தலைப்பு

புதன், 19 மார்ச், 2025

இங்கிலாந்துக்காரர் கனவில் கண்ட இறைவனின் இடம்!

எவ்வாறு சம்பந்தமே இல்லாத ஒரு வெளிநாட்டு நபருக்கு பேரிறைவன் பாபா ஏற்படுத்திய பரவச அனுபவம் - அதன் ஊடாக அவருக்கு விளைந்த சாயி பக்தி சுவாரஸ்யமாக இதோ...!


அது 1978. டாக்டர் டாக்யி பிரசாந்தி நிலையத்திற்கு வருகிறார்! அக்ரா என்கிற சாயி சென்டர் அழைத்து வருகிற புட்டபர்த்தி விஜயம் அது! அதற்கு பல வருடம் முன்பே - அதாவது 1950களிலேயே அவருக்கு ஏற்பட்ட ஒரு ஆச்சர்ய அனுபவம் அது! பிற்காலத்தில் மே 1984 ஆம் ஆண்டு சனாதன சாரதியிலும் அவர் அனுபவம் பிரசுரமாகி இருக்கிறது! 

பல பக்தர்கள் பாபா கடவுளா? என்று பலரால் கேள்வி எழுப்ப படுகிறார்கள் என்கிறார் டாக்யி! முதலில் துணிவோடு அந்தக் கேள்வியை அணுக வேண்டும் எனவும் பிறகு கனிவோடு அதற்கு அவரவர் அனுபவம் பகிர வேண்டும் எனவும் இதயத்தில் இருந்து பதில் சொல்ல வேண்டும் எனவும் - ஆம் கடவுள் புட்டபர்த்தியில் இருக்கிறார் வந்து தரிசித்து தன்னைப் போலவே அனுபவித்து ஆனந்தம் அடையுங்கள் என பாபா சொல்வதையே அவரும் சொல்கிறார் - அப்படி சொல்லி தனது சாயி அனுபவத்தின் சந்நிதி திறக்கிறார்...!


 அது 1950. அது கோடை காலம்! சால்வேஷன் ஆர்மி விடுதியில் ஒரு சாதாரண அறையில் அன்றைய இரவுப் பொழுதைக் கழிக்கிறார்! அது இங்கிலாந்து பாஸ்கோம்பேவில் இருக்கிறது! அந்த இரவில் தூங்குகிற போது டாக்யி'க்கு ஒரு கனவு தோன்றுகிறது! அதில் இருவர் வெள்ளை உடை அணிந்து அவரை அலேக்காக தூக்கிக் கொண்டு வானத்தில் பறக்கிறார்கள்! பிறகு ஒரு இடத்தில் சேர்த்துவிட்டு "இது கடவுளின் இடம் - இங்கே கடவுள் வசிக்கிறார்!" என்கிறார்கள் தூக்கிக் கொண்டு வந்த அந்தத் தூய வெண்ணாடை நபர்கள்! சரி கடவுளே வெளியே வருவார் போல என காத்துக் கொண்டே இருக்கிறார் - ஆனால் அவர் வெளியேவே வரவில்லை! பிறகு கனவும் மறைந்து போகிறது! யார் அந்தக் கடவுள்? எப்படி இருப்பார்? ஒன்றும் தெரியவில்லை! காலம் உருண்டோடுகிறது! அது 1977. பிளிப்பைன்ஸ் பெண்மணி வழியாக பாபாவை கேள்விப்பட்டு முதன்முறையாக புட்டபர்த்தி வருகிறார்! பாபா அப்போது பூர்ண சந்த்ரா வளாகத்தில் தரிசனம் தருகிறார்! இவர் சரியாக அங்கே நிற்கிறார்! அவர் நின்று சுற்றும் முற்றும் பார்த்து பிரம்மித்தே போகிறார்! அதே பூர்ண சந்த்ரா அரங்கமே பல ஆண்டுகளுக்கு முன் அவர் கனவில் அந்த இருவர் சொன்ன 

"கடவுளின் இடம் இது - கடவுள் இங்கே தான் வசிக்கிறார்!" என்ற அந்த இடம் - அதே இடம்!

அந்த வாசகமும் நினைவுக்கு வருகிறது! பாபாவும் அப்போது நடந்து வருகிறார்! தரிசனம் தருகிறார்! தன்னை அவர் புகைப்படம் எடுக்க பாபா அனுமதிக்கிறார்! 

அதற்குப் பிறகு பல சாயி கனவுகளும் அவரை பின்தொடர்கின்றன! பாபா முதுகில் தட்டி ஆசீர்வதிக்கும் அனுகிரக கனவுகளும் அவர் சாயி பக்திக்கு உரம் சேர்க்கிறது! அவர் வீட்டு பாபா திருப்படத்தில் இருந்து விபூதி அமிர்த சிருஷ்டி வழிதல் ஆன்மப் பொழுதாய் நிகழ்ந்து ஆனந்தம் தந்து கொண்டே இருக்கிறது!


(Source : Beyond Borders | page : 13 -15 | author : k.karthikeyan | year : 2015) 


10,000 கிலோமீட்டர் மேல் தூரம் இருக்கும் இங்கிலாந்தும் புட்டபர்த்தியும் - ஆனாலும் பாபாவின் இறை இணைப்பு அற்புதமானது! அது வார்த்தைக்குள் அடங்காதது! அது அதிசயம் நிறைந்தது! எல்லோரும் பாபாவின் கண்காணிப்பில் இருந்தாலும் கூட  புண்ணியப் பிறவிகளே கவனிப்பில் இருக்கிறார்கள்! அந்த கவனிப்பை நாமும் பெற - புண்ணியம் செய்ய வேண்டும்! சுயநலம் விடுத்து தியாக உணர்வோடு சக மனிதனை நேசித்து நல்லது செய்வதே பாபாவின் கவனிப்பு வளையத்திற்குள் நம்மையும் கொண்டு வந்து சேர்க்கிறது! சரி - புண்ணியம் செய்வோமா?!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக