அனுபவங்கள் சமுத்திரம் போல் பரந்து விரிந்து கொண்டிருப்பவை... அதில் மூழ்கி ஆழம் சென்றால் பரவச முத்துக்கள் கிடைக்கின்றன... சுவாமி இறைவனே எனும் முத்தார சத்தியமும் ஜொலிக்கின்றன... அப்படி ஒவ்வொரு முத்து மணியாய் கோர்த்து அளிக்கப்பட்ட அனுபவ ஆரம் இதோ...
5/2/1990 'ல் சுவாமி சென்னை விஜயம் செய்கிறார்.. உற்சாக ஆன்மீக தரிசனம் அளிக்கிறார்... அப்போது பழம்பெரும் பக்தர் டி.வி ஆனந்தன் சுவாமியை பற்றி பேச ஆரம்பிக்கிறார்... சுவாமியை வர்ணிப்பத்தில் ஆர்வமுள்ள அவர் அவ்வாறே ஆரம்பித்து அலங்கரித்துப் பேச..."ரஷ்யாவில் கூட.." என அவர் பேச வரும்போது.. அவர் வாய் நிரம்ப நிரம்ப சிருஷ்டி விபூதியைப் போட்டு.. "போதும் உட்கார்!" என்கிறார் சிரித்தபடி... இது சுவாமியின் வெறும் ஹாஸ்ய பாவனை மட்டும் அல்ல.. அந்த பக்தருக்கான மருத்துவ சிகிச்சையும் அதிலேயே அடங்கி இருக்கிறது!
சம்பந்தம் எனும் பக்தர் ஷிர்டி சாயி பக்தர்.. கவியோகி சுத்தானந்த பாரதியார் மூலம் இரு சாயியும் ஒன்றே என்பதனை உணர்ந்து கொண்டு பர்த்தி வருகிறார்.. நான்கு நாட்கள் எவ்வளவு முயன்றும் அருகாமை தரிசனம் கிடைக்கவில்லை. அது 5 ஆம் நாள். சுவாமியை உருக்கமாக வேண்டுகிறார்... வேண்டி கண்களைத் திறக்க சுவாமி அவர் அருகே நின்றபடி தரிசனம் தருகிறார்... அந்த நேரத்தில் பக்தர்கள் சூழ்ந்திருப்பது புறக்கண்களுக்கு தெரியவே இல்லை... இது கனவா கற்பனையா...இல்லை ... சுவாமி ஸ்தூலமாக அவர் முன் வருகிறார்.. பிறகு சுவாமி ஸ்டேடியத்தில் ஏறியபிறகே சுவாமியோடு சேர்த்து சூழ்ந்திருந்த பக்தர்களும் கண்களில் நிறைந்து போகிறார்கள்!
1990ல் பிப்ரவரி 14 ஆம் தேதியில் பெங்களூரில் நடந்தது மிகப்பெரிய விமான விபத்து.. வெகு சிலரே உயிர் தப்பித்தனர்.. . அதில் பிரான்சு நாட்டை சேர்ந்த இஸ்ப காப்ரி என்பவரும் ஒருவர்...அவரிடம் அந்த அனுபவம் கேட்டபோது ... உயிர் தப்பித்தவர்களில் பலருக்கும் உடல் சேதாரங்கள் நிகழ்ந்தன.. ஆனால் சுவாமி எனக்கு அதையும் தரவில்லை... விமானத்தில் சப்தம் கேட்டதும் "சாயிராம்" என்றே மனதிற்குள் அலறினேன்.. சுவாமி டாலரை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு பிரார்த்தனை செய்தேன்... இதோ இப்போது புட்டபர்த்தி வந்திருக்கிறேன் சுவாமிக்கு நன்றி கூற என்கிறார்... பிரார்த்தனை என்பதே சுவாமிக்கு நாம் செலுத்தும் நன்றி வெளிப்பாடு தானே!
காயத்ரி எனும் 6 வயது குழந்தை இரவில் கட்டிலில் படுக்க பயந்து பாட்டியை எழுப்புகிறது... மாட்டியோ எழுந்திருக்கவில்லை.. அதிகாலை எழுந்தவுடன் "பாட்டி பாட்டி பாபா சாமி வந்து என் பக்கத்துல துணையா இருந்தாரு.. இங்க பாரு ஆரஞ்சு ஜுஸ் வாங்கி குடிக்கபச் சொன்னாரு" எனக் காட்டுகிறது... அசந்து போகிறாள் பாட்டி.. அதற்கு முன் இரவு பயந்து பயந்து தூங்காமல் இருந்த குழந்தை முன் சுவாமி தோன்றி கவலைப்படாதே பாட்டிக்கு பாவம் முட்டி வலி எழ முடியாமல் படுத்திருக்கிறாள்.. நான் உன் கூடவே இருக்கிறேன்... பயப்படாமல் தூங்கு என்கிறார்.. சுவாமி கூடவே இருக்கிறார் எனும் திட நம்பிக்கையில் ஆழமாகத் தூங்குகிறது... அந்தக் குழந்தைக்கு இருந்த சுவாமி நம்பிக்கை நமக்கும் உறுதியாக இருந்தால் நம் வாழ்க்கை எவ்வளவு வசந்தமாக மாறிவிடும்!
விஜயா என்பவர் பர்த்தி செல்கிறார்.. அவருக்கு ஒரே பண்ட பாத்திரங்கள் தான்.. ஆன்மீக நெறியில் முன்னேற வேண்டும் என நினைக்கும் அவரிடம் தரிசனத்தின் போது சுவாமி நேராக வந்து "ஒற்றை மனுஷிக்கு ஒரு லாரி ஜாமானா.. எல்லாவற்றையும் தியாகம் செய்!" என ஆள்விரல் நீட்டி உத்தரவுப் போட்டுவிட்டு சென்றுவிடுகிறார்... ஆம்! தியாகத்தாலேயே ஆன்மீக வாழ்க்கை சாத்தியமாகிறது.. தியாகமில்லா ஆன்மீகம் மேம்போக்கானது.. வெறும் வெளிப்பூச்சு அவை! தியாகமே முக்தி வாழ்வை அறுவடை செய்ய விதை நெல் தூவுகிறது!
கமலா எனும் பெண்மணி கொலு வேத்திருந்த போது.. அதில் வந்து பாடிய சுவாமி பக்தையாகிய ஒரு சிறுமி மூலம் சுவாமி பக்தி ஏற்படுகிறது.. ஒருமுறை கமலாவின் மகள் பாரதி பள்ளி முன் சுவாமி தோன்றி... "மூன்று நாட்களும் நான் உன் வீட்டிற்கு வருவேன்!" எனச் சொல்லிவிட்டு மறைந்து போகிறார்.. இதை தாயிடம் சொன்ன போது.. ஏதோ குழந்தை உளறுகிறது எனப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.. அவர்களின் வீட்டு பஜனையின் அடுத்தடுத்து மூன்று வாரத்தின் அந்த மூன்று நாளும் காலிங் பெல் அடிக்கப்படுகிறது.. கதவு திறந்து பார்க்கையில் அக்கம் பக்கம் ஒரு ஈ காகம் கூட இல்லை.. சுவாமி எப்போதுமே தன் வாக்கை சத்தியப்படுத்துபவர்... மனிதனுக்கு கடினமாக இருக்கும் எச்செயலையும் கூட சுவாமி சாத்தியப்படுத்துபவர்!
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மேயெங்கல் அப்போது டென்மார்க்கில் இருக்கிறார்.. அவருக்கு சுவாமியை பரிசுத்தமாகப் பிடிக்காது... வெறுத்து ஒதுக்குபவர்... ஆனால் அவரது தாயாரோ தீவிர சுவாமி பக்தர்... சுவாமியின் திருப்படத்தை தினமும் சேவிப்பவர்! ஒருமுறை அந்த மேயெங்கல் காரை ஓட்டிக் கொண்டு செல்கிறபோது.. மிகப் பெரிய விபத்து ஏற்பட ஒரு நொடியே இருக்கிறது.. அந்த நொடியில் "சாயிராம்" என தன்னை அறியாமல் கத்துகிறார்... கார் தலைகீழாக புரட்டிப் போடப்படுகிறது... ஆனால் அவருக்கோ ஒரு சிறு சிராய்ப்பு கூட இல்லை... தன்னை வெறுத்தாலும் ஓடி வந்து காப்பாற்றும் கண்கண்ட கடவுளே சுவாமி என்பதையும்... "சாயிராம்" என்பதன் நாம மகிமையையும் அவர் உணர்ந்து கொள்கிறார்...!
இலங்கை கொழும்புவை சேர்ந்த ராகவன் இதயத்தில் ஓட்டை இருப்பதாக அவரை பரிசோதிக்கும் வேலூர் CMC மருத்துவமனை டாக்டர் சொல்கிறார்... அதிர்ந்து போகிறார்... மனிதனின் செய்கர்மா எதைத் தான் துவாரமாக்காது?! ஆப்ரேஷன் தேதியையும் டாக்டர் எழுதித் தருகிறார்.. அங்கிருந்த வேறொருவர் அவரை சுவாமி தரிசனம் செய்தபின் ஆப்ரேஷன் செய்து கொள்ளுங்கள் என்கிறார்.. அவரோ வொயிட் ஃபீல்ட் பறக்கிறார்! சுவாமி அவர் அருகே வந்து கை தூக்கி அபயம் அளிக்கிறார் புன்னகை ததும்பத் ததும்ப... பிறகு CMC மருத்துவமனை செல்கிறார்.. மீண்டும் பரிசோதிக்கும் டாக்டர்களால் நம்பவே முடியவில்லை... மெடிக்கல் மிராக்கிள் என்கிறார்கள்.. ராகவனின் இதய ஓட்டையை தனது பரம கருணை எனும் அருவ சிமெண்ட் வைத்து அடைத்து விடுகிறார் சுவாமி... அது மெடிக்கல் மிராக்கிள் அல்ல சுவாமி மிராக்கிள்!
புட்டபர்த்தியிலேயே வசித்து வந்த சங்கரி அம்மா ஒருமுறை சுவாமியிடம் "நான் இங்கிருந்து கிளம்பப் போகிறேன்" என்கிறார்.. "எதுக்கு?" இது சுவாமி.. "எனக்கு ஆஸ்துமா இருக்கிறது சுவாமி" என்கிறார்.. "பாவம் உனக்கு ஆஸ்துமாவா?" என சுவாமி எதுவும் தெரியாதது போல் கேட்கிறார்.. "ஷெட்டில் இனிமேலும் தங்க முடியாது! என்கிறார்.. அதற்கு சுவாமி "நீ இங்கே தான் என் கூடவே இருக்க வேண்டும் !" என உறுதியாகச் சொல்கிறார் சுவாமி. "இல்லை மாட்டேன் " என சங்கரி அம்மா பிடிவாதம் பிடிக்க.. "பேசாம சும்மா இரும்மா... உன் வாழ்வைப் பற்றி எனக்கு தெரியுமா? உனக்கு தெரியுமா? நீ இங்கிருந்து போகவே கூடாது!" எனக் கட்டளையே இடுகிறார்.. அது கருணைக் கட்டளை... சுவாமி ஒருவரை ஆட்கொண்டு விட்டால் அவரே விலகிச் செல்ல முயற்சித்தாலும் சுவாமி விடவே மாட்டார்... சுவாமியின் பிடிமானம் என்பது உடும்புப் பிடியை விட உறுதியானது! எத்தனை ஜென்மமானாலும் சுவாமியிடமிருந்து பக்தர்கள் தப்பிப்பதற்கு வழியே இல்லை!*
(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -3 / பக்கம் : 178 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு)
அனுபவத் தாமரைகள் பகிரப்பட்டவை ஆயிரங்களே! பல பக்தர்கள் இதயத்தில் பூத்துக்கிடப்பவை லட்சங்கள்.. இன்னமும் அனுபவத் தாமரைகள் மலரும் வருங்காலத்தில் கோடிகளாக...! சுவாமியே முழுமுதற் பரம்பொருள் என்னும் சத்தியத்தை விரைவில் உலகமே உணரும்! பிரேமத் தேரை உலகமே சமத்துவமாய் இழுத்துக் கொண்டு செல்லும்! வான் உயரப் பறந்தாலும் குருவிகள் கூட்டுக்கு வந்து இளைப்பாறியே தீர வேண்டும்... அது போல் பொருளுக்காக வீணாகப் பறக்கும் உலகமே பிரேமப் பரம்பொருளுக்காக அவர் அடியில் கூடுகட்டி வாழும் விரைவில் என்பதை பலகோடி பக்தர்களின் அனுபவங்களே நாளை சாட்சியம் கூறும்!!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக