்மையைப் பேசுகிறார்! "எவ்வளவு?" என்று கேட்கிறார் அந்த மூன்றாம் நபர்! இவ்வளவு தெரிந்து வைத்திருக்கும் அவர் தனக்கு எவ்வளவு வேண்டும் என்று கூற தெரியாதா? என்றெல்லாம் பாஸ்டர் யோசிக்கவில்லை! இரண்டாயிரம் என்று சொல்லிவிடுகிறார்! 

"என்னோடு வாருங்கள் - பணம் தருகிறேன்!" என்கிறார் அந்த மூன்றாம் நபர்! அந்த நபரை பின்தொடர்ந்து பாஸ்டரும் செல்ல - அவருக்கு பணம் அந்த நபரால் கொடுக்கப்படுகிறது!


பாஸ்டரும் இந்தியா வருகிறார்! புட்டபர்த்தி விரைகிறார்! தரிசன வரிசையில் பாபா வருகிறார்! யாரை கனவில் தரிசித்தாரோ அவரே எதிரில் பாஸ்டருக்கு முன் நடந்து வருகிறார்! அதே பாபாவே! பாஸ்டர் உடம்பு புல்லரிக்கிறது! ஆனால் தனக்கு யார் மார்க்கெட்டிற்கு வந்து பேசி அழைத்துச் சென்று பணம் கொடுத்தது என்று மட்டும் அவருக்கு புரியவே இல்லை! அந்த பாஸ்டரின் எதிரில் நின்ற பாபா "கானாவிலிருந்தா?" என்று கேட்கிறார்! பிறகு அவருக்கு பாபா அளித்த நேர்காணலில் - நேர்காணல் அறையில் தானே மார்க்கெட் வந்து அவரை அழைத்துச் சென்று பணம் கொடுத்தது என்கிற விபரத்தையும் சொல்லி பாஸ்டரை தெளிவுப்படுத்துகிறார்! அந்த பாஸ்டர் பிரபஞ்ச மாஸ்டரை (பாபாவை) தரிசித்து உரையாடி தெளிவு பெற்றதில் சாயி பக்தராகவே மலர்ந்துவிடுகிறார்!


(Source : Beyond Borders | page : 22 | author : k.karthikeyan | publication year : 2015 Main Source : VIK Sarin | Face to Face with GOD | 1998 | page : 49) 


மதம் கடந்து பாபாவின் மாட்சிமை நீள்கிறது! மதம் கடந்து மட்டுமல்ல பல விதம் கடந்தும் பாபாவின் விநயம் விஸ்வரூபம் எடுக்கிறது! ஒருமுறை பாபா ஒருவரின் வாழ்க்கையில் தடம் பதித்து விட்டால் போதுமானது - பிறகு அந்த நபரே விலகி ஓட நினைத்தாலும் அது சாத்தியமே இல்லாமல் போய்விடுகிறது! ஏனெனில் பேரிறைவன் பாபாவின் பேரன்பு அத்தகையது! அதை அளந்து பார்ப்பதற்கான கருவியை இதுவரை எந்த ஒரு விஞ்ஞானமும் கண்டுபிடிக்கவே இல்லை!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக