தலைப்பு

வியாழன், 10 ஏப்ரல், 2025

401-450 | ஸ்ரீ சத்யசாயி தெய்வீக நிகழ்வுகள்!

பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..




📝 நிகழ்வு 401:


ஒரு நாள் எனது அக்காவும் மாமாவும் புட்டபர்த்திக்கு தரிசனத்திற்காக வந்தனர். அவர்களுக்கு இன்டர்வியூ வழங்குமாறு நான் சுவாமியிடம் பிரார்த்தித்தேன். அவரும் எங்களை மறுநாள் காலையில் வருமாறு கூறினார். ஆனால் மறுநாள் கல்லூரி வேலை செய்யும் நாளாக இருந்ததால் மாணவர்களாகிய நாங்கள் பொதுவாக மந்திரத்திற்கு செல்ல இயலாது. ஆகவே அன்றிரவு நான் வார்டனிடம் சென்று அதற்கான அனுமதி கோரினேன். ஆனால் அவரோ, சுவாமியிடமிருந்து இதுகுறித்து எந்த செய்தியும் தனக்கு வரவில்லை என்று கூறிவிட்டார்! ஆகவே வேறு வழியின்றி மறுநாள் நான் எப்போதும் போல கல்லூரிக்குச் சென்றேன். பகற்பொழுது முழுவதும் எனது மனம் அமைதியற்ற நிலையில் இருந்தது. சுவாமி என்ன நினைப்பார்? அவர் கோபித்துக் கொள்வாரா? என்றெல்லாம் சிந்தனைகள்! அன்று மாலையில் தரிசனம் தொடங்கியது. பக்தர்களுக்கு தனது புன்னகை நிறைந்த முகத்துடன் தரிசனம் அளித்த பின்னர் சுவாமி மாணவர்கள் இருந்த பக்கம் திரும்பினார். உடனே அவரது முகத்தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டது! என்னை நேராக நோக்கிய அவர், " துன்னப்போத்தா(எருமை)! உன்னை நான் இன்று காலையில் வரச் சொன்னேன்! ஏன் நீ வரவில்லை? என்றார்!

 நான் பயந்தபடியே நடந்து விட்டது!! உடனே என் மனம் வார்டனுடன் நடந்த உரையாடலை எண்ணிப் பார்த்தது. எனது கவலையில் எனது உள் உணர்வு என்னை காப்பாற்றிக் கொள்ளுமாறு உரைத்தது! "சுவாமி! அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை!" என்று சொல்லுமாறு அறிவுறுத்தியது! ஆனால் ஏதோ ஒன்று என்னை அப்போது அவ்வாறு கூற விடாமல் தடுத்தது! ஆகவே நான் அமைதியாக இருந்தேன்! உடனேயே, "சுவாமி அனைத்தையும் அறிவார்" என்று என் உள் மனம் கூறியது! ஒரு சில நொடிகளிலேயே சுவாமி தன் முகத்தில் ஒரு இதமான புன்சிரிப்புடன் எனது தோளின் மேல் தன் கையை வைத்து, "கவலைப்படாதே! நான் வார்டனிடம் சொல்கிறேன்!" என்றார்!! உடனே வார்டனை அழைத்து, "இன்டர்வியூவிற்கு நாளை இவனை இங்கே அனுப்பு!" என்றார்!! அப்போது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை!

 (மறுநாள் என்ன நிகழ்ந்தது என்பதை நிகழ்வு எண் 402-ல் பார்ப்போம்!)

ஆதாரம்: ஏப்ரல் 2025 சனாதன சாரதி-ஆங்கில இதழில் திரு, கோடா சிவகுமார் என்ற முன்னாள் மாணவர் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 402:

(நிகழ்வு எண் 401 இன் தொடர்ச்சி)

மறுநாள் காலையில் தரிசனத்தின் போது சுவாமி எங்களை இன்டர்வியூக்கு அழைத்தார். நான் சுவாமியின் திருப் பாத கமலங்களின் அருகிலேயே அமர்ந்திருந்தேன். அதே நேரத்தில் சுவாமியின் படம் பதித்திருந்த ஒரு சாதாரணமான பிளாஸ்டிக் மோதிரம் ஒன்றை நான் அணிந்திருந்தேன். பிருந்தாவனத்தில் கோடை வகுப்பு நடந்தபோது ஒரு சிறிய ஞாபகார்த்தமாக நான் வாங்கிய மோதிரம் அது. இன்டர்வியூவின் போது சுவாமி என் கையைப் பிடித்துக் கொண்டு அந்த மோதிரத்துடன் விளையாட ஆரம்பித்தார்! பின்னர் ஒரு கேலியான புன்னகையுடன், என்னை பார்த்துக்கொண்டே, "இதை எங்கே வாங்கினாய், சிறுவனே!" என்றார்! நான் உடனே, " சுவாமி! பிருந்தாவனத்தின் நுழைவாயிலுக்கு வெளியே" என்றேன்! உடனே அவர், "இதற்கு என்ன விலை கொடுத்தாய்?" என்றார்! அதற்கு நான், " இரண்டு ரூபாய், சுவாமி!" என்றேன்! உடனே சுவாமி, தன் சிரிப்பினை அடக்கிக் கொண்டே, " ஆகவே, எனது மதிப்பு இரண்டு ரூபாய் மட்டும் தான்!" என்றார்! உடனே அந்த அறையில் குழுமியிருந்த அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்! நான் என் கைகளை கூப்பிக்கொண்டு அமைதியானேன். சுவாமி மேலும் தொடர்ந்து, "என்னிடம் அதைக் கொடு!" என்றார். நானும் அவ்வாறே செய்தேன். அந்த மோதிரத்தைத் தன் வாயின் அருகே வைத்துக் கொண்டு மூன்று முறை அதற்கு அதன் மேல் சுவாமி ஊதினார்! அந்தக் கணத்தில் அந்த பிளாஸ்டிக் மோதிரம், தங்கத்தினால் செய்யப்பட்ட சுவாமியின் உருவம் பதிக்கப்பட்ட, பளபளக்கும் உலோகத்தினால் ஆன மோதிரமாக மாறியது!! அதனைக் கண்ட அனைவரும் ஒரு கணம் ஆச்சர்யத்தில் மூச்சற்று போயினர்! அந்த மோதிரத்தை அனைவரும் பார்க்கக் கொடுத்த சுவாமி அது எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்ற கேள்வியை கேட்டார். ஒரு சிலர் வெள்ளி என்றும் மற்றவர்கள் பிளாட்டினம் என்றும் பதிலளித்தனர். சிறிது நேர இடைவெளிக்குப் பின்னர் சுவாமி, " இது பஞ்சலோகத்தினால் ஆனது! ஐந்து உலோகங்கள் கூடிய ஒரு கலவையாகும்! இதனை வைத்து தான் கோவில் சிலைகளை செய்வார்கள்!" என்றார். பிறகு அந்த மோதிரத்தை என் கையில் அணிவித்துக் கொண்டே, "இப்போது இதன் மதிப்பு என்ன?" என்றார்! என்னிடம் அதற்கு பதில் இல்லை! சுவாமி சிரித்துக் கொண்டே, "விலைமதிப்பற்றது!" என்றார்! நான் அந்த புதிய மோதிரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சுவாமி என்னை நோக்கி, " இந்த மோதிரத்தை ஒரு கணப்பொழுதில் சுவாமியால் மாற்ற முடியும் என்றால், உன்னை அவரால் என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பார்!" என்றார்! அந்த நொடியில் நான் புரிந்து கொண்டேன்! ஒரு உயிரற்ற பொருளை எப்படி சுவாமி ஒரு புனிதமான விலைமதிப்பற்ற பொருளாக மாற்றுகிறாரோ அதேபோல - நாம் அவரை சரணடைந்தோமானால்- நம் ஒவ்வொருவரையும் அவரது திவ்ய சங்கல்பத்தினால் ஒரு விலைமதிப்பற்றவராக சுவாமி மாற்றுவார்!!

ஆதாரம்: ஏப்ரல் 2025 சனாதன சாரதி-ஆங்கில இதழில் திரு.கோடா சிவகுமார் என்ற முன்னாள் மாணவர் எழுதிய பதிவு.


📝 நிகழ்வு 403:

1972-ல் குரு பௌர்ணமி அன்று அமிர்தம் அடங்கிய வெள்ளி பாத்திரத்தை தாங்கியபடி பக்தர்களின் வரிசைகளுக்கு நடுவே சுவாமியுடன் நடந்து செல்லும் பாக்கியம் எனக்கு கிட்டியது. தன் ஒரு கையால் பாத்திரத்தை தொட்டுக்கொண்டும், மற்றொரு கையினால் வெள்ளி தேக்கரண்டியின் மூலம் பக்தர்களின் நீட்டிய கைகளில் அமிர்தத்தை வழங்கிக் கொண்டும் சுவாமி நடந்து சென்றார். ஒரு சில மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் சுவாமி நேராக அவர்களது வாயில் அமிர்தத்தை மெதுவாகப் பொழிந்ததை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். இவ்வாறாக நடந்து சென்று கொண்டிருந்தபோது சிறிது நேரம் கழித்த பின்னர் முறுக்கிய கைகளுடனும் மிகவும் பரிதாபமான முகத்தோற்றத்துடனும் கூடிய ஓர் இளைஞன், வரிசையில் அமர்ந்திருந்ததை கவனித்தேன். உடனே தன் வாயை திறக்குமாறு அவனிடம் நான் கூற விழைந்த தருணத்தில் சுவாமி அவனை பார்க்காமலேயே அவனைக் கடந்து சென்று விட்டார்! ஆகவே சுவாமியின் கவனம் அவன் மீது படும் படியாக அவனை மந்திரத்திற்கு அருகில் அமரும்படி செய்யலாம் என்று நான் நினைத்தேன். நாங்கள் அதே நேரத்தில் அவனது பக்கத்து வரிசையில் சென்று கொண்டிருந்தபோது சுவாமி அவனைப் பார்த்து, "நடிப்பதை விட்டுவிட்டு உன் கையை நீட்டு!" என்றார்!! அடுத்த நொடியில் அந்த இளைஞன் தன் இரு கைகளையும் நேராக நீட்டி அனைவரையும் போல அமிர்தத்தை வாங்கிக் கொண்டான்!! மாற்றுத்திறனாளியை போல நடித்த அந்த இளைஞனின் போக்கிரித்தனமான துணிச்சலைப் பார்த்து நான் திகைத்தேன்! அமிர்தம் அளிக்கும் நிகழ்வு முற்றிலும் முடிந்த பின்னர் நாங்கள் அவனை பிடித்து விசாரித்தோம்! அதற்கு அவன், " சுவாமி என் மேல் பரிதாபப்பட்டு என் வாயில் அமிர்தம் அளிப்பார், அந்த நேரத்தில் நான் என் இரண்டு கைகளாலும் சுவாமியின் பாதத்தை தொட்டு நமஸ்கரித்து விடலாம் என்று எண்ணினேன்! ஆனால் சுவாமியைப் பார்த்த நொடியில் நான் நடுங்கி விட்டதால் என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை!" என்றான்!!

ஆதாரம்: திரு பி. வி. ரமண ராவ் அவர்கள் எழுதிய " லவ் இஸ் மை ஃபார்ம் " என்ற புத்தகத்தில் இருந்து.


📝 நிகழ்வு 404:

12-5-1968 அன்று சுவாமி, மும்பை தர்மக்ஷேத்ராவில் "சத்ய தீப்" என்று அழைக்கப்படும் தனது புதிய இல்லத்தின் புகுவிழாவை நடத்தினார்! இதனைத் தொடர்ந்து, 16, 17, 18 தேதிகளில் சத்திய சாயி நிறுவனங்களில் முதலாவது தேசிய மாநாடு நடைபெற்றது. அந்த தருணத்தில் ஒரு நாள் மாலையில் "பாரதீய வித்யா பவன் " இல் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்கு சுவாமி முதன்மை விருந்தினராக இருந்தார். அப்போதைய துணை பிரதம மந்திரி, திரு. மொரார்ஜி தேசாய் அவர்கள் அதற்கு தலைமை தாங்கினார். அவர் முதலில் பேசிய போது, கர்வத்துடன் "நான், தேசிய மொழியான இந்தியில் பேசப் போகிறேன்! பிறகு பாபா அவர்கள் தனது பிராந்திய மொழியான தெலுங்கில் பேசுவார்! அவரது பேச்சு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்" என்று தொடங்கினார்! அவர் தன் உரையில் சுவாமியின் உயர்ந்த கொள்கைகளையும் சத்திய சாயி நிறுவனங்களையும் பற்றிப் பாராட்டிப் பேசினார். அப்போது மேடையின் பக்கத்தில் அமர்ந்திருந்த சிறந்த தேசபக்தரும், "பவன்'ஸ் ஜர்னல்" என்ற சிறந்த பத்திரிகையின் தலைமை ஆசிரியருமான திரு. கே. எம். முன்ஷி அவர்கள் அமர்ந்திருந்தார். அப்போது அவர் பார்க்கின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆகவே அவரது கைகள் நடுங்கிக் கொண்டே இருந்தன. அதனைப் பார்வையுற்ற சுவாமி, உடனே எழுந்து கீழே இறங்கி சென்று அவரது அருகில் அமர்ந்தார்! விபூதியை வரவழைத்து அவரது கைகளில் தடவினார்! உடனே கைகள் நடுங்குவது முற்றிலும் நின்றது!! அருகில் இருந்த அனைவரும் ஆச்சரியமுற்று, மகிழ்ச்சியில் பலத்த கரகோஷம் எழுப்பினர்!! திரு. மொரார்ஜி தேசாய் பேசி முடித்தவுடன் சுவாமி தனது உரையைத் தொடங்கினார். திரு தேசாய் அவர்களின் வார்த்தைகளுக்கு பதிலளிக்கும் படியாக, சுவாமி சுமார் ஐந்து நிமிடங்களுக்கு பரிசுத்தமான சமஸ்கிருத மொழியில் பேசினார்!! குழுமியிருந்தோர் ஆச்சரியத்தால் கட்டுண்டு கிடந்த அந்த நேரத்தில் சுவாமி, " வேதத்தை அடிப்படையாகக் கொண்ட நமது கலாச்சாரத்தின் பொக்கிஷக் களஞ்சியமான சமஸ்கிருத மொழிதான் இந்தியாவின் தேசிய மொழியாகும்! ஹிந்தியும் ஒரு பிராந்திய மொழிதான்!" என்று கூறினார்!! உடனே அவை முழுவதும் ஆரவாரம் பொங்கியது! மொழிபெயர்க்க நின்று கொண்டிருந்த திரு கஸ்தூரி அவர்கள் தனது இரு கைகளையும் கூப்பி சிரம் தாழ்த்தி சுவாமியை வணங்கினார்!! பிறகு சுவாமி தெலுங்கு மொழிக்குத் தன் உரையை மாற்றிக்கொண்டு, "இந்தியர்களின் தேசிய மொழி சமஸ்கிருதம் தான்! நமது கலாச்சார இலக்கியங்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் உள்ளன!! மிகவும் துரதிஷ்டவசமாக அத்தகைய சமஸ்கிருத மொழிக்கு அரசாங்கம் மாற்றான் தாய்க்கு உண்டான அந்தஸ்தை அளித்துக் கொண்டிருக்கிறது!" என்று பரந்த கைத்தட்டல்களுக்கிடையே உரக்க கூறினார்!!

ஆதாரம்: திரு பி. வி. ரமண ராவ் அவர்கள் எழுதிய "நெக்டர் ஆஃப் லவ் " என்ற புத்தகத்தில் இருந்து.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக