தலைப்பு

செவ்வாய், 9 நவம்பர், 2021

பக்தர் மனக் குறையை தீர்க்க பாபா ஆடிய நாடகம்!

தீயை நெருங்கினால் வெப்பம் அதிகரிக்கும். ஆனால் தீயின் வெப்பத்தால் தங்கம் உருக்கப்படும் போது, அதிலுள்ள அனைத்து மாசுகளும் அகன்று சொக்கத்  தங்கமாக மாறிவிடும். பகவானின் அணுக்கத் தொண்டர்கள் பலர் இது போல  அனுபவங்களைப் பெற்று,  பாபாவால்  ஆன்மீகப் பாதையில் வழி நடத்தப் பட்டுள்ளனர். அவர்களின் ஒருவரான சாய்ராம் அனில்குமார் பகவான் அற்புதப் பிரசங்கங்களை, ஸ்வாமி பேசும் போதே மொழிபெயர்ப்பு செய்தவர், பகவானின் நெருக்கத்தில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்கிற தமது அனுபவத்தை அறிவுரையாக நமக்கு கூறுகிறார். 


🌹 "நான்" என்பது அழிந்து "நாம்"ஆகும் விந்தைப் பயணம்:

நாம் அவரின் நெருக்கத்திற்கு ஏங்கும் போது நம்மை விட்டு விலகுவது போல ஒதுங்குவது ஸ்வாமியின் லீலைகளில் ஒன்று. "நம்மிலிருந்து அவர் வரை" என்கிற இந்தப் பிரயாணம் , பேசுவதற்கு சுலபமானது ஆனால் நடைமுறைக்கு கடினமானது. இந்த பிரயாணத்தை எல்லோரும் துவக்க முடியாது. இது உடலை வருத்தி, உள்ளத்தை ஒடுக்கி. சில சமயம் பகவானால் ஒதுக்கப்படும் அனுபவங்கள் நிறைந்தது. பிறர் புகழ, பலர் மெச்ச, அனைவரின் பாராட்டைப் பெற்றவர்கள், பகவானுடனான இந்த பிரயாணத்தைத் துவக்கும்போது, அனைத்தையும் துறக்கநேரிடும்.

நாமே எல்லாம் என்ற நிலையில் இருந்து. நாம் ஒன்றுமில்லை என்ற நிலையை அடைய நேரிடும். அது அப்படித்தான். அது அப்படித்தான். ஏனெனில் இது ஒரு ஆன்மீகப் பயணம். நான் என்பதைத் துறந்து. நாம் என்ற இலக்கை நோக்கும் பயணம். இப்பயணத்தில், அனைத்துமாக உன்னை நினைத்த நீ, சாமான்யன் என்ற நிலையையும் கடந்து, ஒன்றுமில்லாதவன் ஆக மாறுகிறார். எல்லாவிதமான வெளிப் பூச்சுகளும் உருகி, தன்னிலையை உணரும் ஒரு அற்புத அனுபவம் இந்தப் பயணம். இந்த அனுபவங்களில் ஒன்றைப் பகர்கிறேன். பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீனிவாசா கெஸ்ட் ஹவுஸ் திறப்பு விழா முடிந்து, நாட்டின் பிரதம மந்திரி, மத்திய அமைச்சர்கள், கவர்னர்கள் ஸ்வாமியுடன் உணவருந்த அழைக்கப் பட்டனர். என்மனம் தனது ஈகோவைக் கிளறிவிட, ஸ்வாமியை மானசீகமாக சில கேள்விகள் கேட்டேன். "ஹே பகவான், விசிட்டர் விசா போன்று இங்கு வந்து போகும் முக்யஸ்தர்கள் தான் உங்களுக்கு வேண்டுமா? எங்களைப் போன்றவர்கள் வேண்டாமா?" இதுபோன்ற இதயத் தவிப்புடன் நான் அமர்ந்திருக்க, சர்வாந்தர்யாமி ஸ்வாமி ஒரு நாடகத்தை நடத்தி என் மன உளைச்சலைப் போக்கினார்.

அந்த சந்தர்பத்தில், ஈஸ்வராம்பா பள்ளி வளாகத்தில்  பொது மக்களுக்கு நாராயணசேவையும், வஸ்திர தானமும் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு சேவாதல் என்னிடம் ஓடிவந்து , புடவைகள் ஸ்டாக் தீர்ந்துவிட்டது, மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள்.நீங்கள் உடனே பகவானிடம் சென்று இதைத் தெரிவியுங்கள் என்றார். பகவானிடம் பேச இது ஒரு சந்தர்ப்பம் என மகிழ்ந்து உடனே பகவானிடம் ஓடிச் சென்றேன் "வாங்க சார், வாங்க சார்," என்று வரவேற்ற பகவான்,விஷயத்தைக் கேட்டு "இரண்டு வேன்களில் 1000 வஸ்திரங்கள் அங்கு அனுப்பி உள்ளேன். தட்டுப்பாடு என்பதே வராது" என்றார். பின்னர் கனிவுடன் என்னை நோக்கி" நான் உன்னை கூப்பிடாமல் ஒதுக்கிவிட்டதாக மனக்குறையில் இருந்தாய் அல்லவா? அதைத் தீர்க்கவே இந்த நாடகம்" என்று கூறினார். ஆனந்த அலைகளில் மூழ்கி நான் திக்கு முக்காடிப் போனேன். 

 தெய்வீகப் பயணத்தின் அனுபவங்கள் பல தரப்பட்டவை. சில, திடீர் என நிகழ்ந்து திகைப்பூட்டலாம், வேறுசில இன்பம் தரலாம் அல்லது மனதை வருத்தலாம். ஆயினும் அவை நமக்கு நிரந்தரப் பாடங்கள் ஆகும். அவற்றின் மூலம் பகவான் நமது,(நம்மிலிருந்து அவர்) பயணத்தை, நம் கைபிடித்து அழைத்துச் சென்று நிறைவு செய்கிறார்.

🌻சாய்ராம். ஆன்மீகப் பயணத்தை நாமும் துவக்கலாம். அதில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும், பகவானின்பிரசாதமென ஏற்றால், நாம் அந்தப்பயணத்தை நிறைவு செய்ய பகவான் பாபா உதவுவார். 🌻


ஆதாரம்: திரு. அனில்குமார் சாய்ராம் அவர்களின் யூடூப் பதிவு..

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக