சென்னைப் பல்கலைக்கழக மாணவரே அந்த ஜான் க்ரைம்ஸ். பாபா மேல் பக்தி கொண்டவர்.
ஒருமுறை வகுப்புத் தோழர்களோடு மயிலாப்பூர் செல்கிறார்... அழகான குளம்.. நீண்ட நெடிய கோபுரம்...கடைத்தெருக்கள்... தேர்வீதி... எப்போதும் ஜேஜே என்று மக்களின் நடமாட்டம்... பொருள் நுகர்வோர் பாதி பக்தி நுகர்வோர் மீதி.. அந்தக் காலக்கட்டத்தில் நகர்வுகள் குறைவு என்றாலும் எப்போதும் தெய்வீக எழில் சூழ்ந்திருக்கும் மயிலைப் போல் மயிலை! கோவிலுக்குள் நுழைகிறார்கள் ஜானின் நண்பர்கள்... ஜானின் ஆவலாய் அடி எடுத்து வைக்கும் போது ஒரு போர்ட் கண்ணில் படுகிறது.. அதைக் கண்டு அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைகிறார் ஜான்... "ஹிந்துக்கள் அல்லாதவர்க்கு அனுமதி இல்லை!" அப்படியே அந்த போர்ட் வாசகம்... மயில் தனது தோகையால் சாமரம் வீசாமல் அலகால் கண்களை குத்தியது போல் ஜானுக்கு உள்வலி..
"பாபா நீ சிவசக்தி அம்சம் ஆயிற்றே..உள்ளே நீ தானே இருக்கிறாய்.. எனக்கு மட்டும் உன்னை தரிசிக்கும் பாக்கியம் இல்லையா?" என நெஞ்சுடைகிறார் ஜான்... அப்போது ஒரு குரல்!
"உள்ளே வா!" என்பதாகக் கேட்கிறார்.. உற்றுப் பார்க்கிறார் இளைஞர் ஜான். ஒரு முதியவர்.. ஆச்சர்யமாகப் பார்க்கிறார் ஜான்... தன்னைத் தான் அழைக்கிறாரா? என திரும்பிப் பார்க்கிறார்.. தனக்குப் பின்னால் யாரும் இல்லை.. மீண்டும் அந்த முதியவர் அழைக்கிறார் கோவிலின் உள்ளிருந்து... உடனே தயங்கித் தயங்கி அடி மேல் அடி எடுத்து ஆனந்தப் பரவசத்தோடு கபாலீஸ்வர திருக்கோவிலை மிதிக்கிறார்.. முதலில் அம்பாள் தரிசனம்.. அது தான் அங்கே வழக்கம்.. பிரகாரம் சுற்றுகையில் கை அசைத்து விபூதி வரவழைத்து நெற்றியில் இடுகிறார் அழைத்துச் செல்கிற அந்த முதியவர்.. விபூதியில் 'குப்' என பாபா வாசனை.. பரவசப்படுகிறார் ஜான்.. அந்த முதியவர் ஜானை சாதாரணமாக அழைத்துச் செல்லவில்லை... கையைப் பிடித்து உரிமையோடு அழைத்துச் செல்கிறார்...! பிறகு சிவதரிசனம்...ஆனந்தப் பரவசம் ஜானுக்கு... "நீ இப்போது செல்லலாம்!" என முதியவர் ஜானை பார்த்துச் சொல்ல.. முதியவர் தந்த விபூதியோடு கண்ணீர் கண்களில் எட்டிப் பார்த்தபடி வெளியே செல்கிறார் ஜான்.. அந்த ஆன்மா எவ்வளவு ஆனந்தப்பட்டிருக்கும்... ஆன்மாவை குளிர்விப்பதே ஆன்மீகம்.. அந்த ஆன்மா ஏழையா? பணக்காரனா? எந்த ஜாதி? ஜாதியில் எந்த பிரிவு? என்ன மதம்? என்ன தேசம்? எனப் பார்ப்பதல்ல.. அது ஆன்மீகமே அல்ல... அந்த ஆனந்த நுழைவுக்கு "சுவாமி சங்கல்பமே!" காரணம் என நினைத்து பூரித்துப் போகிற ஜான்...
மறு தினம் புட்டபர்த்தி செல்கிறார்... தரிசன வரிசையில் சுவாமி ஜான் அருகே வந்து "என்ன தர்ஷன்... நன்றாக எஞ்ஜாய் பண்ணினாயா?" எனக் கேட்கிறார்...
வந்து கைப்பிடித்து அழைத்துப் போன முதியவர் பாபாவே என்றும்... தனது சிவசக்தி அம்சத்தை தனித்தனி சந்நதியில் காட்டியது பாபாவே என உணர்ந்து அன்று வெளியே எட்டிப் பார்த்த ஜானின் கண்ணீர்த் துளி இப்போது குடம் குடமாக வழிகிறது! அது கபாலீஸ்வரருக்கே அபிஷேகம் செய்ததாக அமைகிறது!
(ஆதாரம் : லீலா நாடக சாயி / பக்கம் : 129 / ஆசிரியர் : அமரர் ரா.கணபதி/ நன்றி : திரு. விஸ்வேஷ் பாபு)
பேதமற்ற ஞானத்தையே ஹிந்து மதம் மட்டுமல்ல எந்த மதமும் வலியுறுத்துகிறது... மன பேதமே மத பேதங்களை ஏற்படுத்துகிறது! "அவன் திருந்தட்டும் நான் திருந்துகிறேன்" என்பது குதர்க்கம். "நான் திருந்துகிறேன்.. என் மாறுதலில் அகிலமே திருந்தும்!" என்பதே ஆன்மீகம்! மாற்றம் என்பது நமது அகத்திலிருந்தே ஆரம்பிக்கிறது! அது தான் ஆரோக்கியமான அமைதி சூழலை உருவாக்கும்! அலைகள் ஒருபோதும் தனது முதுகுகளில் முத்துக்களை சுமந்து கொண்டு கரை ஒதுங்காது.. நாமே ஆழம் செல்ல வேண்டும்! பாபா அமைத்துத் தந்த ஆன்ம சாதனையே ஞான முத்துக்களை நம் கையில் தருகிறது!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக