தலைப்பு

புதன், 9 பிப்ரவரி, 2022

இலங்கை சகோதரிகளின் முன்தோன்றி புட்டபர்த்தி வரவழைத்து திருமணங்கள் நிகழ்த்திய தெய்வ சாயி!

ஒரு இலங்கை குடும்பத்திற்கே தீர்த்த யாத்திரைப் பலனை தேடிப் போய் அளித்து திருமணங்கள் நிகழ்த்தி.. கலவர பூமியில் அவர்களின் நிலவரம் மாற்றி கவசமாக திகழ்ந்த ஒரு சுவாமி அனுபவம் சுவாரஸ்யமாக இதோ...


1963ல் சிலோனை சேர்ந்த சந்திரா தன் பெற்றோர்களோடும் தங்கையோடும் தீர்த்த யாத்திரை மேற்கொள்கிறார்... இலங்கை மக்கள் எளிமையானவர்கள்... எத்தனையோ இன்னல்களிலும் தாய் மண்ணை நேசிக்கும் தலை சிறந்தவர்கள்... தமிழ் வேர்கள் அவர்கள்... இலங்கை சந்திரா குடும்பம் இந்தியா வந்து கோதாவரி தீரம் , காசி போன்ற புண்ணிய தளங்களுக்குச் சென்று நீராடிவிட்டு திருச்சி வருகின்றனர்... புனித நதியில் குளித்தல் உடலால் செய்யும் தவம்.. புண்ணிய ஷேத்திரங்களுக்கு சென்று வழிபடுதல் மனதால் செய்யும் தவம்.. மனிதன் எப்போது ஆன்மாவால் செய்யப்படுகிற தவமான ஆன்ம சாதனையைப் பெறுகிறானோ அது ஒன்றே போதுமானதாக வாழ்க்கை நிறைகிறது! அவர்கள் திருச்சி வருகிற போது.. அங்குள்ள ஒரு சுவாமி பக்தர்... "இவ்வளவு இடங்களுக்கு சென்று வந்தீர்களே.. இதோ அருகில் இருக்கும் பர்த்தி ஷேத்திரம் சென்றிருக்கலாமே!.. நடமாடும் தெய்வம் சத்ய சாயி பாபாவை தரிசித்திருக்கலாமே" என அவர் எடுத்துரைக்க... "பாபா ஒரு சன்யாசி.. அங்கே  அவரை தவிற அப்படி என்ன இருக்கிறது?" என சந்திராவின் தந்தை இடித்துரைக்க... "மாம்பழம் தின்றவருக்குத் தானே அதன் ருசி தெரியும்" என ஞானப்பழமாய்ப் பேசுகிறார் அந்த சுவாமி பக்தர். ஆரம்பத்தில் ஒரு சிலர் தவறுதலாய்  சுவாமியை சன்யாசி என நினைத்திருக்கிறார்கள்... அவர் சன்யாசி அல்ல சன்யாசிகளுக்கே முக்தி தர முகிழ்த்த பரப்பிரம்மம் என்பதை அனுபவம் ஏற்பட ஏற்பட உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்!


இலங்கை வருகிறார்கள்... 15 நாட்களுக்குப் பிறகு ஒருநாள் விடியற்காலைப் பொழுதில் எழுகிற நொடி சந்திராவுக்கும் தங்கைக்கும் ஒளிரூப தரிசனம் அளித்து 3 நிமிடம் புன்னகைத்தபடியும் ஆசீர்வதித்தபடியும் சுவாமி நிற்கிறார்! அது கனவல்ல... எழுகிற நொடி.. அது கற்பனை அல்ல.. காரணம் சுவாமியை இரு சகோதரிகளும் நினைத்தது கூட இல்லை.. தீர்த்த யாத்திரை பலன் நன்றாக வேலை செய்கிறது! அந்த அனுபவத்தை தந்தையிடம் சொல்ல அவரோ மற்றவர்களைப் போல் ஏதோ கனவு கண்டு பயந்திருப்பீர்கள் என அதை சட்டை செய்யவில்லை! நமக்கு அனுபவங்கள் நிகழும் வரை பிறரது அனுபவங்கள் சிலருக்கு வேடிக்கையாகவே தோன்றுகிறது! சுவாமி தரும் அனுபவங்கள் மனப்பக்குவத்தையே அளிக்கிறது.. பற்றை அறுக்கியது... அப்படிப்பட்டவை நிகழாவிடில் சுவாமி தரும் அந்த  அனுபவங்களை அடைந்தவர்கள் தவறவிட்டிருப்பார்கள்... அல்லது அனுபவம் நிகழ்ந்ததாக கற்பனை செய்திருப்பார்கள் (hallocinatiom) அவ்வளவே! "மனப்பக்குவமே சுவாமி மகிமைகளுக்கான சாரம்சம்!"

      அந்த அனுபவத்தின் விளக்கம் வேண்டி அருகிருக்கும் சுவாமி பக்தரிடம் விசாரிக்கிறார்கள் இரு சகோதரிகள். தன் மனைவிக்கு கழுத்தில் ஒரு கட்டி வந்த போது கனவில் தோன்றாமல் இப்படியே விடியற்காலை நேரில் தோன்றி அந்தக் கட்டியை அழுத்தித் தேய்த்துவிட்டு சுவாமி விபூதி கொடுத்து மறைந்ததாக அவர் சொல்லியதை வைத்தே சுவாமி இப்படி நேரிலும் தோன்றுவார் என உணர்ந்து கொள்கிறார்கள் அபூர்வ சகோதரிகள் எனும் அந்த இரு சகோதரிகளும்...!


சுவாமியை பிறகு ஒயிட் ஃபீல்டில் தரிசிக்கிறார்கள். அது 60கள்.. அவர்களோ கொடுத்து வைத்தவர்கள்... அவர்கள் தரிசன சமயத்தில் 20 பக்தர்களே அமர்ந்திருந்தனராம்... பசி எடுத்த இதயத்திற்கு சேமியா பாயாசமே கிடைத்தது போல் ஷேமமாய் இருந்திருக்கும்! சுவாமி அருகே வந்து புன்னகைத்து உரையாடி பாத நமஸ்காரம் தந்திருக்கிறார்! இரண்டாம் முறை பர்த்தியில் சுவாமி தரிசனம்... அங்கு தங்கியிருக்கிற போது சந்திரா கனவில் சுவாமி தோன்றி பேசுகிறார்... கனவு நிலையும்... தியான நிலையும்.. விழிப்பு நிலையும்.. அக விழிப்புப் பெருநிலையும் (Enlightment) சுவாமி பக்தர்களோடு தன்னை தொடர்புக்கு பயன்படுத்துகிற வாகனங்களே...! வாகன உரிமைச்சீட்டு போல் சுவாமி வருகிற அந்தந்த வாகனத்திற்கான ஒரே உரிமைச் சீட்டு பக்தியே!

     

ஒருமுறை சந்திராவின் தங்கை கையில் திருமணப் பத்திரிகை ஒன்றை வழங்கி.. சந்திராவிடம் "சிலோன் திரும்புங்கள்!" என்கிறார் சுவாமி... அவர்களும் இலங்கைக்கு இறைவன் சொல்படி திரும்ப... சந்திராவின் தங்கைக்காக டாக்டர் மாப்பிள்ளை வரன் தயாராக இருக்கிறது! முதலில் தங்கைக்கே திருமணம் ஆகிறது! பிறகு தங்கையின் கனவில் சுவாமி தோன்றி சந்திராவின் திருமணம் பற்றி கூறி "அவளுக்கு மாப்பிள்ளை வெளிநாட்டில் இருக்கிறான்! 1977 ஜனவரியில் திருமணம் நடக்கும்!" என ஆசீர்வதிக்கிறார்... சுவாமி சொல்லியபடியே "ஸ்ரீ சாயி விவாஹ சேவா" போல் சுவாமி சங்கல்பத்தோடு அருள் மணக்க மணக்க திருமணம் நிகழ்கிறது!

சந்திரா புகுந்த வீட்டில் கர்ப்பமாக இருக்கிறார்... அந்த வீட்டிலிருக்கும் ஜீசஸ் படத்தில் விபூதி பொழிகிறது... சுவாமியின் அந்த தெய்வ அறிகுறிபடி கிறிஸ்துமஸ் அன்றே ஆண் குழந்தை பிறக்கிறது சந்திராவுக்கு...


1983 ல் சிலோனில் முதல் ஆர்ப்பாட்டம் நிகழ்ந்த போதும்... அவர்கள் வீடு வெளியே அடித்து நொறுக்கப்பட்டாலும் உள்ளே அவர்களுக்கோ அவர்களின் பொருட்களுக்கோ எந்தவித சேதாரமும் இல்லாமல் உயிரின் ஆதாரமான சுவாமி உடனிருந்து காப்பாற்றுகிறார்! தீமை செய்துவிட்டவர்களுக்கு பதிலுக்குப் பதில் நாம் தீமை செய்ய வேண்டியதில்லை.. கண்ணுக்கு பதில் கண் என்றால் உலகமே குருடாகிவிடும் என்கிறார் மகாத்மா காந்தி! "யாரையும் பழிவாங்க நினைக்காதே.. அதை அவர்களின் கர்மாவே பார்த்துக் கொள்ளும்!" என சுவாமியே புத்தராய் அவதரித்த போது சொல்கிறார்! "தீ என்பது செயலாயின் சுடுதல் என்பது கர்மா!" ஆக தன்மேல் பக்தி வைத்திருக்கும் ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் சுவாமி இன்றளவும் பிரசாந்தம் தருகிறார் என்பதில் சந்தேகமே இல்லை!

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் - 3 / பக்கம் : 105 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


எத்தனை பெரிய அற்புதம்... அந்த இரண்டு சகோதரிகளுக்கும் சுவாமி புரிந்த மகத்துவ லீலை... ஒரு பெண்ணுக்கு திருமண வாழ்க்கையே அரண்.. ஆசீர்வாதம்... அப்படி இருக்கையில் அந்த அரணையும் ஆசீர்வாதத்தையும் சுவாமியே நிகழ்த்தி இருப்பது எத்தனை பெரிய பாக்கியம்... மஞ்சள் மகிமை பொங்கும் சுவாமியின் திருமாங்கல்ய மகிமை இது! சுவாமியை கட்டியாகப் பிடித்துக் கொண்டால் கெட்டிமேளச் சப்தம் நிச்சயம் கேட்கும் என்பதற்கு எத்தனை பெரிய உதாரணம் இது! "மாங்கல்யம் தந்துனானேனா" என மந்திரம் ஓத.. மஞ்சள் அட்சதை தூவ இரு ஜோடி இதயங்களையும் சுவாமி வரிசையாய் இணைத்திருப்பது இல்லறத்தை நல்லறமாய் நலம் பயக்க தனது நீண்ட நெடு ஆசீர்வாத மழையை இன்றளவும் தனது பக்த குடும்பங்களுக்குப் பொழிந்து கொண்டே வருகிறார்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக