தலைப்பு

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

யார் சாயி மாணவர்? - சாயி கல்லூரி மாணவரே சாயி மாணவரா?


உண்மையில் சுவாமியின் கல்லூரியில் படித்த மாணவன், சாய் மாணவன் இரண்டுக்கும்  வேறுபாடு உள்ளதா?  வித்தியாசம் உள்ளதா? ஆம் இதுவரை யாரும்  யோசித்து பார்த்திடாத, கேள்வி பட்டிராத கேள்வி. இதற்கான விடைதான் என்ன? யார் தான் அறிவார் சித்ராவதி நதி தீரன், பக்த ஹ்ருதய வத்சலன் பேரிறைவன்  பாபாவே கேள்வியின் நாயகனாகி விடைக்கான விளக்கத்தையும் தருகிறார். சுவாமியின் அற்புத விளக்கம், பதிவை வாசித்த அடுத்து நொடி உங்களையும் சாய் மாணவனாக மாற்றிவிடும். அந்த அற்புத பதிவு இதோ சாய் மாணவன் யார்?

ஸ்ரீ சத்ய சாய் உயர் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து பயிலும் எந்த மாணவனும் ‘சாய் மாணவன்’ என்றுதான் அழைக்கப்படுவான்.

அப்படியென்றால் பகவானின் கல்வி நிறுவனங்களில் சேர்ந்த ஒவ்வொரு மாணவனும் சாய் மாணவன் என்று இயல்பாகவே அழைக்கப்படுவான் என்று பொருள் கொள்ளலாமா ? வேறு யாருக்கும் இந்த சலுகை கிடைக்காதா?

பெங்களூருவில் ப்ருந்தாவன் ஆசிரமத்தில் பகவானின் வசிப்பிடம் ‘த்ரயீ ப்ருந்தாவன்’ என்று அழைக்கப்படும். பகவான் இங்கு மாணவர்களோடு சேர்ந்து நடத்தும் அமர்வுக் கூட்டம், ‘த்ரயீ அமர்வுக் கூட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.


திட்டமிடப்படாத நிலையில், பஜனைகளுக்குப் பிறகு நடக்கும்  அமர்வுக்கூட்டம் இவை. மாணவர்களுக்கு இங்கு ஒவ்வொரு நாளும் ஒரு இனிமையான புதிய அனுபவம் கிட்டும்.

ஒருநாள், பகவான் திடீரென யாரையாவது உரையாற்ற அழைப்பார். மறுநாள், மந்திரில் பாட ஆசைப்படும் மாணவர்களின் குரல் வளத்தை பரிசோதிப்பார். மூன்றாவது நாள் மாணவர்களுக்கு ஏதாவது விநியோகம் செய்வார். நான்காம் நாள் பகவானின் தெய்வீக அருளுரை இருக்கும். இப்படி எதுவாக இருந்தாலும் அந்த அனுபவம் தனித்துவத்தோடும், என்றும் மறக்கமுடியாத ஒன்றாகவும் இருக்கும்.


1990களில் ஒரு இனிய மாலை நேரத்தில் நடைப்பெற்ற த்ரயீ அமர்வுக்கூட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த ஒரு அம்மையாரும் பங்கு பெற்றிருந்தார். அவரின் மகன் சில வருடங்களுக்கு முன்பு பகவானின் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்.

உள்ளே வந்த பகவான், அந்த அம்மையாரைப் பார்த்து, “எப்படி இருக்கிறீர்கள்?”, என்று கேட்டார்.

“ஸ்வாமி! நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு நல்ல செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மேற்படிப்புக்காக என் மகன் வெளிநாடு செல்ல இருக்கிறான்” என்றார் அவர்.

“சந்தோஷம், என் ஆசீர்வாதம் அவனுக்கு உண்டு!” என்று பகவான் கூறினார்.

உடனே அவர், “ஸ்வாமி! அவன் உங்கள் மாணவன்”, என்றார் குதூகலத்தோடு.

இதைக் கேட்டதும் பகவான் புன்முறுவலுடன், “அவன் என் மாணவன் இல்லை!", என்று குறிப்பிட்டார்.  ஸ்வாமியின் வார்த்தைகள் அழுத்தந்திருத்தமாக இருந்தது.


பகவானின் இவ்வார்த்தை அனைத்து ஆசிரியர்களையும் ஆச்சரியப்பட வைத்தது. அங்கிருந்த சீனியர் (மூத்த) மாணவர்கள் சிலர் திகைப்புடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஏனென்றால், நீதிபதியின் மகன் சில வருடங்களுக்கு முன்னால் ஸ்வாமியின் கல்லூரியில் இவர்களுடன் படித்த வகுப்புத் தோழன் ஆவான்.

மாணவர்களின் சஞ்சலமான மனங்களை உணர்ந்த பகவான் மேற்கொண்டு விளக்கினார். “பாருங்கள், நீங்கள் இந்த கல்வி நிறுவனத்தில் சேருகிறீர்கள், பாடத்திட்டத்தைத் பயில்கிறீர்கள், தேவையான வருகைப் பதிவை உறுதி செய்கிறீர்கள், தேர்வுகளை எழுதுகிறீர்கள், கல்லூரி, உங்கள் அனைத்து செயல்திறனையும் மதிப்பிடுகிறது, நீங்கள் அவற்றில் தேர்ச்சி பெற்றால் பல்கலைக்கழகம் பட்டப்படிப்பு சான்றிதழை உங்களுக்கு வழங்குகிறது. அந்த உறுதிசெய்யப்பட்ட சான்றிதழ்தான் உங்களை இந்தக் கல்வி நிறுவனத்தின் மாணவன் என்பதை அடையாளப்படுத்துகிறது. இத்தருணத்தில்தான் பல்கலைக்கழகம் உங்களை அதன் மாணவனாக அங்கீகரிக்கிறது!

அதைப் போலவே, நீங்கள் ஸ்வாமியின் மாணவனாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு நான் பரிந்துரைக்கும் பாடத்திட்டத்தை கடைபிடிக்க வேண்டும், நான் எதிர்பார்க்கும் வருகைப் பதிவை பெற்றிருக்க வேண்டும்,  நான் வைக்கும் தேர்வுகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் அதில் தேர்ச்சி அடைந்து  நான் அதில் திருப்தியடைந்தால் மட்டுமே ‘நீங்கள் என் மாணவன்’ என்ற சான்றிதழை உங்களுக்கு நான் வழங்குவேன். இத்தருணத்தில்தான் சாய் மாணவனாக உங்களை நான் அங்கீகாரம் செய்வேன்!"


பகவான் இப்படி சொல்லி முடித்தபோது அரங்கத்தில் முழு அமைதி நிலவியது.

ஒவ்வொருவரும் தங்களின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டிய நெருக்கடியான தருணமாக அது இருந்தது.

தங்கள் வாழ்வில் முதல் முறையாக ஒவ்வொரு மாணவனும் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். “நான், இந்த கல்வி நிறுவனத்தின் மாணவனா? அல்லது ஸ்வாமியின் மாணவனா?"

ஒவ்வொருவருக்குள்ளும் இந்த சுய பரிசோதனை நடந்து கொண்டிருந்த தருணத்தில் மூத்த பக்தர் ஒருவர் “ஸ்வாமி! சாய் பல்கலைக்கழகத்தில் பயிலாத ஒரு மாணவன், ஸ்வாமியின் மாணவன் ஆக முடியுமா?”, என்று கேட்டார்.

உடனடியாக அதை உறுதிபடுத்தும் விதமாக பகவான் தலையசைத்து, “நிச்சயமாக, நிச்சயமாக”, என்றார்.

“அப்படியென்றால், சத்ய சாய் பல்கலைக்கழக மாணவனாக இருப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது?”, இன்னொரு  பக்தர்  கேட்டார்.

பகவான் அவரைப் பார்த்து, “சத்ய சாய் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள், என் மாணவர்கள் இல்லை என்று யார் சொன்னது?. அவர்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு அபூர்வமாக உலகில் வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய  ஒன்று. எனது தெய்வீகத்தையும், கருணையையும் அருகாமையில் கண்டு உணரும் பெரும்பேறு அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது!

எனவே சத்ய சாய் பல்கலைக்கழக மாணவர்கள்,  ஸ்வாமியின் மாணவர்களாக மாற கூடுதல் வாய்ப்பு இங்கு கிடைக்கிறது. இந்த இடம் அதற்கான ஊக்கத்தைக் கொடுக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும்தான் இப்படிப்பட்ட வரம் அளிக்கப்பட்டு இருக்கிறது ”  என்றார் ஸ்வாமி.


மேலும் பகவான் மாணவர்களைப் பார்த்து கூறலானார்.

“இந்த வரம் நான் உங்களுக்குக் கொடுத்த பரிசு. இதை நீங்கள் சரியாக பயன்படுத்தாமல் நிராகரித்தால், நீங்கள் இப்பல்கலைக்கழகத்தின் மாணவனாக மட்டுமே இருக்கமுடியும், சாய் மாணவனாக அல்ல!“.

பகவானின் இவ்வார்த்தைகள் அனைவருக்கும் என்றென்றும் மறக்கவே முடியாத, உண்மையை உணர்த்தும்  செய்தியாக அமைந்தது.

அன்றைய  மாலைப் பொழுது , இறைவனிடமிருந்து கிடைக்கும் எதையும் சாதாரணமாகக் கருதக்கூடாது. எப்போதும் அதை நன்றியுணர்வோடு வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் இறையருளின் முழு பலனையும் நாம் பெற இயலும் என்பதை அறிவுறுத்தியது.

இறைவனை மையப்புள்ளியாகக் கொண்டு உன் வாழ்க்கை சுற்றை அமைத்துக் கொண்டால், நீ எப்போதும் அவருக்கு உரியவனாகிறாய்.

இல்லையெனில், மந்தையின் ஆயிரம் மாடுகளில் நீயும் ஒருவனாக இருப்பாய். நீ நந்தியாக மாறினால் மட்டுமே இறைவனின் வாகனமாக உயர முடியும்


மூல நூல்: Moments of Truth with Sathya Sai by Shri. Bishu Prusty (Former student of Sri Sathya Sai Institute of Higer Learnings)

ஸ்வாமியுடன் இந்த அமர்வில் பங்கு பெற்றவர் டாக்டர் எம்.சாய்நாத், ஸ்ரீ சத்யசாய் பல்கலைக் கழக முன்னாள் மாணவர்

ஸ்ரீ சத்ய சாயி யுகத்திற்காக தமிழில் S.Ramesh, Ex-convenor, Salem Samithi 


குறிப்பு: திரு. பிஷு ப்ருஸ்டியின் இந்த அற்புத நூலான “ஸ்ரீ சத்ய சாயியுடன் சத்ய தருணங்கள்“ வெகு விரைவில் வர உள்ளது. படித்து மகிழுங்கள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக