எவ்வாறு ஒரு கவலைக்கிடமான குழந்தையை பாபாவின் புகைப்படம் காப்பாற்றியது என்பதைப் பற்றி அதை நேரிலேயே கண்டு வியந்த ஒரு பக்தை பதிவு செய்தவை மற்றும் அவரின் தனி பாபா தரிசன மகிமை அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...!
அது 1969 ஆம் ஆண்டு பாபாவின் தரிசனம் குறித்து வெகுவாக பரவசப்படுகிறார் சகுந்தலா அம்மாள்! அது அவர் கல்லூரி காலம்! சாயி பக்தையாக மாறி இருந்தும் இன்னும் அவர் பேரிறைவன் பாபாவை நேருக்கு நேர் தரிசிக்க வில்லை! அந்த காலகட்டத்தில் அவர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்! அப்போது தான் அவரின் ஒரு சக ஊழியர் பாபாவின் சுந்தர வரவை குறித்து அவரிடம் பகிர்கிறார்! ஆம் பாபா சென்னை சுந்தரத்தில் வந்திருப்பதன் குறித்தான விபரம்! கேட்டு பரவசப்படுகிறார்! அடுத்த நொடியே தரிசிக்க வேண்டும் என்ற ஆவல்! பாபா வரப்போகிறார் என்று சொல்லப்பட்ட தேதியில் அவருக்கு ஏகப்பட்ட பணிகள் இருந்தன! என்ன செய்வதென கையைப் பிசைகிறார்! பாபா வரும் பின்னே பேரற்புதம் வரும் முன்னே எனும் அனுபவ மொழிக்கு ஏற்ப - அன்று ஒரு காரணத்திற்காக அவர் பணியாற்றிய கல்லூரிக்கு விடுமுறை! ஆகா என்ற ஆச்சர்ய சந்தோஷத்தில் சுந்தரம் வந்து சேர்கிறார்!
வாசலிலேயே ஏகப்பட்ட கூட்ட நெரிசல்! எப்படி உள்ளே சென்று எங்கே பார்ப்பது! ஒரே திகைப்பு! தூர தரிசனமாவது கிடைக்குமா? நெஞ்சின் துடிப்பு பஜனையின் துரித தாளம் போல் அடித்துக் கொள்கிறது! சரி என்று தோட்டத்தில் தலை காட்டும் ஒரு சிறு மலர் போல் கூட்டத்தில் நின்று கொள்கிறார்! கூட்டத்தை ஒழுங்குபடுத்தியபடி திடீரென ஒரு பெரிய கார் அங்கே வருகிறது! உள்ளே இருந்து பரவசம் ஏற்படுத்தும் பாங்கில் பாபாவே வருகிறார்! அது மெல்லிய இறகைப் போன்ற ஒரு வருகை! சகுந்தலா அம்மாவை நோக்கி புன்னகைத்தபடி "நான் தான் சாயிபாபா! - என்னை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள்!" என்று பேசிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார் பாபா ! ஆம் சுந்தரத்தின் உள்ளேயும் - இன்னும் ஆழமாக சகுந்தலாவின் உள்ளேயும்! தண்ணீருக்கு நின்றிருந்த போது பால்பாயாசமே கிடைத்த பரவசம் - பாபா தரிசனமும் பாபா உரையாடலும்!
அதுமுதல் பாபாவே சகுந்தலாவின் வாழ்க்கை நடத்துனராகிறார்! ஒவ்வொரு செய்கையும் பாபாவே தன் வாழ்வில் நடத்துவதாக உணர்கிறார்! பல்வேறு கேள்விகளை மேற்கொள்ள வேண்டுகிற அந்த சூழ்நிலைகளில் எல்லாம் பாபாவே உடனடியாய் உதவுவதாக உணர்கிறார்!
பிறகு அவர் தனது இருப்பிடத்தை மாம்பலத்தில் இருந்து அண்ணா நகருக்கு மாற்றுகிறார்! அது 1984. எல்லா இறை உருவத் திருப்படங்கள் இருப்பது போல் அவரது வீட்டில் பேரிறைவன் பாபாவின் திருப்படமும் வழிபாட்டிற்காக இடம் பெறுகிறது! அவர் வீட்டில் தினசரி பூஜையும் பஜனையும் நிகழ்கிறது!
ஒரு நாள் ஒரு பெண்மணி கவலைக்கிடமான தனது குழந்தையை கொண்டு வருகிறார்! பல மருத்துவமனையும் மருத்துவர்களும் கைவிட்ட குழந்தை அது! தங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று தனது குழந்தையை பாபாவின் திருப்படத்தின் முன்பு வைத்து அழுகிறார்! சகுந்தலா குழந்தையை பார்க்கிறார்! ஆம் இக்கட்டான கேஸ் தான்! பிழைப்பது உறுதி இல்லை தான்! என்ன செய்வது - இப்படி நம்பி வந்துவிட்டார்களே - பாபா இருக்கும் இடத்தில் அந்த பெண்மணியின் நம்பிக்கை உடையக் கூடாதே என்ற ஆழ்ந்த உணர்வு அவருக்கு! உடனே கண்களை மூடி தியானத்தில் இருக்கிறார்! தியானத்தில் அவருக்கு பாபா திருப்படம் காட்சி அளிக்கிறது! அவர் வீட்டில் கொலுவிருக்கும் அதே பாபாவின் திருப்படம் தான்! அதிலிருந்து விபூதி பொழிவதை தியானத்தில் காண்கிறார்! உடனே பாபாவின் குரல் தியானத்தில் கேட்கிறது - "இந்த விபூதியை குழந்தையின் உடல் மீது தடவு! பிழைத்துக் கொள்வாள்!"
சட்டென கண்களைத் திறக்கிறார்! தியானத்தில் கண்டது போல் பாபா திருப்படத்தில் பாபா விபூதி வந்திருக்கிறது! பாபா சொன்னதைப் போலவே அந்த விபூதியை அந்தக் குழந்தையின் உடல் முழுவதும் பூசிவிடுகிறார்! அடுத்த நொடி அந்தக் குழந்தை அசைகிறது! கண் திறக்கிறது! அசைந்ததும் கண் திறந்ததும் அந்தக் குழந்தை மட்டுமல்ல ஆழமான சகுந்தலாவின் பக்தியும் - அந்தப் பெண்மணியின் நம்பிக்கையும்!
(ஆதாரம் : "ஸ்ரீ சத்ய சாயி லீலாம்ருதம்" - பக்கம் 3-5 பதிப்பாசிரியர் - டாக்டர் கே.டி.குமார் - பதிவு ஆண்டு 2004)
பேரிறைவன் பாபா அப்போது மட்டுமல்ல இப்போதும் எப்போதும் தன்னை நம்புகிறவர்களிடமும் - பக்தி செலுத்துபவர்களிடமும் கூடவே வாழ்கிறார்! அது இருப்பு அல்ல அது வாழ்வு! அதை பூரணமாக உணர்ந்தவர்கள் எதற்கும் குழம்புவதில்லை- பயப்படுவதில்லை - கலங்குவதில்லை! பாபாவே தன்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தவர்களின் கை கால்களைக் கட்டி நடுக்கடலிலே நீங்கள் தள்ளிவிட்டாலும் உயிர்ப் பிழைத்து விடுவார்கள் என்பது வெறும் கவிதை வாசகம் அல்ல வாழ்க்கை அனுபவம்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக