எவ்வாறு மான அவமானமே பார்க்காது தனது பக்தர்களின் நலனுக்காக பேரிறைவன் பாபா எந்த அளவுக்கு இரங்கியும் இறங்கியும் தனது பெருங்கருணையை பறைசாற்றுகிறார் - நெகிழ வைக்கும் பதிவு இதோ...!
அது சகுந்தலா அம்மாளின் இல்லம்! அவரின் இல்லத்தில் கொஞ்ச நாட்களாகவே கேஸ் அடுப்பு சரியாகவே வேலை செய்வதில்லை! சகுந்தலாவோ கல்லூரியில் பணியாற்றுபவர் - ஏகப்பட்ட வேலை! ஆக அவருக்கு ரிப்பேர் செய்ய நேரமில்லை! அதன் காரணமாக அடுப்பில் வைக்கும் பாத்திரங்கள் கருப்பாகிறது! பார்க்க மனதிற்கோ வெறுப்பாகிறது! சமையற்காரரோ வீட்டில் அமானுஷ்யமாக ஏதேதோ நடப்பதால் தான் இப்படி கேஸ் அடுப்பும் அதன் மேல் வைக்கும் சமையல் பாத்திரங்களும் இப்படி ஆகிறது என்று குற்றம் சாட்டுகிறார்! அவர் சொல்வது black magic தான் என்பதாக மறைபொருள் மின்னுகிறது! அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை சகுந்தலா! பேரிறைவன் பாபா நிறைந்திருக்கும் வீட்டில் எந்தவிதமான அசம்பாவிதமுமே நிகழாது என்பது சகுந்தலாவின் ஆழமான நம்பிக்கை!
ஒரு நாள் அதிகாலை தலைவலி காரணமாக படுக்கையை விட்டு தண்ணீர் அருந்துவதற்காக எழுந்து மிகவும் மெதுவாக சமையற்கட்டிற்குள் நுழைகிறார் சகுந்தலா! அப்படி நுழைந்தது தான் தாமதம் "சாயி கிருஷ்ணா" என்று ஓங்கி அலறுகிறார்! அவர் பார்த்த காட்சி அத்தகையது! பேரிறைவன் பாபா அவரின் சமையற்கட்டில் கேஸ் அடுப்பை குனிந்து சரி செய்து கொண்டிருக்கிறார்! அந்த அலறலை எல்லாம் சட்டையே செய்யவில்லை பாபா! சகுந்தலாவை திரும்பி கூடப் பார்க்கவில்லை! வந்த நோக்கத்திலேயே பாபா கண்ணும் கருத்துமாக இருக்கிறார்! சகுந்தலா எழுப்பிய கூக்குரலைக் கேட்டு தன்னைத் தான் பாட்டி அழைக்கிறார் என பேரன் சமையற்கட்டுக்குள் நுழைகிறான்! ஏனெனில் சகுந்தலா பேரன் பெயரும் சாயி கிருஷ்ணாவே!
பேரன் வருவதற்குள் பாபா மறைந்து விடுகிறார்!
"என்ன பாட்டி! என்ன ஏன் இப்ப கூப்ட்ட"
"நான் ஒன்ன கூப்டலடா ! இப்ப என்ன நடந்ததுன்னு தெரியுமா?" என்று நடந்ததை ஆச்சர்யம் பொங்க விவரிக்கிறார்!
"அதுக்கு ஏன் கத்துன? அவர் கேஸ் ஸ்டவ்வை தான ரிப்பேர் பண்ணிட்டு இருந்தார் - அதுக்கு நீ ஏன் கத்தனும்? உன் எல்லா வேலையும் நீயா பாக்கற - அவர் தானே பாத்துட்டு இருக்கார்?" என்று அந்த ஞானப் பேரன் பதில் சொல்ல - திகைத்துப் போகிறார் சகுந்தலா!
சின்ன விஷயமான இந்த கேஸ் அடுப்பை தாங்கள் தான் சரி செய்ய வேண்டுமா? தங்களின் கருணைக் கடனை எவ்வாறு தீர்க்கப் போகிறேன் என்று உள்ளத்தின் உள்ளே உருகுகிறார் சகுந்தலா!
தனது பேரனை புட்டபர்த்தியில் சேர்க்க விருப்பம் ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை என்று அவருக்கு தெரியும்! ஆகவே தனது வீட்டருகே உள்ள பள்ளியில் பேரனை சேர்க்கத் திட்டமிடுகிறார் சகுந்தலா! அதற்காக அந்த பள்ளியின் முதல்வரை சந்தித்து வரலாம் என்று முடிவு செய்கிறார்! அன்று மாலை சகுந்தலா வீட்டில் பஜனை வேறு - அதற்குள் வந்துவிடலாம் என்று கிளம்புகிறார்! அவரையும் சந்தித்து அட்மிஷன் குறித்துப் பேசிவிட்டு வருகிற போது பஜனைக்கான நேரம் நெருங்குகிறது! கதிரவன் கக்கும் அந்தச் சாலையில் ஈ காக்கா இல்லை! எவ்வளவு தூரம் நடப்பது?!? சரி நடைப்பயிற்சி செய்வது போல் சென்று வரலாம் என சாதாரணமாக நினைத்து விட்டார் சகுந்தலா! ஆனால் வெய்யிலின் சவுக்கோ சகுந்தலாவை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது!
திடீரென மின்னல் வேகத்தில் ஒரு ஆட்டோ அவர் அருகே நெருங்கி..
"வாங்க - ஏறுங்க - போகலாம்!" என்று ஆட்டோ டிரைவர் கூற.. அவரும் ஏற.. மின்னல் பொழுதில் வீட்டுக்கு வந்துவிடுகிறார்!
பஜனைக்காக வந்தமர்ந்த பக்தகர்களின் முகத்தில் சந்தோஷமும் - நிம்மதி பெருமூச்சும்!
சரி! எவ்வளவு பணம் தர வேண்டும் என்று கேட்பதற்காக அந்த ஆட்டோவை திரும்பிப் பார்க்கிறார் சகுந்தலா - அந்த ஆட்டோ அவர் முதுகுப்புறம் மறைந்தே போயிருந்தது!
அந்த சாரதி வேறு யாருமல்ல - சாட்சாத் சனாதன சாரதியே என்பதை உணர்ந்த அவர் உள்ளம் பரவசப்படுகிறது!
ஒருமுறை சகுந்தலா ஹைதராபாத் மாநகரை விட்டு தனது பேரன் சாயி கிருஷ்ணாவோடு யாரிடமும் அறிவிக்காமல் திடீரென சென்னைக்குப் புறப்பட்டு மதியம் 2 மணிக்கு வருகிறார்! வந்து தனது சென்னை வீட்டை திறந்தது தான் தாமதம் - வாசலை திறக்கும் சத்தம் கேட்கிறது!
"யாருடா அது?" என்பது போல் அவர் திரும்பிப் பார்த்துத் திகைப்படைகிறார்!
அது காவல் துறை ஆணையாளரின் மனைவி!
"அர்ரே! நீங்கள் எங்கே இங்கே? கையில் என்ன?" என்று கேட்கிறார் சகுந்தலா!
காரில் வந்த அந்தப் பெண்மணியோ
"உங்களுக்கு மதிய உணவு தர வந்திருக்கிறேன்!" என்று சொல்ல
"என்ன?!! நாங்கள் வரப்போகிற விஷயத்தை யாரிடமுமே சொல்ல வில்லையே - உங்களுக்கு மட்டும் எப்படி தெரிந்தது??" என்று பேராச்சர்யத்தோடு சகுந்தலா கேட்க...!
"சத்ய சாயி பாபா என் கனவில் தோன்றி - நீங்கள் வருகிற தகவலையும் - உங்களுக்கு மதிய உணவு தயார் செய்து கொண்டு வரவேண்டும் என்றும் சொன்னார்!" என்றவுடன் சகுந்தலாவோ பேரிறைவன் பாபாவின் பெருங்கருணையை நினைத்து பரவசப்படுகிறார்!
மதிய உணவை மட்டுமல்ல தனக்குள் உதய உணர்வையும் ஊட்டுவது பேரிறைவன் பாபாவே என்பதைச் சேர்த்தே சகுந்தலா உணர - அப்போது வெறும் உணவு மட்டும் இறங்கவில்லை - அதனோடு சேர்த்து சத்யம் - தர்மம் - சாந்தி - பிரேமை - அகிம்சை எனும் உணர்வும் சேர்ந்தே அவருக்குள் இறங்கி ஆன்ம ருசி தருகிறது!
(ஆதாரம் : "ஸ்ரீ சத்ய சாயி லீலாம்ருதம்" - பக்கம் 13 - 18 பதிப்பாசிரியர் - டாக்டர் கே.டி.குமார் - பதிவு ஆண்டு 2004)
பாபா நமது வீட்டிலேயே நிறைந்திருக்கிறார் என்பதை முதலில் நாம் நம்ப வேண்டும்! அந்த நம்பிக்கை உணர்வை தரும் - உணர்வு அனுபவம் தரும்! அனுபவமே பக்தியை ஆழப்படுத்தும்! ஆக ஏதொன்றுக்கும் நம்பிக்கை அவசியம்! நமது சொந்த மூட துர் குணமாகிய எதிர்பார்ப்பே நமது நம்பிக்கையை தகர்க்கிறது! ஆக பாபாவை எந்தவித எதிர்பார்ப்பின்றி அன்பு செலுத்துவோம்! அதுவே பொதுப் பிரேமையாய் நம்மில் இருந்து நாலா திசைகளுக்கும் பரவுகிறது! அந்தப் பேரன்பே சாயி அற்புதம்! அதைத் தான் பாபா அவனியில் அன்றாடம் நிகழ்த்திக் கொண்டு வருகிறார்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக