தலைப்பு

சனி, 8 மார்ச், 2025

கைத் தாங்கலாய் பிடித்து அமர்த்தி ஹார்லிக்ஸ் கொடுத்த பாபா!

எவ்வாறு ஒருவரின் அறுவை சிகிச்சை நேரத்தில் தனது பேரிருப்பையும் , சோர்வாக இருந்த ஒரு மருத்துவருக்கு பாபா தயையோடு தாங்கி ஊக்கமளித்த ஆச்சர்ய சம்பவங்களும் சுவாரஸ்யமாக இதோ...!


டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் குடும்பம் ஒவ்வொரு வியாழன் பஜனைக்கும் சகுந்தலா அம்மாள் வீட்டுக்கு வரும்! அப்போது பெரியவரான ஸ்ரீநிவாசனின் இதய அறுவை சிகிச்சை பற்றியும் மருத்துவரால் கைவிடப்பட்டும் பிறகு அந்த அறுவை சிகிச்சையை மிகச் சுலபமாக பேரிறைவன் பாபா கருணை நிகழ்த்தியது! அதைக் கேள்விப்பட்ட உடன் திருமதி ஜமுனா கிருஷ்ணமூர்த்தி பக்திப் பரவசத்தில் அழத் தொடங்கினார்! காரணத்தை விசாரிக்கையில் தனது கணவரான கிருஷ்ணமூர்த்திக்கும் அதே வகையில் இதய அறுவை சிகிச்சை நடக்க இருப்பதைச் சொல்லி விசும்புகிறார்!

அதற்கு உடனே சகுந்தலா "நீங்கள் கவலையேபடத் தேவையில்லை - பாபா எல்லாவற்றையும் மிகச் சரியாக நடத்துவார் பாருங்கள்!" என்று அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறார் சகுந்தலா!

பஜன் முடிந்து செல்கையில் அறுவை சிகிச்சை அடுத்த வியாழன் 9 மணிக்கு என டாக்டர்கள் சொன்னதை சொல்லிவிட்டு கிருஷ்ண மூர்த்தி குடும்பம் சகுந்தலா வீட்டை விட்டுக் கிளம்புகிறது!

சகுந்தலாவுக்கு என்னவோ ஓர் உள்ளுணர்வு அறுவை சிகிச்சை அந்த நாள் மதியம் 12 மணிக்குத் தான் நிகழும் என்று சொல்கிறது! அந்த உள்ளுணர்வு குரல் சொல்லி உணர்த்துவதும் கூட பாபாவே என்பதை உணர்கிறார்!

சரி என்று அனைவரையும் அந்த நாளில் அழைத்து 10 மணிக்கு ஸ்ரீ சத்ய சாயி சஹஸ்ரநாமத்தை ஆரம்பிக்கிறார் சகுந்தலா! தெய்வாதீனமாக அந்த வியாழன் அன்று 9 மணி என்று ஏற்கனவே சொன்ன மருத்துவர்கள் 10 மணிக்கு என்று நேரம் மாற்றுகிறார்கள்!

திடீரென பாபாவுக்காக வைக்கப்பட்ட நாற்காலியில் ஒருவித மாற்றம் தென்படுகிறது! பாபாவின் நாற்காலி மேல் போர்த்தப்பட்டிருந்த பட்டுத்துணி ஒருவர் அமர்ந்தால் எவ்வாறு அமுங்கி இருக்குமோ - அப்படி இருக்கிறது - அப்படி ஒரு காட்சி! பாபா அமர்ந்ததற்கான சாட்சி! அனைவருக்கும் பரவசமாக இருக்கிறது! பாபா தனது பேரிருப்பை உணர்த்திய க்ஷதை எண்ணி அகம் மகிழ்கிறார்கள்! 

கூடுதல் பரவசமாக அன்றைய சாயி வழிபாட்டில் அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பூங்கொத்தில் தங்க நிறப் பூ ஒன்று அப்படியே குதித்து அமர்ந்திருந்த டாக்டர் கிருஷ்ண மூர்த்தியின் சகோதரி மடியில் விழுகிறது! அது ஒரு பாஸிட்டிவ் சாயி அறிகுறி! பரவசம் ரெட்டிப்பானது! அறுவை சிகிச்சையும் நலமுற அரங்கேறி டாக்டர் கிருஷ்ண மூர்த்தியின் ஒட்டு மொத்த குடும்பமுமே சாயி பக்தராக மாறுகிறது! 

ஒருநாள் சகுந்தலா  தனது வீட்டில் மிகவும் களைப்பாக இருக்கிறார்! அப்போது அவரது வீட்டில் அவரை தவிர யாருமே இல்லை! தனியாக இருக்கிறார்! உடல் மிகவும் சோர்வாக ஷீணமாக இருக்கிறது! சரி மெதுவாக எழுந்து சமையற்கட்டுக்குள் சென்று ஹார்லிக்ஸ் கலக்கலாம் என நடந்து கேஸ் அடுப்பைப் பற்ற வைக்கிறார் சகுந்தலா! பற்ற வைத்தது தான் தாமதம் - மயக்கம் இவரைப் பிடித்துத்  தள்ள - அப்படியே உடல் சமையற்கட்டின் தரையில் விழப் போகிறது - அப்போது அவர் துளியும் எதிர்பாராத ஒரு பேராச்சர்யம் நிகழ்கிறது! பேரிறைவன் பாபா அவர் முன் நொடியில் தோன்றி அவரை கைத் தாங்கலாய்ப் பிடிக்கிறார்! அப்படியே அவரை அழைத்துச் சென்று வரவேற்பரையில் அமர்த்தி பாலில் கலந்த ஹார்லிக்ஸ்'சை பருகத் தருகிறார் பாபா! பிறகு சகுந்தலா அம்மாவிடம் பாபா மெதுவான தனது குரலில் "கேஸ் அடுப்பையும் OFF செய்து விட்டேன்!" என்கிறார்! சொல்லிய அடுத்த நொடியே கண்ணுக்கு முன் மறைந்து போகிறார்! அதற்குப் பிறகு ஓய்வு நீங்கி சக்தி வந்ததாக உணர்கிறார் சகுந்தலா! 

இந்தப் பிரபஞ்சத்து பரமசக்தியே தோன்றிய பிறகு - பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரம்பொருளே பாலில் ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்த பிறகு - சக்தி வராதா என்ன!!

(ஆதாரம் : "ஸ்ரீ சத்ய சாயி லீலாம்ருதம்" - பக்கம் 10-13 பதிப்பாசிரியர் - டாக்டர் கே.டி.குமார் - பதிவு ஆண்டு 2004)


"நம்பினால் நம்புங்கள்!" என்று தான் சகுந்தலா அம்மாள் - பாபா தோன்றி நடத்திய அந்த நிகழ்வை தனது நூலில் குறிப்பிடுகிறார்! ஏனெனில் இது கலியுகம்! மனத்தங்கமே துருப்பிடித்திருக்கிறது! அனைவரிடமும் சுயநலமே சூன்யக்கார வேலையை செய்து கொண்டு வருகிறது - இப்படி இருக்கையில் வாசிப்பவர்கள் சந்தேகப்படுவார்கள் என்ற அச்சம் அவருக்கு! பேரிறைவன் பாபாவுக்கு எதுவும் சாத்தியம் என்று உணர்ந்தவர்கள் - அனுபவித்தவர்கள் இதனை ஏற்றுக் கொள்வார்கள்!! அகந்தை மனமோ ஆயிரம் கேள்விகளால் தனது தூய இதயத்தை புண்ணாக்கிக் கொள்கிறது! கங்கையிடம் சந்தேகப்பட்டு முங்காமல் நீங்கினால் அதனால் கங்கைக்கு என்ன நஷ்டம்? பேரிறைவன் பாபா வெறும் கங்கை அல்ல அந்த கங்கையையே சுமந்து கொண்டிருப்பவர்!!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக