பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..
📝 நிகழ்வு 451:
1950 ஆம் வருடம் ஏப்ரல் 14 ஆம் நாள் - அன்று இரவு 8:30 மணி அளவில் அனைத்து பக்தர்களும் சுவாமியின் பாதங்களில் விழுந்து வணங்கி விட்டு அவரவர் இடங்களுக்கு சென்று உறங்கி விட்டனர். திருமதி. கமலா சாரதி அவர்களின் உறவினரான, வரது என்ற சிறுவனும், கிருஷ்ணா என்ற மற்றொரு சிறுவனும் சுவாமிக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தனர். அப்போது நடந்த நிகழ்வினை, வரதுவின் வார்த்தைகளில் இப்போது அறிவோம்: அப்போது மணி இரவு 9:30 இருக்கும். எங்களிடம் பேசிக் கொண்டிருந்த சுவாமி திடீரென்று வெறித்த தூரப்பார்வையுடன் தனது படுக்கை அறையை நோக்கி நடந்தார். அவர் சிறிது தடுமாறியதால் அவரது கைகளை நாங்கள் இருவரும் பிடித்துக் கொண்டோம். அவரது உடல் விறைத்தது! தன்னை மறந்து நிலையில் இருந்த அவரது உடல் சுமார் ஐந்து அங்குலங்கள் தரைக்கு மேல் உயர்ந்தது! அப்போது " மகரிஷி..... இறந்துவிட்டார்...." என்று அவரால் முணுமுணுக்கப்பட்ட சொற்கள் எங்கள் காதுகளில் விழுந்தன! அவரது வலது கால் கட்டைவிரல் பிளந்தது! அதிலிருந்து மிகவும் வாசனையுடன் கூடிய விபூதி, பெருக்கெடுத்தது!!
எனது முந்தைய அனுபவத்தின் மூலம், இத்தகைய நேரங்களில் அவரது உடலின் மீது ஒரு நிலையான கவனத்தை வைப்பதைத் தவிர எங்களால் வேறு ஒன்றும் செய்ய முடியாது, என்று நான் அறிந்திருந்தேன். சில நிமிடங்கள் கழிந்த பிறகு அவர் தனது கண்களைத் திறந்து, " என்ன நடந்தது?" என்று எங்களைப் பார்த்து கேட்டார். அதற்குள் அவரது காலடியில் சுமார் இரண்டு கிலோ அளவிலான விபூதி மலைபோலக் குவிந்திருந்தது! அவர் தன்னை மறந்த நிலையில் மகரிஷியின் பெயரைக் குறிப்பிட்டதை நாங்கள் அவரிடம் கூறினோம். அதற்கு அவர், " ஆமாம்! ரமண மகரிஷி அவர்தம் பூத உடலை விட்டு நீங்கி விட்டார்! இந்த விபூதியை அள்ளி எடுத்துக் கொள்ளுங்கள்! நாளைக்கு அனைத்து பக்தர்களிடமும் பகிர்ந்து அளியுங்கள்!!" என்றார்!!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 452:
வெங்கடகிரி ராஜாவின் மூத்த மகன், புட்டப்பர்த்தியில் நடந்த ஒரு நிகழ்வினைப் பற்றிக் கூறியதாவது:
"1948-இல் ஒரு நாள் குமார ராஜாவுடன் சுவாமி சித்ராவதி ஆற்றின் மணல் பரப்பில் நடந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று சுவாமி மறைந்துவிட்டார்! இரண்டு நிமிடங்களில் அவர் மறுபடியும் தோன்றினார்!! அப்போது அங்கே சுமார் 15 நபர்கள் இருந்தனர். அங்கிருந்த அனைவரும் சுவாமியின் இந்த செயலைப் பார்த்து திகைத்துப் போயினர்! அவரிடம் இதனை பற்றி அவர்கள் கேட்டபோது, சுவாமி , "ராதாகிருஷ்ணையாவின் மனைவி தனது அறையில் இருந்து மிகுந்த கலக்கத்துடனும் பயத்துடனும் என்னைக் கூவி அழைத்தார்! ஆகவே நான் அங்கு சென்று அவரை அமைதி படுத்தினேன்!" என்றார்!
எப்படி இரண்டு நிமிடங்களில் சுவாமி சித்ராவதியில் இருந்து பழைய மந்திரத்திற்கு சென்று திரும்பி வர முடிந்தது என்ற விஷயம் என் மனதில் ஒரு புதிராகவே இருந்தது!
பிறகு 1975இல் நாங்கள் ராதாகிருஷ்ணையாவின் ஊரான குப்பத்திற்குச் சென்றிருந்தபோது அவர்தம் மனைவி இந்த நிகழ்வினை பற்றி என்னிடம் பின்வருமாறு விளக்கினார்: " அப்போது ராதாகிருஷ்ணையா அவர்களது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது. ஆனால் மற்ற பக்தர்களுக்கு ஏமாற்றம் ஏற்படாமல் இருக்க, நான் சுவாமியை அவர்களுடன் சித்ராவதிக்கு சென்று வருமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் சுவாமி கிளம்பிச் சென்ற சில நிமிடங்களில் எனது கணவர், அளவுக்கு அதிகமாக வாந்தி எடுத்தார்! அப்போது நான் பயந்து போய் நான் சுவாமியை உரக்கக் கூவி அழைத்தேன்! உடனே அந்த நொடியில் சுவாமி அங்கே தோன்றினார்! எனது கணவரின் தலையைப் பிடித்துக் கொண்டு படுக்கையில் படுக்க வைத்தார்! என் கையில் இருந்த ஹார்லிக்ஸ் கோப்பையை வாங்கி அவரை அருந்தச் செய்தார். அடுத்த நொடியில் அங்கிருந்து மறைந்து விட்டார்! சித்ராவதியில் இருந்து திரும்பி வந்த பிறகு என்னிடம் கணவரின் உடல்நிலை பற்றி சுவாமி விசாரித்தார். அப்போது அவர் சற்றே குணமடைந்திருந்தார்" என்று விவரித்தார்.
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 453:
குப்பம் ராதாகிருஷ்ணையாவின் மகனான திரு. கிருஷ்ணகுமார் அவர்கள் விவரித்த ஒரு அனுபவம் இதோ :
ஒருநாள் இரவு சுமார் 8 மணி அளவில் சுவாமி, " எனக்கு உடல்நிலை சரியில்லை" என்று கூறிவிட்டு உறங்குவதற்காகத் தன் அறைக்குச் சென்றார். 10 நிமிடங்கள் கழித்து நான் அவரது அறைக்குள் சென்றேன்; அவர் மூச்சு விடுவது போல எனக்கு தெரியவில்லை! அவரது உடல் சில்லிட்டு போயிருந்தது!! உடனே நான் பயந்துவிட்டேன்!! உடனே நான் மந்திரத்தின் பூஜாரியான திரு. சேஷாகிரி ராவ் அவர்களிடம் ஓடிச் சென்று இதனைத் தெரிவித்தேன்! அவர், "கவலைப்படாதே! சுவாமி யாரோ ஒரு பக்தரைக் காப்பதற்காகத் தன் உடலை விட்டு சென்றிருப்பார்! ஆகவே கதவை மூடிவிட்டு அவரது அறையிலேயே மௌனமாக அமர்ந்திரு!" என்று கூறினார். நானும் அவ்வாறே செய்தேன். சில நிமிடங்களில் சுவாமி தன் சுயநிலையை அடைந்தது போலத் தெரிந்தது. சுவாமி எழுந்து, " அறிவிலிகள்!! , இரயிலின் சக்கரங்களுக்கு அடியில் விழுந்து இருப்பார்கள்!!" என்று முனுமுனுத்தார்!!
மறுநாள் காலையில் ஒரு கிராமத்திலிருந்து தங்களது மகனுடன் ஒரு தம்பதியினர் வந்திருந்தனர். பாபா அவர்களை அழைத்து, "கனமான ஒரு பையைத் தலையில் சுமந்து கொண்டு நீங்கள் மேம்பால நடைபாதை மூலம் இரயில் தண்டவாளங்களைக் கடந்து சென்று இருக்க வேண்டும்! அதனை விட்டுவிட்டு நீங்கள் ஏன் நேரடியாகத் தண்டவாளங்களைக் கடக்க முயற்சித்தீர்கள்?? இறுதி நொடியில் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது!!" என்று கடிந்து கொண்டார்! உடனே அந்த தம்பதியினரும் சுவாமியின் பாதங்களில் விழுந்து, "சிறிதும் சந்தேகம் இன்றி, தாங்கள்தான் தர்மாவரம் இரயில் நிலையத்தில் எங்களை வேகமாகத் தள்ளிவிட்டு இரயிலில் அடிபடுவதைத் தவிர்த்து காப்பாற்றினீர்கள், சுவாமி!!" என்று கூறி சுவாமிக்கு நன்றி தெரிவித்தனர்.
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 454:
குப்பம் ராதாகிருஷ்ணையாவின் இரண்டாவது மகனான திரு. அமரேந்த்ரா அவர்கள் விவரித்த இரு அனுபவங்கள் இதோ:
"ஒருநாள் மதியம் நாங்கள் சுவாமிக்கு அருகில் கீழே படுத்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர் நீல நிற அங்கியை அணிந்திருந்தார். சுமார் அரை மணி நேரம் கழித்து நான் எழுந்தபோது சுவாமி சிவப்பு நிற அங்கியில் இருந்ததை பார்த்தவுடன் ஆச்சரியம் அடைந்தேன். சாதாரணமாக தனது அங்கியை சுவாமி தானே சென்று எடுத்துக் கொள்ள மாட்டார். ஆகவே நான் , " சுவாமி! நீங்கள் எப்பொழுது உடையை மாற்றினீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "சில நிமிடங்களுக்கு முன்னால் நான் வெங்கடகிரிக்குச் சென்றபோது, நான் இந்த சிவப்பு நிற அங்கியை அணிய வேண்டும் என்று ராஜா அவர்கள் மிகவும் வற்புறுத்தினார். அவர் வருந்தக்கூடாது என்பதற்காக நான் அவரது வேண்டுகோளை ஏற்றேன்!" என்றார்!!
ஆகவே சுவாமி பர்த்தியில் இருந்து வெங்கடகிரிக்கு சென்று அரை மணி நேரத்தில் திரும்பி வந்துள்ளார்!!!
1949 இல் நான் புட்டபர்த்தியிலிருந்து ஊருக்குத் திரும்பியபோது, சுவாமி என்னிடம், "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். உடனே நான், "தயைகூர்ந்து எனக்கு ஒரு மோதிரம் தாருங்கள், சுவாமி!" என்றேன்! அப்போது அவர் என்னுடன் நடந்து கொண்டிருந்தார். ஆகவே அருகில் அச்சமயம் இருந்த மல்லிகைக் கொடியிலிருந்து ஒரு இலையைப் பறிக்கச் சொன்னார். உடனே அந்த இலையை எனது மற்றொரு கையினால் நன்றாக தேய்க்கச் சொன்னார். பிறகு அந்த இலையை மற்றொரு கையில் வைத்து மூடிக்கொள்ளுமாறு கூறினார். அவ்வாறு நான் செய்தவுடன் உடனே என் கையை திறக்கச் சொன்னார். ஆஹா! அந்த இலை மறைந்து அதன் இடத்தில் சுவாமியின் போட்டோ பதிக்கப்பட்ட ஒரு தங்க மோதிரம் இருந்தது!! அந்த நாட்களில் சுவாமி எங்களுடன் சேர்ந்து ஆடல், பாடல், விளையாட்டுகளில் பங்கேற்கும் நண்பனாகவே எங்களுக்கு தென்பட்டார். அவரது மாயையினாலோ என்னவோ தெரியவில்லை, நாங்கள் அவரை
பக்தி கலந்த எண்ணத்துடன் பார்க்கவில்லை!! அப்படி இருந்திருந்தால் அவருடன் இவ்வளவு நெருக்கமாகப் பழக எங்களால் முடிந்திருக்காது! எங்களது அந்நாளைய அனுபவங்கள் இன்றைய இனிமையான ஞாபகங்களாக மட்டுமே இருக்கின்றன. இன்று நாங்கள் சுவாமியின் பல கோடி பக்தர்களுள் ஒருவராக இருக்கிறோம்! அனைத்தும் அவர் செயல்!!"
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 455:
சுவாமியின் மிகவும் பிரபலமான பக்தர்களில் ஒருவரான திரு பி.வி. ராஜா ரெட்டி அவர்களது ஒரு அனுபவம் அவரது வார்த்தைகளில் இதோ:
பாபா என்மீது சிறிதும் கவனம் செலுத்தவில்லை என்று நான் நினைத்த காலகட்டம் : - நான் எனது சொந்த ஊருக்கு சென்று விட எண்ணி, பேருந்தில் ஏறி சுமார் 2 மணி நேரம் பயணித்திருப்பேன். அப்போது ஒரு கணம், குற்ற உணர்வால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளான நான், உடனே பேருந்தில் இருந்து கீழே இறங்கினேன்; மறுபடியும் புட்டபர்த்திக்கே திரும்பி வந்து சுவாமியின் திருப்பாதங்களில் விழுந்தேன்! அக்கணம் சுவாமி, அப்போதுதான் அவர் எழுதி முடித்த கடிதம் ஒன்றை என் கையில் வைத்தார்! அதில், " ராஜா! என்னை விட்டுப் பிரிந்து நீ எங்கே செல்ல முடியும்? நீ உடனே என்னிடம் திரும்பி வந்து விடுவாய்!" என்று எழுதியிருந்தார்!! அந்தக் கடிதத்தை முழுதும் படித்துவிட்டு அவரது கால்களில் விழுந்து வணங்கினேன்! அவர் நமது இதயங்களில் வசிப்பவர் ஆவார்! ஒரு திறந்த புத்தகத்தைப் போல நமது எண்ணங்கள் அனைத்தையும் அறிந்தவர் அல்லவா, நம் சுவாமி?
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 456:
திரு. ராஜா ரெட்டி அவர்களின் வார்த்தைகளில் மற்றொரு அனுபவம் இதோ:
ஒரு நாள் ஜாய் ஐஸ்கிரீம் கம்பெனியின் உரிமையாளரான திரு. ஜாவா அவர்கள் (முதல் தடவையாக புட்டப்பர்த்திக்கு வந்து) தரிசன வரிசையில் அமர்ந்திருந்தார்.
அவரது அருகில் சென்ற பாபா அவரது தோளின் மேல் தன் கையை வைத்து, "ஹேய், ஜாவா!" என்று நெருங்கிய நண்பனைப் போல அழைத்தார்! எத்தனையோ நபர்கள் குழுமியிருந்த அந்த இடத்தில் தன்னை மட்டும் பாபா பெயர் கூறி அழைத்த விதம் ஜாவா அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.
ஒரு நாள் மட்டுமே அங்கு தங்குவதாக ஏற்கனவே முடிவு எடுத்திருந்தாலும் அவர் நான்கு நாட்கள் புட்டப்பர்த்தியில் தங்கினார். அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கம் கொண்ட அவர் எந்த பானத்தையும் அருந்தாமல் அந்த நான்கு நாட்களை ஆனந்தமாக அங்கு கழித்தார்! பாபா அவரை இன்டர்வியூவிற்கு அழைத்து அவரது குடும்பப் பிரச்சனைகளை பற்றிப் பேசினார்; அவருக்கு அறிவுரைகள் கூறி அவரை ஆசீர்வதித்து அனுப்பினார். ஆனால் அவரது தீய பழக்கத்தைப் பற்றி ஒரு முறை கூட சுவாமி அவரிடம் பேசவில்லை! அப்படி இருந்தும், சுவாமியின் அருளை அதிகம் பெற விழைந்த ஜாவா, தனது பழக்கத்தை அறவே அகற்றினார். பிறகு அவர் தன் வாழ்க்கையில் ஒருபோதும் மறுபடியும் மது அருந்தவில்லை. அவரது இந்த மாற்றத்தைக் கண்ட உற்றார், உறவினர்களும் சுவாமியின் தீவிர பக்தர்களாக மாறினர்! இதுதான் சுவாமியினுடைய ஈர்ப்பு சக்தியின் மகிமை!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 457:
திரு ராஜா ரெட்டி அவர்கள் விவரித்த மற்றொரு அனுபவம் இதோ:
டாக்டர். சிவ ரெட்டி என்னும் பல் மருத்துவர் எனது நெருங்கிய உறவினர் ஆவார். அவரது மனைவியும் ஒரு பொதுநல மருத்துவராக இருந்தார். அவர்கள் 20 வருடங்கள் தங்களது வாழ்க்கையை நைஜீரியாவில் கழித்தவர்கள். சிவ ரெட்டி அவர்கள் அதிகமாக புகைபிடிக்கும் பழக்கத்தைக் கொண்டவராக இருந்தார். அவர்கள் இருவரும் 1981 இல் இருந்து புட்டபர்த்தியில் வாசம் செய்யத் தொடங்கினர். ஆசிரமத்தில் புகைப்பழக்கம், தடை செய்யப்பட்ட ஒன்றாகும். ஆகவே அவர் கழிப்பறையில் ரகசியமாகப் புகை பிடித்து வந்தார்! பலமுறை முயன்றும் அவரால் அந்த பழக்கத்தை விட இயலவில்லை. அனைத்தையும் அறிந்த சுவாமி, என்னிடம் அவரது குறையை பற்றி கூறியிருந்தார்! ஆனால் சுவாமி அவரிடம் எதுவும் கூறவில்லை!
1985இல் சுவாமி அவரிடம் பேசுவதையும் அவரைப் பார்ப்பதையும் கூட தவிர்த்து விட்டார். ஒரு இரவில் சுவாமி சிவ ரெட்டியின் கனவில் தோன்றினார்; அந்தக் கனவில், சுவாமி சிவ ரெட்டியைப் பூர்ணசந்திரா ஆடிட்டோரியத்தினுள் அழைத்து, பாத நமஸ்காரம் செய்யும் பாக்கியத்தை அளித்தார்! மறுநாள் முதல் அவர் புகைபிடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 458:
திரு.ராஜா ரெட்டி அவர்கள் விவரிக்கும் தனது சொந்த அனுபவம் ஒன்று இதோ:_ நான் அக்காலங்களில் சுவாமியின் காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். எனக்கு மூல வியாதி இருந்த போதிலும் அது எந்த வித பிரச்சனையையும் தரவில்லை; மேலும் அதனால் எனது தியான பயிற்சிக்கு எந்தவித இடையூறும் இருந்ததில்லை. ஆனால், ஒருநாள் காலையில் சுவாமிக்கு அனந்தபுரம் செல்ல வேண்டி இருந்தபோது அன்று அதிகாலை முதல் எனக்கு வலியும் இரத்தப்போக்கும் ஏற்படத் தொடங்கின! ஆகவே நான் சுவாமியிடம் சென்று அவரிடம் எனது நிலைமையைத் தெரிவித்தேன். சுவாமி சிரித்துக்கொண்டே, "இந்த நாள் வரை ( மூலம் இருந்த போதிலும்) நீ ஏன் எந்தவித இன்னல்களுக்கும் ஆளாகாமல் இருந்தாய் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்!" என்று கூறிவிட்டு, எனக்கு விபூதி சிருஷ்டி செய்து கொடுத்தார்! அன்று முதல் இன்று வரை மூல வியாதியின் சுவடுகள் அறவே இல்லாமல் இருக்கிறேன்!!".
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 459:
திரு.ராஜா ரெட்டி அவர்கள் விவரித்த, தனது மனைவியின் அனுபவம் இதோ:
"என் மனைவியும் அவரது பெற்றோர்களும் சீரடி சாய்பாபாவின் தீவிர பக்தர்களாக இருந்தனர். எங்களது திருமணத்திற்கு முன்னர் ஒரு நாள் அதிகாலையில் புட்டப்பர்த்தி யில் என் மனைவியின் கனவில் தோன்றிய சீரடி சாய்பாபா, ஒரு ஜபமாலையை சிருஷ்டி செய்து கொடுத்தார்! என் மனைவியும் பாதநமஸ்காரம் செய்து கொண்டார். அன்று காலையில் சுவாமி எங்களை இன்டர்வியூவிற்கு அழைத்தார். நாங்கள் கீழே அமர்ந்தவுடன், சுவாமி (கனவில் பார்த்த) அதே ஜபமாலையை சிருஷ்டி செய்து என் மனைவிக்கு அளித்தார்! பிறகு சுவாமி என் மனைவியிடம், " என்ன, உனது கனவு நனவாகி விட்டதா?" என்று கேட்டார்!! இதன் மூலம் சத்யசாயியும் சீரடி சாயியும் ஒருவரே என்ற உண்மையை என் மனைவி பரிபூரணமாக உணர்ந்தார்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 460:
1946 இல் ஒரு நாள் புட்டப்பர்த்தியில் சென்னையைச் சேர்ந்த இளம் வயது உள்ள பக்தர் ஒருவருடன் பாபா மதிய உணவு அருந்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் தன்னை மறந்த சமாதி நிலையை அடைந்தார்! அப்போது உணவு பரிமாறிக் கொண்டிருந்த ஒரு பெண்மணியும் பாபாவுடன் இருந்த அந்த இளைஞரும், "அவனுக்கு சப்பாத்தி பரிமாறு! அவனுக்கு கீர் பரிமாறு!!" என்று மராட்டி மொழியில் சுவாமி கூறியதைக் கேட்டனர்! அதுமட்டுமன்றி மேலும் பல இனிப்பு வகைகளின் பெயர்களையும் சுவாமி அப்போது கூறியிருக்கிறார்! சில நிமிடங்கள் கழித்து சுவாமி தன் சுய நினைவை அடைந்த பின்னர் அந்த பெண்மணி , " சுவாமி!நீங்கள் கூறிய எந்த உணவு வகைகளையும் நான் தயார் செய்யவில்லையே? ஆகவே அவைகளை எவ்வாறு இந்த இளைஞருக்கு என்னால் பரிமாற முடியும்?" என்று சுவாமியிடம் கேட்டார்!! உடனே சுவாமி, " இப்போது நான் சீரடிக்கு சென்றிருந்தேன்! அப்போது அங்கிருந்தவர்களுடன் மராட்டி மொழியில் பேசிக்கொண்டிருந்தேன்!" என்றார்! அதன் பிறகு சுவாமி ஒரு சப்பாத்தியையும் ஒரு சில இனிப்புகளையும் சிருஷ்டி செய்து அந்த இளைஞரிடம் அளித்து அவற்றைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு செல்லுமாறு கூறினார்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 461:
தார்வாட் நகரைச் சார்ந்த ஒரு மகான், பிரம்ம சைதன்ய மஹராஜ் அவர்களது சீடர்களில் ஒருவர், பகவான் தத்தாத்ரேயரின் ஆழ்ந்த பக்தராக இருந்தார். இவரது வழிகாட்டுதலின் அடிப்படையில், தத்துவப் பேராசிரியர் ஒருவர், தத்தாத்ரேயர் மற்றும் அவரது தத்துவத்தின் மீது ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இவ்வாறு இருக்கையில், ஒரு நாள் அந்த சாது, பேராசிரியரை அழைத்து, " எனக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. உனக்கு ஒரு ரகசியத்தைக் கூறுகிறேன்! உனது ஆராய்ச்சியின் மையப் பொருளான தத்தாத்ரேயர் இப்போது சதை மற்றும் இரத்தம் கலந்த உடலில் ஸ்ரீ சத்ய சாயி பாபா என்ற பெயரில் புட்டப்பர்த்தியில் இன்று இப்போது உயிருடன் உள்ளார்! ஆகவே நீ அவரிடம் செல்ல வேண்டும் என்பது எனது வேண்டுகோள்! நீ அவரிடம் சென்றால் உனது குறிக்கோள் முழுமையாக நிறைவேறும்!" என்று கூறினார்! அதன்படியே அவர் சுவாமியிடம் வந்த போது, சுவாமி அவரிடம், " இனிமேல் இந்த இடம் தான் உன்னுடைய ' தத்த பீடம் ' ஆகும்!" என்று கூறினார்! இதனைக் கேட்ட பேராசிரியரின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 462:
டாக்டர். வி. டி. குல்கர்னி எனும் பக்தர் 02.11 .1961 அன்று நடந்த நிகழ்வினை பின்வருமாறு விவரித்தார்: "60 வயதான முஸ்லிம் பெண்மணி, பருமா காசிம் (Baruma Kasim) என்பவர், நிமோனியா நோயினால் தாக்கப்பட்டு அவரது இரண்டு நுரையீரல்களும் மிகவும் பழுதடைந்த நிலையில் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவரது நிலைமை மிகவும் மோசமாகவே இருந்தது. நான் சில நோயாளிகளை கவனித்து விட்டு மதியம் நான்கு மணி அளவில் வீடு திரும்பினேன். அந்த பெண்மணியின் மகன் நடு இரவில் என் வீட்டிற்கு வந்து தன் தாயின் நிலைமை மேலும் மோசம் அடைந்து விட்டதாகத் தெரிவித்தான். உடனே மருத்துவமனைக்கு விரைந்த நான் அவரது இதயம் செயலிழந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். உடனே நான் அவருக்கு கோரமைன் என்ற ஊசி மருந்து செலுத்தி விட்டு ஒரு மணி நேரம் கவனித்தேன். எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் இனி என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று வெளிப்படையாகவே அவரது மகனிடம் தெரிவித்தேன். வீடு திரும்பிய நான் உறங்கச் செல்வதற்கு முன்னால் அந்தப் பெண்மணிக்காக சுவாமியிடம் பிரார்த்தனை செய்தேன். மறுநாள் காலையில் நான் மருத்துவமனைக்குச் சென்றபோது தனது படுக்கையில் எழுந்து உட்கார்ந்து இருந்த அந்தப் பெண்மணியை பார்த்து ஆச்சரியமடைந்தேன்! அவரை அணுகி விசாரித்த போது அவர், " கிரீடம் போன்ற அமைப்பில் அடர்ந்த தலைமுடியுடன் இருந்த ஒருவர் இரவில் என் படுக்கைக்கு அருகில் வந்து அமர்ந்தார். பிறகு அவர் என் தலையைப் பிடித்து மெதுவாக சிறிது நேரம் அழுத்தினார். அதன் பிறகு என்னால் எழுந்து உட்கார முடிந்தது!" என்றார்! உடனே நான் எனது பர்ஸைத் திறந்து அதில் இருந்த பாபாவின் படத்தை அவருக்கு காண்பித்த போது அவர்," இவரே தான்! இவரே தான்!!" என்று உரக்கக் கூறினார்!! இந்த பெண்மணி பருமா காசிம் எப்படிப்பட்ட அதிர்ஷ்டம் படைத்தவர்! அவருக்கு பாபாவே மருத்துவராக வந்துள்ளார்!! அத்துடன் அவரது நுரையீரல் தொற்று முற்றிலுமாகத் தொலைந்தது! "
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 463:
13.03.1965 அன்று, நார்வே நாட்டைச் சார்ந்த டைடுமேன் ஜோஹான்சன் சீரடியில் சாய்பாபாவின் சமாதிக்கு அருகில் நின்று கொண்டிருக்கையில், வயதான முதியவர் ஒருவர் அருகில் வந்து ஒரு சிறிய (சத்யசாயி பாபாவின்) போட்டோ மற்றும் விபூதி பொட்டலத்தை அவர் கையில் கொடுத்துவிட்டு, " இப்போது இவர் பாம்பேயில் (அன்றைய மும்பை) இருக்கிறார்! நீ கண்டிப்பாக அவரைப் பார்க்க வேண்டும்!" என்று கூறினார்! உடனே டைடுமேன் மும்பைக்குச் சென்று அங்கே தர்மக்ஷேத்ராவில் சுவாமியை தரிசனம் செய்தார். அப்போது டைடுமேன் பேசுவதற்கு முன்னரே, சுவாமி அவரிடம், " நான் தான் ஒரு முதியவராக உன் முன்னால் தோன்றினேன்!" என்று கூறினார்! இதனைக் கேட்ட டைடுமேன் ஆச்சரியமும் ஆனந்தமும் ஒருங்கே அடைந்தார்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 464:
திருமதி.பதேஜாவும் அவரது மகளும் பெங்களூருவில் இருந்து சீரடி செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது சுவாமி பிருந்தாவனத்திற்கு வருகை புரிந்து இருப்பதை அறிந்த அவர்கள், சுவாமியை தரிசிக்க விரும்பியதால் தங்களது சீரடி யாத்திரையை ஒத்தி வைத்தனர். அவர்கள் சீரடி செல்வதற்கு சுவாமியிடம் அனுமதி பெறலாம் என்ற நோக்கத்துடன் பல நாட்கள் தரிசனத்திற்கு சென்றும், சுவாமி அவர்களிடம் பேசவே இல்லை! இறுதியாக ஒருநாள் தரிசன வரிசையில் பதேஜா அவர்கள் உரத்த குரலில், " சுவாமி! நாங்கள் விடைபெறுகிறோம்! " என்று கூறினார்! இந்த சொற்களைக் கேட்ட சுவாமி, உடனே கஸ்தூரியை அழைத்தார். பிறகு (அவர் மூலம் தனது இல்லத்தில் இருந்து கொண்டுவரப்பட்டவைகளான) ஒரு பட்டுத் துணியையும் ஒரு விபூதி பொட்டலத்தையும் தனித்தனியாக இருவருக்கும் கொடுத்தார்! அந்தத் துணிகளை வைத்து இருவரையும் ரவிக்கை தைத்துக் கொள்ளும்படி கூறினார்! அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த துணிகள் இரண்டும் சீரடியில் சமர்ப்பிப்பதற்காக அவர்கள் வாங்கி வைத்திருந்த துணிகளைப் போலவே இருந்தன! மேலும் அவர்கள் இருவரும் வீடு திரும்பியதற்குப் பிறகு தங்களது பெட்டிகளைத் திறந்து பார்த்த போது, அவர்கள் வாங்கி வைத்திருந்த துணிகள் அங்கே காணவில்லை! அப்போதுதான் அவர்களுக்கு, " சீரடி பாபாவாக அந்த துணிகளை எடுத்துக் கொண்டு சத்திய சாயி பாபாவாக அவற்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்" என்ற புரிதல் ஏற்பட்டது! சீரடி சாயியும் சத்தியசாயியும் ஒருவரே என்ற உண்மையை உணர்ந்த அவர்கள் இருவரும் தங்களது சீரடி யாத்திரையை முழுமையாக ரத்து செய்தனர்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 465:
ஒரு நாள் ஹிந்தி பிரச்சார சபாவின் செயலாளர் பெங்களூரில் தனது நண்பரின் வீட்டிற்கு சென்று இருந்தார். அதே நாளில் சுவாமியும் அந்த வீட்டிற்கு வருகை புரிந்தார். அங்கு குழுமி இருந்த அனைவரும் சுவாமியின் கால்களில் விழுந்து வணங்குவதை இவர் கவனித்தார். ஏற்கனவே மத்தூரில்
இருந்த ஒரு குருவின் ஆழ்ந்த சீடராக இவர் இருந்ததால், " சுவாமியின் கால்களில் நான் விழுந்து வணங்குவது சரியா தவறா?" என்று குழம்பினார்! இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கையில் பாபா இவர் முன்னால் வந்து நின்றார். உடனே ஏதோ ஒரு அனிச்சை செயல் போல அவர் சுவாமியின் பாதங்களில் விழுந்து வணங்கினார்! அவர் எழுந்தபோது சுவாமி அவரது முதுகைத் தட்டி கொடுத்து, "உனது வணக்கம் உண்மையிலேயே மத்துரில் உள்ள உன் குருவை சென்று அடைந்து விட்டது!" என்றார்!! சுவாமியின் தெய்வத்துவத்தையும் அனைத்தும் அறியும் தன்மையையும் உணர்ந்த செயலாளர் இதயபூர்வமாக சுவாமியை நோக்கித் தன் இரு கைகளையும் கூப்பி வணங்கினார்!
ஆதாரம்: திரு. பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 466:
ஒரு நாள் பிரபலமான அறிஞரும் ஒரு துறவியும் ஆன ஒருவர், தான் உலக யாத்திரை மேற்கொள்வதற்கு முன்னால் சுவாமியின் பாதங்களில் விழுந்து வணங்கி விட்டு, " அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் தங்களுடைய பெயரையும் புகழையும் பரப்ப விரும்பும் எனது முயற்சிக்கு சுவாமி அங்கீகாரம் அளித்து அனுக்கிரகிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்! அதற்கு சுவாமி, "எனது பெயரைப் பரப்புவது பற்றி நீ கவலைப்படாதே! முதலில் உன்னுள் இருக்கும் குறைகளை தேடிக் கண்டுபிடித்து அவற்றிலிருந்து முற்றிலும் விடுபட முயற்சி செய்" என்றார்!
விஜயானந்த சுவாமி என்ற ஒரு துறவி, பிரசாந்தி நிலையத்தில் பல நாட்கள் தங்கி இருந்தார். ஒருநாள், சென்னையில் ஏதோ ஒரு நோயினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தனது உறவினர் ஒருவரைப் பார்த்து விட்டு வருவதற்காக சுவாமியிடம் அனுமதி கோரினார். உடனே சுவாமி, " நீ உனது சொந்தங்களுடன் அளவுக்கு அதிகமாகப் பற்று வைத்துள்ளாய்! நீ உண்மையான துறவி அல்ல! ஆகவே துறவி என்ற போர்வையை தூக்கி எறிந்து விட்டு, பாகவதத்தை நன்கு படித்து அதில் வழங்கப்பட்டுள்ள ஒழுக்கங்களையும் அறிவுரைகளையும் முதலில் ஆழமாகப் புரிந்து கொள்!" என்றார்!!
ஆதாரம்: திரு. பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 467:
அப்துல் சத்தார் என்பவருக்கு 1946-ல் கிடைத்த அனுபவம் அவரது வார்த்தைகளில் பின்வருமாறு:
கடலூரில் இருந்து பெங்களூருக்கு பாபா பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் ஒரு மர நிழலில் நிறுத்துமாறு என்னிடம் கூறினார். நான் தான் அவரது காரின் ஓட்டுனராக இருந்தேன். என்னையும் சேர்த்து அந்த காரில் ஆறு பேர் இருந்தோம். மரத்தடியில் ஒரு கம்பளம் விரிக்கப்பட்டு, டிபன் கேரியர்களில் இருந்து உணவுப்பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டன. மற்ற அனைவரும் சேர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்த போது, எனது வழக்கம் காரணமாக நான் சற்று தூரத்தில் தனியாக அமர்ந்தேன். இதனைக் கண்ட பாபா என்னை அருகில் வரச்சொன்னார். உடனே எனது இலையை அங்கேயே விட்டுவிட்டு என் கைகளைக் கழுவிக்கொண்டு பாபாவின் அருகில் சென்றேன். உடனே எனது இலையை எடுத்துக் கொண்டு வந்து அவருக்கு அருகில் அமருமாறு கூறினார். அப்போது அவர் என்னிடம், " இருப்பது ஒரே ஒரு ஜாதி தான்! அதுவே மனித ஜாதி! ஆகவே நாம் அனைவரும் சேர்ந்துதான் உணவு உட்கொள்ள வேண்டும்!" என்றார்! நானும் அவரது அருகில் அமர்ந்து உணவு உண்ட பின்னர், சிறிது தொலைவில் சென்று நின்று கொண்டேன். பாபா என்னை நோக்கி வந்தார். அருகில் இருந்த மரத்தில் இருந்து சீதாப்பழம் ஒன்றை பறித்து என் கையில் கொடுத்தார். அது உடனே ஆப்பிளாக மாறியதை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன்! அவர் அதனை துண்டுகளாக செய்து அனைவருக்கும் கொடுக்கும்படி எனக்கு கட்டளையிட்டார்.
பாபாவின் பெருந்தன்மையையும் சமநோக்கினையும் பார்த்து நான் உண்மையிலேயே வியந்தேன்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 468:
19.05.1946 அன்று பத்மப்பிரியா என்னும் சுவாமியின் தீவிர பக்தைக்கு பெங்களூரைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவருடன் திருமணம் நடந்தது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பாபா, முஹூர்த்ததிற்கு முன்னால் மணமக்களுக்கு மிகவும் புனிதமான பொருளான தாலியை சிருஷ்டி செய்து கொடுத்தார்! அத்துடன் மணமகனான பார்த்தசாரதிக்குத் தனது ஃபோட்டோவை சிருஷ்டி செய்தார்.
பிறகு சில காலம் கழித்து ஏதோ ஒரு தண்டனையாக, பார்த்தசாரதியின் வேலை பெங்களூரில் இருந்து மும்பைக்கு இடமாற்றம் செய்யப்பட்டது! அவர் கணக்கு எழுதியதில் ஏதோ ஒரு தவறு கண்டுபிடிக்கப்பட்டதால், அதற்கு ஈடு செய்யும் வகையில் அவர் ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் என்று அவரது மேல் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்! சுவாமி அவருக்கு அளித்திருந்த ஃபோட்டோவைத் தன் கையில் வைத்துக் கொண்டு, தனக்கு நேர்ந்த இந்த அவமானத்திலிருந்து தன்னைக் காத்து அருளுமாறு சுவாமியிடம் பார்த்தசாரதி வேண்டிக்கொண்டார். ஒரு வாரம் கழிந்த பின்னர், பெங்களூரில் இருந்து இவரது அலுவலகத்திற்கு ஒரு செய்தி வந்தது! அதில், அவர் எழுதிய கணக்கில் குறைவாகக் காணப்பட்ட அந்த பணம் மற்றொருவர் செய்த தவற்றால் வேறு ஒரு வைப்பு கணக்கிற்கு சென்று விட்டதாகத் தெரிய வந்ததால், பார்த்தசாரதியின் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை முற்றிலும் நீக்கிக் கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது!! உடனே பார்த்தசாரதி சுவாமிக்கு மனதார நன்றி கூறினார்!
ஆனால், மற்றொரு நாள் பார்த்தசாரதி ஒரு குதிரைப்பந்தயக் களத்திற்கு சென்றுள்ளார்! அங்கே ஒரு குதிரையின் மீது பணம் கட்டிவிட்டு, சுவாமியிடம், 'அந்த குதிரை வெல்ல வேண்டும்' என்று வேண்டிகொண்டிருக்கிறார்! ஆனால் அவர் அந்தப் பந்தயத்தில் தன் பணத்தை இழந்தது மட்டுமல்ல, சுவாமி அவருக்கு அளித்திருந்த ஃபோட்டோவும் மறைந்து போய்விட்டது!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 469:
திரு. குரு தத், ஐசிஎஸ், அவர்கள் மைசூர் மகாராஜாவினுடைய தனிப்பட்ட செயலாளராக பணியாற்றி உள்ளார். 1930 இல் நடந்த ஒரு விபத்தின் காரணமாக அவரது வலது கை மிகவும் பலவீனமடைந்ததால் கையெழுத்திற்கு பதிலாகக் கட்டை விரல் பதிவு வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது! அக்காலங்களில் அவர் பகவான்
தத்தாத்ரேயரின் பக்தராக இருந்தார்.
அவர் பிருந்தாவனத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மனிதநேயம் மற்றும் நெறிமுறைகளின் மதிப்பினைப் பற்றி உரைகள் பல ஆற்றியுள்ளார். 1970 இல் ஒரு நாள் சுவாமியை தரிசிப்பதற்காக அவர் பிருந்தாவனத்திற்கு வந்தார். சுவாமி தனது சொற்பொழிவை முடித்துக்கொண்டு தனது இருப்பிடத்திற்குச் செல்வதற்காகக் காரினுள் ஏறிக்கொண்டிருந்த அந்த தருணத்தில், குரு தத் அவர்களுடன் ஒரு சில வார்த்தைகள் பேசிவிட்டு அவரது வலது கையை தொட்டார்!
பிறகு ஓரிரு நாட்களில் அவரது வங்கி மேலாளர், ஒரு பேப்பரில் கட்டை விரல் பதிவு இடுவதற்காக அவரை வங்கிக்கு அழைத்த போது, ஏதோ ஒரு உள் உணர்வின் உந்துதலால் எதேச்சையாகப் பேப்பரை வாங்கி கையெழுத்தும் போட்டு விட்டார், வலது கையினால் !! அவரே சற்றும் எதிர்பார்க்கவில்லை! தனது வலது கையின் பலவீனம் 40 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென்று குணமாகிவிட்டதைக் கண்டு ஆச்சரியமடைந்தார் அவர். அப்போதுதான் அவருக்கு சுவாமியின் ஸ்பரிசத்தின் மகிமை முற்றிலும் விளங்கியது! சுவாமியின் ஸ்பரிசத்தினால் கர்ம விமோசனம் அடைந்தார், குரு தத் அவர்கள்!!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 470:
09.05.1970 அன்று மாலையில் வைட் ஃபீல்டில் இருந்து மூன்று கார்களில் சுவாமி மும்பையை நோக்கிப் பயணத்தை தொடங்கினார். சுவாமி முதல் காரில் அமர்ந்திருந்தார்; திரு. கஸ்தூரி அவர்கள் மூன்றாவது காரில் அமர்ந்திருந்தார்.
30 மைல்கள் பிரயாணத்திற்குப் பிறகு கஸ்தூரியினுடைய காரில் ஏதோ ஒரு உலோக சத்தம் கேட்டது! பிறகு அது நின்றுவிட்டது; ஓட்டுநர் கீழே இறங்கி காரில் இருந்து பிரிந்த பாகத்தைத் எடுத்து தன் இருக்கைக்கு அடியில் வைத்தார். பிறகு அந்த கார் மேலும் 40 மைல்கள் ஓடிய பின்னர், மறுபடியும் நின்றது! பிறகு எப்படியோ அந்த காரை ஓட வைத்தார், அதன் ஓட்டுனர். மேலும் 40 மைல்கள் சென்றபின் மறுபடியும் கார் நின்றது!! பிறகு ஓட்டுநர் பானட்டைத் (எஞ்சின் பகுதியின் மேல்மூடி - bonnet)திறந்து அங்கிருந்து ஒரு சிறிய பாகத்தை எடுத்துத் தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்!!
உடனே கஸ்தூரி சுவாமியிடம் ஓடிச் சென்று, "எனது கார் படிப்படியாக தனது பாகங்களை இழந்து வருகிறது, சுவாமி! ஆகவே மற்றொரு காரில் நான் உட்கார அனுமதி அளியுங்கள்!" என்று வேண்டினார்! உடனே சுவாமி அவரை கிண்டல் செய்வது போல, " உனது நிலைமை சர்க்கஸில் வரும் கோமாளியை போல இருக்கிறது! அங்குதான் கோமாளி சைக்கிள் ஓட்டிக்கொண்டு வரும்போது ஒன்றன்பின் ஒன்றாக அதன் பாகங்கள் பிரிந்து விழ, இறுதியில் கோமாளியே கீழே விழுந்து விடுவார்! ஆகவே, நீ கீழே விழும் வரை கவலைப்படாதே! நீ விழுந்த பிறகு உன்னை வேறு ஒரு காரில் ஏறி அமரச் செய்கிறேன்!" என்றார்!! அவ்வளவுதான்!! கஸ்தூரிக்கு வேறு வழி தெரியவில்லை!!
ஆனால் அங்கிருந்து 250 மைல்கள் எந்தவித சிக்கல்களும் இல்லாமல் அந்த கார் ஓடியது!! இரவு 10 மணி அளவில், தார்வாடில் துணைவேந்தர் அட்கே(Adke )அவர்களின் வீட்டை அனைவரும் அடைந்தனர்.
அங்கே சுவாமி கஸ்தூரியிடம், "உன் கார் ஏன் குறும்பு செய்வதை நிறுத்திக் கொண்டது, தெரியுமா?" என்று கேட்டார்! அப்போது மும்பை சமிதியின் தலைவரான திரு. ஜாவா அவர்கள் குறுக்கிட்டு , " சுவாமி! ஓட்டுநர் உங்களது பக்தர்!" என்றார். அதற்கு கஸ்தூரி உடனே , "சுவாமி! காரில் அமர்ந்திருந்த நாங்கள் அனைவருமே சுவாமியின் பக்தர்கள் தான்!!" என்றார்!! சுவாமி சிரித்துக் கொண்டே, "உங்கள் அனைவரையும் விட அந்த கார் தான் உயர்ந்த பக்தர்!" என்றார்!!
பிறகு அந்த கார், மெக்கானிக் கடைக்கு அனுப்பப்பட்டபோது அங்கிருந்த மெக்கானிக், "இந்த காரின் நிலைமையை பார்த்தால், பயணம் செய்த அனைவருமே மிகவும் அதிர்ஷ்டசாலிகள் தான்!! காரின் முன் சக்கரங்களுடன் பிணைக்கப்பட்டு இருந்த கம்பிச்சுருள் தட்டுகள் (ஸ்பிரிங் பிளேட்ஸ்) முற்றிலும் உடைந்து இரண்டு துண்டுகளாக இருக்கின்றன! "என்று கூறினார்!!
பக்தி மிகுந்த கார் சுவாமியின் அருளால் ஓடி இருக்கிறது!
நம்ப முடியாமல் இருக்கிறது அல்லவா ?
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 471:
ஹோவர்டு மர்ஃபெட் அவர்கள் 1965இல் சிவராத்திரி வைபவத்திற்கு ஒரு மாதம் முன்னரே புட்டப்பர்த்திக்கு வருகை புரிந்து இருந்தார். அச்சமயம் ஸ்ரீ சத்ய சாயி பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவராக இருந்த டாக்டர் சீதாராமைய்யா அவர்களை அவர் சந்தித்தார். கிராமப்புற மக்களுக்கு செய்யப்படும் இலவச மருத்துவ சேவையை விவரமாக டாக்டர் எடுத்துக் கூறினார். 90 சதவீத நோயாளிகள் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் பிற மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் அங்கு வருவதாகவும் சுவாமியின் அருளால் அவர்களும் நன்றாக குணமாகிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது ஒரு உதாரணமாக, 30 வயது உள்ள ஒருவரை மர்ஃபெட் அவர்களுக்கு அறிமுகம் செய்வித்தார்; அந்த நபரே பின்வருமாறு அவரது அனுபவத்தை எடுத்துரைத்தார்:
" நான் மும்பையில் ஒரு கம்பெனியில் பணி செய்து கொண்டிருக்கிறேன். அவர்கள் என்னை பயிற்சிக்காக ஒரு வருடம் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பினர். பயிற்சி முடியும் தருவாயில் மிகவும் கடுமையான வயிற்று வலியால் அவதிப்படத் தொடங்கினேன். அங்கே மருத்துவர்கள் என்னை பரிசோதித்து விட்டு மிகவும் முற்றிய நிலையில் குடல் புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடித்தனர். பிறகு மும்பையில் இருக்கும் டாக்டர்களும் அதையே உறுதி செய்தனர்;
மேலும் நிலைமை கைவிட்டுப் போய்விட்டது என்றும் கூறினர். அதனால் என் நண்பர் ஒருவர் மூலம் நான் இங்கு அழைத்து வரப் பட்டேன். எனது நண்பர் பாபாவின் பக்தர் ஆவார் நான் விரும்பாவிடினும் நான்கு நாட்களுக்கு முன்னால் எனது நண்பர் வலுக்கட்டாயமாக என்னை இங்கே அழைத்து வந்தார். ஏதோ ஒரு அறிமுகம் இல்லாத இடத்தில் நான் இறந்து விடுவேனோ என்ற பயத்தில் அவரை நான் கோபித்துக் கொண்டேன். நேற்று முன் தினம் இரவில் எனக்கு ஒரு மிகவும் பயப்படும்படியான கனவு ஒன்று வந்தது. அதில் ஒரு இளைஞர் எனது வயிற்றை அறுத்து குடலை வெளியே எடுத்தார்! அதனை நன்கு சுத்தம் செய்து மறுபடியும் உள்ளே வைத்துவிட்டார்!! காலையில் நான் எழுந்து பார்த்த போது என் படுக்கை இரத்தத்தால் நனைந்திருந்தது! இதனைப் பார்த்து பயந்து போன என் நண்பர், பாபாவின் தரிசனத்திற்காக சென்று அமர்ந்தார். அப்போது பாபா அவரிடம், " நேற்று இரவு நான் அறுவை சிகிச்சை செய்தேன். உனது நண்பரின் கேன்சரை கேன்சல் செய்து விட்டேன்!!" என்று கூறினார்! நேற்று காலை முதல் நான் நலமாகி வருவதை போல் உணரத் தொடங்கினேன். பாபா அவர்கள், இட்லி மற்றும் காபி சாப்பிடுவதற்கு என்னை அனுமதிக்குமாறு டாக்டரிடம் கூறினார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு முற்றிலும் வழக்கமான உணவை உட்கொள்ளலாம் என்றும் எனக்கு கூறப்பட்டது" என்று விவரித்தார்!!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 472:
பாடியாலாவை ஆண்டு வந்த அரசர் குருதத் சிங் அவர்களது பேத்தியான பல்பீர் கவுர் அவர்களுக்கு 1967-ல் அடிவயிற்றுப் பகுதியில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது புற்றுநோய் அடிவயிற்றுப் பகுதி முழுவதும் பரவி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஜிந்து என்னும் குறுநிலப் பகுதியின் அரசியான பல்பீர் கவுரின் மகள் இந்த விஷயத்தைத் தனக்குள் வைத்துக் கொண்டார்!
பிறகு மும்பையில் மற்றொரு அறுவை சிகிச்சை மூலம் பெரிய கட்டி ஒன்று எடுக்கப்பட்டது!
இதன் பிறகும் சிறுநீர் பாதை வழியாக அதிக அளவில் இரத்தம் வெளியேறியதால் மருத்துவர்கள் ஆறு சிறிய குழாய்களைப் பொருத்தினர்! இந்த மிகவும் மோசமான நிலையில் 21 நாட்கள் பல்பீர் கவுர் படுக்கையில் இருந்தார்! மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியபோது அவர் அதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துவிட்டார்! இச்சமயத்தில் அவருக்கு சுவாமியைப் பற்றிய புத்தகம் ஒன்று கிடைத்தது! அதனைப் படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு சுவாமியின் மீது ஒரு நம்பிக்கை பிறந்தது! அவர் தொடர்ந்து படிக்க, அவரது இரத்தப்போக்கு நின்றது! குழாய்கள் அகற்றப்பட்டு ஒவ்வொரு நாளும் உடலின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டது! ஒரு இரவு அவரது கனவில் ஒரு பால்கனியில் தோன்றிய சுவாமி அவரை புட்டபர்த்திக்கு வருமாறு அழைத்தார்! விரைவில் குணமடைந்த அவர் மீண்டும் பஞ்சாபிற்கு சென்றார். பிறகு சில நாட்களில் புட்டபர்த்திக்கு வந்து தரிசன வரிசையில் அமர்ந்தார். அந்த காலகட்டத்தில் இருந்து வந்த வழக்கமாக பால்கனியில் தோன்றிய சுவாமி, பல்பீர் கவுர் அவர்களை சுட்டிக்காட்டி இன்டர்வியூ அறைக்கு வருமாறு அழைத்தார்! அந்த காட்சி, தனக்கு சில நாட்களுக்கு முன்னர் கனவில் தோன்றியதைப் போலவே இருந்ததை உணர்ந்த பல்பீர், மிகுந்த ஆச்சரியமடைந்தார்!! இன்டர்வியூவில் கவுர் ஏதும் பேசுவதற்கு முன்னரே, சுவாமி அவரது அறுவை சிகிச்சைகள் பற்றிய அனைத்து விவரங்களையும் அவருக்கு தோன்றிய கனவின் விவரங்களையும் ஒப்பித்து விட்டார்!! அதன் பிறகு பல்பீர் கவுர் அவர்கள் பிரசாந்தி நிலையத்தில் 20 வருடங்கள் வசித்தார்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 473:
சென்னையைச் சேர்ந்த ஜஸ்டிஸ் ஜி.கே. தாமோதர ராவ் அவர்கள் லயன்ஸ் கிளப்பின் பிரதிநிதியாக சிகாகோவில் அகில உலக மாநாட்டில் பங்கேற்கச் செல்லவிருந்தார். அமெரிக்கா செல்வதற்கு முன்னால் அவர் சுவாமியிடம் ஆசிகள் பெற்றுக் கொள்வதற்காக வந்தபோது, சுவாமி, " நமது தொண்டர்கள் தயார் செய்து கொண்டிருக்கும் விபூதி பொட்டலங்களையும் அகர்பத்தி கட்டுகளையும் நீ உன்னுடன் எடுத்துச் செல்! அவை லாஸ் ஏஞ்சலஸ் நகர பக்தர்களுக்காக தயார் செய்யப்பட்டவை! அவை அந்த ஊர் பக்தர்களை சேர்ந்த அடைந்து விட்டதை உறுதி செய்து கொள்!" என்றார்! சுவாமி தனக்கு ஒரு பணியை அளித்தது குறித்து தாமோதர ராவ் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் சிகாகோவில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் செல்வதற்குத் தேவையான அன்னிய செலாவணி குறித்து அவர் கவலைப்பட்டார். அது மட்டும் அல்லாமல் அவரது அந்த கூடுதலான பயணத்திற்கு சுங்க அதிகாரிகள் அனுமதி தர மாட்டார்கள் என்றும் அவர் யோசித்தார். அவரது எண்ணங்களை உடனே அறிந்த சுவாமி, " உனக்கு எந்தவித சிக்கலும் ஏற்படாது! நீ சிகாகோவில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் வழியாக உனது திரும்பி வரும் பயணத்தை அமைத்துக் கொள். அது உனது சிக்கல்களை தீர்க்கும்!" என்று கூறினார். சிகாகோவிற்கு சென்ற பிறகு தாமோதர ராவ் வானூர்தி அலுவலகத்திற்கு சென்று தனது திரும்பி வரும் பயணத்தை லாஸ் ஏஞ்சலஸ் வழியாக மாற்றித் தருமாறு வேண்டினார். அங்கிருந்து பெண் அலுவலர், தாமோதர ராவ் அணிந்திருந்த மோதிரத்தை பார்த்துவிட்டு, " ஓ! நீங்கள் பாபாவின் பக்தரா?! ஆனால், மன்னிக்க வேண்டும், உங்களது பயணச்சீட்டை மாற்றி அமைக்க முடியாது! உங்களது குரு எப்படி இந்த ஒரு உபாயத்தை உங்களுக்கு வழங்கினார் என்று எனக்கு தெரியவில்லை!" என்றார்!! அவர் உடனே சுவாமியின் பணியை எவ்வாறு செய்து முடிப்பது என்ற கவலையில் ஆழ்ந்தார். ஏனென்றால் மறுநாள் காலையில் அவர் இந்தியாவிற்கு புறப்பட வேண்டும். அன்றைய இரவு அந்த பெண் அலுவலர் இவரைத் தொலைபேசியில் அழைத்து, " வாழ்த்துக்கள்! உங்கள் குரு கூறியபடியே இப்போது நடக்கவிருக்கிறது! தற்போது விமான ஓட்டுனர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியுள்ளது! ஆகையால் உங்களது பயணம் லாஸ் ஏஞ்சலஸ் வழியாக மாற்றப்பட்டுள்ளது!" என்று கூறினார்!
பிரசாந்தி நிலையத்திற்கு திரும்பிய பின்னர், தாமோதர ராவ் அவர்கள், " லாஸ் ஏஞ்சலஸ்ஸில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்!" என்று மர்ஃபெட் அவர்களிடம் கூறினார்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 474:
சுவாமியின் பக்தரான திரு. பி.எஸ் தீக்ஷித் அவர்களது சகோதரியின் இடது மார்பகத்தில் ஒரு கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டாடா மெமோரியல் மருத்துவமனையில் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதனை புற்றுநோய் என்று அறிவித்தனர். ஆகவே உடனே அறுவை சிகிச்சை செய்யுமாறு வற்புறுத்தினர். அடுத்து வரப்போகும் செவ்வாய்க்கிழமை அன்று அறுவை சிகிச்சை செய்ய தலைமை மருத்துவர் ஒப்புக்கொண்டார். அதன் பிறகு செவ்வாய்க்கிழமை ஒரு விடுமுறை நாள் என்று அறிந்த துணை மருத்துவர்கள் அதனை புதன்கிழமைக்கு மாற்றினர். இன்னும் ஒரு சில நாட்கள் இருப்பதை அறிந்த தீக்ஷித் அவர்கள், சுவாமி அச்சமயம் அனந்தபூரில் இருப்பதை தெரிந்து கொண்டு, அவரும் அவரது சகோதரியும் இரயிலில் புறப்பட்டனர். ஒருநாள் காலையில் இருவரும் அனந்தபூரில் சுவாமி தங்கி இருந்த வீட்டை அடைந்தனர். இவர்கள் வந்திருப்பதை யாரும் சுவாமியிடம் தெரிவிக்கவில்லை. அச்சமயம் அங்கே நான் இருந்தேன். தனது குளியல் போன்றவற்றை முடித்துக் கொண்டு வெளியே வந்த சுவாமி, நேராக தீக்ஷித்திடம் சென்று, " எனக்குத் தெரியும்! உனது சகோதரியின் இடது மார்பகத்தில் புற்றுநோய்!! அடுத்த செவ்வாய்க்கிழமை அன்று நிச்சயிக்கப்பட்டிருந்த அறுவை சிகிச்சை, பிறகு புதன்கிழமைக்கு மாற்றப்பட்டது! ஆனால் அது வியாழக்கிழமையே நடைபெறும்!! நான் அங்கு இருந்து அனைத்தையும் பார்த்துக் கொள்வேன்!! எல்லாம் சரியாகிவிடும் கவலை வேண்டாம்!!" என்று கூறினார்!! பிறகு சுவாமி தனது வழக்கமான முறையில் விபூதியை சிருஷ்டி செய்து ஒரு பங்கினை நோயாளியிடம் கொடுத்து அவரை உட்கொள்ள வைத்தார். மீதமிருந்த விபூதியை தீக்ஷித்தின் இடது மார்பில் வைத்து நன்கு தேய்த்தார்!! பிறகு அவரது மார்பில் ஒருமுறை நன்றாகத் தட்டிய பின், " இனி நீங்கள் புறப்படலாம்!" என்றார்! பிறகு அவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை அன்று காலையில் பாம்பே வந்து அடைந்தனர். தீக்ஷித் அவர்கள் புதன்கிழமை அன்று தனது சகோதரியை மருத்துவமனையில் அட்மிட் செய்வதற்காக அழைத்துச் சென்றார். சுவாமி கூறியதைப் போல அறுவை சிகிச்சை வியாழக்கிழமை அன்று நிச்சயிக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை அன்று இரவு படுப்பதற்கு முன்னால் தனது படுக்கையின் விளிம்பில் அமர்ந்து கொண்டிருந்த தீக்ஷித்தின் இடது மூக்கு துவாரத்தில் இருந்து தண்ணீரைப் போன்ற ஒரு திரவம் வெளியே மளமளவென்று கொட்ட ஆரம்பித்தது! ஆனால் இந்த ஊற்றைத் தவிர வலி ஏதும் அவருக்கு இல்லை! இரண்டு நிமிடங்களில் அவரது பைஜாமா முழுவதுமாக நனைந்ததால் அவர் தன் உடையை மாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டது! சற்று நேரத்தில் அந்த திரவப் போக்கு முற்றிலுமாக நின்று விட்டது! உடனே தீக்ஷித்தும் அவரது மனைவியும் ஆச்சரியமடைந்தனர். ஜலதோஷம் இல்லாவிடினும் ஒரு துவாரத்தில் இருந்து மட்டும் அளவுக்கு அதிகமான திரவப்போக்கு ஏற்பட்ட நிகழ்வு அவர்களுக்கு ஒரு புதிராகவே இருந்தது. ஆயினும் அவர்களது எண்ணங்கள் எல்லாம் மறுநாள் நடைபெறவிருக்கும் அறுவை சிகிச்சை மேல் இருந்ததால் அவர்கள் இதனை மறந்து விட்டனர். மறுநாள் காலை 9 மணி அளவில் தீக்ஷித்தின் சகோதரி, ஆபரேஷன் தியேட்டருக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். பிறகு ஒரு அரை மணி நேரத்தில், மருத்துவர் ஒருவர் வெளியே வந்து, எக்ஸ்ரேயில் அப்பட்டமாகத் தெரிந்த அந்தக் கட்டி இப்போது எங்கள் கண்களுக்குப் புலப்படவில்லை! கட்டி இருந்த இடத்தில் இப்போது தண்ணீரைப் போன்ற திரவம் மட்டுமே தென்பட்டது! புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை! நாங்கள் அந்த திரவத்தை வெளியேற்றி விட்டோம்! புற்றுநோய் அறவே இல்லை என்று
நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் ஆகவே, பயாப்ஸி செய்வதற்காக அந்த திரவத்தை நாங்கள் உறைய வைப்போம்" என்று கூறினார்.
வெள்ளிக்கிழமை காலையில் பயாப்ஸி ரிப்போர்ட்டை பற்றி அறிந்து கொள்வதற்காக தீக்ஷித் அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அதே மருத்துவர் மீண்டும் இவரை சந்தித்து, " அனைத்தும் சரியாகவே இருக்கிறது! புற்றுநோய்க்கான தடயங்கள் சிறிதும் இல்லை! எப்படியோ அந்தப் புற்றுநோய் மாயமாகிவிட்டது!!" என்று கூறினார்! அனைத்து பரிசோதனைகளிலும் தான் இருப்பதை உணர்த்திய புற்றுநோய், விவரிக்க முடியாத முறையில் முற்றிலும் மறைந்து போனது குறித்து குழுவில் இருந்த அனைத்து மருத்துவர்களும் வியப்பில் ஆழ்ந்தனர்! ஆனால் தீக்ஷித் வியப்படையவில்லை! மாறாக, அவரது இதயம், மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவரான சுவாமிக்கு அவர் தெரிவிக்க விழைந்த நன்றி உணர்வினால் நிரம்பி வழிந்தது!
இதன் நடுவில், தனது சகோதரியின் கணவர் அறுவை சிகிச்சைக்கு முன்னால் டெல்லியில் இருந்து வந்து சேர்ந்து விட்டார். உடனே அவர் பிரசாந்தி நிலையத்திற்கு விரைந்தார். மந்திரத்திற்கு முன்னால் தரிசனத்திற்காக காத்து நின்றார்! சற்று நேரத்தில் பால்கனியில் தோன்றிய சுவாமி, சிரித்துக் கொண்டே அவரை கூப்பிட்டு, "அங்கே ஒன்றும் இல்லை! வெறும் தண்ணீர் தான்!! நல்லது! இனி உன் மனைவி குணமாகி விட்டதால் நீ மகிழ்ச்சியுடன் இருக்கலாம்!" என்றார்! எப்படிப்பட்ட ஒரு வினோதமான அரிய மருத்துவ முறை? ஒருவரை மற்றொருவர் மூலம் குணப்படுத்துவது என்பது??
ஆதாரம்: திரு. ஹோவர்டு மர்ஃபெட் அவர்கள் எழுதிய , " மேன் ஆஃப் மிராக்கிள்ஸ் (Man of Miracles) " என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 475:
1960-களின் தொடக்கத்தில் திரு.கே.ஆர்.கே. பட் என்னும் பக்தர் எல்ஐசி யில் பிரிவு மேலாளராகப் பணிபுரிந்த போது, அவரின் கீழ் பணி புரியும் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட ஒரு லஞ்ச ஊழல் வழக்கு ஒன்று போடப்பட்டது. இந்த வழக்கு ஒரு பதவி உயர்வு தொடர்பான விஷயத்தில் நடந்ததாக மொட்டை கடிதங்கள் மூலம் மேல்-அலுவலக விசாரணையின் விளைவாகத் தொடரப் பட்டதாகும்.
இதில் பலர் சம்பந்தப்பட்டிருந்ததும், இதன் முதற்காரண கர்த்தாவாக திரு. பட் அவர்களின் சுருக்கெழுத்தாளர் தான் என்றும் கண்டறியப்பட்டது. தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த சுருக்கெழுத்தாளரோ , தான் எதுவும் தனியாக செய்யவில்லை என்றும் திரு.பட் அவர்களின் அறிவுறுத்தல்களை மட்டுமே பின்பற்றியதாகவும் அவர் மீது பழியை சுமத்திவிட்டார்! ஆகவே பட் அவர்கள் நிரபராதியாக இருந்த போதிலும் அவரும் இந்த வழக்கினுள் இழுக்கப்படுவார் எனத் தோன்றியது! தனது அப்பாவித்தனத்தை நிரூபிக்க எந்த ஒரு வழியும் அவருக்கு தோன்றாததால் அவர் கவலையுறத் தொடங்கினார். இறுதியில் அனைத்து விசாரணையும் ஒரே ஒரு கேள்விக்கான பதிலை எதிர்பார்த்து இருந்தது. ஒரு பதிவு செய்யப்பட்ட கடிதத்தை திரு.பட் அவர்கள், (அலுவலகத்தில் இருந்தபோது, தான் சுயமாக கையெழுத்திட்டு வாங்கினாரா? என்பதுதான் அந்தக் கேள்வி!சுருக்கெழுத்தாளரோ, " பட் அவர்கள்தான் வாங்கினார்" என்பதில் உறுதியாக இருந்தார்! ஆனால், "தான் வாங்கவில்லை" என்பதில் திரு. பட் அவர்கள் சந்தேகமற்ற நிலையில் உறுதியாக இருந்தார்! ஆனால் அந்தக் கடிதம் சம்பந்தப்பட்ட தபால் அலுவலகத்தின் ஆவணம் (acknowledgement) மூலம் அன்றைய தேதியில் யார் கையெழுத்திட்டு வாங்கி இருக்கிறார் என்று கண்டு கொள்ள முடியும்படி இருந்திருக்க வேண்டும்! ஆனால் பல நாட்கள் முன்னால் நடந்த சம்பவம் ஆதலால் அந்த பேப்பரை தேடுவது இயலாத காரியம் என்று அந்த போஸ்ட் மாஸ்டர் தெரிவித்தார்! ஆறு மாதங்களுக்கு மட்டுமே அந்த ஆவணங்கள் வைக்கப்படும் என்றும் பிறகு அவை அனைத்தும் அழிக்கப்படும் என்றும் அவர் கூறிவிட்டார்! இந்த காலகட்டத்தில் திரு. பட் அவர்களின் கனவுகளில் சுவாமி தோன்ற ஆரம்பித்தார்! ஒரு கனவில், ஆவணங்கள் அனைத்தும் தபால் அலுவலகத்தில் பத்திரமாக உள்ளதாக சுவாமி பட் அவர்களிடம் தெரிவித்தார்! இறுதியில் போஸ்ட் மாஸ்டரே இதனை ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று!! தனக்கு முன்னால் இருந்த போஸ்ட் மாஸ்டர் ஆவணங்களை அழிக்காமல் விட்டு விட்டதாகவும் அவற்றை அழிக்க தனக்கு நேரமும் வசதியும் இல்லை எனவும் அவர் சாக்கு கூறினார்!
அவை தேதி வாரியாக அடுக்கி வைக்கப்படாததால் அவற்றினுள் தேடிக் கண்டுபிடிப்பது ஒரு அசாத்தியமான வேலையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்!! அன்று இரவு சுவாமி மறுபடியும் பட் அவர்களின் கனவில் தோன்றினார்! "தபால் அலுவலகத்தில் யாராவது ஒருவரை இதற்கென நியமித்து ஆவணத்தைத் தேடினால், தேவையான ஆவணம் கிடைத்துவிடும்" என்று சுவாமி கூறினார்!!
இந்த யோசனையை தபால் அலுவலக மேலதிகாரிகளை மிகுந்த சிரமத்துடன் திரு.பட் அவர்கள், எப்படியோ ஒப்புக்கொள்ள வைத்தார்! ஆகவே தேடுவதற்காக உடனே ஒரு எழுத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டார்! அந்த எழுத்தர் முதன்முதலாக ஏதோ ஒரு ஆவணக் கட்டினை எடுத்து, அவற்றினுள் தேட ஆரம்பித்தார். அந்த கட்டத்தில் பட் அவர்கள் என்னிடம் கூறிய வார்த்தைகள் இதோ: "அற்புதங்களிலும் அற்புதம்!! நான் தேடிக்கொண்டிருந்த அந்த ஆவணம் முதலாவது ஆவணக்கட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது!!" தனது மேலதிகாரியான திரு. பட் அவர்களின் சார்பாக இந்த சுருக்கெழுத்தாளரே தன் கையெழுத்திட்டு அந்த பதிவுக் கடிதத்தை வாங்கியிருப்பது நிரூபணமானது!! இதன் மூலம், பட் அவர்களின் மேலிருந்த சந்தேகம் மறைந்தது!! அந்த சுருக்கெழுத்தாளரும் அவருடன் சேர்ந்து கூட்டுக் களவாணித்தனம் செய்த மற்ற ஊழியர்களும் ஒட்டுமொத்தமாக குற்றம் சாட்டப்பட்டு, அதற்கான அபராதங்கள் அவர்களுக்கு விதிக்கப்பட்டன!!
ஆதாரம்: திரு. ஹோவர்டு மர்ஃபெட் அவர்கள் எழுதிய , " மேன் ஆஃப் மிராக்கிள்ஸ் (Man of Miracles) " என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 476:
நியூ யார்க் நகருக்குத் திரும்பிச் செல்வதற்கு முன்னால் திரு.மோகன்ராம் அவர்களும் அவரது மனைவி கீதா அவர்களும் சுவாமியை சந்தித்தனர். அப்போது சுவாமி மோகனுக்கு நான்கு விபூதி பொட்டலங்களையும் கீதாவிற்கு ஒரு பொட்டலத்தையும் கொடுத்தார். அந்த ஒரு பொட்டலத்தை அவரது பர்ஸில் வைத்துக் கொள்ளுமாறு சுவாமி கீதாவிடம் கூறினார். பிறகு அவர்களது திருமண நாளன்று நியூயார்க்கில் ஒரு உணவகத்திற்குச் சென்று விட்டு பிறகு இருவரும் ஒரு கலையரங்கிற்குச் சென்றனர். அங்கே கீதா அவர்கள் ஓய்வறைக்குச் சென்றபோது, அங்கு சுத்தம் செய்து கொண்டிருந்த ஆப்பிரிக்க பெண்மணி ஒருவர், " நீங்கள் இந்தியரா? உங்களுக்கு சாயி பாபாவை நன்கு தெரியுமா?" என்று கேட்டார்! அதற்கு கீதா, "ஆம்" என்றார். அப்போது அந்தப் பெண்மணி, " நீங்கள் பாபாவினுடைய வெள்ளைப் பொடி அடங்கிய பொட்டலம் ஒன்றை எனக்குக் கொடுக்க முடியுமா?" என்று கேட்டார்!! உடனே தனது பர்ஸில் இருக்கும் விபூதியை நினைவில் கொண்டு, "அதை வைத்து நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கீதா கேட்டார்! உடனே அந்தப் பெண்மணி, " மேடம்! எனது மகளுடைய இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துவிட்டன! நான் ஒரு ஏழை; ஆகையால் அவளுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை என்னால் பெற்றுத் தர முடியாது! நேற்று இரவு நான் சர்ச்சுக்கு சென்றிருந்தேன். அங்கே கிறிஸ்துவின் முன்னாள் மண்டியிட்டு அழுது வேண்டினேன். அப்போது ஒரு மனிதர் என்னிடம் வந்து, " என் பெயர் 'சாயி பாபா' . நாளை இரவில் நீ கலையரங்கில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது ஒரு பெண்மணியை சந்திப்பாய்! அவளது பர்ஸில் ஒரு வெள்ளைப் பொடி அடங்கிய பொட்டலம் உள்ளது! அவளிடம் இருந்து அதனைக் கேட்டு பெற்றுக்கொள்! அந்தப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் நன்றாக கலக்கி உன் மகளை அருந்தச் செய்!" என்றார்!!" என்று கூறி முடித்தார்! இதனை கேட்ட கீதா, "சாயிராம்!" என்று ஆனந்தமும் ஆச்சரியமும் கலந்த குரலில் உரைத்து விட்டு, தனது பர்ஸில் இருந்த பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தார்! இதனைப் பெற்றுக் கொண்ட அந்தப் பெண்மணி கண்ணீர் வடித்துக் கொண்டே சென்றார்!! அடுத்த வருடம் தரிசன வரிசையில் பிரசாந்தி நிலையத்தில் கீதா அமர்ந்து கொண்டிருந்தபோது, சுவாமி அவரை நோக்கி, "அந்த ஆப்பிரிக்கச் சிறுமி, நீ அளித்த விபூதி பொட்டலத்தின் உதவியால் தனது சிறுநீரகங்கள் இரண்டும் பூரண குணமடையப்பெற்றாள்!" என்று கூறினார்!!
இவ்வாறு ஞாபகப்படுத்திய சுவாமியின் சொற்களை கேட்ட கீதாவிற்குத் தூக்கி வாரி போட்டது! அவரது விபூதி பொட்டலத்தின் மூலம் தனக்கு சுவாமி சிறப்பு செய்ததாக கீதா மோகன் அவர்கள் உணர்ந்தார்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 477:
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரைச் சேர்ந்த திரு. எஸ். ஏ ஃபாதர் என்னும் நபர் 1976 இல் புட்டபர்த்திக்கு வந்தார். அங்கு ஒரு மாதம் தங்கிய அவர், சுவாமியினுடைய சரிதம், போதனைகள் மற்றும் அற்புதங்களை பற்றி நன்கு கற்று அறிந்தார். சுவாமியினுடைய ஆசிகளுடன் அவர் திரும்பிச் செல்லும்போது, சுவாமியுடைய புத்தகங்கள் மற்றும் சுவாமி அவருக்கு அளித்த விபூதி பெட்டகம் ஒன்றையும் தன்னுடன் எடுத்துச் சென்றார். மேலும் அமெரிக்காவில் திருமதி. எல்சி கோவன் அவர்களை அவர் சந்தித்தபோது, சுவாமி எல்சி கோவனுக்கு அளித்திருந்த, இடைவிடாது அமிர்தம் ஊறிக் கொண்டிருக்கும் வெள்ளிப் பேழையிலிருந்து சிறிதளவு அமிர்தத்தையும் அவர் எடுத்துச் சென்றிருந்தார். மிகவும் துன்பத்தில் இருப்பவர்களுக்கு இந்த அமிர்தத்தின் சொட்டுக்கள் மூலம் அவர்கள் குணமடைய உதவி வந்தார். அவரே விவரிக்கும் ஒரு அனுபவம் இதோ:
" இந்தியாவிலிருந்து டர்பன் நகரில் வந்து நான் இறங்கிய உடனே யாரோ ஒரு நபர் என்னை தொலைபேசியில் அழைத்து, "மிஸ்டர் ஃபாதர்! சாயி பாபாவின் பொடியை வைத்து நீங்கள் பல நபர்களை குணப்படுத்தியதாக கேள்விப்பட்டேன். நான் உங்களைத் தொடர்பு கொள்ள மிகவும் முயன்று வந்தேன் " என்றார். அதற்கு நான் ,"இந்தியாவில் இருந்து இங்கே நான் வந்து ஒரு மணி நேரம்தான் ஆகிறது. நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? தயவு செய்து கூறுங்கள்!" என்றேன். உடனே அவர், "எனது சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார்; எனக்கு நாளை மறுநாள் நடக்கவிருக்கும் அறுவை சிகிச்சைக்கு முன்னால் எடுத்துக் கொள்வதற்கு மருத்துவர் இரண்டு மாத்திரைகளை கொடுத்துள்ளார். எனக்கு நீரிழிவு நோய் இருப்பதால் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. கடந்த இரண்டு நாட்களாக நான் சிறிதும் சிறுநீர் கழிக்கவில்லை! இந்த நிலையில் நீங்கள் எனக்கு உதவ முடியுமா என்று வியப்பில் நான் உள்ளேன்!" என்று கூறினார். நான் விமானப் பயண அயற்சியில் இருந்ததாலும் அவர் இருந்த ஊருக்கான பயணம் 5 மணி நேரம் ஆகும் என்பதாலும் நான் சிறிது யோசித்தேன்; சுவாமியே நினைத்துக் கொண்டேன்! அப்போது அமிர்தம் எனக்கு ஞாபகம் வந்தது! உடனே நான் அவரிடம், " சாயி பாபாவை பற்றி உங்களுக்கு நன்கு தெரியுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்," இல்லை! ஆனால் அவரது பெயரைக் கேள்விப்பட்டு இருக்கிறேன்!" என்றார். உடனே அவரிடம்," சரி, நீங்கள் இப்போது உங்கள் போன் ரிசீவரை கீழே வைத்தவுடன் நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து வணங்கி, "ஓ, பாபா! இந்தத் துன்பத்திலிருந்து என்னை விடுவிப்பாயாக" என்று வேண்டுங்கள்!" எனக் கூறிவிட்டு நான் ஒரு சிறிய புட்டியைத் திறந்து ஒரு சொட்டு அமிர்தத்தை எடுத்து எனது போன் ரிசீவரின் மீது (சுவாமியிடம் அவருக்காக வேண்டிக் கொண்டே) தடவினேன். பிறகு 20 நிமிடங்கள் கழிந்தவுடன் அவரிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பில், "மிஸ்டர் ஃபாதர், நான் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்! என்னால் இப்போது சிறுநீர் கழிக்க முடிந்தது! சிறுநீருடன் மண்துகள்கள் போன்றவையும் வெளியேறின! நான் சுகமாய் இருப்பதாக உணர்கிறேன்! எனது நன்றிகளை உங்களது பாபாவிடமும் தெரிவியுங்கள்!!" என்றார்! மேலும் பதினைந்து நிமிடங்கள் கழித்து மற்றும் ஒரு தொலைபேசி அழைப்பில் அவர், " அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்து எனது மருத்துவருக்கு நான் ஏன் திடீரென்று செய்தி அனுப்பினேன் என்று என்னிடம் கோபமாகத் தொலைபேசியில் பேசினார்! அவ்வாறு நான் ஒன்றும் மெசேஜ் அனுப்பவில்லை என்று உண்மையைக் கூறினால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை! நீ இனிமேல் என்னிடம் வராதே என்று கோபமாக கூறிவிட்டார்! நான் இப்போது குழம்பிப் போயிருக்கிறேன் ! "என்றார்! உடனே நான் நிலைமையைப் புரிந்து கொண்டு அவரிடம், "ஆனால் இதில் எனக்கு எந்தவித குழப்பமும் தெரியவில்லை! உங்களுக்கு இனிமேல் அறுவை சிகிச்சை தேவையில்லை என்பது பாபாவின் சங்கல்பம் ஆகிவிட்டது! (ஆகவே இது அவரது திருவிளையாடலாக இருக்கும்) என்று விளக்கினேன். நாளடைவில் அந்த மனிதரும் சுவாமியின் தீவிர பக்தராக மாறிவிட்டார்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 478:
நியூ யார்க்கை சேர்ந்த 22 வயது ஆகியிருந்த ஜான் கில்பர்ட் என்பவர், ஹாட்கின்ஸ் நோயினால் பீடிக்கப்பட்டிருந்தார். அது ஒரு வகையான புற்றுநோய் ஆகும். 1969இல் அவர் அதற்கான கீமோதெரபி எடுத்துக் கொண்டார். பிறகு 1972ல் மீண்டும் தோன்றிய அந்த நோய் மறுபடியும் 3 வருடங்கள் கழித்துத் தோன்றியது! அப்போது சுவாமியை பற்றிக் கேள்விப்பட்ட அவர், சுவாமியைப் பற்றிய சில புத்தகங்களையும் படித்தார். ஆனால் அவற்றை, புரளி எனப் புறக்கணித்தார்!
1975 வரை தெரபி எடுத்துக் கொண்டார். அக்குபஞ்சரும் முயற்சி செய்தார். ஆனால் எந்த பலனும் கிட்டவில்லை! 1976 இல், தன் தாயுடன் பெங்களூரு வந்த கில்பர்ட், ஒரு நிகழ்வினை நேரடியாகக் காணும்படி நேர்ந்தது. ஒரு ஏரியில் சிறுவன் ஒருவன் மூழ்கி விட்டான். அவனை மீட்டெடுத்து அவனது தந்தை அவனை தலைகீழாகத் தொங்கவிட்டார்; நீரை உறிஞ்சும் முறையையும் கையாண்டனர்; ஆனால் எதுவும் அவனுக்கு உதவவில்லை. அவனது தாய் அடக்க முடியாதபடி அழத் தொடங்கினார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த கில்பர்ட், பாபாவிடம் மனதில் ஒரு சவால் விட்டார் - " பாபா! நீங்கள் நிஜமாகவே கடவுள் என்றால், இந்த சிறுவனை நீங்கள் உயிர்ப்பிக்க வேண்டும்!" என்று!!
அடுத்த நொடியிலேயே அந்த சிறுவன் உயிர் பிழைத்து விட்டான்!
ஆனால் பிறகும் அவர் சுவாமியை முழுமையாக நம்பவில்லை! பிறகு தன் தாயின் வற்புறுத்தலினால் 1976-ல் அவர் தன் தாயுடன் புட்டபர்த்திக்கு சென்றார். சுவாமி அவரது தாய்க்கு ஒரு மோதிரம் சிருஷ்டி செய்து கொடுத்தார். விபூதி அளிக்கும் போது, தாயிடம், "உனக்கு என்ன வேண்டும்?" என்று சுவாமி கேட்டார். அதற்கு அவர், " என் மகன் மீண்டும் நம்பிக்கையுடன் கீமோதெரபி சிகிச்சையைத் தொடர வேண்டும்" என்று கேட்டார்! மறுநாள் சுவாமி கில்பர்ட்டுக்கு விபூதி சிருஷ்டி செய்து அளித்தார். நியூயார்க்கு திரும்பிய பிறகு மற்றும் ஒரு முறை கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டார். ஆனால் மறுபடியும் அந்த நோய் அவரைத் தாக்கியது! கோடை வகுப்புகள் நடக்கும் சமயம் பெங்களூருக்கு சென்றார் கில்பர்ட். அந்த காலகட்டத்தில் கில்பர்ட் வெறும் எலும்பு கூடாக இளைத்து விட்டார். அப்போது அவரையும் அவரது தாயையும் சுவாமி இன்டர்வியூவிற்கு அழைத்தார்.
முதல் தடவையாக அப்போது கில்பர்ட், " பாபா! இனிமேல் நான் எந்தவித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. நீங்கள் என் மீது உங்கள் தயையைக் காட்டி, எனக்கு ஏதாவது ஒரு வழிமுறையைக் காண்பியுங்கள் " என்று தன் வாயைத் திறந்து சுவாமியிடம் வேண்டினார்! உடனே சுவாமி தன் கையைச் சுழற்றி, 20 மாத்திரைகள் அடங்கிய ஒரு பாட்டிலை சிருஷ்டி செய்தார்! அவரிடம் அதைக் கொடுத்து, "தினமும் ஒரு மாத்திரை மட்டும் இரவில் எடுத்துக்கொள்! நான் உனது கேன்சரை கேன்சல் செய்கிறேன்!!" என்றார்!!
20 மாத்திரைகளை அவர் எடுத்து முடிப்பதற்கு முன்னரே புற்றுநோய் அவரை விட்டு முற்றிலுமாக விலகியது! அவர் பரிசோதனைகளுக்குச் சென்றபோது புற்றுநோயின் ஒரு சிறிய சுவடு கூட மருத்துவர்களின் கண்களுக்குத் தென்படவில்லை!!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் ஒன்று" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 479:
இந்தியா, ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தில் இருந்த ஒரு காலகட்டம் : அப்போதைய அரசு, இந்தியாவில் இருந்த ஆற்றல் மிக்க இளைஞர்கள் சிலரைத் தேர்வு செய்து அவர்களை தொழில்நுட்ப பயிற்சிக்காக இங்கிலாந்துக்கு அனுப்பியது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் அஸ்ஸாமைச் சேர்ந்த கொகோய் ( Gogoi ) என்னும் இளைஞரும் ஒருவர் . அவர் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவராதலால் அவர் ஒரு சிறிய இடத்திலேயே வாசம் செய்து கொண்டு பயிற்சியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். அப்போது இரண்டாவது உலகப்போர் தொடங்கியது! ஜெர்மானியர்கள் தொடர்ந்து பிரிட்டன் மீது குண்டு மழை பொழிந்து வந்தனர். அச்சமயம் பிரிட்டனில் விமானத் தாக்குதல் காப்பாளர்கள் (ஏர் ரெய்டு வார்டன்ஸ்) சைரன் ஒலித்தவுடன் பொதுமக்களை பதுங்கு குழிகளில் ஒதுங்குவதற்கு உதவி புரிந்து வந்தனர். இக்கட்டான இந்த தருணத்தில், அனைத்தையும் இறைவன் பால் விட்டுவிட்டார், இந்த இளைஞர், கொகோய்! அபாய சங்கு ஒலித்த பின்னரும் அவர் தனது அறையிலேயே ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டார்; பதுங்கு குழிகளுக்குச் செல்லப் போவதில்லை என்று அவர் முடிவு எடுத்தார். ஒருமுறை அவ்வாறு அபாய சங்கு ஒலித்தபோது அவர் தனது வீட்டை விட்டு நகரவில்லை! சுற்றுப்புறம் இருந்த மற்ற அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் சென்று விட்டனர். அப்போது அவரது வீட்டின் கதவு தட்டப்பட்டது! ஆனால் கதவினை அவர் திறக்கவில்லை! அப்போது " கதவைத் திற! நீ உள்ளே இருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்! நான் ஒரு விமானத் தாக்குதல் காப்பாளர்! " என்று வெளியில் இருந்து ஒரு குரல் ஒலித்தது!! அப்படியும் அவர் கதவைத் திறக்காததால், காப்பாளர் கதவை உதைத்துத் திறந்தார்! இந்த இளைஞரை அவர் தோள்பட்டையைப் பிடித்து தள்ளிக் கொண்டு சென்று பதுங்கு குழிக்குள் தங்க வைத்தார்! சற்று நேரத்தில், அருகில் குண்டு மழை பொழிந்தது! கொகோய்யின் வீடு தரைமட்டமானது!
கொகோய், அந்தக் காப்பாளருக்கு நன்றி சொல்ல அவரைத் தேடினார், ஆனால் அவர் கிடைக்கவில்லை! ஆதலால் அவர் இந்தத் தாக்குதலில் மாண்டு போயிருக்கலாம் என்று கொகோய் நினைத்தார்.
பிறகு தனது பயிற்சிகளை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பிய கொகோய், பல வேலைகளில் தன்னை அறவழியிலேயே அர்ப்பணித்துக் கொண்டார். இறுதியில் ஒரு கூட்டுறவுத் துறையின் சீனியர் ஆபீசராக ஓய்வு பெற்றார். அவர் மும்பையில் இருந்தபோது, சுவாமியின் ஏழை எளிய மக்களுக்கான தொண்டுகள் பலவற்றைப் பற்றி கேள்விப்பட்டார். பிறகு சுவாமி தர்மக்ஷேத்ராவிற்கு வந்தபோது ஒரு ஆவலில் ஆவலின் உந்துதலால் சுவாமியைப் பார்ப்பதற்காக அங்கு சென்றார். அங்கே கூடி இருந்த கூட்டத்தின் அளவைப் பார்த்து வியந்து போனார், கொகோய்! அந்த கூட்டத்தின் கடைசியில் அவர் நின்று கொண்டிருந்தார். சற்று நேரத்தில் சுவாமி தரிசனம் அளிப்பதற்காக வெளியே வந்தார். தொலைவிலிருந்து கொகோய் சுவாமிக்கு வணக்கங்கள் தெரிவித்தார். சில நொடிகளில் சேவாதல தொண்டர்கள் சிலர் அவரை அணுகினர்! பிறகு 'இவர்'தான் என்று உறுதி செய்த பிறகு ஒரு தொண்டர் இவரிடம், " சுவாமி உங்களை அழைக்கிறார்!" என்றார்! உடனே மிகுந்த ஆச்சரியத்தின் உச்சத்தில் கொகோய், அவர்களைப் பின்தொடர்ந்தார்! அவர் முதல் வரிசையில் அமர்த்தப் பட்டார்! சுவாமி சிரித்துக் கொண்டே இவரிடம் வந்து, "உனக்கு ஞாபகம் உள்ளதா? ஜெர்மானிய விமானத் தாக்குதலின் போது காப்பாளர் ஒருவரால் நீ காப்பாற்றப்பட்டாய்!" என்றார்!! உடனே அவர், "ஆமாம், சுவாமி! எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது! அவர் என் உயிரை காப்பாற்றினார்! ஆனால் தன்னுயிரை அவர் இழந்துவிட்டார்!" என்று, 35 வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வினை நினைவு கூர்ந்தார்!! அப்போது சுவாமி, " அந்தக் காப்பாளர் இறக்கவில்லை! நான் தான் அந்த காப்பாளர்!! உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் தான் காப்பாளரின் சீருடையில் வந்தேன்!! என்னை உற்று கவனித்தால் நீ கண்டு கொள்வாய்!!" என்றார்!! கொகோய், சுவாமியை உற்று நோக்கிய பின்னர், தனது காப்பாளரை அடையாளம் கண்டு கொண்டார்! கொகோய் தங்கியிருந்த இடம், அவரது சிறிய அறை ஆகியவற்றை சுவாமி அவரிடம் விவரித்தார்! பிறகு அவரிடம், "நீ இனிமேல் மீதமுள்ள உனது ஆயுளை பிரசாந்தி நிலையத்தில் தங்கி செலவழிப்பாயாக!" என்றார்! அதன்படியே அவர் பிறகு பிரசாந்தி நிலையத்தில் தனது எஞ்சிய காலத்தைக் கழித்து ஒரு நிறைவான வாழ்வினை அடையப் பெற்றார்.
(காப்பாளராக வந்த போது சுவாமியினது உடலின் உண்மையான வயது 15 ஆக இருந்திருக்கும்!)
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 480:
காவல்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றிய திரு. கிருஷ்ணன் அவர்கள் தனது அனுபவம் ஒன்றை அவரே பின்வருமாறு விவரித்துள்ளார்:
" 1955இல் நான் போக்குவரத்து ஆய்வாளராக திருநெல்வேலியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஒருநாள் காலையில் தனது ஜீப்பில் என்னைப் பார்க்க வந்த என் நண்பர், "சென்னைக்கு வந்துள்ள சத்ய சாயி பாபாவைப் பார்க்க நான் சென்று கொண்டிருக்கிறேன். நீயும் என்னுடன் வர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அலுவலகத்தில் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணிக்கு, உரிய நேரத்திற்குள் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நானும் அவருடன் பயணித்தேன். நாங்கள் சென்னையைச் சென்றடைந்த நேரத்தில் பஜனை நடந்து கொண்டிருந்தது. சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த பாபாவின் தரிசனம் எங்களுக்கு கிடைத்தது. உடனே நாங்கள் புறப்படலாம் என்று நினைக்கும் போது எங்களது ஜீப் சிறிதும் நகரவில்லை! அங்கிருந்த பக்தர் ஒருவர் எங்களிடம் , " பஜனை நடந்து கொண்டிருக்கும்போது நீங்கள் புறப்படக்கூடாது. பஜனை முடிந்தவுடன் புறப்பட்டால் நல்லது" என்று கூறினார். அவரது அறிவுரைக்குப் பணிந்து நாங்கள் தங்கினோம்.
பஜனை முடிந்தவுடன் சில பக்தர்களுடன் பாபா பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் எங்களை கட்டுப்படுத்திக் கொண்டு காத்திருந்தோம். சிலருடன் பேசிவிட்டு பாபா மற்றவர்களை, காத்திருக்குமாறும் உணவிற்குப் பிறகு பேசுவதாகவும் கூறினார். திருநெல்வேலியில் எனது பணி காத்திருப்பதை மறந்து விட்டு இருவரும் காத்திருந்தோம். மாலையில் சுவாமி எங்களுக்கு விபூதி அளித்து ஆசீர்வதித்தார். இப்போது ஜீப் ஒழுங்காக தன் பணியை செய்ததை பார்த்து நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம்! திருநெல்வேலியை அடைந்த எங்களுக்குப் பல கேள்விகள் காத்திருந்தன! "நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்? இங்கே உங்களது அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் பகற்பொழுதில் இரண்டு விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன!! ஒரு அரசுப் பேருந்து விபத்துக்குள்ளானதில் சில பயணிகள் காயமுற்றனர்! மற்றொரு இடத்தில் ஒரு ஜீப் விபத்திற்குள்ளாகியது!" என்றனர்! உடனே நான் மிகவும் பயந்துவிட்டேன்! சாதாரணமாகவே எங்களது டிஎஸ்பி அவர்கள் மிகவும் கடுமையான அதிகாரி ஆவார். அன்று இரவு முழுவதும் நான் தூங்கவில்லை! எனக்கு வேலை நிறுத்தமோ அல்லது பணி நீக்கமோ நடைபெறலாம் என்ற பயம் என்னை ஆக்கிரமித்தது. மறுநாள் காலையில் நான் பாபா அளித்த விபூதியை என் நெற்றியில் அணிந்து கொண்டு பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன். "பாபா! நான் உங்களது தரிசனத்திற்காக வந்ததால் இந்த சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளேன். ஆகவே நடக்கப்போவது அனைத்தையும் உங்களது பாதுகாப்பில் விட்டு விடுகிறேன்!" என்று மனதில் கூறினேன்! நான் டிஎஸ்பி அலுவலகத்தில் நுழைந்தபோது, அங்கிருந்த எனது நெருங்கிய சக பணியாளர்கள், நான் எனது பணியில் தவறியதால் என்னை ஒரு ஏளனச் சிரிப்புடன் பார்ப்பது போல உணர்ந்தேன்! டிஎஸ்பி அவர்களால்
அழைக்கப்பட்டவுடன் நான் அறைக்குள் நுழைந்து சல்யூட் அடித்து விட்டு அவர் முன் நின்றேன். ஆனால், என்ன ஆச்சரியம்!! அவர் எழுந்து வந்து எனது தோள்பட்டையைத் தட்டிக் கொடுத்து, " எனது இளைஞனே! மிகச்சிறப்பாக பணி செய்தாய்! அந்த இரண்டு விபத்துகளையும் நீ மிகவும் திறமையுடன் கையாண்டு இருக்கிறாய்! மிக்க மகிழ்ச்சி! இவ்வாறே சிறப்பான உன் பணியைத் தொடர்ந்து செய்!" என்றார்!! பிறகு தான், என்னைப் பற்றி எப்படிப்பட்ட செய்தி பரவி உள்ளது என்பது எனக்கு பின்வருமாறு தெரிய வந்தது:
"நான் அந்த இரண்டு விபத்து நடந்த இடங்களிலும் இருந்துள்ளேன்!
காயமுற்ற பயணிகளை மருத்துவமனையில் உடனே கொண்டு சேர்க்க ஆவன செய்துள்ளேன்!
மீதம் இருந்த பயணிகளை அவரவர் செல்ல வேண்டிய ஊர்களுக்குச் செல்வதற்காக, டிப்போவில் இருந்து ஒரு சிறப்புப் பேருந்தையும் ஏற்பாடு செய்துள்ளேன்!
விபத்தில் சிக்கிய வாகனங்களின் ஓட்டுனர்களுடைய உரிம விவரங்களையும் சேகரித்துள்ளேன்! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களையும் நன்கு கவனித்துக் கொண்டுள்ளேன்!"
இதனை கேட்டுக் கொண்டிருந்த டாக்டர். ஹீரா மாலினி என்ற பக்தை, "அப்படி என்றால், பாபாவே உங்களது வடிவத்தில் அங்கே தோன்றி அனைத்தையும் சரி செய்து இருக்கின்றார் என்று சொல்கிறீர்களா?" என்றார். அதற்கு நான், எனது நிரம்பிய விழிகளுடன் "ஆமாம்" என்று பதில் அளித்தேன்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 481:
திரு. ஹிஸ்லாப் அவர்கள் அர்ஜென்டினாவைச் சேர்ந்த பக்தர்களுக்கு சொற்பொழிவு ஆற்றிய போது கீழ்க்கண்ட சுவையான அனுபவத்தை விவரித்தார்:
" ஒரு நாள் சுவாமியும் பல பக்தர்களும் சேர்ந்து மூன்று வாகனங்களில் பந்திபூர் வனப் பகுதிக்குச் சென்றனர். அந்த பக்தர்கள் குழுவில் நானும் ஒருவன். அப்போது அங்கே ஒரு வெட்ட வெளியில் எங்களது பயணத்தை நிறுத்தினோம். தொலைவில் ஒரு யானைகளின் கூட்டம் புழுதியை கிளப்பிக் கொண்டும் பிளிறிக் கொண்டும் நகர்ந்து வருவதை நாங்கள் பார்த்தோம். அப்போது அந்தக் கூட்டத்தின் அருகில் செல்ல யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று எங்களுக்கு வன அதிகாரி எச்சரிக்கை விடுத்தார். ஆனால் சுவாமியோ அந்த யானைக் கூட்டத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்! திடீரென்று அந்தக் கூட்டத்திலிருந்து ஒரு யானை மட்டும் சுவாமியை நோக்கி வேகமாக வர ஆரம்பித்தது! உடனே நாங்கள் அனைவரும், "சுவாமி! சுவாமி! தயவு செய்து திரும்பி வாருங்கள்!" என்று கூச்சலிட்டுக் கொண்டே எங்களது கார்கள் இருக்கும் இடம் நோக்கி செல்ல ஆரம்பித்தோம்! ஆனால் சுவாமி அங்கிருந்து நகரவில்லை! யானையைப் பார்த்துக் கொண்டிருந்த வன அதிகாரி, அந்த யானை மிகவும் மூர்க்கத்தனமாக உள்ளது என்று கூறினார்! எங்களிடமிருந்து சுமார் 150 அடி தூரத்தில் அந்த யானை, தான் ஓடி வருவதை நிறுத்திக் கொண்டது! பிறகு ஒரு மெல்லிய குரலில் பிளிறி விட்டு சுவாமியின் முன் மண்டியிட்டது!! சுவாமி அதன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார்!! பிறகு அந்த யானை திரும்பிச் சென்றது!! அப்போது சுவாமி எங்கள் பக்கம் திரும்பி, " ஓ! உங்களது அவசரத்தில் நீங்கள் அனைவரும் என்னைத் தனியாக விட்டு விட்டீர்கள்!" என்று சிரித்துக் கொண்டே கூறினார்! இதனைக் கேட்ட நாங்கள் அனைவரும் என்ன சொல்வது என்று தெரியாமல் அவமானத்தால் தலை குனிந்தோம்!"
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 482:
ஒரு நாள் ஹிஸ்லாப் தர்மக்ஷேத்ராவில் சுவாமி உடன் இருந்தபோது, அனந்தபூர் கல்லூரி ஆசிரியைகளுக்கும் மற்றும் பெண் மருத்துவர்களுக்கும் அளிப்பதற்காக 100 சேலைகள் கொண்டுவரப்பட்டன.
அந்த நூறு சேலைகளுள் நான்கு சேலைகள் அவற்றின் ஆழ்ந்த வண்ணங்கள் காரணமாக ஒதுக்கி வைக்கப்பட்டன. ஆகவே 96 சேலைகள் மட்டுமே விநியோகத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டன. மாலையில் பஜன் முடிந்த பிறகு சுவாமியின் அறையில் மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த அந்த நான்கு சேலைகளை ஹிஸ்லாப் எதேச்சையாக நோக்கினார். அப்போது அந்த சேலைகளின் ஓரங்களில் இருந்து நீர்த் துளிகள் வந்து கொண்டிருப்பதை அவர் கவனித்தார். அவர் அதை சுவாமியிடம் தெரிவித்த போது, சுவாமி, " பாவம்! நான் அவற்றைத் தேர்வு செய்யாததால் அவை கண்ணீர் வடிக்கின்றன !" என்றார்! உடனே அவர் அந்த சேலைகளையும் விநியோகத்திற்கு எடுத்துக் கொண்டார். அவற்றில் ஒன்றை எடுத்து ஹிஸ்லாப்பிடம் அளித்து "இதை உனது மனைவி விக்டோரியாவுக்கு கொடு" என்றார்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 483:
அப்போது சுவாமிக்கு 40 வயது; கோவாவினுடைய கிறித்துவப் பேராயர், நம் சுவாமியினுடைய புகழால் ஈர்க்கப்பட்டார். அவர் சுவாமியை தனது இல்லத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்தார். அச்சமயம் சுவாமியின் கோவா வருகையின்போது ஒரு ரோமன் கத்தோலிக்க பாதிரியார், கோவாவில் சுவாமியுடன் துணையாக செல்வதற்காக பேராயரால் நியமனம் செய்யப்பட்டார். ஆனால் அந்தப் பாதிரியாருக்கு சுவாமியின் மீது நல்ல கருத்து இருக்கவில்லை! ஆயினும் பேராயருக்கு பயந்து, தனக்கு அளித்த பணியை ஒரு இயந்திரம் போல செய்து முடித்தார்! இறுதியாக சுவாமி தன் காரில் புறப்படும் வரை அவர் சுவாமியுடன் எல்லா இடங்களுக்கும் சென்றார். புறப்படுவதற்கு முன்னர் சுவாமி அந்தப் பாதிரியாரை பார்த்து, " நீ வேண்டுமானால் என்னுடைய ஃபோட்டோவை உன்னுடைய கேமராவில் எடுத்துக்கொள்! அந்த ஃபோட்டோவை எனது கோவா பயணத்தின் ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்ளலாம்" என்றார்! உண்மையிலேயே பாதிரியாருக்கு சிறிதும் விருப்பம் இல்லாவிடினும் வேறு வழி இன்றி அவர் கட்டுப்பட்டார்; தனது கேமராவில் சுவாமியின் உருவத்தை 'கிளிக்' செய்தார். பிறகு அவர் தன் இல்லத்திற்கு சென்று போட்டோவை அபிவிருத்தி செய்து வெளிக்கொணர்ந்த போது அந்த போட்டோவில் சுவாமி இருக்க வேண்டியதற்கு மாறாக இயேசு கிறிஸ்து இருப்பதை அவர் கண்டார்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 484:
முனைவர் தாதாசாரி என்பவர் மிகவும் புகழ்பெற்ற உயிர் இயற்பியல் வல்லுனராக இருந்தார். அவர் அமெரிக்காவின் சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்களான எம் ஐ டி, ஸ்டேன்ஃபோர்டு மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகங்களின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். 1964இல் அவருக்கு மூளை, கழுத்து, கல்லீரல் பகுதிகள் அனைத்தும் பரவி இருந்த புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் இவருக்கு எந்த விதத்திலும் உதவி புரிய முடியாது என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். ஆகவே தனது எஞ்சியிருந்த வாழ்நாட்களை தனது உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கழித்திட எண்ணி அவர் இந்தியா திரும்பினார். 1965இல் ஒரு நண்பரின் தூண்டுதலால் அவர் தனது மனைவியுடன் பாபாவின் தரிசனத்திற்கு வந்தார். தம்பதியருக்கு சுவாமி இன்டர்வியூ அளித்தார். அவர்களுக்கு விபூதி அளித்து ஆசீர்வதித்த சுவாமி, " உனது நோயைப் பற்றி சிறிதும் கவலைப்படாதே? நீ அமெரிக்காவுக்குத் திரும்பிச் சென்று உனது ஆராய்ச்சியில் கவனம் செலுத்து!" என்று கூறினார். அந்த தம்பதியினர் மறுபடியும் 1970 இல் சுவாமியை தரிசிக்க வந்தனர். அப்போது, அவர்களது பூரண நம்பிக்கையினால் அவரது புற்றுநோய் முற்றிலுமாக நீக்கப்பட்டதாக சுவாமி அறிவித்தார். மேலும் எந்த மருந்தும் உட்கொள்ளத் தேவை இல்லை என்றும் கூறினார்.
மறுபடியும், " உனது ஆராய்ச்சியில் கவனம் செலுத்து!" என்று கூறி அனுப்பினார்! முனைவர் தாதாசாரியின் உடல் நிலையில் ஏற்பட்ட வினோதமான முன்னேற்றத்தைப் பார்த்த அவரது சக பணியாளர்களும் நண்பர்களும் ஆச்சரியம் அடைந்தனர். அதன் பிறகு தாதாசாரி தம்பதியினர் அடிக்கடி புட்டபர்த்திக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். மேலும் அவர்களது கடமைகளை மிகவும் செம்மையாகச் செய்து வந்தனர். மூன்று வருடங்கள் கழித்து முனைவர் தாதாசாரிக்கு சுவாமி எழுதிய கடிதத்தின் சாராம்சம் இதோ:
" எனது அன்புக்குப் பாத்திரமானவர்களே!
வெகு தூரத்தில் நீங்கள் இருந்தும் கூட நீங்கள் எனக்கு அருகில் வந்து கொண்டிருப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்! நான் உங்களிடம் உள்ளேன். உங்களுக்கு உள்ளேயும் நான் இருக்கிறேன்! உங்களது வாழ்க்கை என்னும் தேரின் ஓட்டுனர் நான்தான்! சுகம், துக்கம் எனும் சுமைகள் இருந்த போதிலும் உங்களது உயிர் எனும் கப்பல் கண்டிப்பாக "தன்னை அறிதல் ( self-realization )"எனும் துறைமுகத்தை வந்து அடையும்! நீங்கள் செய்வது அனைத்தும் சுவாமியின் பணியே என்று நினைக்கும் போது நீங்கள், மனநிறைவு ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி அனைத்தும் பெறுவீர்கள்!"
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 485:
கொல்கத்தாவை சேர்ந்த திருமதி. சுதா மஜும்தார் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றியவர். பிறகு சிறந்த சமூக சேவகியாகவும் இருந்துள்ளார். இதற்கும் மேலாக 1953இல் இராமாயணத்தை ஆங்கிலத்தில் புத்தகமாக படைத்தவராவார். அவர் 1964- அக்டோபர் மாதத்தில் ஒரு நாள் டார்ஜீலிங்கின் ஒரு மலை உச்சியில் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டு இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தார். அப்போது, வெள்ளை வேட்டி, நீளமான வெள்ளை சட்டை, வெள்ளை தொப்பி ஆகியவற்றை அணிந்தவராய், கையில் ஒரு பழைய கொடையுடன் வயதான ஃபகீர் ஒருவர், சுதாவை நோக்கி வந்த பிறகு, அவர் அருகில் உட்காரலாமா என்ற யோசனையில் இருந்தவர் போலக் காட்சி அளித்தார்; இதனை கவனித்த சுதா அவர்கள், அந்த பெரியவரை அமரச் சொன்னார். சில நிமிடங்கள் இளைப்பாறிய பின்னர் அந்த ஃபகீர், " நான் நேபாளத்திலிருந்து வருகிறேன். எனக்கு கபீர்தாசரின் தோஹா என்று அழைக்கப்படும் பாடல்கள் மிகவும் பிடித்தமானவை" என்றார். அப்போது அவர் வலது காலை தனது இடது கால் மேல் வைத்த கோலத்தில் அமர்ந்திருந்தார்! பிறகு அவர் தன் இனிமையான குரலில் மூன்று தோஹாக்களைப் பாடினார்! அவற்றைக் கேட்ட சுதா மிகவும் ஆறுதல் அடைந்ததைப் போல உணர்ந்தார்! ஆன்மீகத்துவம் நிறைந்த அந்த பாடல்களை, அவரை மீண்டும் பாடச் சொல்லி அவற்றை எழுதிக் கொண்டார் அவர். கிளம்புவதற்கு முன் அவரது பாதங்களைத் தொட்டு வணங்கினார், சுதா. பிறகு எப்பொழுதெல்லாம் தனக்கு மன அமைதி தேவைப்பட்டதோ அப்போதெல்லாம் இந்தப் பாடல்களை நினைவு கொள்வார். 1966 இல் சுதா அவர்கள் பெங்களூர் வந்திருந்த போது அவரது நண்பர்கள் சிலர் சத்திய சாயி பாபாவை தரிசனம் செய்யும்படி அவரிடம் கூறினர். அதுவரை அவர் சுவாமியை பற்றி கேள்விப்பட்டதில்லை. திருமதி ரதன்லால் அவர்களை சந்தித்த பின்னரும் கூட அவரால் சுவாமியை தரிசிக்க முடியவில்லை. பிறகு சென்னையில் 1967-ல் அவருக்கு சுவாமியின் தரிசனம் கிடைத்தது. சுதாவை பார்த்தவுடனே சுவாமி, " ஓ! நீ வந்து விட்டாயா, பங்காரு?" என்றார்! அவர் எதுவுமே சுவாமியிடம் கூறாமல், சுவாமியே சுதாவினுடைய அனைத்து பிரச்சனைகளையும் பற்றிப் பேசினார்! பிறகு அவருக்கு நான்கு விபூதி பொட்டலங்களை அளித்துவிட்டு, " பல வருடங்களுக்கு முன்னால் டார்ஜீலிங்கில் நான், சீரடி சாயி பாபாவின் தோற்றத்தில் உன்னிடம் வந்து, உனக்கு மூன்று பாடல்களைப் படிப்பித்தேன். அவற்றை தினமும் அதிகாலையில் பாடிக் கொண்டிரு!" என்றார்!! இவற்றைக் கூறிய போது சுவாமியின் குரல் முன்பு கேட்ட ஃபகீரின் குரலாகவே இருந்தது!!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 486:
திரு. பி.மோகன் ராவ் அவர்கள் சுவாமியின் பிரபலமான பக்தர்களுள் ஒருவர் ஆவார். இவர் தெற்கு ரயில்வேயில் பணிபுரிந்து வந்தார். பல வருடங்கள் (1960-70களில்) பிரசாந்தி நிலையத்தில் பஜனைப் பாடல்கள் பாடி வந்தார். சுவாமி சென்னைக்கு வரும் போதெல்லாம் அக்காலங்களில் மோகன் ராவை பாடச் சொல்வது வழக்கம். அவர் சென்னையில் இருந்த காலத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் தனது வீட்டின் முன்புற ஹாலை அலங்கரித்து பஜனைகள் நடத்தி வந்தார். சுமார் 40 பேர் அந்த பஜனைகளில் கலந்து கொள்வர். அன்று மாலை 5 மணி அளவில், பூக்கள் விற்கும் பெண்மணி ஒருவர் மல்லிகைப் பூ மாலையை கொண்டு வந்து அளித்துவிட்டுச் செல்வது வழக்கம். அவ்வாறு ஒரு வியாழக்கிழமை ஏகாதசி அன்று மாலையில் அந்த முதிர்ந்த வயதான பெண்மணி, கனமழையின் காரணமாக மல்லிகைப் பூ மாலையைக் கொடுக்க வரவில்லை! பல பக்தர்கள் மழையைப் பொருட்படுத்தாமல் பஜனைக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த மோகன் ராவ் அவர்கள், நீண்ட நேரம் காத்திருந்து விட்டு, மாலைகள் வாங்கி வருவதற்காகத் தன் கொடையை எடுத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானார். அந்தக் கணத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வயதான மனிதர், அழகான மூன்று மல்லிகைப் பூ மாலைகளை, அந்த பூ விற்கும் பெண்மணி கொடுக்கச் சொன்னதாக கூறி, அவற்றை அளித்துவிட்டுச் சென்றார்! பிறகு ஒரு மாத காலம் கழித்து சுவாமிக்கு சேவை செய்வதற்கு பிரசாந்தி நிலையம் சென்றார், மோகன் ராவ். அவர் சுவாமிக்கு பாத சேவை செய்து கொண்டிருக்கும் போது, சுவாமி, "வியாழக்கிழமைகளில் உனது வீட்டில் நடக்கும் பஜனைகளை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!" என்றார்! உடனே மோகன் ராவ், " சுவாமி! நீங்கள் என்னை திருப்திப் படுத்துவதற்காக இப்படி கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்! நாங்கள் சென்னையில் பஜனைகள் பாடும்போது நீங்கள் புட்டபர்த்தி இருந்து கொண்டு அவற்றைக் கேட்கிறீர்கள் என்பதற்கு ஆதாரம் எங்கே இருக்கிறது?" என்று (தைரியமாக) கேட்டார்! அப்போது சுவாமி சிரித்துக் கொண்டே, " எனது அன்பிற்கு பாத்திரமானவனே! சென்ற மாதம் ஒரு நாள் கனமழையின் போது உன்னிடம் மூன்று மாலைகளைக் கொண்டு வந்து கொடுத்தது, பிறகு யார் என்று நீ நினைக்கிறாய்?" என்று கேட்டார்!! இதனைக் கேட்ட மோகன் ராவ் அவர்கள் கண்களில் நீர் ததும்ப, சுவாமியின் பாதங்களில் விழுந்து வணங்கினார்!!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 487:
திரு.மோகன் ராவ், தன் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடம் ஒன்றும் கற்றுக் கொண்டார். அவர் ரயில்வே ஊழியராக இருந்ததால், தன் குடும்பத்துடன் பல ஊர்களுக்குச் சென்று வருவதற்கான ' பாஸ் ' இருந்தது. அந்த ஆவணத்தில் அவர் பயணத்தை தொடங்கும் தேதியும் அதனை முடிக்கும் தேதியும் குறிப்பிடப்படும் வழக்கம் இருந்தது. ஒருமுறை சுவாமியினுடைய பிறந்த நாளுக்காக அவர் புட்டபர்த்திக்கு வந்த போது சுவாமி அவரை பார்த்து கேட்ட கேள்வியில் அவர் அதிர்ச்சி அடைந்தார்!! சுவாமி, " உனக்கு வேலை பறிபோக வேண்டுமா?" என்று அவரைக் கேட்டார்!! மேலும் சுவாமி தொடர்ந்து, " நீ ஏற்கனவே உன் மனைவியுடன் ஒரு முறை தசராவுக்கு வந்து சென்றாய். ஆகவே இம்முறை நீயாகவே அந்த ஆவணத்தில் தேதிகளை மாற்றி இருக்கிறாய்! அது மட்டும் அல்லாமல் மிகவும் உஷாராக, நீ பயணச் சீட்டு பரிசோதகரின் கையெழுத்தையும் அழித்துவிட்டு இருக்கிறாய்!! இப்பொழுது பரிசோதகர் மிகவும் கவனமாகப் பார்த்தார் என்றால் உன் கதி என்ன ஆகும்? அதற்கான தண்டனை என்னவென்று உனக்குத் தெரியுமா? உன் வேலையிலிருந்து நீ நீக்கப்படுவாய்!! ஏற்றுக்கொள்கிறாயா??" என்றார்!! உடனே மோகன் ராவ் சுவாமியின் பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, " சுவாமி! எனக்கு வேறு வழி தெரியவில்லை! என் பயணத்திற்குத் தேவையான பணம் என்னிடம் இருக்கவில்லை.. ஆனால் உங்களது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதைத் தவிர்க்க என்னால் முடியவில்லை!" என்று பதில் அளித்தார்! உடனே சுவாமி, " பரவாயில்லை! இந்த முறை இந்த ஆவணத்தை வைத்துக் கொண்டே பயணம் செய்! பயணச் சீட்டு பரிசோதகர் இந்த முறை உனது இலவசப் பயண ஆவணத்தை ஆராயாமல் இருக்குமாறு நான் பார்த்துக்கொள்கிறேன்!! இனிமேல் இத்தகைய தவறுகளை செய்யாதே!!" என்றார்!! பிறகு அவருக்கு விபூதியை சிருஷ்டி செய்து அளித்து, அதனைத் தனது சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும்படி கூறினார்!
திரும்பிச் செல்லும் பயணத்தின் போது பரிசோதகர் , மோகன் ராவின் அருகில் இருந்த அனைத்து பயணிகளின் சீட்டுகளையும் பரிசோதித்து விட்டு, இவரது "பாஸ்" ஆவணத்தை மட்டும் சோதனை செய்யாமல் சென்றுவிட்டார்!! இந்தப் பாடத்தை மோகன் ராவ் என்றும் மறக்கவில்லை!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 488:
1973 இல் டாக்டர். சாமுவேல் சேண்ட்வீஸ் அவர்களுக்கு, திருமதி. எல்சி கோவன் அவர்களுடன் இந்தியாவுக்குப் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒரு நாள் காலை உணவின்போது திருமதி எல்சி கோவன் அவர்கள், "காலை 6:00 மணிக்கு பாபா திரு. வால்டர் கோவன் அவர்களுடன் என்னை நோக்கி வருவதைப் போல உணர்ந்தேன்!" என்றார்! அதனை சற்று விளக்கி கூறுமாறு சாமுவேல் கேட்டதற்கு அவர், " அது ஒரு அனுபவமாகவே இருந்தது! அப்போது நான் திரு. கோவன் அவர்களிடம் இருந்து வெளிப்பட்ட அன்பின் அலைகளிலும் சுவாமியிடமிருந்து வெளிப்பட்ட தெய்வீக ஒளிக் கதிர்களிலும் முற்றிலுமாக மூழ்கடிக்கப்பட்டேன்!" என்றார்! அன்று மாலையில் சுவாமி அளித்த இன்டர்வியூவின் விவரங்களைப் பின்வருமாறு தனது புத்தகத்தில் எழுதியுள்ளார், சேண்ட்வீஸ் :
" சுவாமி, திருமதி.எல்சி கோவனுடைய கையை மெதுவாகப் பற்றிக்கொண்டு, " இவள் முதியவளாக இருந்தாலும், மிகவும் சக்தி வாய்ந்த, திடமான மன உறுதி படைத்தவள்!" என்று கூறினார்! பிறகு சில அடிகள் முன்னே எடுத்து வைத்த சுவாமி, திடீரெனத் திரும்பி, "இன்று காலையில் நான் வால்டர் கோவன் அவர்களுடன் உன்னைப் பார்க்க வந்தேன்!" என்றார்!! உடனே எல்சி கோவன் அவர்கள், " ஆமாம்! நீங்கள் இருவரும் காலை 6:00 மணிக்கு வந்தீர்கள்!" என்றார். உடனே சுவாமி, "இல்லை, 5:50 மணிக்கு!" என்றார்! உடனே சம்மதத்துடன் சிரித்துக்கொண்டே எல்சி அவர்கள் தன் தலையை ஆட்டினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நான் ஆச்சரியத்தால் ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டேன்! உடனே இதைப் பற்றி மிகவும் தீவிரமாக யோசிக்க தொடங்கினேன்! அப்போது சுவாமி என் தோளினை அன்புடன் தொட்டு என் இதயத்தை ஆனந்தத்தால் நிரப்பினார்! அவர் என் கண்களை, ஊடுருவதைப் போல உற்று நோக்கி, "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்! நான் அந்த ஆனந்தத்தில் இருந்தும் இன்னும் மீளாமல் இருந்ததால் அப்போது பதிலளிக்கும் நிலையில் நான் இல்லை என்று புரிந்து கொண்ட சுவாமி தனது கையைச் சுழற்றி, வைரங்கள் பதிக்கப்பட்ட ஒரு மோதிரத்தை வரவழைத்து எனது விரலில் பொருத்தினார்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 489:
(சென்ற நிகழ்வின் தொடர்ச்சி)
எங்களுடன் சேர்ந்து இன்டர்வியூவில் இருந்த ஒரு பெண்மணி ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு அவ்வப்போது தனது கண்ணீரைத் துடைத்துக்கொண்டிருந்தார். மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அவரை நோக்கி சுவாமி , " நீ அன்பை வளர்த்துக் கொண்டாய் எனில், மன அமைதி மற்றும் ஆனந்தத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் நீ பெறுவாய்!" என்றார். உடனே அப் பெண்மணி தேம்பி அழ ஆரம்பித்து, " நான் அன்பாக இருந்த போதிலும் என்னையும் என் குழந்தைகளையும் காப்பதற்கு யாரும் இல்லை! ஏனெனில் நான் ஒரு நோயாளியாவேன்!" என்றார்! அதற்கு சுவாமி, "அந்த ஒரு எண்ணத்தினால் தான் நீ உன்னை மற்ற அனைவரிடமும் இருந்து தொலைவுப்படுத்திக் கொள்கிறாய்! உனது வெறுப்பை உதறி தள்ளிவிட்டு, " இறைவன் அனைவரிடமும் குடி கொண்டுள்ளார்" என்ற நம்பிக்கையுடன் அனைவரிடமும் அன்பு செலுத்து! " என்றார். அதற்கு அந்தப் பெண்மணி, " எந்த மருத்துவரும் எனக்கு சிகிச்சை அளிக்க முன்வருவதில்லை! நான் ஒரு புறக்கணிக்கப்பட்ட நோயாளி ஆவேன்! அதனால் தான் நான் உங்களை வந்து அடைந்துள்ளேன்!" என்றார். சுவாமி சிரித்துக் கொண்டே, "அமைதியாகவே இரு; சஞ்சலப்படுவதை நிறுத்து; உனது கோபம் உன் நோயின் தீவிரத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறது!" என்றார். அப் பெண்மணி உடனே, "சுவாமி! நான் எப்படி அமைதியை பெறுவது? என் நோயின் காரணமாக எனது பலத்தை இழந்துவிட்டேன். என்னால் இதனை தாங்க முடியவில்லை" என்றார். உடனே சுவாமி , " ஆம், எனக்குத் தெரியும். இது உனது சுரப்பிகளின் வீக்கத்தினால் தான்!" என்றார். அதனை ஆமோதித்த அந்தப் பெண்மணி ஏதோ ஒரு விஷயத்தைக் கூற வெட்கப்பட்டது போல தோன்றினார். அப்போது சுவாமி, " ஆ! எனக்கு தெரியும்! அவ்வப்போது இரத்தப் போக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது" என்றார். பிறகு மெல்லிய குரலில், " நீ இங்கே வந்ததனால் உனக்கு நிவாரணம் கிட்டும்! தைரியமாக இரு!" என்றார்! உடனே அப்பெண்மணி சுவாமியின் பாதங்களில் விழுந்து வணங்கினார். அப்போது சுவாமி அவரது தலையைத் தொட்டு ஆசீர்வதித்து, விபூதியை சிருஷ்டி செய்து கொடுத்து, "என்னுடைய கண்கள் எக்ஸ்ரே போன்றவை! நான் உன்னை குணப்படுத்துவேன்! இந்த விபூதியை நீரில் சிறிதளவு கரைத்து தினமும் இரவில் அருந்தி வா! நாளை முதல் பஜனைகளில் பங்கு கொள்ளத் தொடங்கு!!" என்றார். எல்சி கோவன் அப் பெண்மணியின் தோள்களைத் தொட்டு, " நீ சரியான இடத்திற்கு வந்துள்ளாய்! பாபா உன்னைப் பூரணமாக குணப்படுத்தி ஆரோக்கியத்துடன் உன்னை இங்கிருந்து திரும்பி அனுப்புவார்!" என்று அவரிடம் கூறினார்.
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 490:
விஜய் என்னும் நபர் ஒருவர் சீரடி சாய்பாபாவின் பக்தர்களுடைய குடும்பத்தில் பிறந்தவர். அவர் ஸ்ரீ சத்ய சாயி பாபாவை மிகவும் கடினமாக விமர்சித்து வந்தார். 1986இல் வருமானவரி ஆய்வாளராக நாக்பூரில் பணியமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு நல்ல சம்பளம் கிடைப்பது மட்டுமல்லாமல் மறைமுகமாக பணம் சம்பாதிக்கும் வழிகளும் இருந்ததால் அவர் தீய பழக்க வழக்கங்களுக்கும் தீய நட்புக்களுக்கும் அடிமையானார். 1990 இல் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறகு தன் மகளை ஸ்ரீ சத்ய சாயி வித்யா விஹார் என்னும் புகழ் பெற்ற பள்ளியில் சேர்த்தார். சீரடி சாயியின் மறு அவதாரம் தான் நம் சுவாமி என்பதை அவர் ஒப்புக்கொள்ளா விடினும் சத்ய சாயியைப் பற்றி அறிவதற்கான அவாவினால் உந்தப்பட்டார்! ஆகவே அவர் பஜனைகளில் பங்கெடுத்துக் கொள்ள ஆரம்பித்தார். 1995இல் முதல் முறையாக புட்டபர்த்திக்கு அவராகவே வந்தார். அவர் பக்தராக இராத போதிலும் பஜனைகளில் கலந்து கொண்டார்; தசரா பண்டிகை நிகழ்வுகள் அவரை மிகவும் கவர்ந்தன; நான்கு நாட்கள் தங்கிய அவர் கடைசி நாளன்று அவருக்கு முதல் வரிசையில் அமரும் வாய்ப்பு கிடைத்தது. சுவாமி அவர் முன் வந்து நின்றபோது, சுவாமியின் பாதங்களை, தன்னை அறியாமல் தொட்ட போது, அவரது உடல் இனம் புரியாத ஆனந்தத்தில் நடுங்கியது! உடனே தன் இரு கைகளையும் கூப்பி, கண்களில் இருந்து நீர் வழிய, வணங்கினார்!
இதன் விளைவாக அவர் 1996 இல் சேவா தளத்தில் இணைந்தார். செப்டம்பர் 1996 இல் புட்டப்பர்த்திக்கு இரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அவரது கனவில் சுவாமி தோன்றி, "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்! அதற்கு அவர் சுவாமியின் அனுகிரஹமும் ஆசீர்வாதமும் தவிர, தனக்கு வேறு எதுவும் வேண்டாம் என்று பதில் அளித்தார்! அதற்கு சுவாமி, " ஆம்! அது ஏற்கனவே இருக்கிறது!" என்று கூறி மறைந்து விட்டார்!
செப்டம்பர் 26 ஆம் நாள் அன்று அவருக்கு முதல் வரிசை கிடைத்தது. அப்போது அருகில் இருந்த நபர் வைத்திருந்த புத்தகத்தின் மீது அவரது பார்வை விழுந்தது. உடனே அந்த புத்தகத்தை அவரிடம் இருந்து பெற்று பக்கங்களைத் திருப்ப ஆரம்பித்தார் விஜய். அப்போது ஒரு பக்கத்தில் இருந்த சுவாமியினுடைய வார்த்தைகள் அவரது கண்களில் பட்டன: "எனது சங்கல்பத்தினால் மட்டுமே நான் உனது கனவில் வருகிறேன்! நீ எப்போதும் என்னை நினைப்பதால் நான் கனவில் தோன்றுவதாக நினைப்பது மிகவும் தவறான புரிதல் ஆகும்!"
உடனே அவர் தனது தவறை உணர்ந்தார்! அந்த நேரத்தில் சுவாமி வெளியே தரிசனத்திற்கு வந்தார்; அருகில் வந்தபோது அவர் தான் வைத்திருந்த கடிதத்தை சுவாமியிடம் நீட்டினார். ஆனால், இவரைச் சுற்றி இருந்தவர்களின் கடிதங்களை வாங்கிய சுவாமி, இவரிடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை! இந்த நிகழ்வு அவரை யோசனைகள் பல செய்ய வைத்தது! அவரது எதிர்காலப் பார்வையை சற்றும் எதிர்பாராத வகையில் மாற்றுவதற்கான ஒரு தூண்டுகோலாக இந்த நிகழ்வு அமைந்தது!
உடனே அவர் தனது தீய பழக்கங்களிலிருந்தும் தீய நண்பர்களிடம் இருந்தும் முற்றிலும் விலகுவதாக முடிவெடுத்தார். தனது இந்த உறுதி மொழியை சுவாமிக்கு ஒரு கடிதமாக எழுதினார்!
மறுநாள் காலையில் சுவாமி தரிசனத்திற்கு வந்த போது மீண்டும் முதல் வரிசையில் இருந்த விஜய் தனது கடிதத்தை சுவாமியிடம் நீட்டினார். சிரித்துக்கொண்டே சுவாமி அதனை வாங்கிக் கொண்டு அவருக்கு பாத நமஸ்காரம் அளித்தார்! அந்த கணம் முதல் அவரது மனோபலமும் வெகு வேகமாக உயரத் தொடங்கியது! அவர் அன்று முதல் லஞ்சம் வாங்குவதைத் தவிர்த்து, தன் நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தனது வாழ்க்கை முறையை நேர்மையானதாக மாற்றிக் கொண்டார். அவர் தனது தீய பழக்கங்களிலிருந்தும் மீண்டார். அலுவலகத்தில் நேர்மையின் சிகரம் என புகழப் பெற்றார். மத்திய பிரதேச சத்ய சாயி நிறுவனங்களில் சுறுசுறுப்பான உழைப்பாளர் என்ற தெய்வீகமான செல்வத்தை அடைய பெற்றார்.
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 491:
ஜெரிமி ஹாஃபர் என்பவர் தனது 18 வது வயதில் டென்வர் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி பட்டப்படிப்பை முடித்தார். அவர் மீது அபரிமிதமான அன்பைப் பொழிந்த, மற்றும் உண்மையான கிறிஸ்தவர்களாக இருந்த பெற்றோரை, அவர் உதாசீனப்படுத்தினார். தனது சுதந்திரத்தையும் கல்வியையும் தவறாகப் பயன்படுத்திய ஹாஃபர், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார். அவர் போலீஸாரால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டு, வேறு ஒரு நாட்டில் சிறை வைக்கப்பட்டார்! அவருக்கு சிறை வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. அவருக்கு உத்தரவாதம் கொடுப்பதற்கு யாரும் முன் வரவில்லை. அவர் சுவாமியை பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் முதலில் அவரை நினைத்து வேண்டுவதற்கு அவரது மனம் விழையவில்லை. இச் சிறை வாழ்க்கை மிகவும் மோசமான, எந்த உதவியும் அற்ற நிலைக்குச் சென்ற பின்னர், அவர் மனம் நொந்து பாபாவிடம் மனதார உதவி வேண்டினார். அடுத்த நாளே, இவரை முன்னர் அறிந்திருந்த ஒரு நபர், இவருக்காக உத்தரவாதம் அளிக்க முன் வந்தார்! அதன் மூலம் ஹாஃபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்! உதவிய நபர் இவரை விமான நிலையத்தில் கொண்டு வந்து விட்டார்! அப்போது ஹாஃபர் கையில் ஒரு ஒரு டாலர் பணம் கூட இல்லை! தனக்கு அறிமுகம் இல்லாத நாட்டில் , ஒரு விமான அதிகாரி இவர் மீது இரக்கப்பட்டு இவருக்கு இலவச பயணச் சீட்டு வழங்கினார்! பிறகு தான், தன்னைக் காப்பாற்றிய இந்த நிகழ்வுகள் இரண்டும் பாபாவினது கருணையின் அடையாளங்கள் என்று ஹாஃபர் புரிந்து கொண்டார். தனது வீட்டை அடைந்த பின்னர், பஜன் சென்டருக்கு சென்று வருவதை வழக்கமாகக் கொண்டார். சேவை நிகழ்வுகளிலும் அவர் பங்கு கொண்டார். அவரது பெற்றோரும், இவரது மாற்றத்திற்கு பாபா தான் காரணம் என்று உணர்ந்தாலும், அவர்கள் தீவிர கிறிஸ்தவர்களாக இருந்ததால் சுவாமியின் பக்தர்களாக மாறவில்லை. ஆனால் ஹாஃபர் சுவாமியின் தீவிர பக்தர் ஆனார்! எந்த ஒரு போதைப் பொருள் அடங்கிய பையுடன் அவர் கைது செய்யப்பட்டாரோ அதனை மட்டும் அவரால் மறக்க முடியவில்லை. சக பக்தர்களின் அற்பமான பார்வைகளும் அவரை வருத்தப்பட வைத்தன. அதனால் அவர் முற்றிலுமாக பாபாவிடம் சரணாகதி அடைந்தார்.
ஆச்சரியப்படும்படியாக, தனது பையில் கண்டெடுக்கப்பட்ட போதைப் பொருளின் பரிசோதனைகள் முடிவடைந்து, அவை வெறும் இரசாயன பொருள்கள்தான் என்றும், அவை போலீசாரால் சந்தேகிக்கப்பட்ட போதைப்பொருள் அல்ல என்றும் அறிவிக்கப்பட்டது!! தான் அந்த குற்றத்திலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்ட உடனே அவர் 1993இல் சுவாமியை தரிசிக்க இந்தியா வந்தார். அவருக்கு இன்டர்வியூ கிடைத்தது! சுவாமி தன் பக்கத்தில் நின்றவாறு எடுக்கப்பட்ட போட்டோவும் அவருக்கு கிடைத்தது! இவராக எதுவும் கூறாமலே இவரது நடந்து முடிந்த வாழ்க்கை வரலாற்றை முழுமையாக சுவாமி இவரிடம் ஒப்பித்தார்!! அவரை ஒரு ஆசிரியர் பணியை ஏற்று, குழந்தைகளுக்கு மனித விழுமங்கள் குறித்து கற்பிக்கும்படி பணித்தார். இறுதியில் சுவாமியிடம் அவர் , " சுவாமி! நான் இனிமேல் சுவாமியின் அறிவுரைகளைப் பரப்பும் சேவையில் என் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்கிறேன்! ஆனால் எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள்! எனது பெற்றோரும் தங்களது பக்தர்களாக மாற வேண்டும்!" என்றார்! அதற்கு சுவாமி, " உனது பெற்றோர்கள் ஏற்கனவே இயேசு கிறிஸ்துவின் ஆழ்ந்த பக்தர்களாக உள்ளனர்! ஆகவே அவர்களும் என் பக்தர்கள் தான்! அவர்களது நம்பிக்கையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை! நீ உனது நம்பிக்கையை நன்கு வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவாயாக!" என்றார்!
கடந்த 23 வருடங்களாக சத்ய சாயி நிறுவனத்தில் தேசிய அளவில் சிறந்த சேவையாளராக ஹாஃபர் இருந்து வருகிறார்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 492:
செல்வியா ஜரெட் என்னும் சுதந்திரமான கருத்துக்களைக் கொண்டவரும் அறிவுத்திறன் மிக்கவருமான ஒரு இளம் பெண், ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்டில் வசித்து வந்தார். தனது 14 வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய அவர், ஒரு விற்பனை பெண் (sales girl)ஆகவும் ஒரு , "மாடல்" ஆகவும் மாறினார். நன்றாக பணம் சம்பாதித்து தனக்கென்று ஒரு அபார்ட்மெண்ட்டை விலைக்கு வாங்கினார். காலப்போக்கில் அவர் தீய நட்பின் காரணமாக போதைப் பொருள்களுக்கு அடிமையானார். உலக சுகங்களின் தேடலில் தன்னுடைய நலம் விரும்புகிறவர்களிடம் இருந்து விலகி, ஏழு வருடங்கள் எந்த ஒரு குறிக்கோளும் இன்றித் த
திரிந்தார்! புத்திசாலித்தனம் இருந்ததால் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்க ஆரம்பித்து மீண்டும் பள்ளியில் படிக்கச் சென்றார்.
இவர் படித்த பள்ளியில் ஒரு ஆசிரியர் சுவாமியின் பக்தராக இருந்தார்! "பியூர் லவ்" என்ற தலைப்பில் இருந்த, சுவாமி பற்றிய வீடியோவை ஒருநாள் இந்த ஆசிரியர் காண்பித்தார். அதைப் பார்த்த சில்வியா, சுவாமியைப் பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வமும் ஆசையும் கொண்டார்!
1998இல் தனது 22 வது வயதில் அவர் புட்டப்பர்த்திக்கு வந்தார். அவர் சுமார் 100 அடி தூரத்தில் சுவாமியை பார்த்தார். அந்த தரிசனம் அவருக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது! அதனால் தனது எல்லா தீய பழக்கங்களுக்கும் முழுக்கு போட்டுவிட்டு சாயி சென்டரில் ஒரு சுறுசுறுப்பான உறுப்பினரானார்! பிறகு தனது இதயபூர்வமான உழைப்பின் மூலம் அந்த சென்டரின் தலைவரானார்! பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகை நிகழ்ச்சிகளைப் பார்த்த அவர், மிகவும் கவரப்பட்டு, அடுத்த வருடம் தனது தாயையும் தன் எதிர்கால கணவரையும் அழைத்துக் கொண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் பிரசாந்தி நிலையம் வந்தார். அப்போது ஹங்கேரி நாட்டின் குழு, ஒரு நிகழ்ச்சியை சுவாமியின் முன்னிலையில் நடத்தியது. அதன் முடிவில் சுவாமி சில்வியாவுக்கு ஒரு தங்க சங்கிலி வரவழைத்துக் கொடுத்தார்! தங்கச் சங்கிலியுடன் பாத நமஸ்காரம் செய்த சில்வியா விவரிக்க முடியாத ஆனந்தத்தை அடைந்தார்! இதன் மூலம் மேலும் ஊக்கம் அடைந்த சில்வியா, ஹங்கேரி நாட்டின் சத்ய சாயி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளராகப் பதவி ஏற்றார்!
சுவாமி, எவ்வாறு தன்னிடம் மக்களை ஈர்த்து அவர்களை நற்பண்புகள் உடைய குடிமக்களாக மாற்றுகிறார் என்பதற்கு, சில்வியா அவர்கள் ஒரு நல்ல சான்று ஆவார்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 493:
திருமதி.மாத்வி என்பவர் தான்சானியாவில் ஒரு தனவந்தர் குடும்பத்தில் பிறந்தவர்; அக்கவுண்டண்ட்டாக வேலை பார்த்து வந்தார்; மிகுந்த ஆர்வத்துடன் இசைத்துறையில் தனது ஆற்றலை நன்கு வளர்த்துக் கொண்டார்; சுவாமியின் பக்தையாக மாறிய பிறகு தனது பெயரை "மாத்வி சாயி" என்று மாற்றிக் கொண்டார். அவரால் இயற்றப்பட்ட பஜனைகள் "அர்ப்பணா" என்ற பெயரில் தொகுப்பாக வெளியிடப்பட்டன. அந்தத் தொகுப்பு உலகம் முழுவதும் சாயி நிறுவனங்களில் பிரபலமடைந்தது. அவர் தனது அனுபவங்களை விவரிக்கிறார் இதோ:
"எனது பண வசதியினாலும் இசைத் திறமையினாலும் நான் ஒரு நாகரிக வாழ்க்கையிலே காலத்தைக் கழித்தேன். அப்போது 1995இல் எனது வாழ்க்கை முறையில் ஓய்வு என்பதே இல்லாமல் போய், எனது கண் பார்வையில் மிகவும் தீவிரமான கோளாறு ஏற்பட்டது! மருத்துவரின் ஆலோசனையின்பேரில் நான் எனது வேலையை ராஜினாமா செய்தேன். மேலும் எனது இசை நிகழ்ச்சிகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்தேன். இவ்வாறு நான் மூன்று வருடங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்! அப்போது என் நண்பர் ஒருவர் "யுகாவதாரி" என்ற தலைப்புடைய புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அது என்னை மிகவும் கவர்ந்தது. பிறகு நான் எனது இருப்பிடத்திற்கு அருகில் நடந்த பஜனை நிகழ்ச்சிகளில் இடைவிடாது கலந்து கொண்டேன். என் வாழ்க்கையில் அற்புதமான திருப்பம் ஏற்படத் தொடங்கியது.. ஒரு அர்த்தமுள்ள ஆரோக்கியமான வாழ்வின் அறிவிப்பாக இருப்பதைப் போல நான் உணர்ந்தேன். 1998 மார்ச் மாதத்தில் நான் பெங்களூருக்கு டிக்கெட் முன்பதிவு செய்தேன். அப்போது எனக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலைமை இருந்ததால் மருத்துவர் அதற்குப் பிறகு செல்லுமாறு எனக்கு அறிவுறுத்தினார். ஆனால் அவரது அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு பெங்களூருவுக்கு சென்றேன். அச்சமயம் சுவாமி பல காலம் அங்கு தங்கியிருந்தார். நான் காலையிலும் மாலையிலும் பஜனைகளில் பங்கெடுத்துக்கொண்டு ஆனந்தமாகக் காலம் கழித்தேன். ஒரு வாரம் ஆனாலும் சுவாமி என் அருகில் வரவில்லை ! நான் ஊருக்குத் திரும்பி செல்லும் நாள் வந்தது. அந்த இறுதி தரிசனத்தின் போது நான் நான்கு அல்லது ஐந்தாவது வரிசையில் தான் அமர்ந்திருந்தேன். சிறிது தூரத்திலிருந்து சுவாமி ஒரு கூர்மையான தனது பார்வையை என் மீது வைத்தார். அந்த கணத்தில் என் உடல் நடுங்கியது! காலம் நின்று விட்டதைப் போல உணர்ந்தேன்! சுவாமி திரும்பிச் சென்றுவிட்ட பிறகும் ஒரு சில நிமிடங்கள் நான் அந்த அபூர்வ உணர்விலேயே இருந்தேன்! நான் தான்சானியாவுக்குத் திரும்பிச் சென்ற பிறகு என் கண்களில் "கிளாக்கோமா" நோய் முற்றிலும் மறைந்து போய்விட்டதைக் கண்டு என் கண் மருத்துவர் மிகவும் ஆச்சரியமடைந்தார்! அறுவை சிகிச்சைக்கு இனி எந்த அவசியமும் இல்லை என்று அவர் கூறினார்! ஆனால் நான் ஆச்சரியப்படவில்லை! ஏனெனில் சுவாமி தன் கூர்மையான பார்வையின் மூலம் என்னை குணப்படுத்தி உள்ளார் என்பதை நான் நன்கு அறிவேன்!!
இந்த ஒரு நிகழ்வு எனது வாழ்க்கையின் திசையை மாற்றி விட்டது!!"
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 494:
19 நவம்பர் 2004 அன்று பகவான் பாபாவின் முன்னிலையில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த ஹெலன் என்பவர் ஆற்றிய உரையிலிருந்து:
"போஸ்னியா போர் தொடங்கியது; அதில் பலர் காயமுற்றனர்; அவர்களுக்கு நாங்கள் (சாயி பணியாளர்கள்) உணவுப் பொருட்களை அளிக்க தொடங்கினோம். அந்தி வேளையில் நாங்கள் அகதிகளின் முகாம்களுக்கு சென்று, கோதுமை, அரிசி, பருப்பு வகைகள், உப்பு, சர்க்கரை போன்றவை அடங்கிய பைகளை அவர்களுக்கு வழங்கி வந்தோம். ஒவ்வொரு பையிலும் சுவாமியினுடைய ஒரு போட்டோவையும் வைத்திருந்தோம். தொடக்கத்திலேயே அகதிகள் அனைவரும், நாங்கள் பைகளை அளித்த உடனேயே அதனுள் கைகளை விட்டு எதையோ தேடுவதைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட்டோம்! அதனைப் பற்றிக் கேட்டவுடன் அவர்கள், "நாங்கள் பாபாவினுடைய போட்டோவை தேடுகிறோம்! ஏனெனில் அவர்தான் அடிக்கடி எங்களிடம் வந்து இந்த பொருள்களை எங்களுக்குக் கொடுத்துவிட்டுச் செல்வார்! அவருடைய புன்சிரிப்பம் கருணைமிக்க வார்த்தைகளும் இந்த கடினமான நேரத்தில் எங்களுடைய இன்னல்களிலிருந்தும் நிவாரணம் அளிப்பவைகளாக இருக்கின்றன!" என்றனர்! போஸ்னியா எங்கே, புட்டபர்த்தி எங்கே? மற்றொரு நிகழ்வு:
சூடான் நாட்டைச் சேர்ந்த டார்போர் என்னும் இடம் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. அங்கு வாழும் மக்கள் பட்டினியால் தவிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டோம். அவர்களுக்கு கோதுமை மாவுதான் மிகவும் அடிப்படையான உணவுப் பொருள் என்றும் தெரியவந்தது. ஆகவே நாங்கள் ஒரு சிறந்த அளவில் கோதுமை மாவினைத் தயார் செய்து வைத்தோம். திடீரென்று
மற்றுமொரு இடத்தில் வாழ்ந்து வந்த ஏராளமான மக்களுக்கும் கோதுமையின் அதிகப்படியான தேவை இருக்கிறது எனக் கேள்விப்பட்டோம்!
ஆகவே நாங்கள் கோதுமை மாவு மூட்டைகளைக் கொண்டு பல சரக்கு லாரிகளை நிரப்பினோம்! நாங்கள் சென்றபோது அங்கே இருந்த மக்களின் அவல நிலையைப் பார்த்து மிகவும் அதிர்ந்து போனோம்! பிறகு தான் தெரிந்தது - அங்கிருந்த ஏராளமான பச்சிளம் குழந்தைகள் பால் பவுடர் கிடைக்காமல் தினமும் இறந்து கொண்டு இருக்கின்றனர் என்று! உடனே அருகில் இருந்த ஊர்களில் எல்லாம் பால் பவுடர் இருக்கிறதா என்று தேடினோம்! ஆனால் அந்த முயற்சியில் தோல்வியுற்றோம்! அப்போது வேறு எந்த வழியும் இன்றி, " பகவான்! நாங்கள் பால் பவுடரைப் பற்றி யோசிக்காமல் இருந்ததற்கு மிகவும் வருந்துகிறோம்.. உங்களுடைய தெய்வீக உதவியை நாடுகிறோம்.. நீங்கள் தான் எங்களின் ஒரே கதி!" என்று சுவாமியிடம் வேண்டினோம்!
பிறகு அந்த கோதுமை மூட்டைகளை லாரிகளிலிருந்து கீழே இறக்கி கொண்டிருந்தபோது ஒரு மூட்டையில் மட்டும் துளை ஏற்பட்டு, உள்ளே இருந்த மாவு கீழே சிந்திக் கொண்டிருந்ததை நாங்கள் கவனித்தோம். அப்போது திடீரென ஒரு குழந்தைகளின் கூட்டம் அந்த மூட்டையின் மேல் குதித்து அதிலிருந்து மாவை வாயில் அள்ளிப் போட்டுக்கொண்டு ருசியுடன் சாப்பிட்டு மகிழ்வதை நாங்கள் பார்த்து ஆச்சரியமடைந்தோம்! உடனே எங்களுக்கு சந்தேகம் வந்தது! எங்களில் ஒருவர் அந்த மாவினை எடுத்து ருசி பார்த்த பிறகு, அது பால் பவுடர்தான் என்று தெரியவந்தது! நானும் பிறகு அதனை ருசி பார்த்தேன்! எந்தவித ஐயமும் இன்றி அது பால் பவுடர்தான் என்று நாங்கள் உறுதி செய்தோம்! ஒரு நூறு டன் எடையுள்ள கோதுமை மாவு அனைத்தும் பால் பவுடராக மாறி இருந்தது! உடனே நாங்கள் அனைவரும் மண்டியிட்டு பகவானின் இந்த ஒரு அற்புதச் செயலுக்கு நன்றி கூறினோம். "
ஹெலன் அவர்கள் இறுதியில் "நீங்கள் அனைவரும் அதிர்ஷ்டம் மிக்கவர்கள்! ஏனெனில் நீங்கள் சுவாமியின் தரிசனத்தையும் ஸ்பரிசத்தையும் தினமும் பெறுகிறீர்கள்! அதே சமயத்தில், மற்ற நாடுகளில் உள்ள மக்கள், சேவைப் பணிகளின் போது சுவாமி அங்கே அவர்களுடன் இருப்பதை உணர்கிறார்கள்!" என்று கூறி, தன் உரையை நிறைவு செய்தார்.
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 495:
திரு.எம்.கே. ரஸ்கோத்ரா, ஐ. எஃப்.எஸ், அவர்கள், இந்திய தூதராக பல நாடுகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது அனுபவம் ஒன்றை அவரது வார்த்தைகளில் படிப்போம்: "ஜூன் 1985இல் லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் ஒரு முனையத்திலிருந்து (டெர்மினல்) மற்றொரு முனையத்திற்கு நான் சென்று கொண்டிருந்தேன். அப்போது நான் தவறான ஒரு பேருந்தில் ஏறிவிட்டேன்; சிறிது தூரம் சென்ற பிறகு தான் நான் தவறை உணர்ந்தேன்! ஆகவே அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிட்டேன்; அந்த அவசரத்தில் நான் எனது கைப்பையையும் ஒரு செய்தித்தாளையும் எனது இருக்கையில் விட்டுவிட்டேன்! என்னுடைய பணம், பாஸ்போர்ட், கிரெடிட் கார்டுகள், முகவரிகள், தொலைபேசி எண்கள் ஆகிய அனைத்தும் அந்தப் பையில் இருந்தன! நான் அடுத்த பேருந்தில் ஏறியவுடன் அதிலிருந்த ஓட்டுனரிடம் எனது சிக்கலைத் தெரிவித்தேன். அவர் ஏதாவது உதவி புரிய முடியுமா என்றும் அவரிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்," இந்த இரண்டு முனையங்களுக்கும் நடுவே குறைந்தபட்சம் 200 பேருந்துகள் இயங்குகின்றன! நீங்கள் பையைத் தவறவிட்ட பேருந்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்! ஆகவே முதலில் நீங்கள் இறங்கி விடுங்கள்! கடவுள்தான் உங்களுக்கு உதவ வேண்டும்!" என்றும் கூறிவிட்டார்!!
நானும் உடனே பேருந்தில் இருந்து கீழே இறங்கி, எதனை மட்டும் என்னால் அந்தத் தருணத்தில் செய்ய முடியுமோ அதனைச் செய்தேன்: கண்களில் நீர் வழிய பகவானிடம் பிரார்த்தனை செய்தேன். இரண்டு நிமிடங்கள் கழிந்திருக்க கூடும்- என் அருகில் ஒரு வெள்ளை நிற கார் வந்து நின்றது. மீசையுடன், குளிரூட்டும் கண்ணாடிகள் அணிந்திருந்த மெக்சிகன் ஓட்டுனர், என்னிடம் "நீங்கள்தான் பஸ்ஸில் பையை மறந்து வைத்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்! இந்த பை தான் உங்களுடையதா?" என்று கேட்டுவிட்டு, " உடனே காரினுள் ஏறுங்கள்! உங்களை நீங்கள் செல்ல வேண்டிய முனையத்தில் இறக்கி விடுகிறேன்!" என்று கூறினார்! நானும் அவ்வாறே செய்தேன். என் பையை நெஞ்சில் அணைத்துக் கொண்டு சுவாமிக்கு என் மனமார்ந்த நன்றிகளை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் நிலையில் எனது முனையத்தை அடைந்தேன்! அந்த ஓட்டுனர் சிரித்துக் கொண்டே என்னை இறக்கி விட்டு விட்டு நான் அவருக்கு நன்றி கூறுவதற்கு முன்னர், சிறிதும் காத்திராமல் சென்று விட்டார்! அவரது முகத்தையும் குரலையும் சிறிது நேரம் ஆராய்ந்து பார்த்ததில் திடீரென்று எனக்கு "அவர் பகவான் பாபா தான்! "என்று புலப்பட்டது!!
இந்தியாவுக்குத் திரும்பிய உடனே நான் பிரசாந்தி நிலையம் விரைந்தேன். அங்கே, சுவாமி என்னை பார்த்தவுடன், " உனக்குத் தெரியுமா? லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் உனது வேண்டுதலை நான் கேட்ட உடனே உனது கைப்பையை உனக்கு கொண்டு வந்து கொடுத்தேன்!" என்று கூறினார்!! சுவாமியின் பாதங்களை ஸ்பரிசித்தவுடன் நான் ஆனந்தத்தால் நிரப்பப்பட்டேன்!! நான் அப்போது என் இதயத்தில் இருந்து கூறினேன்: " சுவாமி இல்லாத இடம் இந்த பிரபஞ்சத்தில் ஏதேனும் உள்ளதா? (இல்லை) என்று!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 496:
முனைவர். அனந்தராமன், "ஹார்வர்டு ஸ்கூல் ஆஃப் பிசினஸ்" இல் தனது எம்பிஏ பட்டப்படிப்பை முடித்தார்; கொலம்பியா பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். அவர் 25 வருடங்கள் அமரிக்காவில் தொழில்துறையிலும் பேராசிரியராகவும் பணி செய்தார். 1975இல் தன் தாயைப் பார்ப்பதற்காக பெங்களூரு வந்தார். அப்போது தாயின் வற்புறுத்தலின்பேரில், தாய், தன் மனைவி மற்றும் மகனுடன் வைட்ஃபீல்டு சென்று சுவாமியை தரிசித்தார். காலை தரிசனத்திற்குப் பிறகு தாயை வைட்ஃபீல்டில் விட்டு விட்டு தனது மனைவி மற்றும் மகனுடன் ஒரு நீச்சல் குளத்திற்கு சென்றார். அவரது மகன் அருகில் இருந்த ஒரு தோட்டத்தில் பந்து விளையாடிக் கொண்டிருந்தான். ஒரு மணி நேரம் கழித்து தனது மகன் நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்தார் அனந்தராமன்! சிறிது நேரத்தில் மெதுவாக தன் சுய நினைவு திரும்பப் பெற்ற அச்சிறுவன் தனது அனுபவத்தை தன் பெற்றோர்களிடம் பகிர்ந்து கொண்டான்: " நான் பந்தை அடித்தபோது அது நீச்சல் குளத்தில் வந்து விழுந்தது. அதனை எடுக்க முயற்சித்த போது நான் குளத்தினுள் விழுந்துவிட்டேன்! உதவிக்காக நான் உங்களை உரக்கக் கூவி அழைத்த போது நீங்கள் யாரும் என் கூக்குரலைக் கேட்கவில்லை! அப்போது, நாம் காலையில் பார்த்த, நீளமான சிகப்பு நிற அங்கி அணிந்திருந்த, அந்த குரு, தன் கையினால் என்னைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு நான் தண்ணீரின் மேல் மிதக்க உதவினார்! இந்தக் கணம் வரை அவர் இங்குதான் இருந்தார்!" என்று கூறினான்!!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 497:
1974 இல் ஒருநாள் சுவாமி உத்திரப் பிரதேச சாயி நிறுவனத்தின் பணியாளர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அந்த மாநிலத் தலைவர், திரு. தேவ தயாள் குப்தாவின் பக்கம் திரும்பிய சுவாமி, " குப்தா! சீக்கிரமாக நீ உன் கண் பார்வையை இழக்கப் போகிறாய்!" என்றார்! உடனே குப்தா அவர்கள், " சுவாமி! நீங்கள் என்னைப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றி இருக்கிறீர்கள்! நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை! என்னிடம் சுவாமி இருக்கிறார்!" என்றார்!! உடனே சுவாமி, " நான் உண்மையைக் கூறுகிறேன்! உனது கடந்த பிறவிகளில் நீ சேர்த்த கர்ம வினைகளின் காரணமாக, நீ உன் கண் பார்வையை இழப்பாய்! இந்த வினையை நீ இந்த பிறவியில் அனுபவிக்க விரும்புகிறாயா அல்லது அடுத்த பிறவியில் அனுபவிக்கலாம் என்று விரும்புகிறாயா?" என்று சுவாமி கேட்டார்! அதற்கு அவர், "நான் குருடனாக வேண்டும் என்ற விதி இருந்தால் இந்தப் பிறவியிலேயே நான் சுவாமியின் பணியை செய்து கொண்டிருக்கும்போதே அனுபவிக்க விரும்புகிறேன்!" என்று பதில் அளித்தார்!
அவர் தனது ஊரான மீரட்டுக்கு திரும்பிய 6 மாத காலத்தில் அவரது இடது கண்ணில் ஒரு துளை உண்டாகியது! அதிலிருந்து திரவம் வெளியேறத் தொடங்கியது. பிறகு செய்த அறுவை சிகிச்சை பலன் அளிக்கவில்லை. பிறகு வலது கண்ணில் இருந்த கு
புரையை நீக்குவதற்காக மருத்துவர்கள் அறுவை சிகிச்சையைப் பரிந்துரைத்த போது அவர் மறுத்துவிட்டார். வேறு எந்த மருந்து சிகிச்சையையும் கூட அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. சீக்கிரத்தில் அவர் தனது இரு கண்களிலும் பார்வையை இழந்தார். ஆயினும் அவர் ஒரு நண்பரின் உதவியுடன் சேவை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றார். 1974 முதல் ஆறு வருடங்களாக, தொடர்ந்து மாநிலத் தலைவர் பொறுப்பில் இருந்த குப்தா அவர்கள், மாநில சாயி நிறுவனம் சார்பாக எடுக்கப்பட்ட அனைத்து சேவை நடவடிக்கைகளைப் பற்றி தொடர்ந்து சுவாமிக்கு கடிதங்கள் அனுப்பி வந்தார். ஆயினும் தன் கண் பார்வையை சரி செய்யுமாறு அவர் சுவாமியிடம் வேண்டவேயில்லை!
1976 இல் ரிஷிகேசத்தில் சாயி நிறுவனங்களின் சேவை நடவடிக்கைகள் தொடர்பாக ஒரு கண்காட்சியை அமைப்பதற்காக விரிவான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அவரிடமிருந்து அதற்கான அறிக்கையைப் பெற்ற சுவாமி அவரை மற்றொரு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் திடீரென்று மிகவும் ஆச்சரியமான வகையில் அவரது இடது கண் தானாகவே குணமாகிவிட்டது!!
அவரைப் பரிசோதித்த மருத்துவர் சந்தீப் மட்டல் அவர்கள் இந்த முன்னேற்றத்தைக் கண்டு அதிர்ந்து போனார்! குப்தா அவர்களுடைய வலது கண்ணை மட்டும் (புரை நிமித்தம்), பாபாவின் மீது பக்தியுடன் அந்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்தார். 1981இல் பிரசாந்தி நிலையத்தில் சுவாமியின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை தனது குணமான கண்களால் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த குப்தாவைப் பார்த்த அவரது நெருங்கிய நண்பர்கள், சுவாமியின் அருளினால் அவர் கண் பார்வையை திரும்பப் பெற்றதை நினைத்து மிகவும் மகிழ்ந்தனர்.
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 498:
புட்டப்பர்த்தியில், உஸ்தாத் முஹம்மது தில்ஷத் கான் அவர்களும், பேகம் பர்வீன் சுல்தானா அவர்களும் 20.11.1994 அன்று இரவு ஒரு வினோதமான அனுபவத்தை எதிர்கொண்டனர்! அவர்கள் மறுநாள் சுவாமியின் முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்குத் தாங்கள் பெற்ற வாய்ப்பையும் அனுக்கிரகத்தையும் நினைத்து மகிழ்ந்து கொண்டே உறங்கச் சென்றனர்.
ஆனால் தன் காலில் இருந்த வலியின் காரணமாக தில்ஷத் அவர்களால் உறங்க முடியவில்லை. நடு இரவில் சுவாமி அவரது அருகில் வந்து நின்று கொண்டு, " நீ உடல்நிலை சுகம் இல்லாமல் இருப்பதால் நான் இப்போது உன்னிடம் பேசப் போவதில்லை. நாளை காலையில் முதன்முதலாக உங்களை இன்டர்வியூவிற்கு நான் அழைக்கிறேன்!" என்றார்! உடனே தில்ஷத், "மிக்க நன்றி, சுவாமி!" என்று கூறினார்! இந்த நேரத்தில் சுவாமியைப் பார்த்த வியப்பில் இருந்து அவர் மீள்வதற்குள் சுவாமி மறைந்துவிட்டார்!
உடனே அவர் தன் மனைவி பர்வீனை எழுப்பி, நடந்ததைத் தெரிவித்தார். அதற்கு பர்வீன் அவர்கள் சிரித்துக் கொண்டே, "உங்களுக்கு என்ன, பைத்தியம் பிடித்து விட்டதா? இந்த நேரத்தில் எப்படி பாபா தோன்றுவார்? நாம் சுவாமியைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதால் இது ஒரு கனவாக இருக்கும்!" என்று கூறிவிட்டார்!
மறுநாள் மாலையில் பூரணச் சந்திரா ஆடிட்டோரியத்தில் இவ்விருவரும் மிகச் சிறப்பாக இசை நிகழ்த்தினர். சுவாமியும் மிகவும் ரசித்துக்கொண்டிருந்ததால் ஒரு முப்பது நிமிட நிகழ்ச்சி 45 நிமிடங்களுக்குத் தொடர்ந்தது. சுவாமி அவ்விருவரையும் நோக்கி தன் இரு கைகளையும் உயர்த்தி ஆசீர்வதித்தார். உடனே அவர்கள் இருவரும் சுவாமியின் அருகில் வந்து அவரது பாதங்களில் மண்டியிட்டபோது சுவாமி புன்முறுவலுடன் தில்ஷத் அவர்களின் தோளினைத் தொட்டுக்கொண்டு, " நீ உடல்நிலை சுகம் இல்லாமல் இருப்பதால் நான் இப்போது உன்னிடம் பேசப்போவதில்லை! நாளை காலையில் முதன்முதலாக உங்களை இன்டர்வியூவிற்கு நான் அழைக்கிறேன்!!" என்றார்!! இதைக் கேட்ட பர்வீன் சுல்தானா அவர்களுக்குத் தூக்கி வாரி போட்டது!!
முந்தைய இரவில் சுவாமி தில்ஷத் அவர்களிடம் கூறிய அதே வார்த்தைகள் இவை!! அவர் கூறியபடியே மறுநாள் காலையில் சுவாமி அவர்களை இன்டர்வியூவிற்கு அழைத்தார். இஸ்லாமியத்தின் மீது அவர்களுக்கு இருந்த உண்மையான பக்தியையும் நம்பிக்கையையும் சுவாமி புகழ்ந்தார். தனது கையைச் சுழற்றி , தங்க சங்கிலி ஒன்றை ஸ்ருஷ்டி செய்து, அதனைப் பர்வீன் அவர்களின் கழுத்தில், தில்ஷத் அவர்களை அணிவிக்கச் செய்தார். தில்ஷத் அவர்களது முழங்கால் வலி முற்றிலுமாக விலகிவிடும் என்றும் சுவாமி கூறினார். அவருக்கு ஒரு கைக்கடிகாரம் ஒன்றை வரவழைத்துக் கொடுத்தார். இந்த அற்புதமான இன்டர்வியூவிற்குப் பிறகு அவர்கள் இருவரும், ஒவ்வொரு வருடமும் இரு முறை தவறாது புட்டபர்த்திக்கு வந்து கொண்டிருந்தனர்.
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 499:
புட்டப்பர்த்தியில், ஒவ்வொரு மாதத்திலும் முதல் 12 நாட்கள் சத்யசாயி நடமாடும் மருத்துவமனையானது, புட்டபர்த்திக்குச் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு சென்று அங்கு வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவையாற்றி வருகிறது. அதில் பணி செய்து வரும் மருத்துவர்களில் டாக்டர்.த்ரிமூர்த்தி என்பவரும் ஒருவர் . அவரது மனைவியும் ஒரு மருத்துவராவார். டாக்டர்.த்ரிமூர்த்தி
அவர்கள் தனது அனுபவத்தை அவரது சொற்களில் விவரிக்கிறார் இதோ:
13/02/2015 அன்று நானும் என் மனைவியும் எங்களது மாதாந்திர மருத்துவ சேவையை முடித்துவிட்டு புட்டபர்த்தியிலிருந்து ஊருக்கு திரும்பிய போது, எனது சகோதரர் ராமாராவ் அவர்கள் மிகவும் மோசமான உடல் நிலையில் இருப்பதை அறிந்தோம். அவர் தன் சுயநினைவை அற்ற நிலையில் இருந்தார். அவருக்கு காச நோய் மூளைக்காய்ச்சல் இருப்பதாக தெரியவந்தது. நானும் எனது மனைவியும் மறுபடியும் பிப்ரவரி 28 அன்று நடமாடும் மருத்துவ சேவை நிமித்தம் புட்டப்பர்த்தி செல்ல வேண்டி இருந்தது. எனது சகோதரரின் உடல்நிலை காரணமாக, நான், நடமாடும் மருத்துவமனை இயக்குனருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, எங்களுக்கு பதிலாக வேறு மருத்துவர்களை நியமித்துக் கொள்ளும்படி வேண்டினேன். ஒவ்வொரு மாதமும் மருத்துவ சேவைக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த நாங்கள் இருவரும், இந்த முறை செல்ல முடியாத நிலையை நினைத்து மிகவும் வருந்தினோம். ஆயினும் ஏதோ ஒரு நம்பிக்கையின் திடத் தன்மை காரணமாக , எங்களது தொடர்வண்டி பயண சீட்டுகளை ரத்து செய்யவில்லை. பிப்ரவரி 27ஆம் தேதி கூட என் சகோதரர் மிகவும் பலவீனமாக இருந்தார். அன்று இரவு நான் பயணச் சீட்டை ரத்து செய்ய முற்பட்டபோது பயணிகளின் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்த நிலையில் நான் (T.D.R)டிக்கெட் டெபாசிட் ரசீதைப் பதிவு செய்ய வேண்டியதாயிற்று. அதைப்பற்றி எனக்கு ஒன்றும் அறியாமல் இருந்தாலும் அந்த வேலையை செய்து முடித்தேன். மறுநாள் காலையில் என் சகோதரரின் உடல்நிலையில் அதிகம் முன்னேற்றம் இருந்ததை பார்த்த நாங்கள் மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தோம்! அவர் என்னிடம், " நான் இப்போது நலமாக உள்ளேன்! இன்று அதிகாலையில் சுவாமி என் அருகில் வந்து சில நிமிடங்கள் அமர்ந்திருந்தார்! இனி எந்த பயமும் இல்லை! நீங்கள் இருவரும் உங்களது பழைய திட்டத்தின்படி புட்டபர்த்திக்கு செல்லுங்கள்! என்றார்!! இப்பொழுது எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை! நான் இணையதளத்தினுள் சென்று பார்த்த போது, எங்களது இரண்டு டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படாமலேயே இருந்ததை நான் கவனித்தேன்! ஆகவே நாங்கள் இருவரும் அன்று இரவு புட்டபர்த்திக்குச் செல்ல முடிந்தது! சுவாமியின் கிருபையால் என் மூத்த சகோதரர் நோயிலிருந்து முற்றிலும் குணமானார்! (சுவாமியின் லீலை இன்னும் முடியவில்லை!)
நாங்கள் ஊருக்குத் திரும்பிய பிறகு நான் எனது சகோதரரிடம் மருத்துவமனையில் தனது சுவாமியின் அனுபவத்தை மேலும் விவரிக்கும்படி கேட்டபோது, " நீ என்ன பேசுகிறாய்? அந்த மாதிரியான அனுபவம் எதுவும் நடக்கவில்லையே?" என்று கூறி எங்களை மேலும் திகைப்பில் ஆழ்த்தினார்!
ஆதாரம்: திரு பி.வி. ரமண ராவ் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ள , " நேசிக்கும் இறைவனும் அவரது அற்புதங்களும் (Loving God and His Miracles ) - பாகம் இரண்டு" என்ற புத்தகத்திலிருந்து.


























































கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக