தலைப்பு

வியாழன், 13 பிப்ரவரி, 2025

அதி ருத்ர மஹா யக்ஞம் - பிரசாந்தி நிலையம் பிவ் 14-25 2025

ஸ்ரீ ருத்ரம்:

ரிக், யஜூர், சாம, அதர்வன என வேதங்கள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் யஜூர் வேதம், வழிபாடுகள், வேள்விகள், அவை நடத்தும் முறைகள் ஆகியவை பற்றி விவரிக்கிறது. யஜூர் வேதத்தில் தான் ருத்ரம் என்னும் துதி உள்ளது. ருத்ரம், ருத்ர ஜபம் என்பது சிவ பெருமானுக்குரியது என்று மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் வேதங்களில் ருத்ரத்திற்கு அளவிட முடியாத பல விஷயங்கள் உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

மந்திர ஜபங்களில் ருத்ர ஜபம் மிகவும் சக்தி வாய்ந்தது என்றும், சிவனின் அருளை முழுவதுமாக பெற்றுத் தரும் என்பார்கள். ருத்ர ஜபம் செய்தால் அனைத்தும் கிடைத்துவிடும். 

ஸ்ரீ ருத்ரம் 2 பாகங்களாக இருக்கின்றது. முதல் பாகம் நமகம் என்றும் இரண்டாம் பாகம் சமகம் என்றும், ஒவ்வொன்றும் 11 அனுவாகங்களைக் கொண்டது. 

நமகம் என்பது சிவபெருமானை போற்றி பாடுவது, சமகம் என்பது இக பர நலன்களை கேட்டு பெறுவது. 


லகு ருத்ரம் முதல் அதி ருத்ரம் வரை:

சிவபெருமானின் வழிபாட்டிலே மிக உன்னதமாக கருதப்படுவது ஸ்ரீ ருத்ரம். அதில் மூன்று வகைகள் உள்ளதாக பெரியோர்கள் வகைப்படுத்தியுள்ளார்கள். 

1. லகு ருத்ரம் 

2. ருத்ர ஏகாதசினி (அ) ஏகாதச ருத்ரம்

3. மஹா ருத்ரம் 

4. அதி ருத்ரம் 

லகு ருத்ரம் என்பது நமகத்தையும் சமகத்தையும் ஒருமுறை உச்சரிப்பது. ஒரு முறை நமக்கத்தின் 11 அனுவாகத்தை உச்சரித்து பின்னர் சமகத்தில் முதல் அனுவாகத்தை உச்சரித்தல், இப்படி 11 முறை நமகத்தை உச்சரித்து ஒரு முறை சமகத்தை உச்சரிப்பது ஏகாதச ருத்ரம் அல்லது ருத்ர ஏகாதசினி எனப்படுகிறது. 

ஏகாதச ரூத்ரத்தை 11 முறை உச்சரிப்பது மகா ருத்ரம் எனப்படுகிறது. 

மகா ருத்ரத்தை 11 முறை 11 நாட்களில் 11 குழுக்களாக உச்சரிப்பது அதிருத்ரம் எனப்படுகிறது. 

அதிருத்ர மகா யக்ஞம் என்பது முற்காலத்தில் சக்கரவர்த்திகள் மற்றும் பேரரசர்களால் மட்டுமே நடத்தப்படும். அந்த அளவிற்கு மிகப்பெரிய யாகமாக அது கருதப்படுகிறது. 


பிரசாந்தி நிலையத்தில் அதிருத்ரம்:

பகவானின் திருமுன்னிலையில் 2006 ஆம் வருடம் பிரசாந்தி நிலையத்திலும் 2007 ஆம் ஆண்டு சென்னையிலும் இந்த அதிருத்ர மஹா யக்ஞம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

அச்சமயம் பகவான் தனது பேருரைகளில் ருத்ரத்தின் மகிமைகளையும் அது உலக பொதுமறை என்பதையும் எடுத்துக் கூறி அனைவரும் இதனை கற்று தேற வேண்டும் என அறிவுறுத்தினார். 

 அதன்படி உலகெங்கிலும் உள்ள ஸ்ரீ சத்ய சாயி பக்தர்கள் ருத்ரதினை கற்று தினமும் இல்லங்களில் உச்சரிக்க துவங்கினர். 

இப்படிப்பட்ட மகிமை வாய்ந்த ருத்ரம் மீண்டும் அதி ருத்ர மகா யக்ஞ வடிவில் மீண்டும் பிரசாந்தி நிலையத்தில் பகவானின் நூறாவது பிறந்த நாள் விழாவின் ஒரு பகுதியாக பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மிக விமரிசையாக நடைபெற இருக்கிறது. 


 அனைவரும் வருக:

கிடைத்தற்கரிய இந்த வாய்ப்பினை உலகெங்கிலும் உள்ள சாயி பக்தர்கள் பயன்படுத்திக்கொண்டு இந்த யாகத்தில் தவறாமல் கலந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுகிறோம். கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு ஸ்ரீ சத்ய சாயி மீடியா சென்டர் மூலம் காணொளிகள் மூலம் கண்டு களிக்கலாம். 

ருத்ரம் உரைத்து பத்திரமாய் இருங்கள் - பகவான் பாபா 


ஜெய் சாயிராம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக