தலைப்பு

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

இன்னார்க்கு இன்னார் என இல்லறத் தீர்மானம் எழுதுகிற இறைவன் சாயி!


சுவாமியின் விசித்திர லீலை வியப்பானது! அது காலம் கடந்தும்... காலம் கனிந்தும் தெளிவாக உணரக் கூடியது...! அப்படி ஓர் இல்லறத் தீர்மானம் பல ஆண்டுகளுக்கு முன்பே சுவாமி நிர்ணயித்த ஓர் வைபவ நிகழ்வு சுவாரஸ்ய அனுபவமாய் இதோ...

தாராவும் அவர் நண்பன் சுஜித்தும் அடிக்கடி பகவானிடம் பேட்டி பெறும் பாக்கியம் கொண்ட மாணவர்கள். அவ்வாறு ஒரு முறை பேட்டியின்போது, இருவருக்கும் ஒரு கைக் கடிகாரம் வரவழைத்து அணிவிக்கிறார் பகவான். ஆனால் பாவம், அது அவர்களுக்கு சரியாக பொருந்தாமல், சிறிது பெரிதாக இருக்கிறது! உடன் பகவான் இருவருக்கும் வழவழப்பான, இரண்டிரண்டு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து, வெளியே கடை வீதிக்கு சென்று சரி செய்து கொள்ள சொல்கிறார்! மாணவர்கள் நினைக்கிறார்கள், 'சிறிது முன்பு கை அசைப்பில் வாட்ச்களை வரவழைத்த எல்லாம் வல்லவரால், அதனை சரி செய்ய இயலாதா? என்ன ஒரு மாயா நாடகம்'. கடை வீதிக்கு செல்லும் நண்பர்கள், கைக் கடிகாரத்தை சரி செய்ய 15 அல்லது 20 ரூபாய் தான் ஆகும், ஆனால் பகவான் 1000 ரூபாய் கொடுத்திருக்கிறாரே என்றெண்ணி, பகவான் கொடுத்த பணத்தை செலவழிக்காமல் பத்திரமாக வைத்திருக்க முடிவு செய்தனர்.


வாட்சுகளை சரி செய்த பின் தங்கும் அறைக்கு திரும்பிய தாரா, உடைகளை மாற்றும்பொழுது, தன் சட்டை பையில் பத்திரமாய் இருந்த 2 நோட்டுகளும் காணாமல் திகைத்தார், பகவானின் பிரசாதமாக எண்ணியதை காணாமல் வருந்தினார்.

அவ்வருத்தத்தை பகவானுக்கு ஒரு கடிதமாக எழுதி, மறுநாள் தரிசனத்தின் போது அவரிடம் வழங்கினார், நாடந்ததையும் பகவானுக்கு விவரித்தார். அதனை கேட்ட பகவான் "ஓ, அதுவா, அப்பணத்தை உன் மனைவிக்கு கொடுத்து விட்டேன்!" என்று கூறிக்கொண்டே நகர்ந்தார்.


பகவான் இப்படித்தான் பல பேரிடம் நகைச்சுவையாக பேசுவார். அதுபோல் இப்போதும் பேசுகிறார் என்று எண்ணிய மாணவன், அந்த பணத்தை பற்றி மறந்தே போனார். தனது பட்டப்படிப்பை முடித்த தாரா, தொடர்ந்து சத்ய சாயி இசைக் கல்லூரியில் பயின்றார்.

10 வருடங்கள் கழிகிறது. 2010 அக்டோபர் 23ம் தேதி, அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் அர்ச்சனா என்ற பெண்ணை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். அர்ச்சனா, அவரும் ஒரு சாயி பக்தை. இருவரும் தங்கள் சாயி அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். நமது தாரா, அந்த காணாமல் போன 500 ரூபாய் நோட்டுகள் பற்றியும், பகவான் அதனை 'மனைவிக்கு' அனுப்பி விட்டதாக கூறியத்தையும் மறக்காமல் பகிர்கிறார்.

தாரா தன் மனைவி அர்ச்சனா வுடன்..

இந்த நிகழ்ச்சியை கேட்டு கொண்டிருந்த அர்ச்சனா ஆச்சரியத்துடன் முகம் மலர்கிறார்! இந்த நிகழ்ச்சி நடந்த அதே ஏப்ரல் 2000த்தில், அர்ச்சனா பெங்களூரில் BDS (Bachelors in Dental Surgery) படித்து கொண்டிருந்தார். தனக்கு கிடைத்த சில நாள் விடுமுறைக்கு ஹைதராபாத் செல்ல எண்ணுகிறார். குறிப்பிட்ட அன்றைய தினம் பெங்களூரில் போஸ்டல் மற்றும் வங்கிகள் ஸ்டரைக். ஹைதராபாத் செல்ல டிக்கெட் எடுக்க நினைத்து தனது பர்ஸினை பார்த்தபோதுதான் தெரிந்தது, அனைத்து பணமும் காலி என்று. பேங்கில் சென்று பணம் எடுக்கலாம் என்றால் அன்று ஸ்டிரைக். வருத்தத்துடன் பகவானை பிரார்த்தித்தார் அர்ச்சனா. கடைசி முயற்சியாக பர்ஸில் ஏதேனும் பணம் இருக்கிறதா என துளாவியபோது, அவர் கைகளில் அழகாக மடிக்கப்பட்ட வழவழப்பான இரண்டு 500 ரூபாய் நோட்டுகள் அகப்பட்டன!!! பின்னர் ஹைத்ராபாத்துக்கு டிக்கெட் எடுத்து சென்று வந்தார்! அங்கு காணாமல் போன அதே நோட்டுகள்!!

பகவானின் கருணை விளையாட்டை எண்ணி இருவரும் ஆனந்தித்தனர்.

தனது பெற்றோர்தான் தனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கிறார்கள் என்று எண்ணியது எவ்வளவு அறிவீனம். 10 வருடங்களுக்கு முன்னேயே ஸ்வாமி அதனை செய்து விட்டார்! மேலும், அவர் சொல்லும் சொற்கள் அனைத்தும் சாதாரணமானவை அல்ல. பகவான் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் வேத வாக்கே என உணர்ந்தார் தாரா!

ஆதாரம்: 

தமிழாக்கம்: திரு, விஷ்வேஷ் பாபு, மதுரை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக