தலைப்பு

வெள்ளி, 21 மார்ச், 2025

செயல் இழந்த கிட்னி பாபா விபூதியால் இயங்கியது!

பாபா புரிந்து வரும் மருத்துவ மகிமைகளும் - அருகிருந்து தனது பக்தர்களுக்கு அவர் புரியும் தெய்விகப் பேருதவியும் சுவாரஸ்யமாக இதோ...!


பேராசிரியர் ராமராஜ் பாபாவின் கல்லூரியில் வேலை பார்க்கிறவர்! அவரின் நண்பர் ஒருவரின் மனைவிக்கு கிட்னியில் நோய்! கிட்னி பழுதடைந்து விடுகிறது! ஆகவே பாபா தரிசனத்திற்காக புட்டபர்த்தியில் மூன்று நாட்களும் காத்திருக்கிறார்கள்! ஆனால் மூன்று நாளும் அவர்களின் அருகே கூட வரவில்லை பாபா! சரி! பாபா தங்களை கைவிட்டுவிட்டார் என்று அவர்களே கற்பனை அலைமோத சுயமுடிவுசெய்து கொண்டு  விரக்தியோடு வெளியே வருகிறார்கள்! பேராசிரியர் ராமராஜ் அந்தத் தம்பதிகளை புட்டபர்த்தியில் தனது பேரன் கல்வி அட்மிஷனுக்காக வந்திருந்த சகுந்தலா அம்மாளிடம் அழைத்துச் செல்கிறார்! விபரம் அறிந்து அங்கேயே பாபாவிடம் பிரார்த்தனை செய்த சகுந்தலா விபூதி இட்டு விடுகிறார் விபூதியும் கையில் தந்து - ஆப்ரேஷனே இல்லாமல் பாபா காப்பாற்றி விடுவார் என்கிறார்! ஓர் உள்ளுணர்வு சகுந்தலாவுக்கு! அவர்களும் ஊருக்கு வருகிறார்கள்! சென்னைக்கு வந்த பிறகு கிட்னி பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு ஒரு கனவு வருகிறது! கனவில் பாபா வருகிறார் - வந்து 

"பயப்படாதே! உன்னைத் தேடி சகுந்தலா வருவாள் - வந்து விபூதி தருவாள்!" என்று சொல்லி மறைந்து போகிறார்!

இந்தக் கனவு சகுந்தலாவுக்கு தெரிந்திருக்கவில்லை! அந்தக் காலத்தில் செல்ஃபோனும் இல்லை! 

உள்ளுணர்வு ஏற்பட்டு எதேர்ச்சையாக சகுந்தலா அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்து விபூதி தருகிறார்! வந்த பிறகே அந்தக் கனவை கேள்விப்பட்டு ஆச்சர்யப்படுகிறார் சகுந்தலா!

அந்தப் பெண்ணும் அந்த பாபா விபூதியை நம்பிக்கையோடு தினமும் உட்கொண்டு வருகிறார்!

கொஞ்ச நாட்களிலேயே பெரும் முன்னேற்றம்! அறுவை சிகிச்சையே இன்றி பழுதடைந்த கிட்னி சரியாகி விடுகிறது! பிறகு அவள் செய்து வந்த வீட்டுக் கடமைகளில் எந்த ஒரு தொய்வுமே இல்லை! 


ராமசுவாமி என்பவர் ரிஷிகேஷ் பயணத்திற்கு திட்டமிட்டு சக சாயி பக்தர்களை அழைக்கிறார்! அப்போது சகுந்தலா தானும் வருவதாக பெயர் தருகிறார்! சகுந்தலா வீட்டில் நிகழும் சிருஷ்டி மகிமைகளை கண்டு பரவசப்படும் சக சாயி பக்தர்கள் - "அதான் உங்கள் வீட்டிலேயே பாபா இருக்கிறாரே - இந்த வயதான காலத்தில் சிரமப்பட்டு நீங்கள் ஏன் அதுவரை வரவேண்டும்!" என்று கேட்டுவிட - எதுவும் பேசாமல் அமைதியாகி விடுகிறார் சகுந்தலா!

தனது வீட்டிற்கு வருகிறார் சகுந்தலா!

பாபாவின் திருப்படத்தைக் கண்டு பரவசப்படுகிறார்!

எப்போதும் விபூதி குங்குமம் என்று சிருஷ்டியாகும் பாபாவின் படத்தில் அன்று பார்த்து நீர் தாரை பெருகி வருகிறது! அது கங்கை நீர் என பருகுகிற போது புரிகிறது! அந்த ரிஷிகேஷத்து இறைவன் தானே என்பதையும் சக சாயி பக்தர்கள் சொன்னது போல் கங்கஜடாதர சாயி அன்று சகுந்தலாவுக்கு கங்கையை வரவழைத்து அனுகிரக்கிறார்!

ரமேஷ் என்பவர் பாபா கல்லூரியில் படிக்கும் சாயி மாணவர்! அவரது தாய் பல்வேறு வகையான சாயி அற்புதங்களைப் பேசி பொழுதையே புனிதமாக்குபவர்! அதைப் பலமுறை கேட்டு பரவசப்பட்டிருக்கிறார் சகுந்தலா அம்மையாரும்! 

ஒருமுறை அந்த ரமேஷ் வீட்டுப் பின்புறம் வேலை செய்து கொண்டிருந்த மோட்டர் பம்ப் ரிப்பேர் ஆனதில் - கிணற்றிலிருந்து தனது கையாலேயே தண்ணீர் இறைக்கும்படி நேர்கிறது ரமேஷின் தாய்க்கு!

கடினமான இறைப்பு - கடுமையான வேலை! முதுகுப்புறமே நோகும்படி வீங்குகிறது! 

இப்படி இருக்கையில் ஒருநாள் அதே முதுகு வலியோடு கிணற்றை ரமேஷின் தாய் இறைக்கிற போது யாரோ முதுகுப்புறம் கை வைத்து அழுத்துவதைப் போல் ஒரு உணர்வு! திடுமென திரும்பிப் பார்க்கிறார் - ஆனால் ஒருவருமே இல்லை! வேலை முடிந்து பிறகு கவனிக்கிறார் முதுகுப்புறம் முழுக்க விபூதி!

வலியும் நீங்கி இருக்கிறது! முழு நிவாரணமே ஏற்படுகிறது! 

அடுத்த நாள் காலையே மோட்டர் யாரின் கைப்படாமலும் சரியாகிவிடுகிறது!

இனி இறைக்கும் அவஸ்தை இல்லை - இறை சாயி துணை என ரமேஷின் தாய் சகுந்தலாவிடம் பரவசத்தோடு இதனை பகிர்ந்து கொள்கிறார்!

ரமேஷுக்குத் தான் அவர்கள் தாய் - ஆனால் ரமேஷோடு சேர்த்து ரமேஷின் தாயும் பேரிறைவன் பாபாவுக்கு தன்னுடைய சொந்தக் குழந்தைகளே!


(ஆதாரம் : "ஸ்ரீ சத்ய சாயி லீலாம்ருதம்" - பக்கம் 28 - 35 பதிப்பாசிரியர் - டாக்டர் கே.டி.குமார் - பதிவு ஆண்டு 2004)


நமது சின்னஞ்சிறு அசைவுகளிலும் பாபாவின் அற்புதம் நம்மை அறியாமலேயே நிகழ்ந்து கொண்டிருக்கிறது! மூச்சு வருவது போவது உட்பட..!அந்த அளவுக்கு நாம் ஆன்மிக விழிப்புணர்வு அடையவில்லை என்பதால் நம்மால் அதை உணர்ந்து கொள்ள முடியவில்லை! அது தொடர்கிறது - தொடர்ந்து கொண்டே இருக்கிறது - அந்தத் தனிப்பெரும் கருணை எந்த நன்றியையும் எதிர்பார்ப்பதே இல்லை - ஆயினும் நன்றியில்லாமல் நாமிருப்பதும் எந்த தார்மீகமும் இல்லையே ஆகையால் நமது நன்றியை ஜீவராசிகளிடம் பேரன்பாக வெளிப்படுத்த முயற்சிப்போம்! அதை விட ஒரு பெரு நன்றி இப்பூமியில் வேறேதுமில்லை! 


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக