தலைப்பு

வியாழன், 13 நவம்பர், 2025

கிணறு வெட்ட கிளம்பிய சாயி கருணை!

இந்தியாவின் முதுகெலும்பான ஒரு ஏழை விவசாயிக்கு பாபா புரிந்த கருணை சுவாரஸ்யமாக இதோ..!

திரு. இளங்கோவன் சாய்ராம் ஒரு புண்ணிய ஆத்மா. அமைதியாக பேசும் பண்பாளர். சுமார் 20 வருடங்களுக்கு முன்பு நான் புட்டர்த்தி சேவை பணிக்கு சென்ற போது சேலம் to பெங்களூர் வண்டியில் எனது அருகில் மெல்லிய தேகத்துடன் ஒருவர் அமர்ந்திருந்தார். நான் அவரிடம் பேசினேன். அவரும் புட்டபர்த்தி சேவை பணிக்கு செல்வதாக கூறினார். தாங்கள் என்ன செய்கிறீர்கள் என கேட்டதற்கு post office ல் பணியாற்றுவதாக..

தெரிவித்தார். தனது பெயர் இளங்கோவன் என்றும் கெங்கவல்லி அருகே சாத்தபாடியில் வசிப்பதாகவும் அவர் கூறினார்.

நான் அவரிடம் சுவாமியிடம் எப்படி வந்தீர்கள் என கேட்டேன்.

அதற்கு அவர் எனது தந்தை விவசாயம் செய்து வந்தார். வயலுக்கு தண்ணீர் வசதி இல்லை. கிணறு வெட்டலாம் என தந்தை நினைத்தார் தண்ணீர் வராவிட்டால் என்ன செய்வது?  என்று  பயம். 

அப்போது தெரிந்தவர் ஒருவர் பகவான் நீ சத்ய சாய் பாபாவை பற்றி கூறி அவர் கடவுள். அவரை பார்த்து கேட்டு செய் என கூறியுள்ளார். அன்னாளில் கிணறு வெட்ட மிகுதியாக செலவாகும். தண்ணீர் வராவிட்டால் கடனாளி ஆக நேரிடும் . அதை சரி செய்ய பல வருடம் ஆகும். தண்ணீர் வந்து விட்டால் நிலத்திற்கு தனி செல்வாக்கு. எனவே அவர்  பகவானை கேட்டு வர புட்டபர்த்தி  சென்றார்.

சுவாமி தரிசன நேரத்தில் இவர் அருகே வந்து "என்ன கிணறு வெட்டணுமா" என்றார் ? ஆம் சுவாமி

தண்ணீர் என தந்தை ஆரம்பிக்க - சுவாமி "தண்ணீர் நான் தர்றேன்!"" பயப்படாதே கிணறு வெட்ட வழியில் ஆளையும் அனுப்பறேன் என்றார். 

இவரது தந்தை மகிழ்வுடன்

ஊருக்கு திரும்பினார். பெங்களுரில் இருந்து சேலம் வரும் போது வழியில் ஓமலூரில் நான்கு  ஐந்து பேர் கடப்பாறை மமூட்டியுடன் வண்டியில் ஏறினர். இவரது தந்தை அருகே வந்து அமர்ந்தனர்.தந்தை அவர்களிடம் பேச்சு கொடுக்க அவர்கள் ஓரிடத்தில் கிணறு வெட்டி முடிக்கும் தறுவாயில் இருப்பது தெரியவந்தது. தந்தை விவரத்தை கூற  சாத்தப்பாடி வந்து கிணறு வெட்டுவதாக கூறி முன்பணம் பெற்றனர். அதன்படி அவர்கள் வந்து கிணறு வெட்டியதாக

தெரிவித்தார் இளங்கோவன். 

நான் ஆவலுடன் தண்ணீர் வந்ததா? என்றேன். கிணறு வெட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு பாறையை பெயர்க்க அதன் அடியில் இருந்த ஊற்றில் இருந்து குபு குபு என தண்ணீர் அதிகமாக பீரிட்டு வர வேலை செய்தவர்கள் வெளியே ஓடி வந்ததாகவும் தெரிவித்தார்! திருப்தியாக பணி முடிந்து .கிணற்றில் நீர் அதிக அளவு இருந்ததாக தெரிவித்தார்.   

அன்றிலிருந்து பகவானை கடவுளாக வணங்கி வருவதாக கூறினார்! இளங்கோவன் சாய்ராம்  இந்நிகழ்ச்சியை கூறும் போது கிணறு வெட்டி பத்து வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தது. நான் அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது

அப்போது 4 வருடங்களாக மழை இன்றி தமிழகத்தில் கடும் வறட்சி . பல கிணறுகள் வறண்டு போயிருந்தது. 

நான் இளங்கோவனிடம் இப்போதும் கிணற்றில் தண்ணீர் உள்ளதா? என அறியாமையோடு கேட்டேன். அவர் அமைதியாக கூறினர். "தண்ணீர் நிறைய உள்ளது. அது சுவாமி கொடுத்த தண்ணீர்!" என்றார்.


கங்கையை பிறையாக சூடியவன் தந்த நீர் வற்றாது

அவன் சொன்ன வாக்கும் மாறாது

ஜெய் சாய்ராம்


~S.ரமேஷ் Ex சேலம் சமிதி கன்வீனர்


பின்குறிப்பு: திரு இளங்கோவன் சாய்ராம் அவர்கள் செவ்வாய் (11–11–2025) காலை பகவானின் திருவடியை அடைந்து உள்ளார் என்பதால் ஸ்ரீ சத்ய சாயி யுகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் ஆன்ம சாந்தியையும் பிரார்த்தனை செய்து கொள்கிறோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக