பேரிறைவன் பாபாவின் பெரும் பரிவால் எவ்வாறு பொருளாதார பிரச்சனையும் இதய நோயும் குணமானது எனும் இருவகை அற்புதங்கள் ஒரே பதிவில் விறுவிறுப்பாக இதோ...!
அவள் பெயர் மீனாட்சி! அவளுக்கு மூன்று குழந்தைகள்! அதிர்ச்சிகரமாக அவள் கணவன் இறந்துவிடுகிறான்! ஆகவே மூன்று கிளைகளை சுமக்கும் தனிமரமாகிறாள் மீனாட்சி! தனது தாயிடம் செல்ல தயங்குகிறாள்! ஏனெனில் தனக்கு பொருளாதார பிரச்சனை! அவளுக்கு வந்து சேர வேண்டிய பணம் வந்து சேரவில்லை! இதில் ஒரு சுமையாக தாய்க்கு அவள் மாறிவிடக் கூடாது என்ற ஒரு நல்லெண்ணம்!
ஒருநாள் மீனாட்சி சகுந்தலா அம்மாளது வீட்டிற்கு வந்து தனது சூழ்நிலையை பகிர்ந்து கொள்கிறாள்!
தீவிர பாபா பக்தரான குமார் "கவலைப்படாதீர்கள்! ஸ்ரீ சத்ய சாயி பாபாவை நம்புங்கள்! அவர் எல்லாவற்றையும் சரி செய்வார்! பாபா நிச்சயம் சரி செய்வார்! பாபாவை முழுதாக நம்புங்கள்!" என்று குமார் சொல்லிக் கொண்டிருந்தது தான் தாமதம் - பாபா திருப்படத்தில் சாற்றப்பட்டிருந்த ஒரு சந்தன மாலை அப்படியே மீனாட்சியின் மடியில் விழுகிறது! அது பாபாவின் பேரிருப்பை உணர்த்துவதாகவும் - நடப்பதை எல்லாம் பாபா கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை நினைவூட்டும் விதமாகவும் அமைகிறது!
இது நடந்து ஒரே வாரத்திற்குள் அவளுக்கு வர வேண்டிய பணம் வந்து சேர, பொருளாதார பிரச்சனையும் தீர்கிறது! அந்த தனிமரம் மலரும் விடுகிறது! தனது தாயிடம் வசித்து குழந்தைகளோடு நிம்மதியாக வாழ்கிறது!
பாபாவே தேடி வந்து நொடியில் உதவிக்கரம் நீட்டுபவர் என்பதையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது!
சகுந்தலாவின் இருப்பிடத்தில் பாபாவின் திருப்படத்தில் குங்குமம் - தேன் எல்லாம் தானாகவே சிருஷ்டி ஆகும்! தானாக என்பதை விட தேனாக என்று சொல்வது இனிமையானது! இப்படி இருக்கையில் ஒரு முறை ஸ்ரீநிவாசன் என்கிற ஒரு முதியவருக்கு இதயம் பழுதடைகிறது! அவர் பாபா பக்தரும் இல்லை - பாபா பற்றி கேள்விப்பட்டவர் கூட இல்லை! மருத்துவர்கள் அவரின் இதயத்தை சோதிக்கையில் open heart surgery (இதய அறுவை சிகிச்சை) செய்யத் தான் வேண்டும் - ஆனால் தாங்குகிற அளவுக்கு அவர் இதயமோ வயதோ இடம் தரவில்லை என்பதால் கையைப் பிசைகிறார்கள்! அது ஸ்ரீநிவாசன் சகோதரரின் மனதையும் சேர்த்தே பிசைகிறது!
அந்த ஸ்ரீநிவாசனின் மூத்த சகோதரர் டாக்டர் குமார் இல்லத்தின் அருகே வசிப்பவர்! அவரை சந்திக்க ஸ்ரீநிவாசன் வருகிறார் - பேசுகிறார் - தான் அதிக நாட்கள் உயிர்வாழப் போவதில்லை என தெரிந்து விசனப்படுகிறார்! அப்படியே தெருவில் சோர்வாக நடக்கிற போது சகுந்தலா வீட்டை கண்ணோட்டம் இடுகிறார்! அவர் வீட்டின் வெளியே பாபாவின் திருப்படம்! பாபாவை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்படுகிறது! சகுந்தலாவும் விளக்குகிறார்! பாபாவை பற்றி முன்பே தெரியாமல் போய்விட்டதே என்றும் வருந்துகிறார்!
மருத்துவர்களால் கைவிடப்பட்ட தன்னை சரிசெய்ய பாபாவால் மட்டுமே முடியும் என்பதை உணர்கிறார்! விரக்தியோடு நகர்ந்த ஸ்ரீநிவாசன் நாட்கள் - பாபா பக்தியோடு நகர்கிறது! ஒருமுறை பாபா ஸ்ரீநிவாசன் "நான் இருக்க ஏன் கவலைப்படுகிறாய்? செல்! சென்று மருத்துவரிடம் மறுமுறை பரிசோதனை செய்து கொள்!" என்று பாபா கனவில் தோன்றி தெரிவிக்க...! உடனே அவர் மருத்துவரிடம் செல்ல - அவர்களே ஆச்சர்யப்படும் வகையில் அவர் இதயம் அறுவை சிகிச்சைக்கு தயாராகும் நிலையில் இருக்கிறது!
அவரும் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார்!
அவரை காண அவர் மனைவியும் சகுந்தலாவும் வருகிறார்கள்! சகுந்தலாவை பார்த்து ஸ்ரீநிவாசன் மகிழ்கிறார்! தனது வார்டில் இருந்து வேறொரு வார்டுக்கு செல்வதை ஸ்ரீநிவாசன் விரும்பவில்லை!
"பயப்படாதீர்கள் - பாபா உங்கள் கூடவே இருக்கிறார்!" என்று சாயி நம்பிக்கையை மேலும் சகுந்தலா அதிகப்படுத்துகிறார்!
எக்ஸ் ரே எடுப்பதற்கான வார்ட் மாற்றம் (1980'களின் காலகட்டம்)
ஆனால் அந்த அறையில் மின்சாரம் துண்டிக்க- அவரது பழைய வார்டுக்கே அனுப்பபடுகிறார்! அவர் நினைத்ததை போலவே பாபா அந்த சம்பவத்தை அரங்கேற்றுகிறார்!
நல்ல வண்ணம் அறுவை சிகிச்சை நிகழ - அதற்குப் பிறகு அவரது மொத்த குடும்பமுமே சாயி பக்தக் குடும்பமாக மாறுகிறது! ஏனெனில் அது பாபா மீதான அவர்களின் நன்றிக் கடன்! அது விஸ்வாச விஸ்தீகரிப்பு! நீண்ட நெகிழ்வின் வாழ்வியல் நிகழ்வு!
(ஆதாரம் : "ஸ்ரீ சத்ய சாயி லீலாமிருதம்" - பக்கம் 6-9 பதிப்பாசிரியர் - டாக்டர் கே.டி.குமார் - பதிவு ஆண்டு 2004)
"பாபா உங்கள் கூடவே இருக்கிறார் - ஆகவே கவலையே படாதீர்கள்!" என்று நாம் சக சாயி பக்தர்களிடம் சொல்வது பெரிய விஷயமே இல்லை! பாபா பக்தரே இல்லாதவர்களிடமும் இதே மெய்யியல் வாசகத்தைச் சொல்ல வேண்டும்! அப்படிச் சொல்கையில் அந்த வாசகமே வாழ்வியல் அனுபவமாக மாறும்! அதற்கு முதலில் நம் கூடவே பாபா இருக்கிறார் என்பதை நாம் திடமாக நம்ப வேண்டும்! உணர வேண்டும்! அதுவே மிக மிக முக்கியம்! ஏனெனில் பக்தியை எப்படி விளக்க முடியும்? வாழ்வதே பக்திக்கான விளக்கம்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக