ஆறறிவு பக்தர்கள் உருகி உருகி வழிபடுவது பெரிய அதிசயம் இல்லை என்கிற அளவிற்கு மனிதர்களின் பக்தியையே மிஞ்சும் ஸ்ரீ சாயி கீதாவின் பக்தியும் அதன் ஐக்கியமும் சுவாரஸ்ய வாக்கியப் பதிவாக இதோ...
எத்தனையோ மஹான்கள், அவதார புருஷர்களின் புனித சரித்திரத்தில் கண்டிருப்போம். அம்மகான்கள், அவதார புருஷர்களின் அன்னையர் உடலை உகுத்த பின், அவர்களது தெய்வீக புத்திரர்கள் எங்கிருந்தாலும் அவர்களிடத்தில் வந்து, அவர்களுக்கு இறுதி காரியங்களை தங்கள் கைகளாலேயே செய்திருப்பர். சந்நியாசம் பெற்ற சங்கரரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆயின் கலியுக அவதாரமான பகவான் பாபாவின் தெய்வீக தாய், தனது தெய்வீக புத்திரனின் நாமத்தை கூறிக்கொண்டே உடலை உகுத்தாலும், அவரது இறுதி காரியங்களை பகவான் முன்னின்று செய்யவில்லை. ஈஸ்வரம்மா இறுதி மூச்சு விடும் சமயம், பிருந்தாவன் ஆஸ்ரமத்தில் மாணவர்களுக்கான 'கோடை பயிற்சி முகாம்' துவக்கப்பட இருந்தது. அச்சமயம் அன்னை முக்தி அடைந்தார். முகாமை பகவான் ஒத்தி வைத்துவிட்டு அன்னையின் தேகத்துடன் புட்டபர்த்திக்கு கிளம்பிவிடுவார் என பல பக்தர்கள் எண்ணினர், அவ்வாறே செய்யுமாறு பகவானுக்கும் யோசனை கூறினர். ஆயின், தன் உதரணத்தாலேயே உலகோரை உய்விக்க வந்த நமது பகவான், அன்னையின் உடலை மட்டும் சில பக்தர்களுடன் இறுதி சடங்குகளுக்கு பர்த்திக்கு அனுப்பி வைத்தார். கோடை முகாமை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தினார்.
அதன் பின்னரும் எத்தனையோ உறவினர்கள், பெரும் பக்தர்கள் பகவானின் பாதங்களில் கலந்திருந்தாலும், பகவான் அவர்களது இறுதி காரியங்களில் கலந்து கொண்டதாக சரித்திரத்தில் இல்லை. சாயி கீதா, ஆஹா, என்ன ஒரு பாக்கியம். எங்கேயோ பிறந்த அந்த யானை, சிறு வயதிலேயே பகவானால் பர்த்திக்கு அழைத்து வரப்பட்டு, தனது வசிப்பிடத்தின் அருகாமையிலேயே அதற்கும் ஒரு இருக்கை அமைத்து கொடுத்து தன் அருகிலேயே அல்லும் பகலும் நெருக்கமாக வைத்துக் கொண்டார். காலங்கள் மாறினாலும், அவர்களுக்கிடையே இருந்த தெய்வீக பிணைப்பு மாறவில்லை. இருக்கை இடம் மாறினாலும், மனதில் இருந்த நெருக்கம் மாறவில்லை.
பூரண பிரம்மச்சாரிணியான சாயி கீதா, சதா சர்வ காலமும் சாயி சிந்தனையிலேயே தன் காலத்தை கழித்தால். இவ்வாறு தனது ஆயுளை பூரணமாக வாழ்ந்த அந்த பக்தை, 2007ம் ஆண்டு மே மாதம் 22ம் நாள் தன் உடலை உகுத்து, தன் பிரபு சத்ய சாயியுடன் நிரந்தரமாக கலந்தாள்.
இங்குதான் அனைவரும் ஆச்சரியப்படும் நிகழ்வுகள் அரங்கேறின. சாயி கீதா தனது இறுதி காலத்தை நெருங்கி விட்டதாக அறிவித்த பகவான், கீதாவின் இறுதி மூச்சு நின்ற பின் அதனிடத்தில் தாமே நேரில் வந்து அதனுக்கு செய்ய வேண்டிய அனைத்து இறுதி காரியங்களை தனது நேரடி கண்காணிப்பில் செய்து முடித்தார்.
சாயி கீதாவிற்காக பகவான் எழுப்பிய புதிய தங்குமிடம், அதற்கு சமாதியானது. எந்த அளவிற்கு பள்ளம் தோண்ட வேண்டும், அதில் என்ன என்ன போட வேண்டும், கீதாவின் உடலை எப்படி எதன் மூலம் தூக்கி அதனுள் இறக்க வேண்டும் என்னும் ஒவ்வொரு விஷயத்தையும் கூறினார் பகவான்.
உண்மையான பக்திக்கு இலக்கணமாக சாயி கீதாவை பல இடங்களில் பகவான் குறிப்பிட்டுள்ளது பக்தர்கள் அறிந்ததே. அவதாரத்தின் அன்னைக்கும் கிடைக்காத பாக்கியம், அந்த உண்மையான பக்தைக்கு கிடைத்ததில் இருந்தே அதன் பக்தியை நாம் அறிந்து கொள்ளலாம்.
வாழ்க சாயி கீதாவின் புகழ்!
ஜெய் சாயிராம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக