தலைப்பு

வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

ஒரு நாத்திக பத்திரிகை எழுத்தாளரையே பக்தராய் மாற்றி ஞானம் கேட்க வைத்த பரப்பிரம்ம சாயி!

சுவாமியை போலி என அசிங்க அசிங்கமாக எழுதிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நாத்திக எழுத்தாளரை சுவாமி எவ்வாறு தன் பக்தராக மாற்றி தன் காலடியில் விழ வைத்து 'எனக்கு ஞானம் வேண்டும் சுவாமி' எனக் கேட்க வைத்த மகா மகிமை வாய்ந்த சுவாரஸ்ய பதிவு இதோ...


பானுமதி என்பவரின் குடும்பம் ஷிர்டி சுவாமியை வழிபடுகிறது...தெரிந்த ஒருவர் ஸ்ரீ ஷிர்டி சுவாமியின் மறு அவதாரமே புட்டபர்த்தி சுவாமி எனும் சத்தியம் பகிர்ந்து சுவாமி படம் தருகிறார்... அதிலிருந்து சுவாமியை வழிபட ஆரம்பிக்கிறது பானுமதி குடும்பம்... பானுவுக்கு சுவாமி மேல் பக்தி பெருக பாடல் இயற்றுகிறார்... ஆன்மீக வாழ்க்கையே போதும் திருமணம் வேண்டாம் என்றிருக்கிறார்... அது எப்படி அவ்வளவு சீக்கிரம் பானுவின் குடும்பம் அதை சம்மதிக்கும்... குடும்பத்தோடு சுவாமியிடம் முறையிட புட்டபர்த்திக்கு படையெடுக்கிறார்கள்! சுவாமி இப்படி எல்லாம் பேசுகிறாள் என அவர்கள் கண் கலங்க... சுவாமியோ நேர்காணல் அறையில் "நீ மதில் மேல் பூனையாக இருக்கிறாய்! திருமணம் செய்து கொள்!" என்கிறார்... யாருக்கு எவ்வகை கர்மாவோ அதற்கு தகுந்தாற் போல் அதற்கு தக்க காட்டுபவர் சுவாமி!! ஈஸ்வர் என்பவரோடு திருமணம் நிகழ்கிறது! ஆனால் அவர்கள் குடும்பத்திற்கு சுவாமியை பிடிக்கவில்லை... இருந்தும் தனியறையில் சுவாமி வழிபாடு தொடர்கிறார்.. கணவர் ஈஸ்வர் ஒருமுறை பானுவை அழைத்துக் கொண்டு வெங்கட முனி வீட்டில் சுவாமி தரிசனத்திற்கு அழைத்துச் செல்கிறார்.. வரும்வழியில் சுவாமியை பற்றியதான அபிப்ராயம் கேட்க...  "என்னை கண்ணாடியில் பார்த்தால் எப்படி இருக்கிறதோ அப்படி இருக்கிறார்!" என கிண்டல் செய்கிறார்... கணவனின் ஈகோவால் கலங்கிப் போகிறார் பானு!

1965ல் ஏன் இவ்வளவு கூட்டம் கூடுகிறது என புட்டபர்த்திக்கும் சென்று பார்க்கிறார்... சுவாமி ஒரு ஏமாற்றுப் பேர்வழி என சந்தேகக் கற்பனையை வரவழைத்து... 

நாத்திகம் பி. இராமசாமி

அவரின் நெருங்கிய நண்பர் நாத்திகம் பி. இராமசாமியின் "நாத்திகம்" என்ற பத்திரிகையில் சுவாமியை பற்றி விரல் கூசாமல் அவதூறுகளை எழுத ஆரம்பிக்கிறார்... சொல்லொண்ணா எழுத்துக்கள்... வெறுப்பை உமிழ்கிறார்... அவர் எழுத எழுத அது உண்மையா? என்றவாறு சுவாமியிடம் கூட்டமும் சேர... பலர் பக்தராக  மாறுகிறார்கள்...வெறுப்பு எழுத்துக்கள் அழைத்துப் போய் பலரை சுவாமி ஒரு அவதாரம் என உணர வைக்கிறது... எதை நினைத்து அவர் எழுத ஆரம்பித்தாரோ...அதற்கு நேர்மாறாக அனைத்தும் நிகழ்ந்தது! அதோடு விடாமல் சுவாமியின் படத்தை எங்கு கண்டாலும் கிழிப்பார்... சிகரெட் லைட்டரால் எரிப்பார்... வெறுப்புப் பைத்தியம் முற்றிவிடுகிறது! இப்படிப்பட்ட அவர் பழுத்த நாத்திகர். என்ன  செய்வது? நாத்திகத்திற்கு எப்போதும் தான் பிடித்த முயலுக்கு கொம்புகள் இருக்கிறது என அடித்துப் பேசும் அறியாமை அது! இந்த துர்செயலை கண்டு "தனக்கு ஒரு பக்தரை கணவராக தந்திருக்கூடாதா.. சுவாமி!" என அங்கலாய்க்கிறார் பானு... 

பானுவின் குடும்பமோ சுவாமியிடம் சென்று "நீங்கள் சொல்லித்தானே பானுவுக்கு திருமணம் செய்தோம்... ஈஸ்வரின் நடவடிக்கை பயமாக இருக்கிறது சுவாமி !" என சுவாமியிடம் பதறுகிறார்கள்... "Not to worry ... He is Torch in Dark!" (ஒன்றும் கவலைப்பட வேண்டாம்...அவன் இருட்டுக்கு ஒரு டார்ச் லைட் போன்றவன்) என்கிறார் சுவாமி... சுவாமியின் விளக்கம் சமாதானம் அளிக்கிறது! அவரின் நாத்திக பத்திரிகை எழுத்துக்கள் பலருக்கு அப்படிப்பட்ட சுவாமி யார்? சென்று தான் பார்ப்போமே! என திசை திருப்பி பக்தராக மாற்றி இருக்கிறது அல்லவா!! 

ஒருமுறை அந்த டார்ச் லைட் (ஈஸ்வர்) ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்து போது அசம்பாவிதமாய் விபத்துக்குள்ளாகி கோமாவுக்குப் போகிறது! ஆம் அந்த டார்ச் லைட் சுக்கல் நூறாய் உடைகிறது! செய்வதறியாது பானு விபூதி இட்டு சுவாமியை வேண்டுகிறார்... பிறகு வீட்டிற்கு டிஸ்சார்ஜ் ஆக... இரத்த கசிவு நேர்கிறது..அந்த இடத்தில் பானு விபூதி தடவுகிறார்...உடனே நிற்கிறது... ஆனால் ஃபிட்ஸ் வருகிறது ஈஸ்வருக்கு... படாதபாடு படுகிறார்! சுவாமியை பற்றி வேண்டாத அவதூறு எழுதியதால் தான் அவருக்கு அவ்வாறு சுவாமி விபத்துக்குள்ளாக வைத்தாரா? என யோசிக்கலாம்... இல்லை சர்வ நிச்சயமாக இல்லை... மனிதன் எதைச் செய்கிறானோ.. அதுவே அவனுக்கு திரும்ப வருகிறது.. அதுவே கர்மா!! சுவாமி தண்டிப்பதில்லை... செய் கர்மாவே மனிதனை தண்டிக்கிறது!

ஈஸ்வர் அந்த ஃபிட்ஸ் வரும் நாட்களில் ஒருநாள் "அந்த வைதீஸ்வரன் படத்தை எடுத்துக் கொண்டு வா!" என பானுவை அழைக்கிறார்... பல பக்தரின் நோயை தீர்த்த சுவாமி படத்தையே பானு வைத்தீஸ்வர சுவாமி என அழைப்பார்... அந்தப் படம் அது! அவர் அதை மடியில் அமர்த்தி...

முதன்முறையாக சுவாமி என அழைக்கிறார்... சுவாமி ஒருமுறை புட்டபர்த்தியில் ஈஸ்வரிடம் "நான் எதாவது அற்புதம் புரிந்தால் என்னை ஏற்றுக் கொள்வாயா! இதோ என் கை.. என கையை திறந்தபடி.. உனக்கு பிடித்த தேசத்தலைவரை நினைத்துக் கொள்... அவர் உருவத்தை இதில் காட்டுகிறேன் எனச் சொல்கிறார்... ஈஸ்வரும் நேருவை நினைக்க.. சுவாமியின் உள்ளங்கையில் நேரு தோன்ற... அப்போதும் ஈஸ்வருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.. அதை எல்லாம் இப்போது நினைத்து அவர் கண் கசிய... "சுவாமி .. என்னை காப்பாற்றுங்கள்... உங்கள் அற்புதத்தை நிகழ்த்துங்கள்!...எனக்கு ஃபிட்ஸ் வருவது உங்களுக்குத் தெரியுமே! நீங்கள் தான் அதை இப்போதே சரி செய்ய வேண்டும்!" எனக் கதறி அழுகிறார்...! உடனேயே இழுப்பு நோய் குணமாகிறது! அதிலிருந்து மெல்ல மெல்ல சுவாமியை உணர முற்படுகிறார்! சுவாமி முன்பு கூட நமக்கு எந்த தீங்கும் செய்ததில்லை.. பிறகு ஏன் அவரை வெறுத்தோம்? அவ்வளவு வெறுத்தும் கூட இப்போது சுவாமி நம்மை காப்பாற்றவே செய்திருக்கிறார்...என ஈஸ்வர் உணர்கிறார்... நாத்திக பத்திரிகையில் எழுதுவதை அடியோடு விட்டுவிடுகிறார்...இது தான் மனதிற்கு நிகழ்கிற உறைவு நிலை (Saturation point)... அப்படி ஒரு உள்ளுணர்வு ஏற்பட்டால் எந்த மனிதனும் எவருக்கும் எந்த தீங்கும் செய்திடவே மாட்டான்!

பானுவோடு சேர்ந்து சுவாமியை தரிசிக்க ஆரம்பிக்கிறார்... சுவாமியின் பாதங்களை குத்த வேண்டும் போல் இருக்கிறது... என ஈஸ்வருக்கு ஒரு விபரீத ஆசை எழ.. பானு திடுக்கிடுகிறார்... இல்லை பஞ்சாக இருக்கிறதா.. எப்படி இருக்கிறது என உணர வேண்டும் என தன் சந்தேகத்தை பகிர்கிறார்! 

சுவாமி இருவரையும் நேர்காணலுக்கு அழைக்க... எடுத்த எடுப்பிலேயே சுவாமி தனது திருப்பாதங்களை தூக்கி காட்ட... ஈஸ்வரும் சிறிதாக சுவாமி பாதத்தை தன் விரல்களால் பதம் பார்க்க... இப்போது சந்தேகம் தீர்ந்ததா? எனச் சிரிக்கிறார்! 

தன்னையே தரணிக்கு அர்ப்பணித்த தனிப்பெரும் அவதாரம் சுவாமி.. தனது திருவுடம்பெனும் ஒரு வாகனத்தையே சுவாமி இந்த பூமியின் சமன்பாட்டு நிலைக்காகவே அர்ப்பணித்தவர்!! 

ஒருமுறை ஈஸ்வர் சுவாமியிடம் ஞானம் வேண்டும் என்கிறார்.. என்ன என்பது போல் அவரின் காதருகே சுவாமி வர‌... "ஞானம் வேண்டும் சுவாமி !" என்கிறார்... "தந்தேன்!" என சுவாமி சொல்லி நகர்கிறார்...

ஞானத்திற்காகத் தானே சுவாமி இந்த நானிலத்திலேயே அவதாரம் எடுத்திருப்பது!! பக்தர் கேட்க மறந்தாலும் ஞானத்தை சுவாமி தராமல் போவதே இல்லை!!

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் - 3 / பக்கம் : 39 - 48 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


ஞானமே மனிதனின் ஒரே வேட்கையாக இருக்க வேண்டும்... அது ஒன்றே மனிதனை ஜென்ம ஜென்மமாக தொடர்ந்து வருகிறது! குடும்பம்- உறவு- நட்பு- வீடு- பணம் இவை யாவும் மாறிக் கொண்டே இருக்கிறது... ஆனால் மனிதன் ஞானத்தை கிரகிக்க ஆரம்பித்தால் அது ஒன்றே தொடர்கிறது! ஒரு ஞானியாலேயே உலகை சமநிலையோடு அன்பு செலுத்த முடியும்! அந்த ஞான ஆயுதமே கலியின் இருளை அழிக்க முடியும்! அந்த ஞானம் என்பது வாள்... பிரேமை என்பது கேடயம்.. இந்த இரண்டால் மட்டுமே மனப்போரை வெல்ல முடிகிறது! வேறெதனாலும் அல்ல...


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக