தலைப்பு

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

சுவாமியின் கவிமொழி!


சுவாமியின் தெய்வீகப் பேருரைகளின்போது குறிப்பாக தொடக்கத்தில், சுவாமி ஏதாவதொரு தெலுங்கு பத்யம் (அதாவது கவிதை/பாடல்) சொல்வதுண்டு. பெரும்பாலும் அத்தகைய கவிதைகள், சுவாமியின் உரைகளுடன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பின்னர் வெவ்வேறு பிராந்திய மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரசுரிக்கப்படுகிறது. அதன் கருத்துச்செறிவும் அழகும் மொழிமாற்றங்களினால் கவனமுடன் பாதுகாக்கப்படுகிறது என்பது உண்மைதான். இருப்பினும் சுந்தரத் தெலுங்கின் இனிமையும் குறிப்பாக… அமுதினையொத்த  சுவாமியின் தெய்வீகக்குரலின் அற்புதமும் மொழிமாற்றத்தில் மறைந்துபோகிறது. சுவாமியின் குரல் பின்புலத்தில் தெலுங்கில் ஒலிக்கும் அதேவேளையில் அக்கவிதைகளின் தமிழிணைப் பொருளை படிக்கும் வாய்ப்பு நேர்ந்தால், அது மிக இனிமையான அனுபவமாக இருக்கும். அந்த ரம்யமான அனுபவத்தை தமிழன்பர்களுக்கும் தரும் முயற்சி தான் "சுவாமியின் கவிமொழி" என்ற இந்த தொடர். இறைவனின் கவிதைகளை, பாடல் மேற்கோள்களை அவரின் குரலிலேயே பொருள் விளங்க அனுபவித்து மகிழுமாறு அன்புடன் அழைக்கிறோம். 

👇👇



1) இரண்டாம் உலகயுத்த சமயத்தில் சுவாமி பாடிய ‘பிள்ளைத் தாலாட்டு’ 

அழவேணாஞ்செல்லமே அழவேணாமய்யா
அழுதால் உனைபரத வீரனென்பாரா?
ஜோ… ஜோ…

எமகாதகன் ஹிட்லரமர ரஷ்யாமேல்
யுத்தங் கொணர்ந்தான் என்றெண்ணி அழுதாயா? 
ஜோ… ஜோ…

ஹிட்லரைச் சிதைத்திடவே செஞ்சேனையுண்டு ஸ்
டாலீனுமுண்டு அழவேண்டாமே கண்ணே 
ஜோ… ஜோ…


ஐக்கியமுற் றெல்லோரும் சேர்ந்துபோராடி 
ஐயமின்றி சுதந்திரம் அடைவோமழாதே 
ஜோ… ஜோ…


2) ‘கேட்காதே ஓ மனமே!’
கேட்காதே ஓ மனமே! கோரிக்கை
வைக்கா..தே ஓ மனமே!

கோரக்கோரவது… நேராது போகலாம்
கோராத கோரிக்கை மாறாமல் நேருமே
கேட்காதே ஓ மனமே! 

கேளாத சபரியோ ஆறுதல் கண்டாளே!

கோராமல் தனக்கெனப் பாராதுமடிந்த 
ஜடாயு சத்கதி பெற்றது போல்
…கேட்காதே ஓ மனமே! 


3) ‘சுவாமியின் ப்ரேமை’ :
அடர்கானகத்தில் நீ இருந்தாலும்
ஆகாசத்தில் இருந்தாலும்

பட்டணத்தில் இருந்தாலும்
பழங்கிராமத்தில் வசித்தாலும்

கடும்மலைமீது வாழ்ந்தாலும்
கடல்நடுவே ஆழ்ந்தாலும்

விடமாட்டேன் நான்துணை
வித்யார்த்திகளே! 

~ ஆனால்…அத்தகு பிரேமையைப் பெறும் 
தகுதிவளர்க்க வேண்டும் நீங்கள்!


4) ‘பக்தர் பெருமை’ குறித்த கவிதை
எம்.ஏ.க்கள் பி்.ஏ.க்கள் 
பாஸ்செய்ததில்… 
எண்ணற்ற பட்டம்புகழ் 
பெற்றவராயினும்…!

தன் சம்பத்தைத் தானந்தரும்
தர்மவானாயினும்!
புகழ்சேர்ந்த… 
புண்யவானாயினும்!

ஆயுள் ஆரோக்கியம் 
அனவரதமுங் கொண்ட…
பரிபூர்ண உடல்பலம் 
பெற்றவராயினும்!

சதாவேதம் ஜெபிப்பவராயினும்
தவயோகம் செய்பவராயினும்
வேதபண்டித… வித்தகராயினும்!

சமமாகார் எந்நாளும் 
நல் பக்தர்க்கே!
சமமாகார் நல் பக்தர்க்கு
எந்நாளுமே!

தெய்வபக்தி அன்றிவராது முக்தி -இதைத்
தெரிந்துணரச் செய்யாததேது கல்வி? 
சாது சத்குணகண்ணியம் பெற்ற
வித்யார்த்திகளே
வித்யார்த்திகளே
வித்யா…ர்த்திகளே!


5) சுவாமி எழுதிய பிரார்த்தனைப் பாடல் - ’மறந்தாயோ சாயிநாதா?’ 
மறந்தனையோ? 
எம்மைத் துறந்தனையோ…?
சாயிநாத ப்ரபுவே! 
ஓ…சாயிநாத ப்ரபுவே! 

படுகுழி கிடக்கும் எமக்கும்
கருணை செய்

அகிலத்துக் கருள்வாயே
(எமைக்) காணாயோ
சாயிநாத ப்ரபுவே! 
ஓ… சாயிநாத ப்ரபுவே! 

வியாதிகள் பலவும் 
வதைக்கிற தெம்மை !

வதைபட்டு வாடலே 
விதியா எமக்கு?

அகிலத்தின் பாரத்தை சுமப்பவரே…

ஆசிதர வேண்டாமோ தேவா?
சாயிநாத ப்ரபுவே! 
ஓ… சாயிநாத ப்ரபுவே! 

மறந்தனையோ? 
எம்மைத் துறந்தனையோ…?
சாயிநாத ப்ரபுவே! 

ஆபத்பாந்தவன் என்று கண்டோம்
ஆதரித்திட வேண்டுகின்றோம்

எம்மேல் கருணை 
காட்டுங்கள் ஸ்வாமி 

எம்மை விட்டு விலகிட 
எண்ணமிட்டாயோ?
சாயிநாத ப்ரபுவே! 
ஓ…சாயிநாத ப்ரபுவே! 

மறந்தனையோ? 
எம்மைத் துறந்தனையோ…?
சாயிநாத ப்ரபுவே! 
ஓ…சாயிநாத ப்ரபுவே! 

சாயிநாத ப்ரபுவே! 
ஓ… சாயிநாத ப்ரபுவே!


6) சுவாமி பாடிய புரந்தரதாஸரின் ’நான்யாகே படவானு’

நான் எவ்விதம்...  ஏழையாவேன்?நானெவ்விதம் ?

அனாதையாய்...நானெவ்விதம்? அனாதையாய்...?

ஸ்ரீநிதே ஹரி… எனைக் காக்க
நீயே  உடன் இருக்கும்வரை

நான்  எவ்விதம்?  ஏழையாவேன்?
நானெவ்விதம் ?

வித்யை தரவும் நீயே ! புத்தி தரவும் நீயே !
விடுவித்து மீட்க வந்தவரும் நீ ஸ்வாமி !

(என்) பெட்டியிலே சேர்ந்த....
ஸ்வாமி...
பெட்டியிலே சேர்ந்த.... நகை ஆபரணங்கள் நீ(யே) ஈந்தது!
உமது பாதுகாப்பு இருக்கும் வரை பயம் எனக்கேது?

என்முத்தே... ஸ்ரீ புரந்தர விட்டலா!
உன் பாதமே என் உறைவிடமானபோது
உலகே பிளந்தாலும்
எனக்கென்ன பயமோ?

நான் எவ்விதம்...  ஏழையாவேன்?
நானெவ்விதம் ?


7) கோபிகைகளின் பிரேமை:
புஷ்பமாக நீ கொலுவிருந்தால்
தும்பியாக நானுனைச் சுற்றி வருவேன்

வ்ருக்ஷமாக நீ வீற்றிருந்தால்
கொடியாக நானுனைச் சுற்றி வாழ்வேன்

(பெருஞ்) சமுத்திரமாய் நீயானால்
சங்கமிக்கும் நதியாக நானுன்னில் ஐக்கியமாவேன்

மேரு மலையாகி நீ நின்றால்
அருவியாகி உன்மேல் வழிந்து வாழ்வேன்

அகண்ட ஆகாசமாகவே  நீயானால்
அதில் சின்ன நட்சத்திரமாய் நானுன்னில் மின்னுவேன்

ஆக… உனக்கும் எங்களுக்கும் எந்த பிரிவும் ஏற்படக்கூடாது !


8) உலகவாழ்வின் நிலையாமை மற்றும் ராமபஜனையின் மகிமை:
கோட்டை ஏழு சுற்றடா! கோட்டை நடுவே தோட்டமடா !!
(ஞானத்) தோட்டத்துக்குள் போகலாமென்றால் பாதை தெரியாதே... எப்படியடா? 

ராம பஜனை செய்யடா! ராஜ்யமெல்லாம் ஒளியடா !

சாரம் அதுவே எண்ணையடா! சத்யம் அதுவே திரியடா !
வெளிச்சம் தீர்ந்தே போயும் விட்டால் அருகில் வருவார் யாரடா ?

ராம பஜனை செய்யடா! ராஜ்யமெல்லாம் ஒளியடா !

தளம் இங்கே மரமடா பற்றுவதற்கு கிளையடா !
தளம் நழுவிப் பிடியை விட்டால் கடவுள்பாதமே சேரடா !

ராம பஜனை செய்யடா! ராஜ்யமெல்லாம் ஒளியடா !


9) ராமா கோதண்ட ராமா:

ராமா கோதண்ட ராமா 
ராமா பட்டாபி ராமா 
ராமா கல்யாண ராமா ராகவா... !

ராமா உனக்கு ஒரே சொல் !
ராமா எனக்கு ஒரு (கர்ம) மூட்டை !

ராமா உன் சொல்லே சொல் !
ராமா உன் பாதையே பாதை !

ராமா உனக்கு ஈடு யார் ?
ராமா உன் கண்ணால் பார் !

ராமா நான் உன்னுடையவன்/ள் 
ராமா என்னோடு பேசு !

ராமா சீதா பதி 
ராமா நீயே கதி 
(உன்னை வணங்கினேன்)

ராமா உன் கையில் சேர்ந்தேன் 
ராமா நான் உன்னுடையவன்/ள் 

ராம நாமமே மேலானது 
ராம சிந்தனையே போதுமானது 

ராமா உன் நாமமே மேலானது 
ராமா உன் சிந்தனையே போதுமானது 

உன் சிந்தனையே போதுமானது 
உன் நாமமே மேலானது 

ராமா நான் உன்னுடையவன்/ள் 
ராமா என்னோடு பேசு !


10) பக்தரின் தரம்/தகுதி
மண்ணில் வீழ்ந்த இரும்பு துருவாகி வீணாகும் 

அக்கினியில் சேர்ந்த இரும்போ துருநீங்கி உயர்வாகும் 

அதேவிதமே சகவாசதோஷம் எதையும் மாற்றும் !

மணலில் விழுந்த மழை தங்காது வடிந்திடும் (கீழிறங்கிடும்) 

குளிர்மண்ணில் விழுந்த மழையோ தங்கி வளம்செய்யும் 

அதேவிதமே பக்தரின் தரத்தைப்(தகுதியைப்) பொறுத்து வளர்வது பக்தி!


11) சத்தியமே மிகவுயர்ந்த செல்வம்
அழகு ஆபரணம் புகழ் பெயரெலாம்
வரலாம் போகலாம்…
நிலையானது என்றும் 
சத்தியம் ஒன்றே!

ராஜிய போகங்கள் எத்தனையோ
வரலாம் போகலாம்…
நிலையானது என்றும் 
சத்தியம் ஒன்றே!

சோதரர்களும் சொந்தங்களும்
வரலாம் போகலாம்…
நிலையானது என்றும் 
சத்தியம் ஒன்றே!

உலகத்தில் அதிகார போகங்கள்
வரலாம் போகலாம்…
நிலையானது என்றும் 
சத்தியம் ஒன்றே!

சன்மார்க்க தத்துவம் விளங்கச் செய்வது…
அமிர்தத்தை ஒத்தது..
சகல சௌபாக்யமும் தருவது…
உலகில் உயர்ந்த செல்வம் ஒன்றே…
அதுவே சத்தியம்!


12) கடவுள் யாரிடம் ஓடி வருவார்?
மனதிலுள்ள கெட்ட உணர்வுகளை விடுத்து 

அமைதியின்மை அன்பின்மை போக்கை விடுத்து 

(இத்தகு) கீழான குணங்களை விடுதலே தியாகமாகும் 

அதுவே நிஜத்தில் யோகம் எனப்படும்!

நமக்குள்ளிருக்கும்...

கெட்ட குணங்களை துறத்தல்வேண்டும்!

கெட்ட பழக்கங்களை துறத்தல்வேண்டும்!

கெட்ட எண்ணங்களை துறத்தல்வேண்டும்!

அப்படிப் பட்டவனிடம் கடவுள்...

ஓடி   ஓடி   ஓடி வருவார் !!


13) 'சஹனாவவது' சுலோகத்தின் சாரம்
கலந்து இணைந்து உலவுவோம்! 

கலந்து இணைந்து வளருவோம்!

கலந்து இணைந்து தெரிந்துகொண்ட தெள்ளறிவை போஷித்து வளர்ப்போம்!

கலந்து இணைந்து பிணக்கு இன்றி சிநேகத்தோடு ஜீவக்கலாம்!

…இதனையே “சஹனாவவது” சுலோகம் சொல்கிறது!

…வேதம் முதன்முதலாக சொல்லித் தருவது ஒற்றுமையே !


14)சாயி அவதார காரணம்
யுகதர்ம பாதைகள் தடம் மாறிச் செல்லும்போது…

நற்பாதையில் திருப்பி நடத்திச் செல்வதற்கு!

உலகம் குழப்பங்களினால் சீர்கெடும்போது…

நற்பாதையில் மீண்டும் அதை நடத்திச் செல்வதற்கு!

துஷ்டர்கள் உலகில் சுதந்திரமாக உலவிடும்போது…

நல்லவர்களைக் காத்திடும் பொருட்டு !

காலம் புனித நூட்களை இருட்டடிப்பு செய்யும்போது…

அவைகளின் இரகசியங்களை
வெளிப்படுத்தும் பொருட்டு !

பூமாதேவியின் பாரத்தைக் குறைக்கும் பொருட்டு !

த்ரேதா யுகத்தில் கொடுத்த வாக்கினைக் காக்கும் பொருட்டு !

அவதரித்தார் அச்சுதன் இப்புவியிலே!!

வாசுதேவ ஶ்ரீ சாயியாக !

வாசுதேவ ஶ்ரீ சாயியாக அவதரித்தார்!



15) "தன்னையறி - மரணத்திற்கு முன்!"
பஞ்சபூதங்களாலான இந்த பலமற்ற தேகம்

எப்போது விழுமோ சொல்வதற்கில்லை!

சத(நூறு) வருடங்கள் வரை வாழுமென்றார்கள்

ஆனால்… நம்ப முடியாது அதை உறுதியென!

குழந்தைப் பருவத்திலோ…

அல்லது இளம் பிராயத்திலோ… முதுமையிலோ…

ஊரிலோ? காட்டிலோ? நீர்நிலை நடுவிலோ?

எங்கே விழுமோ? சொல்வதற்கில்லை!

மரணமே நிச்சயமானது!

வாழும்போதே தன்னையறிதல் வேண்டும்!

மனிதவாழ்வை வரமளித்தார் இறைவன்!

அதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்!

மரணம் உறுதி என உணர்ந்து கடமையாற்ற வேண்டும்!


16) பரமாத்மா ஒருவரே!
அல்லா என்கிறார்கள் முகமதீயர்கள்

ஜெஹோவா என்கிறார்கள் (நற்)கிருத்தவர்கள்!

தாமரைக்கண்ணன் என்கிறார்கள் வைணவர்கள்!

சம்பு என சதா சொல்கிறார்கள் சைவர்கள்!

மகிழ்வுடனே வழிபடும் பொழுது…அனைவருக்கும்

ஆயுராரோக்ய சம்பத்து போகபாக்யம்

அருளிக் காப்பாற்றும் பரமாத்மா ஒருவரே

(உணருங்கள்) பரமாத்மா ஒருவரே!


17) யாருக்காக குவிக்கிறாய் செல்வம்?
தாயின் கருவில் தங்கிய போது
செல்வம் தேடியவர் யார்?

(உலகிலிருந்து) கிளம்பிச் செல்லும் 
அந்த நாளில்… உடன்வராது!

லட்சாதிபதியானாலும் பிடி உணவே உண்பார் அன்றி… 

மின்னும் தங்கத்தை விழுங்கப் போவதில்லை!

பெருமை பொங்க சேர்த்துவைத்த 
நகைகள் கூட வரப்போவதில்லை!

வங்கியில் பத்திரமாக…
அமிழ்த்தி வைத்த பணமும் கூட

தானதர்மம் செய்தாலன்றி 
உன்னுடன் வரப்போவதில்லை!

இறுதியில் இந்தப் பணம் 
யாரிடம் சேருமோ? என்னவாகுமோ?


18) பக்தியின் சக்தி
கண்ணாடியில்  பிம்பம் ஒட்டுவதில்லை!

தாமரை இலை தண்ணீரில் நனைவதில்லை!

பாவங்கள் அண்டுவதில்லை மனிதனை
பக்தியினால் !

பாவங்கள் அண்டுவதில்லை மனிதனை
பக்தியிருந்தால்!


19) அந்நாளே நாள் ஆகும்
சத் பக்தர்கள் அனைவரும் (கூடி)
பகவானே என்று… செவிக்கு இனிமையாக ஸ்மரணம் செய்யும் நாள்!

ஏழைகளின் வேதனைகள் தீர்க்க ப்ரீதியுடன்… அண்ணன் தம்பியாய் உணர்ந்து உதவும் நாள்!

தெய்வ சிந்தனையில் ஊரிய தாசர்களுக்கு… அன்புடன் நல்லுணவு படைக்கின்ற நன்னாள்!

மகான்கள் எவரேனும் நம்மிடை வந்து…
பகவத் விஷயங்கள் விளக்கும் பவித்ரமான நாள்!

அந்த நாட்களே “நாள்” எனப்படும்
மற்றவை வெறும் நினைவு நாளாகும்!


20) உலக அமைதி மீட்க

தெய்வம் மீது அன்பின்மையால்  

பாவங்கள் குறித்த பயமின்மையால்  

மனிதத்தன்மை மனிதர்களிடம் குறைந்துபோனது 

உலக அமைதிக்கு தீங்கு செய்பவை இவையே!


21) விடாமுயற்சியே பக்தரின் அடையாளம்
பிடித்த பிடியென்னவோ பிடிக்கவே செய்துவிட்டாய்…
முடிவுதெரியும் வரை அப்படியே இரு!

விரும்பிய தென்னவோ விரும்பவே விரும்பிவிட்டாய்…
விரும்பியது நிறைவேறும் வரை வேண்டியபடியிரு!

கேட்பது என்னவோ கேட்கவே கேட்டுவிட்டாய்…
கேட்டது கிட்டும்வரை விட்டுவிடாதே!

நினைத்தது என்னவோ நினைக்கவே நினைத்துவிட்டாய்…
நினைத்தது நடக்கும்வரை தளராதிரு!

தொந்தரவு தாங்காமல் கடவுளாவது தர வேண்டும்…
உடலுணர்வு போகும்வரை நீயாவது கேட்க வேண்டும்!

அதைவிடுத்து,பாதியிலே நிறுத்திவிட்டு திரும்பிப் போவது… பக்தரின் லக்ஷணம் அல்ல !


22) கவலை கொள்ளாதே 

பிறப்பது ஒரு கவலை 
பூமியில் பிழைப்பது கவலை
சம்சாரம்(குடும்பம்) ஒரு கவலை 
மரணம் கவலை
பால பருவம் கவலை 
வயோதிகம் ஒரு கவலை
வாழ்வது ஒரு கவலை 
தீமைகள் கவலை
கர்மாக்கள் அனைத்தும் கவலை கஷ்டங்கள் ஒரு கவலை
சந்தோஷமும் ஒரு கவலை ஆச்சர்யங்களும் கவலை

இப்படி 12 கவலைகளுடன் புளியமரத்தடியில் அமர்ந்துகொண்டு கவலை போக வேண்டும் என்றால் எப்படி?

கவலைகளை நெட்டித் தள்ள வேண்டும்!

எதற்காகவும் கவலைப்படாது இருக்க வேண்டும் !!


23) மேற்கத்திய கல்வியினால் அவலங்கள் 
மேற்கத்திய கல்வியின் பிரபாவம் அதென்னவோ?
நம் சொந்த கல்வி முறை அழிந்து போனது!

மேற்கத்திய கல்வியின் பளபளப்பு அதென்னவோ?
பண்டைய செல்வமும் ஞானமும் ஒழிந்து போனது!

மேற்கத்திய கல்வியின் செல்வாக்கு அதென்னவோ?
சத்தியமும் தர்மமும் நலிந்து போயின!

மேற்கத்திய கல்வியின் முக்கியத்துவம் அதென்னவோ?
பொய்யான மொழிகளின் மதிப்பு பெருகின!

தாய்மொழி பேசுவதே தப்பென்ற எண்ணம் உண்டானது!

சமூக மரியாதை வழக்கங்களில் சந்தேகம் கொள்கின்றனர்!

குருமார்களை கௌரவிப்பதில் இருந்து விலகி விட்டனர்!

கல்வியின் பலன் மொத்தமாக அழிந்து விட்டது !

நமக்கு கல்வி முதன்மை அல்ல!

நமது காலச்சாரமே முக்கியமானது !!
 

24சித்த சுத்திக்கு விஷ்ணுஸ்மரணம்

தாமரைக் கண்ணன் பூஜை பலமுறை செய்யாமல்…
மற்றவர்களை நீ தூற்றுவது சரியா?

விஷ்ணு சங்கீர்த்தனங்கள் விரும்பிக் கேட்காமல்…
மற்றவர்களை புகழ்வது பிரமை அல்லவா?

சேஷசயனனை நிரம்பப் போற்றிப் பூஜைகள் நடத்தாமல்…
மற்றவர்களை புகழ்வது பாவமல்லவா?

தாமோதரனின் நாமத்தை தியானம் செய்யாமல்…
மற்றவர்களின் குற்றம் காண்பதால் ஆவதென்ன?

ஶ்ரீரமா நாதனை சதா நினைந்து உருகினால் அல்லவா…
உன் மனம் பவித்ரமாகும்!

இதைவிட வேறென்ன சத்தியத்தை விளக்க முடியும்?
சாதுசத்குண கண்ணியம் பெற்ற சபையோர்களே!


25) கற்க வேண்டியவை எவை ?
நற்குணங்கள், நற்புத்தி, சத்தியம் கடைபிடித்தல்

பக்தி, ஒழுக்கம், கடமை தவறாமை

இவைகளைக் கற்பிப்பதே கல்வி!

மாணவர்கள் இவைகளையே கற்க வேண்டும்!


26) துறவும் - வரவும்
மோகத்தைக் கைவிட்டால் (எல்லோர்க்கும்) பிரியமானவர் ஆகலாம்!

கோபத்தைக் கைவிட்டால் துக்கத்தில் அகப்படாமல் விலகாலம்!

பேராசையைத் துறந்தால் (நிஜ) செல்வந்தர் ஆகலாம்!

சுயநலம் துறந்தால் (நிலையான) சுகத்தினை அடையலாம்!


27) கிருஷ்ண மகிமை
வர்ணிப்புகளுக்கு அப்பாற்ப்பட்ட உன்னை யார் வர்ணிக்க முடியும் கிருஷ்ணா?

உன்னுடைய மகிமையை பிரம்மதேவர்களாலும் பாட இயலுமா?

ஹே கிருஷ்ணா என் முராரி உன் அருளுக்காக காத்திருக்கிறேன்!

தயவு செய்து என் பிரார்த்தனையைக் கேட்டு என்னைக் காப்பாற்று!

காலனிடம் சென்ற தன் குருவின் மகனை உயிர்ப்பித்தாய்!

காலிங்கனின் கர்வம் நசுக்கினாய்!
வசுதேவ தேவகியை விடுவித்தாய்!

பாண்டவர் கண்மணி திரௌபதியின் கிருஷ்ணா! என்ற கதறலுக்கு ஓடிவந்தாய்!

பாண்டவர்களின் நலன், கௌரவம் காத்துப் பல்வேறு வழிகளில் உதவினாய்!

குசேலன் மீது கருணை பொழிந்தாய்!

குரூபியான குப்ஜாவை அழகாய் மாற்றினாய்!

வர்ணிப்புகளுக்கு அப்பாற்ப்பட்ட உன்னை யார் வர்ணிக்க முடியும்?


28) தேவன் உள்ளான்!

உள்ளான் ஐயா தேவன் உள்ளான் ஐயா
கண்களுக்குத் தெரியாமல் உள்ளான் ஐயா!

உலகத்தின் இருள் போக்க (வானத்தில்)
சூர்யசந்திர தீபங்களைச் சுற்ற வைக்கிறார்

உள்ளான் ஐயா தேவன் உள்ளான் ஐயா
கண்களுக்குத் தெரியாமல் உள்ளான் ஐயா!

லக்‌ஷத்திற்கு மேலான நட்சத்திரமெலாம்
பூமியில் விழாதவாறு காத்து வருகிறார்

உள்ளான் ஐயா தேவன் உள்ளான் ஐயா
கண்களுக்குத் தெரியாமல் உள்ளான் ஐயா!

காலச் சக்கரம் உடைந்து விடாமல்
எல்லா நேரமும் தவறாமல் சுற்றவைக்கிறார்

உள்ளான் ஐயா தேவன் உள்ளான் ஐயா
கண்களுக்குத் தெரியாமல் உள்ளான் ஐயா!

சம்பளம் ஏதும் வாங்காமல் நம்மீதுள்ள 
பிரேமையால் நமக்கு காற்று வீசவைக்கிறார்

உள்ளான் ஐயா தேவன் உள்ளான் ஐயா
கண்களுக்குத் தெரியாமல் உள்ளான் ஐயா!

ஆதாரமே இல்லாமல் அந்தரத்தில் l
ஆகாசத்தை விழாது நிற்கவைக்கிறார்

உள்ளான் ஐயா தேவன் உள்ளான் ஐயா
கண்களுக்குத் தெரியாமல் உள்ளான் ஐயா!

பொங்கிப் பெருகும் சமுத்திரக் கால்கட்டி
நிலப்பகுதி மூழ்கிப்போகாமல் காக்கிறார்

உள்ளான் ஐயா தேவன் உள்ளான் ஐயா
கண்களுக்குத் தெரியாமல் உள்ளான் ஐயா!

கண்களுக்கு புலப்படாமல் 
என்ன செய்து கொண்டிருக்கிறார்?

திரைக்குப்பின் தான் மறைந்து நின்று
திரைமுன்னே மனிதர்களை வைத்து
‘தை-தக்க’வென (பொம்மலாட்டம்) ஆடவைத்தபடி..

உள்ளான் ஐயா தேவன் உள்ளான் ஐயா
கண்களுக்குத் தெரியாமல் உள்ளான் ஐயா!


29) ப்ரத்யக்ஷமானார் பிரஷாந்திவாசர்!

மனோகரமாக அழகுச் சிகைமேல் களை பொருந்திய சந்திரனுடன்  

பளபளவென ஜொலிப்புடன் கம்பீரமாகக் குவிந்த ஜடைகளுடன் 

ஜடாஜுடத்தில் பிரவகிக்கும் குளிர்ந்த ஆகாச கங்கையுடன் 

பெருமையுடன் கூடிய நெற்றிக் கண்ணுடன் 

நல்ல நாகப்பழம் போன்ற (நீல) கழுத்துடன் 

கரங்களில் நாகக் கங்கணத்துடன் 

இடையினில் சுற்றிய யானைத் தோலுடன் 

மெய் முழுதும் பூசிக்கொண்ட பஸ்மத்துடன் 

சுழல் சக்கரம் போன்ற குங்குமப் பொட்டுடன் 

தாம்பூலந் தரித்த சிவந்த உதடுகளுடன்  

தங்கத்தாலான வைரக் காதணிகலுடன்

தாமரைப் பூக்களே வைட்கப்படும் (அளவு) ஒளியுடன் கூடிய… லேசான பழுப்பு நிறம் கொண்ட மேனியுடன்

கைலாச ராஜராஜன் இன்று ப்ரத்யக்ஷமானார்!

கைலாச ராஜேந்திரர் இன்று ப்ரத்யக்ஷமானார்!


30) யாராலும் புரிந்து கொள்ள முடியாது
விசித்திரமான நபராய்த் தோன்றும் விதத்தில் 
தலையில் கூடை போன்ற முடியுடன்

குல மத பிரிவு எதனையும்
தன் அடையாளமாகக் காட்டாத 
திலகமற்ற நெற்றி/முகத்துடன் 

தெரிந்தும் தெரியாமலும் விளங்கும்
அழகுப் பாதங்களை மறைக்கும்
நீளப் பட்டு அங்கியியுடன்

உள்ளார்ந்த தெய்வீக அழகும் கவர்ச்சியும் 
ஆடல்(லீலை) பாடலில் வெளிப்படுத்துகின்ற  
சிவசக்தியின் அம்சங்கள் இவை!

சிகையை வைத்தோ  
நெற்றிக்குறி (பொட்டு) வைத்தோ 
ஆடையை வைத்தோ - அல்லது 
பிறப்பை வைத்தோ 
அவருடைய தெய்வீகத்தன்மையை 
யாரும் உணரவியலாது!

(உருவத்தில்) சிறிய
சத்ய சாயியின் ரகசியத்தை 
யாராலும் எப்படிப் 
புரிந்து கொள்ள முடியும்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக