எவ்வாறு ஒரு ஆங்கிலேயருக்கு தானாக தனைக் காட்டி தயை புரிந்து தாராள கருணையில் தனது பக்தனாக பேரிறைவன் பாபா ஆட்கொண்டார் எனும் பேரழகிய பதிவு சுவாரஸ்யமாக இதோ...!
அவர் பெயர் பிலிப் பானர்! அவர் 21 டிசம்பர் 1987'க்கு பிறகு சாயி பக்தர்! அப்படி ஒரு அரிய சம்பவம் அவர் வாழ்க்கையில் ஏற்படுகிறது! அன்று இரவு அவருக்கு ஒரு கனவு தோன்றுகிறது! கனவில் ஒரு குரல் கேட்கிறது - அந்தக் குரல் - " பாபா உனக்காக அந்த நெடுஞ்சாலையில் காத்திருக்கிறார்!" என்கிறது! உடனே பிலிப் அடித்துப் பிடித்து அந்த நெடுஞ்சாலைக்கு செல்கிறார் - எல்லாம் கனவில் தான்!
ஒரே போக்குவரத்து நெரிசல்! இவர் ஒரு சாலை முனையில் இருக்கிறார் - மறுமுனையில் பாபா இவருக்காக காத்திருக்கிறார்! பாபாவை பார்த்தவுடன் ஒரே பரவசம் - ஆனால் அருகே செல்ல முடியாத அளவுக்கு வாகன போக்குவரத்து நெரிசல்! அங்கே ஒரு வாகன ஓட்டுநர் பார்த்து ஓலம் இடுகிறார் - யாராவது என்னை பாபா அருகே இட்டுச் செல்ல மாட்டீர்களா!! என்கிற பரபரப்பு ஓலம் அது! அந்த நொடியே பாபா தனது கையை நீட்டுகிறார் - பாபாவின் அந்த வலது கரம் மறுமுனையில் இருக்கும் பிலிப்பின் கையை அது பிடித்துக் கொள்கிறது!
"உன்னை மீட்கவே நான் இங்கு வந்தேன்!" என்கிறார் பாபா தனது பிரேம புன்னகையால்...!
அந்த வலது கையும் இந்த வலது கையும் உரசுகையில் ஒருவித தெய்விக மின்காந்த அதிர்வலைகள் பாய்ந்தது போல் உணர்ந்ததாக தெரிவிக்கிறார்! அது கனவு நடந்து முடிந்த பிறகும் தொடர்கிறது! ஒருவித பிரசாந்தி அவர் இதயத்தில் குடி அமர்கிறது! அது அந்த பிரசாந்தி நிலையனே வழங்குகிறார்!
அதற்குப் பிறகு 23 டிசம்பர் 1987 ஆம் ஆண்டு - லாய்ட்ஸ் வங்கிக்கு செல்கிறார்! அது லண்டன் விம்பில்டன்னில் இருக்கிறது! ஒரு செக்கை காசாக்குவதற்கான வேலை அது! அது முடித்து வரும் வழியே முன்பின் தெரியாத ஒரு நபர் தனது தேவாலயத்திற்கு நன்கொடை கேட்கிறார்! இவரும் எந்த தேவாலயம் - கிறிஸ்துவ மதத்தின் எந்தப் பிரிவு என்று கேட்க - அவரும் ஏதுமில்லை என்பது போல் வெற்றுக் கையை திறக்க - பிலிப்'பும் நன்கொடை தராமல் நகர்ந்து செல்கிறார்!
அன்று இரவே ஒரு கனவு வருகிறது - கனவில் பாபா வருகிறார்!
"ஏன் நீ அவருக்கு நன்கொடை தரவில்லை! அந்த உருவத்தில் நான் தான் வந்தேன்! மதத்தின் எந்தப் பிரிவு என்று தெரியாததாலா? நீ என் பஜனைக்கு செல்கிறாய் அல்லவா - அது கூட எந்த மதப் பிரிவுகளிலும் சேரவில்லை!" என்றதும்! அடுத்த நாள் அதே நன்கொடை கேட்ட நபரை அதே இடத்திலும் இன்னும் பல இடங்களிலும் தேடுகிறார்! ஆனால் அவர் பார்வைக்குப் சிக்கவே இல்லை! பாபா இப்படி பல வடிவங்களில் பலர் வடிவங்களிலும் காட்சி தருவார் - தொடர்புக்கு வருவார் என்பது மட்டும் வெகு ஆழமாக அது முதல் உணர்ந்து கொள்கிறார் பிலிப்! அந்த பிலிப்'பின் பக்தி இதயம் அப்போது பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது! பிலிப் (Philip) அல்லவா ஆகவே தான் அந்த பிரகாசம்!
(Source : Beyond Borders | page : 15,16 | author : k.karthikeyan | publication year : 2015)
எந்த தேசமோ எந்த இனமோ எந்த மொழியோ பாபாவுக்கு அனைவரும் ஒன்றே என்பதை உணர்த்தும் உன்னத பதிவு இது! பாபாவுக்கு அனைவரும் குழந்தைகளே! லௌகீக தாய் கூட மகன்களிடம் பேதம் காட்டலாம் - தன் பேச்சை கேட்பவன் பிடித்தமானவனாக இருக்கலாம் - கேட்காதவன் மேல் மனக்கசப்பு வைத்து பிரிந்தும் பேசாமலும் இருக்கலாம்! ஆனால் பாபா அவ்வாறு இல்லை! பாவிகளுக்கும் பாபாவே தாய்! பாபா பாவங்களையே ஒதுக்கச் சொல்கிறாரே தவிர பாவிகளை அல்ல! ஏனெனில் எந்தப் பாவமும் ஆன்மாவை பாதிப்பதில்லை! அப்படியே பாபாவுக்கும்! அப்படி உடம்பில் உறைந்திருக்கும் நாமே(ஆன்மாவே) பாபா!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக