தலைப்பு

வெள்ளி, 28 பிப்ரவரி, 2025

ஆயிரம் பிறவிகளின் புண்ணியமே நமக்கு இரு அவதாரங்களின் தரிசனம்!

எவ்வாறு இரு அவதாரங்களின் தரிசனமும் அவ்வளவு எளிதாக யாருக்கும் வாய்க்காது எனும் உண்மையை அவர்களே அகம் திறந்து நம்மை உணரச் செய்கிற ஆச்சர்யப் பதிவு சுவாரஸ்யமாக இதோ...!


ஸுது3ர்த3ர்ஶமித3ம் ரூப1ம் த்3ருஷ்ட1வானஸி யன்மம |

தே3வா அப்1யஸ்ய ரூப1ஸ்ய நித்3யம் த3ர்ஶனகா1ங்க்ஷிண:

பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனரிடம் தனது விஸ்வரூப தரிசனத்தை வாரி வாரி வழங்குகிறார்... இரண்டு கண்களும் போதவில்லை அர்ஜுனருக்கு... ஆகவே அதனை அவர் யோகக் கண்களால் தரிசிக்கிறார்... சுடச் சுட தரிசனம் ஆகிற போது ஸ்ரீ கிருஷ்ணரோ 

"நீ இப்போது தரிசிக்கிற எனது ரூபம் அரிதினும் அரிதானது! கடவுளரால் கூட அவ்வளவு சுலபமாக தரிசிக்க இயலாதது! எனது இந்த அரிய ரூபத்தை வேதங்களாலோ , தவத்தினாலோ , அறநெறியினாலோ, , தியாகத்தாலோ அடையக் கூடியது அல்ல...! 

என்னை உணர்வதோ, என்னுடைய தரிசனம் பெறுவதோ, என்னோடு இரண்டற கலப்பதற்கான பேரனுபவத்தைப் பெறவோ ஒருவருக்குத் தேவை ஒருநிலைப்பாடுடைய பக்தியே!"

என்கிறார்! 

தவமோ தியாகமோ  செய்தாலும் கிடைக்கப் பெறாதது எனது தரிசனம் என்று பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வது அவரது விஸ்வரூப தரிசனமே, ஏனெனில் துருவன் தவம் இருந்தே இறை தரிசனம் பெற்றான்! ஆனால் விஸ்வரூப தரிசனம் அல்ல! அர்ஜுனருக்கு கிடைத்ததோ அரிய விஸ்வரூப தரிசனம்! 

கவித்துவமாகப் பார்த்தோம் என்றால் தனது ஆயுதத்தை கூர்மை செய்து கொண்டிருந்தார் ஸ்ரீ கிருஷ்ணர்! அவரது ஆயுதமே அர்ஜுனர்! அந்த ஆயுதத்திற்கான கூர் தீட்டலே பகவத் கீதை! ஒரு வாளை கூர் தீட்டுகிற போது நெருப்பு சிதறும் அல்லவா... அது போல் தான் விஸ்வரூப தரிசன அனுபவம்!

(ஆதாரம்: ஸ்ரீ மத் பகவத் கீதை - 11.52, 53, 54) 


அதே போல் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் தனது அரிய ரூப தரிசனத்தின் ரகசிய முக்கியத்துவம் பற்றி நிறைய இடங்களிலும், நிறைய பக்தர்களிடமும் பகிர்ந்திருக்கிறார்! 

"என்னுடைய தரிசனத்திற்குப் பிறகு தனி இடம் சென்று அதை உள்ளே ஊற வைத்து அனுபவியுங்கள்! அப்போதே எனது தரிசனத்தின் மூலம் கிடைக்கிற பேரருளை உங்களால் உள்ளே கிரகித்துக் கொள்ள இயலும்! உங்கள் முன்னர் நான் நடந்து சென்று உங்களுக்கு தரிசனம் தருகிற போது என்னிலிருந்து சில இறை சக்தி உங்களுக்குள்ளே செல்கிறது... ஆகவே நான் சொல்வதைப் போல் தனி இடம் சென்று மௌனமாக அதனை அனுபவிக்காமல் நான் தரிசனம் முடித்து சென்ற உடனே அக்கம் பக்கத்தினரிடம் நீங்கள் பேச ஆரம்பித்தால் என்னிலிருந்து உங்களிடம் பரவிய இறை சக்தி உங்களுக்கு பயனே படாமல் என்னிடமே அது திரும்புவிடுகிறது! ஆக அதன் உண்மை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்! என்னுடைய இந்த தரிசனம் நீங்கள் செய்த ஒரு பிறவிப் புண்ணியம் இல்லை... பல பிறவிகளில் நீங்கள் செய்த பெரும்புண்ணியம்! ஆகவே நீங்கள் எனது தரிசனத்தை குறைத்து மதிப்பிடாமல் அதன் அரிய நிகழ்வை உணர முற்படுங்கள்! பல கடவுளரே இந்த தரிசனத்திற்காக காத்திருக்கிறார்கள், ஆனால் உங்களுக்கோ அது தினந்தோறும் இலவசமாக வழங்கப்படுகிறது... அது உங்களுக்குள் சக்தி ஏற்றுகிறது! எனது ஒவ்வொரு தரிசனத்திலும் நீங்கள் புதுப்பிக்கப்படுகிறீர்கள்! சரியான தருணத்தில் உங்களுக்கு அது நன்மையை விளைவிக்கும் என்பதை ஒரு போதும் மறக்காதீர்கள்!" என்று பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொன்னதையே தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும் பகிர்கிறார்! 

இந்த சர்வ சத்தியக் கூற்றை, நேருக்கு நேராக பக்தர்கள் பெற்ற பாபா தரிசனமே வாழ்வாதார சான்றுகளாக இன்றளவும் திகழ்கின்றன... பாபாவை தரிசிக்கையில் மனம் ஒடுங்கும்... புது வித சக்தியோட்ட அதிர்வலைகள் உள்ளே பாயும்... தியான நிலைக்கு அகம் தள்ளப்படும்! எதையாவது பிரார்ததனை செய்து கொண்டிருப்போம் ஆனால் பாபாவை தரிசிக்கிற அந்த தெய்வீக நிகழ்வில் சப்த நாடியும் அடங்கி ஒடுங்கி, பேச்சற்று, ஒரு வித அரிய பரவசத்தில் நாம் நிறைந்திருக்கிறோம்! தானாக கண்ணிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்...!

அடியேனுக்கு இந்த அனுபவம் எப்போதெல்லாம் பாபாவை தரிசித்திருக்கிறேனோ அப்போதெல்லாம் நிகழ்ந்திருக்கிறது! சாயி தரிசனத்திலேயே இப்படிப்பட்ட அனுபவத்தை பற்பலர் பெற்றிருக்கிறார்கள்! 

ஒருமுறை மகாசிவராத்திரி தினம்! அது  ஃபெப்ரவரி 15, 1999 ஆம் நாள்! பாபா தனது திருமணி வயிற்றிலிருந்து ஹிரண்ய கர்ப்ப லிங்கத்தை எடுத்து அதை அனைவருக்கும் தரிசனம் செய்ய வைக்கிறார்! இதை தரிசித்தவர்களுக்கு இனி பிறவி இல்லை என்கிறார்! அதற்குப் பிறகான நாட்களில் வொயிட் ஃபீல்ட் பிருந்தாவனம் செல்கிறார் பாபா! புட்டபர்த்தியில் பணியாற்றும் பாபா கல்லூரி விரிவுரையாளர்களின் மனைவிமார்கள் பாபாவை தரிசிக்க அங்கே வருகிறார்கள்..

"சுவாமி! நீங்கள் சிருஷ்டித்து காட்டிய ஹிரண்ய கர்ப்ப லிங்கத்தை தரிசிக்க அன்று தவறவிட்டு விட்டோமே!" என்று அதில் ஒரு பெண்மணி மனம் வருந்த...

"அதைப் பற்றி கவலைப்படாதே! பங்காரு! நீ என்னை தரிசிக்கிறாய் அல்லவா! அதுவே போதும்! அதுவே உன்னை சம்சாரக் கடலிலிருந்து மீட்டெடுத்துவிடும்!" என்று பாபா சொல்லிய பிறகே அனைவரும் சமாதானப்படுகிறார்கள்! 

ஒருமுறை பாபா கல்லூரியின் பேராசிரியர் சம்பத் அவர்கள் 

"சுவாமி நாங்கள் முன் ஜென்மம் செய்த புண்ணியத்தால் அல்லவா உங்களை இப்போது தரிசித்துக் கொண்டிருக்கிறோம்!" என்று சொல்லிய அடுத்த நொடி...

"இல்லை இல்லை! அது உங்கள் ஒரு ஜென்மத்து புண்ணியம் அல்ல...பல நூறு முற்பிறவிகளின் புண்ணியங்களால் தான் நீங்கள் அனைவரும் என்னை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது!" என்று பாபா மறுமொழி வழங்க... அவர் இருவிழி உடனே ஈரமாகிறது!

(Source : Sri Krishna Sri Sathya Sai | page : 202 - 203 | author : Dr. J. Suman Babu )


சரி! பாபாவை அவரது தேகத்தில் இப்போது தரிசிக்காதவர்களுக்கு என்ன உபாயம் இருக்கிறது? இருக்கிறது! 

பாபாவின் மேல் நீங்காத / மாறாத / துவளாத பக்தி வைத்தபடி அவர் வகுத்த வழியில் நடந்து , நவவித கோட்பாடுகளில் முதல் கோட்பாடான தியானம், ஜபம் ஆகியவற்றை சிரத்தையோடு , எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ஆன்ம சாதனை புரிந்து வந்தால், நிச்சயம் பாபா அவர்களது கனவிலோ, தியானத்திலோ, ஏன்? நேரில் கூட தரிசனம் தருவார்!

அப்படி இன்றளவும் சாயி தரிசனம் பெற்று வருபவர்கள் அநேகம்! 

உறுதியை விடாமல் பிரகலாத பக்தி எவ்வாறு தூணை உடைக்க வைத்ததோ அப்படிப்பட்ட நமது பக்தியால் சாயி தரிசனம் காண காற்றையே கிழிக்க வைப்போம்! தூண் தான் கனமே தவிற காற்றுக்கு கனமே இல்லை! ஆக சாயி தரிசனம் சுலபமே!

எல்லாவற்றுக்கும் மேலாக பாபாவே தனது பிரேம சாயி அவதாரத்தில் தனது உண்மையான பக்தர்களை தன்னிடம் இழுத்து, பிரேமையால் வளைத்து அனுகிரகம் பொழியப் போகிறார் என்பதில் எந்தவிதமான சந்தேகமுமே நமக்குத் தேவையில்லை! 


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக