துவாபர யுகம் மற்றும் கலியுகத்தின் இரு அவதாரங்களும் பரமாத்மா என்பதை கீதை வழியேவும் பாபாவின் ஞான வாக்கு வழியேவும் உணரப் போகிறோம் பரவசமாக இதோ...!
அது துவாபர யுகம்! பாரதப் போர் நிகழ்வதற்கே தயாரான யுகம்! புவிபாரம் குறைக்க பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் நிகழ்த்தியே தெய்வீக அபாரமே பாரதப் போர்!
போரை நிகழ்த்த தனதாயுதமாக பேரிறைவன் பயன்படுத்தியது அர்ஜுனரையே! அந்த ஆயுதத்தை சாணை பிடிக்க எழுந்த ஆன்மீக ஆணையே கீதை!
"அர்ஜுனா! நானே பரமாத்மா! நானே மூன்று உலகங்களையும் பராமரித்து ஆள்பவன்! எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் நானே நீக்கமற நிறைந்திருக்கிறேன்! வேதங்களும் , பரம பக்தர் பட்டாளமும் என்னையே இலக்காக, நானே பரம புருஷனாக கொண்டாடுகிறது! நானே கடவுளரையும், மகான்களையும் தோற்றுவிப்பவன்! ஆகையால் தான் கடவுளராலும் எந்த மகான்களாலும் என்னை முழுமையாக புரிந்து கொள்ள இயலாது!" என்கிறார் பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர்!
தன்னை யார் என்று தெளிவுபடுத்தினால் , அர்ஜுனன் தெளிவாவான் என்கிற சூட்சுமம்! காரணம் அர்ஜுனனுக்குள் நிறைந்திருப்பதும் பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணரே!
வெளியே தன்னை வெளிப்படுத்திக் கொண்டு அதன் மூலமாக அர்ஜுனருக்கு உள்ளே தன்னை உணர வைத்த சாதுர்யம் பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணரால் மட்டுமே முடிகிற ஆன்மீக சாகசம்!
(ஆதாரம் : ஸ்ரீ மத் பகவத் கீதை - 15:17, 10:2)
இதே போல் பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில்,
"நான் உங்களோடு, உங்கள் முன்னே பேசுவது உங்கள் நன்மைக்காகவே, எனது நன்மைக்காக அல்ல...! நான் உங்கள் முன்னே உங்களைப் போலவே நடக்கிறேன், உங்களைப் போலவே சாப்பிடுகிறேன் மற்றும் உங்களை உங்கள் பாணியிலேயே அணுகுகிறேன்! ஆனால் உண்மையில் நான் அசையும் , அசையா உலகங்களை இயக்கும் ஆன்மீக மின்சாரமாக இருக்கிறேன்! நானே அதீத தெய்வீக சக்தியாக எங்கும் ஊடுறுவுகிறேன்! நானே ஞானமும், அதனை உணர்பவரும், உணர்தலும்! நானே எல்லா கடவுளரின் திரு வடிவமாகத் திகழ்கிறேன்! இன்னமும் இந்த மானுடம் ஒட்டு மொத்தமாக பல்லாயிரம் வருடம் சேர்ந்தாற்போல் உயிர் வாழ்ந்தால் கூட எனது உண்மையான இறை இயல்புகளை அறிந்து கொள்ளவே இயலாது! எப்படி ஒரு மீனால் கடலை அளக்க முடியும்? அதனை அறிந்து கொள்ள முடியும்?" என்கிறார் மிகத் தெளிவாக!
கீதையில் பேரிறைவன் கோடு கிழிக்கிறார்... அதே பேரிறைவன் கலியில் மீண்டும் அவதரித்து தான் கிழித்த கோட்டிலேயே சாலை அமைக்கிறார்!
(Source : Sri Krishna Sri Sathya Sai | page : 203 | Author : Dr J. Suman Babu )
ஏன் தனது தெய்வீகத்தை பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் தான் எடுக்கிற அவதாரங்களில் எல்லாம் விவரிக்க வேண்டும்?
அவரால் அதனை சொன்னால் அன்றி நம்மால் உணர்ந்து கொள்ள இயலாது! எதையும் எதிர்பார்க்காமல் பேரிறைவன் மீது பரம பக்தி உள்ளவர்களுக்கு பேரிறைவனின் வார்த்தையே போதுமானது! அவர் எந்த அற்புதத்தையாவது செய்து காட்ட வேண்டும் என்ற அவசியம் தேவையே இல்லை! அற்புதங்கள் என்பது இறை தெய்வீகத்தை உணர வைக்க பேரிறைவனுக்கு பயன்படும் சிறு கருவியே! ஆனால் அந்த அற்புதங்களை வைத்துக் கொண்டு நாம் அக மாற்றம் அடைகிறோமா? இல்லையா? என்பதை வைத்தே நமக்கு அந்த அற்புதம் பயன்பட்டிருக்கிறதா? இல்லையா? என்பதை உணர முடியும்!
குழந்தை,வேலை, பதவி, திருமணம், மீண்டும் குழந்தை இத்யாதி என மனிதனால் தர முடிந்ததை ஏன் இறைவனிடம் கேட்க வேண்டும்! அது வெறும் ஜென்ம அறியாமை!
கேட்பதை விட்டுவிட்டு கண்மூடி உள்ளே பார்ப்பதே அகமாற்றம் எனும் அற்புத வழி! அதுவே நம்மை ஆன்ம இலக்கை நோக்கி நகர்த்துகிறது! அக மாற்றமே பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் புரிந்து வருகிற ஒரே ஆச்சர்ய ஆன்மீக அற்புதம்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக