தலைப்பு

சனி, 22 மார்ச், 2025

இரு அவதாரங்களும் ஒருங்கே பெற்றிருந்த 16 வகை இறைப் பேராற்றல்கள்!

எவ்வாறு இரு அவதாரங்களுக்கும் ஒரேவிதமான 16 ஆற்றல்கள் ஒருங்கே நிரம்பி இருக்கின்றன எனும் ஆச்சர்யச் சான்றுகள் சுவாரஸ்யமாக இதோ...!


16 கலைகள் என்கிறார்கள் அந்த இறைப் பேராற்றலை! 

இரு அவதாரங்களும் இணைந்து பெற்றிருந்தது சாதாரண "கலை" என்ற வார்த்தையால் சுறுக்கிச் சொல்வது தவறு! 

மண்பானை செய்வது கூட கலை தான்! அதற்கும் ஆற்றல் தேவைப்படுகிறது!

ஆனால் இறைவன் மண்ணிலே இறங்கி எதையும் கற்காமல் தனது எதார்த்த இறை இயல்பால் பெற்றிருந்த 16 வகை கலைகள் என்பது சாதாரண கலைகள் அல்ல... அவை இறைப் பேராற்றல்கள்!


1. திருஷ்டி கலை:

திருஷ்டி கலை என்பது "உட்கார்ந்தபடி மறைந்த பொருட்களை பார்ப்பது!"


இது இரு அவதாரங்களுக்குமே இருக்கிறது!

வெறும் மறைந்த பொருட்களை மட்டுமல்ல.. மனதில் மறைந்திருக்கும் எண்ணங்களைக் கூட உற்று நோக்கி கவனிப்பதே இரு அவதாரங்களின் கூடுதல் மகிமை!

திருதராஷ்டிரனின் எண்ணத்தை கவனித்தே பீமனின் மாதிரி சிலையை செய்யச் சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்! 

பீமனையே தூள் தூளாக்க கட்டி அணைக்கச் சென்ற திருதராஷ்டிரர் , சிலை என்று அறியாது அதனை கட்டி அணைத்து தூள் தூளாக்குகிறார்!

இதுவே பேரிறைவனின் திருஷ்டி கலை!

அதே ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் பிறர் பொருட்களைக் கண்டுபிடித்து தருவது முதல் பிறர் எண்ணங்களை படம் பிடித்துச் சொல்வது வரை ஒன்றா இரண்டா? அந்த அற்புத பேராற்றலின் மகிமைகள் இன்றளவும் தொடர்கின்றன...!

புட்டபர்த்திக்கே புதிதாக வந்திருப்பவர்களின் ஊர், பேர், வருகை நோக்கம், என்ன பிரச்சனை? என அவர்கள் சொல்வதற்கு முன்பே பாபாவே சொல்லிவிடுவார்!

ஒரு பக்தருக்கா? இரு பக்தருக்கா? 

தொலைந்த பொருட்களை கண்டுபிடித்து கொடுப்பது மட்டுமில்லை...தற்கொலை செய்ய இருந்த ஒரு ராணுவ பக்தரின் துப்பாக்கியை தான் அதை இங்கிருந்தே எடுத்து விட்டு.. அவர் வீட்டு படுக்கை அறையில் அதனை தொலைக்கவும் வைத்திருக்கிறார்!

இப்படி யூகிக்க முடியாத பாபாவின் பேராற்றல் அநேகம்! 


2. அத்ருஷ்ய கலை:

அதாவது, "இருந்த இடத்திலிருந்து மாயமாவது!"


அது மட்டுமில்லை... திடீரென தோன்றுவதும் இந்தக் கலையின் இன்னொரு அம்சம்!

துர்வாசர் வந்து விட்டார் , அட்சய பாத்திரத்தில் எதுவும் மீதமில்லையே என துரௌபதி அழைக்க... அந்த இடத்திலேயே தோன்றி.. பிரச்சனையை சரி செய்து மீண்டும் மறைந்து போகிறார் மகா இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர்!

பாபா தனது பௌதீக சிறு வயதில் தனது பால்ய நண்பர்கள் வீட்டுக்கு சென்று அதிகாலை அப்படியே மறைந்து போகிறார்... அவரின் தோன்றி மறைதலுக்கான மகிமைச் சம்பவங்கள் ஒன்றா? இரண்டா? 

எதை விவரிப்பது?! எல்லாமே ஆச்சர்யமான சம்பவங்கள் அல்ல வைபவங்கள்!

சிறுவன் சத்யா தன்னை தொட்டு விளையாட நண்பர்களை அழைப்பார்.. அவர்கள் சரியாக லபக் என்று பிடிக்க வருவதற்குள் அங்கிருந்து மறைந்துவிட்டு, நான் இங்கே இருக்கிறேன் என்று வேறொரு இடத்தில் தோன்றிச் சிரிப்பார்!

இந்த இறைப் பேராற்றல்களை பாபா தவம் இருந்து பெறவில்லை என்பதற்காக சிறு வயது சம்பவங்களை குறிப்பிடுகிறேன்! 

அந்தப் பேராற்றல்கள் அனைத்தும் இறைவனின் இயல்பு சுபாவங்கள்!


3. ஸ்பர்சனீ கலை:

இந்தப் பேராற்றல் ஆனது.. "காணாமல் மற்றவர்களின் மன சரீரங்களை தன் வசமாக்குவது!"


இப்படித் தான்... இந்த பேராற்றலை வைத்துத் தான் குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் கோபிகைகளை தனது பேரன்பால் இழுத்து கட்டிப் போடுகிறார்! 

அதே ஸ்ரீ கிருஷ்ணர் நூறல்ல பல்லாயிரம் மனிதர்களை தனது முதல் தரிசனக் கீற்றுலேயே தன் வசமாக்கி பக்தராக்கிவிடுகிறார்!

பாபாவின் அருகே சென்றால் விழிகள் மட்டுமே நீர் மொழியால் பேசும்... வாய் தனது உதடுகளை அசைக்கும்... ஆனால் வார்த்தைகளையோ ஆன்ம மௌனம் உள்ளிழுத்துக் கொள்ளும்! இப்படிப் பட்ட நேரடி அனுபவங்கள் பற்பல அடியேனுக்கும் நிகழ்ந்திருக்கிறது!


4. ஆகர்ஷணீய கலை:

"தூரத்துப் பொருட்களை அருகே வரவைப்பது!"


வறுமையில் தள்ளி தூரமாய் இருந்த செல்வங்களையே அருகே வரவழைத்துக் கொடுத்தார் பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர்... அதனால் தானே அந்த குசேலரும் குபேரர் ஆனார்!

இதே போல் ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திலும், பற்பல பொருட்களை வரவழைத்திருக்கிறார்..

சுய சிருஷ்டியும் இதில் அடங்கி இருக்கிறது!

பல யுகங்கள் கடந்து அந்த யுகங்களில் புதைந்திருந்த பொருட்களை எல்லாம் வரவழைத்து காட்டி இருக்கிறார்!

அப்படித்தான் நாம் இராம , சீதா, இராவண நகைகளை எல்லாம் தரிசித்திருக்கிறோம்!

ஒரு முறை லண்டன் மியூசியத்தில் இருந்து இந்தியாவுக்கு சொந்தமான "கோகினூர் வைரத்தையும்" தனது மாணவர்களுக்கு எடுத்துக் காட்டி இருக்கிறார் பாபா!


5. பஹூரூப கலை:

விநோதமான இறைப் பேராற்றல் இது! 

"அநேக ரூபங்களை தரித்து மற்றவருக்கு மாயைக் காட்டுவது!"


மற்றவருக்கு மட்டுமா? பிரம்மனுக்கே மாயை காட்டியவர் பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர்!

பேரிறைவனை சோதித்துப் பார்க்க வேண்டி ஆநிறைகளையும் , கோபர்களையுமே பிரம்மா கவர்ந்து செல்ல... தானே அத்தனை வடிவங்களையும் எடுத்துக் கொண்டு மேய்ச்சல் பகுதியிலிருந்து கோகுலத்திற்கே திரும்புகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்!

அதே ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் இரண்டு ரூபம் , ஐந்து ரூபம் மட்டுமல்ல ஒரு புதிய நபர் அவர் பெயர் ராமனாதன், புட்டபர்த்திக்கே அது தான் அவருக்கு முதல் முறை... வொயிட் ஃபீல்டில் இருந்து கொண்டே பாபா , பிரசாந்தி நிலையத்தில் பெருந் திரளான பக்தர் கூட்டமாய் தானே உருமாறி, அவருக்கு தரிசனமும், தனது புகைப்படமும் வழங்கி இருக்கிறார்!

அவரும் அந்த புகைப்படமும் இன்றளவும் அதற்கு சாட்சியம் கூறுகிறது! அவரை ஸ்ரீ சத்ய சாயி யுகம் சார்பாக பேட்டியும் எடுத்திருக்கிறோம்!


6.ரசநீய கலை:

"தயார் உணவை மாயமாக வரவழைத்து பிறர் பசியை தீர்க்கும் இந்தப் பேராற்றல்!"


 இரு அவதாரங்களுக்குமே இது நீக்கமற நிறைந்திருக்கிறது!

இப்படித் தான் பல்வேறு விதமான உணவு வகைகளை பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் வரவழைத்து தனது கோபர்களுக்கு வழங்கி இருக்கிறார்! அட்சயப் பாத்திரத்திற்கு முன் வனவாசத்தில் பாண்டவரின் பசியை பலமுறை தீர்த்து வைத்திருக்கிறார்!

இந்த தயார் உணவு என்பது ஏதோ சாப்பாடு என்று மட்டும் நினைத்துக் கொண்டால் அது மேலோட்டமாக சரி! ஆனால் ஆழமான அர்த்தம் அது இல்லை!

ஆன்மப் பசிக்கு தான் மறைத்து வைத்திருந்த ஞான உணவையே ஊட்டுகிறார்! அதுவே கீதை! அதுவே வாஹினிகள்!

பாபா கொடுத்த அட்சயப் பாத்திரத்தில் வழிந்த பழரசங்களில் இமாலய நவரசங்கள் அல்லவா அந்த நரநாராயண குகையில் வழிந்து கொண்டிருந்தது! அதை விடவா இந்தக் கலைக்கு ஓர் உதாரணம் தேவை!?


7. உத்பாதினீ கலை:

"பலப் பொருட்களை வரவழைத்துக் காட்டுவது..."


இதனை வாசிக்கும் போதே ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரின் சிருஷ்டி மகிமை மனக் கணக்கில் நிழலாடுவதை தவிர்க்கவே இயலாது அல்லவா! 

ஸ்ரீ கிருஷ்ணரும் ஸ்ரீ சத்ய சாயியும் பலப் பொருட்களை மட்டுமல்ல பல லோகங்களையே கண்முன் காட்டி இருக்கின்றனர்.. குழந்தை ஸ்ரீ கிருஷ்ணர் தனது அதரம் திறந்து பல உலகங்கள் காட்டியதும் சரி... ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் தனது நேர்காணல் அறையில் வந்திருந்த ஒரு வெளிநாட்டு நபரின் தேசத்தைக் காட்டி.. அவரின் இருப்பிடத்தைக் குறிப்பிட்டு .. இதில் நுழைந்துவிடு ‌என்றதும் அந்த வெளி தேசத்தவர் அந்த இடத்திலேயே மறைந்து .. அவரது தேசத்திற்குள் (அவரது வீட்டுக்குள்ளேயே) சென்றுவிடுகிறார்!


8.பாதனீ கலை:

"சொன்ன வார்த்தைகளை நடக்கும்படி செய்வது!"


இரு அவதாரங்களும் அதற்கு மிகப் பெரிய உதாரணங்கள்!

சிசுபாலனின் வசையை 100 முறை பொறுத்துக் கொள்வேன்.. 101 வசையில் அவனை வதம் செய்து விடுவேன் என்கிறார்!

தானே வாசுதேவன் என்று உளறிக் கொண்டிருந்த கோமாளி அரசன் பௌன்டீரகனுக்கு.. இப்படி நீ ஏமாற்றிக் கொண்டிருந்தால் வதம் செய்துவிடுவேன் என்று ஓலை அனுப்புகிறார்!

ஸ்ரீ கிருஷ்ணரோ தான் சொன்ன சொல்லை அப்படியே நிறைவேற்றுகிறார்!

இனி தீயவர்களை அழித்து நல்லவர்களை காப்பேன்! கவலை வேண்டாம்! உங்கள் அழுகை முடிந்துவிடும்! என்கிறார் தேவகித் தாய்க்கு...

சொன்ன சொல்லை இறுதி வரை நின்று வெற்றி கொள்கிறார்!


அதே ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ 

சத்ய சாயி அவதாரத்தில் சொன்ன சொல்லே இப்போது நாம் செழிப்போடு காண்கிற புட்டபர்த்தி... குடிக்கவே நாவரண்டிருந்த சென்னை வாசிகளுக்கு மிதக்க மிதக்க தண்ணீர் தந்த தயை பாபா சொன்ன வார்த்தைகளே! ஒரு சேவை இரு சேவை என்றால் எளிதில் எழுதிவிடலாம்! 

தான் சொல்லி பாபா நிகழ்த்திக் கொண்டிருக்கிற சமுத்திர சேவைகளை எத்தனை தூரம் வியந்து விவரிக்க இயலும்!

பேரிறைவன் பாபாவின் நாக்கு ஈரத்தால் மட்டுமல்ல அறத்தால் நனைந்திருக்கிறது! அவரது வாய் வாய் அல்ல அது வாய்மை! அவர் மொழி வெறும் மொழித் தோரணங்களால் வரவேற்கும் சப்தங்கள் அல்ல... நமது சப்த நாடிகளிலும் நல்லறத்தைப் பாய்ச்சும் ஒளி! அவர் அதரத்திலிருந்து எழுந்தது மொழி அல்ல சத்திய ஒளி!


9. ஷ்ரவணீ கலை:

"தூரத்து சப்தங்களை கேட்பது!"


இரு அவதாரங்களுக்கும் இது தன்னிச்சையாகவே நிறைந்திருக்கிறது!

பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் தனது 16 இறைப் பேராற்றலை வைத்தே பாரதப் போரை வென்றெடுக்கிறார்! 

போருக்கு முன் தன்னை ஒருமுறை கடத்த வந்த கௌரவக் கும்பல் பேசியதை ஏற்கனவே தூரத்திலிருந்து கேட்டதாலேயே பஞ்சணையில் தூங்குவது போல் நடித்து... அவர்கள் சரியாக அமுக்க வருகையில் ஒளியாக உருமாறி காட்சி அளிக்கிறார்!

அதே ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் அப்படி தூரத்து சப்தங்களைக்  கேட்டுக் கொண்டே தான் தனது கைகளை அசைக்கிறார்... காற்றில் எழுதுகிறார்... எழுதி விட்டு அழிக்கிறார்.. இன்றும் நாம் அதனை காணொளியில் தரிசிக்கலாம்...

பக்தர் வீட்டில் முடிந்த சண்டைகளை எல்லாம் தனது நேர்காணல் அறையில் விவரித்து அறிவுரை வழங்குகிறார்!

"என் படத்தின் முன்னால் ஏன் சண்டை போடுகிறீர்கள்? என்னால் அதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை!" என்று பலமுறை பல பக்தர்களிடம் பகிர்ந்திருக்கிறார் பேரிறைவன் பாபா!


10.ஜல தரணீ கலை:

நீரின் மேல் நடப்பது, நீந்துவது!


ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்து கூடையில் வந்த போதே மழை நீர் தான் வரவேற்றது.. யமுனை நீர் வழிவிட்டது.. காளிங்கன் மேல் அவர் ஆடியதும் நீரில் தான்... 

அதே ஸ்ரீ கிருஷ்ணர் புட்டபர்த்தியில் அவதரித்து சித்ராவதி நதியில் நீந்துவார்..

சாதாரண நீச்சலா... ஒரு நொடி நீரில் குதிப்பார்.. அடுத்த நொடி கரையில் நிற்பார்! 

நதியில் மட்டுமல்ல குளம் ஆறு என சிறுவன்  சத்யாவாக இருந்த போது பாபா புரிந்த லீலைகள் அதே துவாபர யுகத்து ஸ்ரீ கிருஷ்ணாவதார லீலைகளே! 

இதனை அவர் சுய விளம்பரத்திற்காகவோ, ஆட்களை மயக்கி பணம் வசூலிப்பதற்காகவோ தனது பேராற்றலை பயன்படுத்தியதே இல்லை... அப்படிச் செய்திருந்தால் இந்த பூமியில் பாதி பாபாவின் பெயரில் தான் சொத்துக்கள் குவிந்திருக்கும்! 

ஆகவே தான் ஒரு ஹட யோகி நீரில் நடக்க முடியுமா? என்று சவால் விட்ட போது.. பாபா மௌனம் காக்கிறார்!

காரணம்: பாபா செயல்களை அல்ல முதலில் அந்த செயல்களுக்கான உள்நோக்கத்தையே உற்று நோக்குகிறார்!

இப்படி அவர் செய்வதால் மனிதர்கள் ஆன்ம ஞானம் பெறுவார்களா? இல்லை என்பதால் இது போன்ற வெட்டி விளம்பர சவால்களை எல்லாம் அவர் பொருட்படுத்தவே இல்லை... அதற்கான களமும் அல்ல அவதாரத்திற்கான கலியுகம்!


11. அனுமாநினீ கலை:

"சங்கல்பித்தாலேயே மூன்று உலகங்களின் ஞானத்தை தெரிந்து இருப்பது!"


ஆகவே தான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது தேவகித் தாய் வேண்டியதற்காக பாதாள உலகம் சென்று , அவருக்கு முன் சிறைச்சாலையில் மாண்ட ஆறு குழந்தைகளை மீட்டதும்.. தனது சாந்தீபனி குருவின் புதல்வனை வேற்று உலகத்திலிருந்து மீட்டதும்... 

இப்படி அநேகம்..

அதே ஸ்ரீ கிருஷ்ணர்... பல யுகங்கள் பற்றியும், பல உலகங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டது... பல உலகங்களில் இருந்து வழிபாடு செய்ய வந்த தேவதைகளை பக்தர் பலர் தரிசித்தது.. அவர்கள் ஒரு தட்டில் கொடுத்த இனிப்பு வகைகளை பக்தர் பெற்று.. அந்தத் தட்டையும் ஒரு பக்தர் குடும்பம் பத்திரப்படுத்தி வைத்திருந்தது.. இவை எல்லாம் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் புரிந்திருக்கிறார்! ஆக வேற்று உலகங்களை தெரிந்து வைத்திருப்பது மட்டுமல்ல இரு அவதாரங்களும் அந்த உலகங்களோடு தொடர்பே வைத்திருக்கிறார்கள்!


12. பாலினீ கலை:

"சத்ருக்களை பலவந்தமாக கொல்வது!"


ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் இதற்கு அநேக சம்பவம்! 

அந்தப் பட்டியல் மிகவும் நீளமானது!

அதே ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ  சத்ய சாயி அவதாரத்திலும் கொல்கிறார்... ஆனால் ஒரே ஒரு சின்ன மாற்றத்தோடு... அவர் பலவந்தமாக கொல்வது பகைவர்களை அல்ல.. அவர்களுக்குள் இருந்த பகைமையை...

பாபா ஒருவரே தீயையும் அணைப்பவர், தீ வைப்பவனையும் அணைப்பவர்!

அது இந்த யுகத்துக்கான தர்மம்!

ஆகவே ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரும் சம்ஹார மூர்த்தி தான்!

எதிர்மறையாளர்களை அல்ல

எதிர் மறை எண்ணங்களையே சம்ஹாரம் செய்பவர்!

விஷ மரத்தை வெட்டுவதல்ல முக்கியம் .. அதை விட முக்கியம் அதன் வேரையே வெட்டி வீழ்த்துவது! அது போல் தீயவரை அழிக்காமல் அவருக்குள் பொதிந்திருக்கும் தீமையை அழிப்பதே வேரை அழிப்பதற்குச் சமம்! அதையே இன்றளவும் புரிந்து வருகிறார் பாபா!


13. சத்ய சங்கல்ப கலை:

தன் சங்கல்பத்தை நிஜம் என்று நிரூபிப்பது...!


"சம்பவாமி யுகே யுகே!" என்று பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் செய்தது சங்கல்பமே! அந்த சங்கல்பத்தையே தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் சர்வ நிஜம் என நிரூபித்து வருகிறார்!


14. சுதந்திரக் கலை:

"யாருடைய பந்தத்திலும் இல்லாமல் இருப்பது!"


இந்தப் பேராற்றலுக்கு இரு அவதாரங்களே ஒரே உலக உதாரணங்கள்! 

பாமா ருக்மணி என்று இரு மனைவியை கல்யாணம் செய்த போதும்.. போகத்தில் மூழ்காதவர் ஸ்ரீ கிருஷ்ணர்!

16,000 மனைவிகள் அவருக்கு என்பது கட்டுக்கதை! 

இந்த 16 கலைகளையே தன் சிரசு எனும் உச்சந்தலையில் 1000 தாமரைகள் பூக்கிற சஹஸ்ரஹாரமான ஏழாவது சக்கரத்தில் வைத்திருப்பதால் ஒரு உருவகத்திற்காக சொல்லப்பட்டதே ஸ்ரீ கிருஷ்ணருக்கு 16,000 மனைவிகள் என்பது!

அதே ஸ்ரீ கிருஷ்ணர் கலியுக சேவை அதிகம் என்பதால் திருமணம் கூட செய்யவில்லை! குடும்பத்தையே உதறினார்! ஒரே ஒரு உருண்டை அத்தோடு தாய்ப் பாசமும் துறந்தார்! எல்லோரையும் சமமாகவே நடத்தினார்!

அவர் அவதரித்த குடும்பத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...!

கடலில் கலந்து விட்ட கங்கை நீரை கமண்டலம் உரிமை கொண்டாட முடியுமா?

பாபாவின் வாழ்வில் இருந்து நாம் கடைபிடிக்க வேண்டிய பாடங்கள் இவை!

குடும்பம் என்பது ஒரு பகல் கனவு! அன்போடிருப்பதே கர்ம யோகம்! ஆசையோடிருப்பது யோகம் அல்ல அது கர்ம ரோகம்!


15. கரணீ கலை:

"மற்றவரால் இயலாத வேலைகளைச் செய்து காட்டுவது!"


ஒரே ஒரு உதாரணம் போதும்:

ஐந்து பேரை வைத்து நூறு பேரை வெல்வது! 

உலகத்திலேயே இதுவரை எந்த மனிதராலும் நிகழ்த்த முடியாது தெய்வீக சாகசம் அது!

அதே ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் புரிந்த சேவை சமுத்திரம்... அதில் எழுப்பிய உலக அளவிலான மருத்துவமனை... உருவாக்கவே மனிதனுக்குப் பல்லாண்டுகள் தேவை.. ஆனால் பாபா அதனை சர்வ சாதாரணமாக சில மாதங்களிலேயே அந்த பிரம்மாண்டத்தை நிறுவினார்!

புட்டபர்த்தியின் அந்த பிரம்மாண்ட மருத்துவமனையின் உள்ளே சென்றால் அந்த பெரிய அறையில் தூணே இன்றி கட்டிடம் நிற்கிறது...! ஆம் அந்த கட்டிடங்கள் நம்பி இருப்பது தூணை அல்ல.. பாபாவின் ஆணையை...!


16. காமினீ கலை:

"சங்கல்பத்தோடு எங்கேயும் சென்று விடுவது!"


இதில் மிக முக்கியமான ஒன்று: இரு அவதாரங்களின் சங்கல்பத்தை யாராலேயும் யூகிக்கவோ தீர்மானிக்கவோ இயலாது என்பதே!

ஆகவே தான் இரண்டு அவதாரங்களும் தங்களது அவதார நிறைவை யாரிடமும் அறிவிக்கவில்லை.. அப்போது யாரும் அருகே இல்லை..

ஆயிரம் பேர் கூடி இருக்கும் சபையில் வைத்தா நாம் ஆடை மாற்றுவோம்?

இரு அவதாரங்களுக்கும் உடம்பு என்பது வெறும் சட்டையே! ஆகவே மறைவிடத்தில் தான் அதனை செய்தனர்! 

தனி இடத்தில் அவதார நிறைவு செய்த தனது ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் போலவே தனி அறையிலேயே யாரிடமும் தெரிவிக்காமல் தனது உணர்வை தனது சுய சங்கலப்த்தோடே உடலை விட்டு நீக்கினார்!

பாபா யாரிடமும் தன்னை மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லவே இல்லை! பக்தர் அதிர்ச்சி துக்கத்தால் அதனை செய்தனர்!

பாபா எனும் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் உடலுக்கும் மனதிற்கும் அப்பாற்பட்டவர்!

ஆகவே தான் அவர் இன்றளவும் வாழ்ந்து வாழ்கிறார்! 

அவருக்கு ஒரே ஒரு சட்டை தானா ? வேறு சட்டையே இல்லையா? 

பிரேமச் சட்டை விரைவில் வரும்... அது சட்டை மட்டுமல்ல தர்மச் சாட்டை எனவும் இந்த  உலகம் விரைவில் உணரும்!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 37 | ஆசிரியர் : சன்யாசினி சஞ்ஜெயானந்த்) 


"சர்வம் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணார்ப்பணமஸ்து:"

என்று சொல்லி அனைவர் இதயங்களிலும் நிறைந்து ஆன்மாவில் சைதன்ய ஜோதி ஏற்றி "ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி!" எனும் சத்தியப் பேருண்மையை சர்வ சாட்சியங்களோடு, இனி வரும் சத்ய யுகத்திலும் ரீங்கரித்துக் கொண்டே இருக்கப் போகிறது இந்த பிரம்மாண்ட இதிகாசத் தொடர்! இது வெறும் தொடர் அல்ல இரு அவதாரங்களின் ஆன்மச் சுடர்! சுபம்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக