தலைப்பு

வியாழன், 10 பிப்ரவரி, 2022

சுவாமி சிருஷ்டித்த இந்திய வரைபட அதிசய வெள்ளிப் பதக்கத்தில் பொறிக்கப்பட்ட ரகசியங்கள்!


ஒருமுறை நம் சுவாமி, இந்திய வரைபடம் கொண்ட அபூர்வ பதக்கமொன்றை சிருஷ்டித்தார். பின் அதில் பொதிந்திருந்த ரகசியங்கள்... அதுசார்ந்த தீர்க்கதரிசனங்கள் மற்றும் விபரங்களை ஸ்வாமியே தந்தார். அந்த அதிசயநிகழ்வு குறித்த சுவாரஸ்யமான விபரங்கள், முதன்முறையாக தமிழில் இதோ....


1976 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் உதகமண்டலத்தில் நிகழ்ந்த கோடைகாலப் பயிற்சி முகாமின்போது, ஸ்வாமி  தனது திருக்கரத்தை சுழற்றியசைத்து சிறிய பதக்கம் போன்றதொரு உலோக வட்டை வெளிப்படுத்தினார். பின்னர் தனது மாணவர்களுக்கு ஒரு புதிரான அறிவிப்பை வெளியிட்டார். "இந்த நாட்டிற்காக எதிர்காலத்தில் நான் என்ன செய்யப் போகிறேன், மேலும் முழுஉலகத்திற்காகவும் நான் என்ன செய்யப் போகிறேன் என்பது இப்போது உங்களுக்குக் காண்பிக்கப்படும்."

சுவாமி  தன்னைச்சுற்றி அங்கு கூடியருந்தவர்களுக்கு தாம் வரவழைத்திருந்த பதக்கத்தைக் காட்டினார். அந்தப் பதக்கம் கருப்பு ஓனிக்ஸ் தளத்துடன் வட்டமாக இருந்தது . அதில் 18 ரத்தினங்கள் பதிக்கப்பட்ட இந்தியாவின் வெள்ளி வரைபடம் இருந்தது. மேலும், வரைபடத்தில் 100 சமஸ்கிருதக் குறிப்புகள் பொறிக்கப்பட்டிருந்ததாகவும் குறப்பிட்டார். அதில் அவதாரம் பற்றிய அனைத்து தகவல்களும் இருப்பதாகக் கூறினார். பாபா தெலுங்கில் பேச அதை ஒரு ஆங்கில மொழிபெயர்ப்பாளர்  மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார்... 


✋ இந்திய வரைபட சிருஷ்டி மெடாலியன் பற்றி சுவாமி:

“நான் மெட்டீரியலைஸ்(சிருஷ்டி) செய்த இதில், இந்தியாவின் வரைபடம் மற்றும் அதன் 18 வெவ்வேறு அங்கங்களும்  உள்ளது. ஒவ்வொரு அங்கத்திலும் ( அல்லது மாநிலத்திலும்) நான் செய்த பணியை  அல்லது  செய்ய வேண்டிய பணிகளைக் குறிக்கும் நினைவு ஸ்தூபிகள் குறிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்தப் பதக்கத்தில் எனது தற்போதைய மற்றும் எதிர்காலப் பணிகள் சமஸ்கிருத வார்த்தைகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
நான் ஏற்று வந்துள்ள இந்த உடல் இன்னும் 46 வருடங்கள் இருக்கப் போகிறது. அந்த 46 வருடங்களில், ஒவ்வொரு மாநிலத்திலும், நாட்டிலும் என்னென்ன வேலைகளைச் செய்வேன், என்ன தர்ம ஸ்தாபனம், எந்த மாதிரியான கல்லூரிகள், எந்தவிதக் கல்வி நிறுவப்படும் என்ற எல்லாம் எழுதப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல… எந்த பையனுக்கு/மாணவனுக்கு எந்தெந்த மாநிலங்களில், எந்தவித பணி ஒப்படைக்கப்படும் என்பதும்  இந்த பதக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. சமஸ்கிருத எழுத்துகளை படிக்கக்கூடியவர்கள் யாராவது இருந்தால், இதில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை நன்றாக படிக்க முடியும்!" என்கிறார்

" அது சமயத்தில் அங்கு கூடியிருந்த மாணவர்கள் அனைவரும் பதக்கத்தில் உள்ளதை விளக்கி எதிர்காலத்தை வெளிப்படுத்துமாறு சுவாமியிடம் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகள் வலுத்ததால், சுவாமி கூறினார் - "நானாக எதிர்காலத்தை இப்போதே வெளிப்படுத்த மாட்டேன் - நீங்கள் விரும்பினால், நீங்களே படிக்கலாம்!." என்கிறார்.
                                                ஒரு மாணவர் பதக்கத்தை வாங்கி, அதில் என்ன இருக்கிறது என்பதைப் படிக்க முயன்றார். எழுத்துக்கள் மிகவும் சிறியதாக இருந்தது. நண்பரின் கண்ணாடியை கடன் வாங்கி அதை பெரிதாக்கி படிக்க முயன்றார். ஆனால் அந்த எழுத்துக்கள் தேவனாகிரி/சமஸ்கிருத எழுத்து என்பதை மட்டுமே அறிய முடிந்தது. அதே சமயத்தில் அந்தப் பதக்கம் குறித்தும் அதனில் அடங்கியுள்ள எதிர்கால ரகசியங்கள் குறித்தும் அங்கு கூடியிருந்தோரின் ஆர்வம் அதிகமானது.

அச்சமயத்தில் அங்கே சுவாமி மாணவர்களிடம் மட்டும் பேசவில்லை, அனைவரிடமும் பேசினார். 

“அவருடைய பக்தர்களாக மாறுவதற்கும் அவருடைய போதனைகளைக் கடைப்பிடித்து  வாழ்வதற்கும் உறுதியும் உள்ளவர்கள் சிலரே”, லட்சத்தில் ஒருவரே தனது பக்தர்  என்கிறார் சுவாமி

"பத்து பேரில் ஒருவரே, உண்மையிலேயே நல்லவராக உள்ளார் ; அப்படிப்பட்ட பத்து பேரில் ஒருவரே  கடவுள் மீது ஆழமான உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்; அத்தகைய பத்து பேரில் ஒருவர் மட்டுமே கடவுளின்  நேரடி அனுபவத்திற்காக ஏங்குவார்; அப்படி உண்மையில் எங்கும் பத்து பேரில் ஒருவரே கடவுளுக்காக எதையும் துறக்கவும், கடவுளிடம் முழுமையாக சரணடையவும் தயாராக இருப்பார். அவரே என் பக்தர், அவரே எனக்கு மிகவும் பிரியமானவர்"

“ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பொறுத்தவரை, விவேகானந்தர் மற்றும் பிரம்மானந்தர் போன்று ஒன்று அல்லது இரண்டு துறவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டியிருந்தது - அவர்கள் சன்யாசிகள். நீங்கள் சன்யாசிகளாக ஆக வேண்டியதில்லை. என்னுடைய இந்த குறிப்பிட்ட பணியில், உங்களைப் போன்ற  இளைஞர்களையே பெரிய அளவில் பயன்படுத்துவேன்.  உங்களைச் சரியான பாதையில் அழைத்துச் சென்று, நான் செய்ய நினைத்ததை நிகழ்த்த உங்களைக் கருவியாகப் பயன்படுத்தப் போகிறேன். இந்த குறிப்பிட்ட பதக்கத்தில் அதுவும் கூட விவரிக்கப்பட்டுள்ளது”.

இதுபோன்ற, (சுவாமி சிருஷ்டித்த) பொருட்களுக்காக நீங்கள் ஏன் ஏங்குகிறீர்கள்? இதை சிருஷ்டித்தவரே இங்கே இருக்கிறார், அவரே உங்களுக்குச் சொந்தமானவர் என்கிறபோது அவரால் உற்பத்தி செய்யப்பட்டதை ஏன் இத்தனை ஆர்வத்துடன் நோக்க  வேண்டும்? இதைத் தயாரித்த நான், உங்களுக்குத் சொந்தமானவன். நான் உங்களை பாதுகாப்பேன், என்ன செய்ய வேண்டும் என்பதை நிதானமாகச் சொல்கிறேன், அவசரப்பட வேண்டாம், இங்கே என்ன விவரிக்கப்பட்டுள்ளது, அடுத்த 46 ஆண்டுகளில் நான் என்ன செய்ய விரும்புகிறேன், யாரைப் பயன்படுத்தப் போகிறேன், எப்படிப் பயன்படுத்தப் போகிறேன். நான் எப்படி சரியான பாதையில் செல்வேன் என்பதை எல்லாம் நான் சரியான நேரத்தில் உங்களுக்கு விவரிப்பேன், அவசரப்பட வேண்டாம், நீங்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் செய்ய அழைக்கப்படும் பணியைப் போற்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் ஏற்றுக்கொண்ட பணியினை தீவிரமாக செயல்படுத்தி சரியான பாதையில் செல்ல நீங்கள் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் செய்ய வேண்டியது இதுவே, மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்.

நான் உங்களுக்குத் சொந்தமானவன் நான் உங்களுடனேயே இருக்கிறேன். நான் வரவழைத்ததை நீங்கள் ஏன் பெரிதாக  நினைக்கிறீர்கள்? மேலும் எதிர்காலத்தில் நீங்கள் என்னை பல்வேறு வடிவங்களில் (என்னுடைய வேறு ஸ்வரூபங்களையும்) காண்பீர்கள்!(மேலே தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சுவாமியின் திருவுரையாடலின் ஆடியோ கிழே இணைக்கப்பட்டுள்ளது..)

👇👇


தமிழில் தொகுத்தளித்தவர்: திரு முனிஷ்குமார் பிரகாசம், சிவகாசி

1 கருத்து: