தலைப்பு

வியாழன், 9 அக்டோபர், 2025

ஈஸ்வராம்பா குடும்ப உறுப்பினரின் இதயம் தொட்டு பாபா கொடுத்த பொக்கிஷம்!

(சத்ய சாயி சத்-சம்பாஷனா புத்தகம் உருவான கதை)

அற்புதமான ஒரு நூல் அதுவும் பேரிறைவன் பாபா தன் கையால் எழுதிய பக்கம் எவ்வாறு பக்கம் வந்து புத்தகமாகி இப்போது அனைவர் இதயத்திலும் அருள் பாலிக்கிறது எனும் ஓர் சிறப்பு சாயி அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...


அவர் பெயர் ஷ்ரவன் குமார்! பேரிறைவன் பாபா அவதரித்த குடும்பத்தில் பிறந்தவர்! ஒரு நாள் பஜன் முடித்து வீட்டுக்கு செல்லும் தருணத்தில் யஜுர் மந்திரத்தில் (பாபா வசிக்கும் இடம்) இருந்து இவரை அழைத்து வர கார் அனுப்புகிறார் பாபா! பிறகு பாபாவோடு பேசுகிற போது "என்னிடம் நீ எதையுமே கேட்டதில்லை - உன்னிடம் நான் ஏதேனும் தந்திருக்கிறேனா?" என்று ஷ்ரவனிடம் பேசிவிட்டு ஒரு கத்தை காகிதம் தாங்கிய ஒரு புத்தகத்தை வழங்குகிறார்! அது பல வருடங்கள் பழமையான புத்தகம்! அது பாபாவே கைப்பட எழுதி இருந்த ஒரு நோட்ஸ். 

இதை புக் சார்ந்த டிரஸ்ட்'டுக்கு வழங்க வேண்டுமா சுவாமி என்று பாபாவிடம் ஷ்ரவன் கேட்க... 

"இது புக் டிரஸ்ட்'க்கானது அல்ல இது என்னுடையது! இது உனக்குத் தான்! மிகச் சரியான தருணம் வரும் போது இதை புத்தகமாக அச்சிட வேண்டும்!" என்று பாபா அறிவுரை வழங்குகிறார்! வழங்கிவிட்டு ஷ்ரவனின் இதயத்தில் கை வைத்தபடி

 "உன் இதயத்தில் இருப்பது எல்லாமே எனக்குத் தெரியும்! சுவாமி நான் எப்போதும் உன் கூடவே இருக்கிறேன்! உன் இதயம் என்ன சொல்கிறதோ அதையே செய்!" என்கிறார் முத்தாய்ப்பாக பாபா!

ஷ்வரனும் இல்லம் வந்து தனது அன்றாட பணிகளை கவனித்து வருகிறார்! 


ஒரு சில மாதங்களில் பாபா பொது தரிசனத்தை முற்றிலும் நிறுத்திக் கொள்கிறார்! ஆம்! பிரேம உடை அணிவதற்காக பௌதீக உடல் எனும் உடையை களைகிறார்! அது ஜுலை 2011 - ஷ்வரனின் மகன் சாயி ஆதித்யாவின் இடது கண்ணில் ஒரு நூதனமான நோய் பரவுகிறது! சிறு கல் போன்ற ஒரு உருவம் உருவாகி கண்ணில் இருந்து விழுகிறது! புட்டபர்த்தி மற்றும் பெங்களூரில் உள்ள கண் நிபுனரிடம் அழைத்துச் சென்று கவனமாக பரிசோதனை செய்கையில் - சரியாக என்னவென்று கண்டுபிடிக்க இயலவில்லை! எம்.ஆர்‌.ஐ - சி.டி ஸ்கேன் போன்றவற்றாலும் பதிவு செய்யப்படுகின்றன! இப்படியே மூன்று மாதம் நீடிக்கிறது! ஒரு பரிசோதகர் இது லுகேமியாவாக இருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்! மனம் உடைகிறார் ஷ்ரவன்! எல்.வி. பிரசாத் கண் நிறுவனத்தில் இருக்கும் ஒரு மூத்த நிபுனரை அலைபேசி வழி அழைக்கிறார்! அவர் பெயர் எச்.எஸ்.டி ஸ்ரீநிவாஸ்! அவர் பாபாவின் முன்னாள் கல்லூரி மாணவர்! அவரோ டாக்டர் ஜாவத் அவர்களிடம் ஒரு மருந்துவ சந்திப்பை ஏற்படுத்தித் தருகிறார்! அவர் ஷ்ரவனின் மகனான சாயி ஆதித்யாவிடம் "எங்கிருந்து வருகிறாய் - என்ன படிக்கிறாய்?" என்று கேட்கிறார்! "சத்ய சாயி ஸ்கூல் புட்டபர்த்தி!" என்கிறது குழந்தை சாயி ஆதித்யா! நாட்கள் நகர்கின்றன - அந்த சிறு கல் கண்ணிலிருந்து தோன்றித் தோன்றி விழுந்து கொண்டு தான் இருந்தன! தொடர்ந்து பல்வேறு விதமான பரிசோதனைக்குப் பிறகு டாக்டர் ஜாவத் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் - வேறு வழியே இல்லை என்று உறுதி செய்கிறார்! 


ஷ்ரவன் ஆசுவாசப்படுகிறார்! ஒரு தீர்வை நோக்கி நகர்ந்து விட்டதாக அவர் நெஞ்சு நிம்மதி அடைகிறது! மிகச் சரியாக அறுவை சிகிச்சைக்கு முந்தைய நாள்! ஷ்ரவனும் அவரது மகன் சாயி ஆதித்யாவும் அருகருகே இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கனவு வருகிறது ஷ்ரவனுக்கு - அது அதிகாலை கனவு! கனவில் தரிசனத்திற்கு பாபா நடந்து கொண்டிருக்கிறார்! அதைப் பார்த்த அடுத்த நொடியே தன் மகனுக்கு அறுவைசிகிச்சை நடக்க இருக்கிறது என்று சொல்ல எத்தனிக்கிறார் ஷ்ரவன் - இதெல்லாம் கனவில் நடக்கிற சம்பவங்கள்! பாபா ஷ்ரவனை ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு மேலும் தனது தெய்விக நடையை தொடர்கிறார்! சட்டென ஷ்ரவனை திரும்பிப் பார்த்துவிட்டு "பாத நமஸ்காரம் எடுத்துக்கோ!" என்கிறார்! அந்த பூம்பாதத்தை வருடி கண்களில் ஒற்றிய ஷ்ரவன் கழுத்தை சற்று மேலே உயர்த்தி "சுவாமி இன்று என்‌ மகனுக்கு அறுவை சிகிச்சை!" என்கிறார்!

 "ஆமா! எனக்கு தெரியும்! நான் அவன் கூடவே இருப்பேன்!" என்கிறார் பாபா! பிறகு சாயி ஆதித்யாவுக்கும் பாத நமஸ்காரம் அருள்கிறார்! 


"நான் யார்?" என்று பாபா ஷ்ரவனை பார்த்துக் கேட்கிறார்! பகவான் ரமணர் கேட்ட அதே கேள்வி! மீண்டும் அதே கேள்வியை கேட்கிறார்! 

"நீங்க எங்க சுவாமி!" என்று பதில் அளிக்கிறார் ஷ்ரவன்! பாபா புன்னகைத்தபடி கீழே கைக் கூப்பி இருந்த ஷ்ரவனை பார்த்து - இன்னும் ஆழமான கூடுதல் பார்வையோடு 

*"நான் உனது நேற்று - நான் உனது இன்று - நான் உனது நாளை! நான் உனது இந்த நொடி - நான் தான் உனது எல்லாமே!"* என்கிறார் பாபா மிகவும் அழுத்தம் திருத்தமாக! "ஆம் சுவாமி! நீங்கள் தான் எங்களுக்கு எல்லாமே!" என்கிறார் பதில் மொழியாக ஷ்ரவன்!

"நான் தான் உனது நேற்று - நான் தான் உனது இன்று ! நான் தான் உனது நாளை - நான் தான் உனது எல்லாமே! இது எல்லோருக்கும் தெரிய வேண்டும்! நான் தான் உனது எல்லாமே என்பதை சப்தம் போட்டு இந்த உலகத்திற்கே சொல்! நீ சப்தம் போட்டு இந்த உலகத்திற்கே சொல்வதை நான் இப்போதே கேட்க வேண்டும்!" என்கிறார் பாபா! உடனே ஷ்ரவன் "ஆமா சுவாமி! நீங்க தான் எங்களுக்கு எல்லாமே!" என்று கத்த ஆரம்பிக்கிறார்! 


தூக்க கலக்கத்தோடு ஆதித்யா "எதுக்கு டாடி இப்டி கத்தறீங்க?" என்று கேட்கிற போது தான் ஷ்ரவனுக்கு தான் கண்டது கனவு என்று தெளிவாகிறது! பிறகு கண் மூடி கைக்கூப்பி "ஆமா சுவாமி! நீங்க தான் எங்களுக்கு எல்லாமே!" என்று இதய‌மொழியை விட்டு வெளியே வருகிறார்! வானம் சற்று விடிந்திருந்தது! வானத்தில் உலாவுவதற்காக பறவையின் சிறகு விரிந்திருந்தது! அது நல்ல காலையாக தந்தைக்கும் மகனுக்குமே விடிகிறது! அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிகழ்கிறது! ஆபத்து ஏதுமில்லை! "கடவுள் அருள்ள எல்லாமே சரியாகிவிட்டது!" என்கிறார் மருத்துவர்! அதான் கடவுளே கனவில் தோன்றி சரியாக்கிவிட்டார் தானே! 

பிறகு தனக்கு வந்த கனவைப் பற்றியே ஆழமாக யோசித்துக் கொண்டே இருக்கிறார் ஷ்ரவன்! நாம் சொல்லி யார் கேட்க போகிறார்கள்? ஏன் சுவாமி தன்னை பற்றி உலகத்திற்கே சொல் என்று சொல்ல வேண்டும்? எதைப் பற்றி எல்லோரிடமும் சொல்ல வேண்டும்? என்று ஆழ்ந்த ஆத்ம விசாரம்! இப்படியே பல மாதங்கள் இந்த ஆத்ம விசாரத்திலேயே கடந்து போகின்றன! திடீரென ஒரு நாள் பேரிறைவன் பாபா தன்னிடம் கொடுத்த அந்த நோட்ஸ் பற்றிய நினைவு வருகிறது! "ஆகா! பல்வேறு சூழ்நிலைகளிலும் - மகனின் மருத்துவ இன்னல்களிலும் மறந்து விட்டோமே!" என்று அங்கலாய்க்கிறார்!

அந்த நோட்ஸ் அதன் தலைப்பு "ஸ்ரீ சத்ய சாயி சத் சம்பாஷனா!" என்று பாபாவே இட்ட தலைப்பு! ஆகா இதைத் தான் சுவாமி சொல்லி இருக்கிறார்! சம்பாஷனா என்றால் உரையாடல் தானே என்ற தெளிவுக்கு வருகிறார் ஷ்ரவன்! அப்போது தான் பாபா அன்று சொன்னது அவர் நினைவில் மீண்டும் ரீங்காரமிடுகிறது!

"நேரம் வரும் போது நீ இதைச் செய்வாய்!" என்கிற பாபாவின் தீர்க்க தரிசன தெய்வ மொழிகள்! ஆகவே பாபா கொடுத்த நோட்ஸ்'ஸை புத்தகமாக உருவாக்கி 2012 ஆண்டு வெளியிடுகிறார் - அதுவே "சத்ய சாயி சத் சம்பாஷனா!"


இந்த நோட்ஸ் தெலுங்கு மொழியில் பாபாவால் மிக உயர்ந்த ஆன்மிக ரகசியங்கள் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டு - அந்த தெலுங்கு மொழி ஒரு பக்கம் - அதன் ஆங்கில மொழிப்பெயர்ப்பு எதிர் பக்கம் என அருமையாக புத்தகமாக்கப் பட்டிருக்கிறது! இது வெறும் புத்தகம் அல்ல ஆன்ம சாதகர்களுக்கான சாயி பொக்கிஷம்! இதை இல்லரத்தார் வாசித்தால் போதும் - ஆன்ம தெளிவே உதயமாகும்! 


(Proof : Sri Sathya Sai Sath sambhashana  | Author : Shravan kumar) 


இப்படித் தான் பேரிறைவன் பாபா தனது மிஷனை தான் தேர்ந்தெடுத்த நபர்களால் தக்க சமயத்தில் என்னென்ன சேவை ஆற்ற வேண்டுமோ அவ்வாறு அந்தந்த தருணத்தில் செயல்படுத்தி வருகிறார்! பாபாவின் கருவிகளாவதற்கு தூய இதயம் - விரிந்த மனம் - அரவணைக்கும் விரல் - சேவை செய்யும் கரம் -  தியானிக்கும் ஆன்மா வேண்டும்! அதை பாபாவே தயாரக்கிறார்! அவரே செயல்படுத்துகிறார்! அவரே சேவையாற்றவும் வைக்கிறார்!


பக்தியுடன் 

வைரபாரதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக