தலைப்பு

செவ்வாய், 4 மார்ச், 2025

நேரில் தோன்றி திருப்பதி பெருமாள் சொன்ன ரகசியம்!

எவ்வாறு ஒரு நபருக்கு திருப்பதி பெருமாள் காட்சி கொடுத்து சொன்ன ரகசியம் என்ன? அதைத் தொடர்ந்து அவருக்கு நடந்த அற்புதம் என்ன? விறுவிறுப்பாக இதோ..!

அவர் பெயர்  சகுந்தலா அம்மாள், ஸ்ரீ சத்ய சாயி லீலாம்ருதம் எனும் புத்தகத் தொகுப்பில் இவர் சாயி அனுபவங்கள் கொட்டிக் கிடக்கின்றன! 

அவருக்கு திருப்பதி பெருமாள் தான் இஷ்ட தெய்வம்! அவர் குடும்பத்துக்கே பெருமாள் தான் பிரத்யேக தெய்வம்! இப்படி இருக்கையில் வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு இக்கட்டில் இருந்தும் பெருமாள் பல்வேறு வகையில் அவரைக் காப்பாற்றி வருகிறார்! 

ஒரு நாணயத்தை எடுத்து திருப்பதி பெருமாள் திருப்படத்தின் முன்பு வைத்து பிரச்சனை தீர வேண்டிக் கொள்வது அவரது தனிப்பட்ட வழக்கம்! அப்படி நாணயம் வைத்து வேண்டியதுமே பெருமாள் எந்த வகையிலாவது அவருக்கு அந்த பிரச்சனையில் இருந்து நீங்க வழிவகை செய்கிறார்! இது இப்படியே தொடர்கிறது! ஒருமுறை வார்த்தையால் விவரிக்க முடியாத மிகப் பெரிய பிரச்சனை! உயிரே போகும்படியான பிரச்சனை! ஆம் உயிரை துறக்கலாம் என்றே முடிவு செய்கிறார்! தற்கொலைக்கு முன் திருப்பதி பெருமாள் திருப்படத்தின் முன்பு நன்றாக கதறி அழுகிறார்! அந்த கதறல் சத்தம் திருப்பதி வரைக்குமே எதிரொலிக்கும்படி அமைகிறது! அப்படியே தன்னை அறியாமல் தூங்கிவிடுகிறார்! ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அவர் திடீரென எழுந்து கொள்கிறார்! 

அவர் எதிரே திருப்பதி பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார்! அதை அவர் "நீல மேக ஷ்யாம விஸ்வரூப ஜோதி" என்று தனது நூலில் வியந்து விவரிக்கிறார்!

"இப்படி நீ தற்கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பதில் எனக்கு துளியும் விருப்பமில்லை! வாழ்க்கையில் உனக்கு நேர்ந்த பிரச்சனைக்கு உன் முன்ஜென்ம கர்மாவே காரணம் என்பதை உணர்ந்து கொள்! அதைப் போன்ற பிரச்சனைகளை எல்லாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்! புரிகிறதா? இனி நீ எதற்கும் கவலைப்படாதே! நான் பூலோகத்தில் ஸ்ரீ சத்ய சாயி பாபாவாக அவதரித்திருக்கிறேன்! ஒரு முக்கியப் பணிக்காக உன்னை தேர்ந்தேடுத்திருக்கிறேன்! விரைவில் அதைப் பற்றி நீ தெரிந்து கொள்வாய்!" என்று சொல்லி மறைந்து போகிறார்!

அந்த திருப்பதி பெருமாள் தரிசனத்திற்குப் பிறகு பாபா மேல் பெரிய ஈர்ப்பும் பக்தியும் ஏற்படுகிறது அவருக்கு! பாபாவின் திருப்படங்களை எல்லாம் சேகரிக்கிறார்! ஒரு திருப்படத்தை ஃபிரேம் செய்து வழிபட்டு வருகிறார்! பாபாவை தரிசித்து அவரின் பாதங்களை தீண்ட மாட்டோமா என்ற தாகம் அவர் இதயத்தை வெகுவாக பீடிக்கிறது! காலமோ நீடிக்கிறது! 

அவரின் ஒரு நண்பர் - "நீ பாபாவுக்கு கடிதம் எழுதிப் பாரேன்!" என்று தூண்டிவிட - சகுந்தலாவும் கடிதம் எழுத - சில வாரம் கடக்கிறது! ஆனால் பாபாவிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை! வருத்தம் மேலோங்குகிறது! சகுந்தலாவும் வருத்தப்பட்ட அந்த இரவே பாபா அவரின் கனவில் தோன்றி "நாளை நான் உன் வீட்டிற்கு வருகிறேன்! எனக்கு பால் தயார் செய்து வை!" என்று சொல்லி மறைந்து விடுகிறார்! 

எழுந்த சகுந்தலா பரவசத்தோடு வீட்டில் பாபாவின் செய்தியைப் பகிர குடும்பத்தினர் யாரும் அதை நம்பவில்லை! ஆனால் அவர் குளித்து முடித்து பாபாவின் திருப்படத்தின் முன் மலர் சாற்றி வழிபட்டு - பாலையும் தயார் செய்து வைக்கிறார்!

அப்போது ஒரு அற்புதம் நிகழ்கிறது! அதில் சகுந்தலா பரவசப்படுகிறார்! 

ஒரு நொடிக்குள் ஒரு பேரொளி பாபாவின் திருப்படத்தின் மேல் தோன்றுகிறது! அப்படி தோன்றி மறைகிற அந்த இடத்தில் விபூதி சிருஷ்டி ஆகிறது! பாபாவின் திருப்படத்தை தரிசித்த குடும்பத்தினருக்கு "இப்படியும் நடக்குமா!" என்று ஒரே அதிர்ச்சி! இந்த சம்பவத்தை சகுந்தலா தனது அதே நண்பரிடம் தெரிவிக்க - "நீ பாபாவுக்கு எழுதிய கடிதத்திற்கான பதில் தான் இது!" என்று பக்தியோடு சொல்ல...! வெறும் கடிதத்திற்கான பதில் மட்டுமல்ல சகுந்தலாவின் வாழ்க்கைக்கான பதிலாகவே இதனை உணர முடிகிறது!


(ஆதாரம் : "ஸ்ரீ சத்ய சாயி லீலாம்ருதம்" - பக்கம்  1,2,3 - பதிப்பாசிரியர் - டாக்டர் கே.டி.குமார் - பதிவு ஆண்டு 2004)


பேரிறைவன் பாபாவின் திருப்படம் ஒரு திருப்ப(ட)ம்! ஆகவே தான் சாயி பக்தர்கள் நாம் அனைவரும் நம்மோடு பழகுகிறவர்கள் அனைவருக்கும் பாபாவின் திருப்படத்தை அன்பளிப்பாக வழங்க வேண்டும்! அது படமே அல்ல அது பாபாவே! "படத்தை வழங்கினால் என்ன நினைத்துக் கொள்வார்கள் என்ற தேவையற்ற எதிர்மறை சிந்தனைக்குச் செல்லாமல்! மனமுவந்து பாபா படத்தை வழங்கிப் பாருங்கள் - பாபா அவர்களின் கண்வழி நுழைந்து இதய சிம்மாசனத்தில் அமர்வார்! ஏனெனில் திருப்பதியில் இருக்கிறவர் தானே புட்டபர்த்தியிலும் இருப்பது!


பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக