தலைப்பு

வியாழன், 13 மார்ச், 2025

பக்தர்களின் வாழ்வு நலன்களை காக்கும் இரு விஸ்வரூப அவதாரங்கள்!

எவ்வாறு இரு அவதாரங்களும் தங்கள் பக்தர்களின் நல்வாழ்வுக்கு உறுதுணையாகிறார்கள் என்பதற்கான ஆதார மந்திரச் சான்று சுவாரஸ்யமாக இதோ...!


ஸ்ரீ கிருஷ்ணர் பூர்ணாவதாரம் என்பதை கீதை படிப்படியாக உணர்த்த உணர்த்த உணர்கிறார் அர்ஜுனர்! கீதையில் இல்லாத ஆன்மீக ரகசியங்களே இல்லை! வேத சாரம் கீதை! அதில் விவரிக்கப்பட்ட ஒவ்வொன்றும் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும் பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் செயல்படுத்திக் கொண்டு வருகிறார் என்பதும் நிதர்சனம்! 

அதை தனது கீதையிலேயே தெள்ளத் தெளிவாய் விளக்குகிறார்!

அனன்யாஷ் சிந்தயந்தோ மாம்
யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபி யுக்தானாம்
யோக-க்ஷேமம் வஹாம்-யஹம்

என்கிறார்!


அதாவது, 

"யார் என்னை வேறு சிந்தனை இன்றி வழிபடுகிறார்களோ, தியானிக்கிறார்களோ , யார் சதா என்னை நினைத்துக் கொண்டே இருக்கிறார்களோ ,  அவர்கள் வாழ்க்கையில் உள்ள  அனைத்து பாரங்களையும் நானே ஏற்று அவர்களுக்கு யோக ஷேமங்களை வாரி வாரி வழங்குகிறேன்!" என்கிறார்!

லோக ஷேமம் என்று சொல்லவில்லை , யோக ஷேமம் என்கிறார்! இங்கு தான் நாம் கவனிக்க வேண்டும்! 

வீடு மனைவி மக்கள் வசதி வாய்ப்பு வேலை பதவி புகழ் இவையே லோக ஷேமம்! 

ஆனால் பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிடுவதோ யோக ஷேமம்!

நிம்மதி - திருப்தி - மன நிறைவு - ஞானம் - அமைதி- சாந்தி- சமாதானம் இவையே யோக ஷேமம்!


(ஆதாரம் - ஸ்ரீ மத் பகவத் கீதை - 9:22) 


அதே போல் ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும் யோக ஷேமம் வழங்கவே அவதரித்திருக்கிறார்! இறைவன் அவதாரம் எடுப்பதே அதற்குத் தான்! 

வெளிச்சம் வருவதே இருட்டை விரட்ட ... அதுபோல் அவதாரம் எழுவதே அறியாமையை விரட்டி நம்மை தன்னோடு இணைத்துக் கொள்ளவே!

கீதையைப் போன்றே ஒரு தெலுங்குத் துதி!

"ஸ்ரீ புட்டபர்த்தி நிலையுடு 

காப்பதுன்னு நின்னு நெப்புடு 

கருணாகாருடை 

செப்பட்டி நின்னு புரோச்சுன்னு

யே பட்டுன விடுவங்குன்ட எலுனு நின்னுன்"

அதாவது, 

"புட்டபர்த்தியில் வீற்றிருக்கும் இறைவன் உன்னை காப்பாற்றுகிறார்! அவர் மிகவும் கருணையானவர் ஆகவே அவர் உன்னை தனது கைகளில் தாங்குகிறார்! வழிகாட்டுகிறார்! காவலாக இருக்கிறார்! ஆகவே அவரின் அந்தக் கைப்பிடிமானத்தை நீ ஒருபோதும் விட்டுவிடாதே! அவரே உன் வாழ்வை ஆட்சி செய்கிறார்! அந்த ஒப்பற்ற புட்டபர்த்தி இறைவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும்!"

என்று கீதையை சாரமாய் பிழிந்து சுந்தரத் தெலுங்கில் சுதி ஏற்றித் தந்திருக்கிறார் பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்! 

ஸ்ரீ கிருஷ்ணர் கீதை பொழிந்தது அனைத்தும் சம்ஸ்கிருத கவிதையே! அதனை கிருதிகள் என்போம்! இயல் எனும் கீதையிலும், இசை எனும் புல்லாங்குழலிலும், நாடகம் எனும் ஜீவ வாழ்க்கை இயக்கத்திலும் கை தேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணர் ஒருவரே! அவரே உண்மையில் முத்தமிழ் வித்தகர்! அத்தகைய அவரே ஸ்ரீ சத்ய சாயி அவதாரம் எடுத்து 

அதே இயல் எனும் வாஹினிகளிலும் , இசை எனும் பஜனையிலும் , நாடகம் எனும் நமது உலக வாழ்க்கை மற்றும் அவரே சிறுவயதில் "செப்புனட்டி சேஸ்தாரா" போன்ற பல நாடகத்தையும் தானே நடித்து அரங்கேற்றி இருக்கிறார் என்பதும் இருவரும் ஒருவரே என்பதற்கான உன்னத உதாரணங்கள்!

கோபியர்களோடு சிறு வயது ஸ்ரீ கிருஷ்ணர் ஆடிய நடனமும் சரி, காளிங்கன் எனும் பாம்பரசன் மேல் பாதம் பதித்து ஆடிய நடனமும் சரி , ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயியாக அவதரித்து ஆடிய ருஷ்யேந்த்ரமணி நடனமும் சரி மூன்றும் ஒன்றே என்பதை நம் இதயத்தால் தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது! 

அவரே நம்மையும் ஆட்டுவிக்கிறார், அவரே கொன்னக்கோல் இசைக்கிறார்! இந்த உலகம் எனும் சபையிலே அவரால் மட்டுமே அவர் தாளத்திற்கு நாம் ஆடிக் கொண்டிருக்கிறோம்!

எப்போது மனிதன் ஆசைக்கு ஆட ஆரம்பிக்கிறானோ அப்போதே தாளங்கள் தப்புத் தாளங்கள் ஆகின்றன...!


(Source : Sri Krishna Sri Sathya Sai | page : 204 | author : Dr.J. Suman Babu )


ஆக யோக ஷேமத்திற்கு எழுந்த அவதாரங்களே ஸ்ரீ கிருஷ்ணரும் ஸ்ரீ சத்ய சாயியும்! மற்றபடி ஒவ்வொருவர் வாழ்வில் அமைகின்றன குடும்பம் - உறவு - நட்பு - வேலை - பதவி - பணம் யாவுமே அவரவர் தனிப்பட்ட பூர்வ புண்ணிய - பாவக் கணக்குகளே! 

முழு பக்தியோடுருந்தால் நமது பூர்வீக பாவங்கள் இரு அவதாரங்களால் குறைக்கப்படுகின்றன...! 

"ஏன் இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு?" என்று அவதாரங்களின் மேல் மனிதன் பழிபோடவே விரும்புகிறான்... அவனது சொந்த கர்ம கணக்குகளை மறக்கும் காரணமே இவை யாவும்! நமது கர்ம வினையை உணர உணர "நமது கொஞ்ச நஞ்ச பக்திக்கு இந்த அளவுக்காவது நம்மை இரு அவதாரங்களும் நன்றாக வாழ வைத்திருக்கிறார்களே!" என்றே நாம் உணர தொடங்குவோம்! 

எப்போது?

இருவரும் ஒருவரே எனும் ஆழமாய் உணர்தலில் வெளிப்படுகிற ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரை நாம் அனைவரும் சரணாகதி அடைகிற போது...!


  பக்தியுடன் 

 வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக