தலைப்பு

புதன், 23 பிப்ரவரி, 2022

Love All, Serve All; Help Ever, Hurt Never -ஓர் அகமுக ஆய்வு

சுவாமியின் ஆத்ம போதனை எனும் துவாரகாபுரி மாளிகையின் நான்கு தூண்களாகிய இவற்றைப் பற்றிய ஒரு பகுப்பாய்வும்...இதன் சாராம்சத்தை ஆழம் காணும் முயற்சியும்... நமக்குள் நாமே விதைத்து அதை வளர்த்து மலர வைத்து வாழ்வாக்க வேண்டிய அடிப்படை ஆன்மீக நெறிகளுக்கான அகமுக சுவாரஸ்ய ஆய்வின் சுவாரஸ்ய முதல் பகுதி இதோ...


❤️ அனைத்தையும் நேசி:

Love All என்பதற்கு அனைவரையும் என்பதை விட அனைத்தையும் என்பதே சரியான பொருள்.. ஏன் இன்னும் ஆழமாக விரிய வேண்டி இருக்கிறது என்றால் அனைவர் என்பது மனிதரையே குறிக்கிறது.. அனைத்தும் என்பதே சகல ஜீவராசிகளையும் குறிக்கிறது. 

சில மனிதர்களுக்கு நாய் பூனை பிடிக்காது.. வீட்டிற்குள் அவை மழைக்குக் கூட ஒதுங்க இடம் தரமாட்டார்கள்... ஆக அதில் அன்பு இல்லை... அன்பு இல்லாத இடத்தில் கருணையே இல்லை... ஆகவே சுவாமி நமக்கு அனைத்தையுமே அன்பு செய்யச் சொல்கிறார் எனப் புரிந்து கொள்ள முடிகிறது... பாம்பைக் கூட கொஞ்ச வேண்டுமா? எனக் கேட்டால்... சுவாமி நம்மை அன்பு செய்யத்தான் சொல்லி இருக்கிறார்... கொஞ்சுதல் பாசத்தின் விளைவு... எவர் மீதும் / எதன் மீதும் நாம் கசப்பு கொள்ளாது இருத்தல்.. வெறுப்பு கொள்ளாதிருத்தல் ... அதிருப்தி அடையாதிருத்தல் இவையே அன்பு ஆரம்பிப்பதற்கான பீடமாக இருக்கிறது அல்லவா! மனித இனத்தை தவிர வேறெந்த இனமும் தன்னை துன்புறுத்தினால் மட்டுமே சீறும்... தன் இனத்தை எந்த மிருகமும் ஏமாற்றுவதில்லை... மனிதனுக்கான அப்படி ஒரு சமநிலை வரவேண்டியே இறைவனே மனித அவதாரம் எடுத்து வருகிறார்... அன்பு தான் சம்பவாமி யுகே யுகே எனும் தன் கீதை மொழியையே சுவாமி அவதாரம் நிகழ்த்துவதற்கான காரணம்! அதைப் போல் நம்மை நாமே அன்பு செலுத்துவது.. நாம் எதிர்கொள்கிற சூழ்நிலையை நேசிப்பது இதுவும் முக்கியம்! நம் மேல் நாம் செலுத்தும் அன்பே பிறர் மேல் விரிந்து... பிறர் என எவருமில்லை... எல்லாம் நாமே... நாம் எனும் ஆன்மாவின் பலவித தோற்றங்கள் என உணர முடிகிறது! அந்த அன்பை நாம் எப்படி வளர்க்க வேண்டும்? முதலில் அன்பை எவ்வாறு ஆரம்பிப்பது... அன்பால் நாளை துவக்கு- நிரப்பு- செலவிடு- நிறைவு செய்! என்கிறார் சுவாமி. அப்பேர்ப்பட்ட கங்கை போன்ற தூய்மை செய்யும் அன்பை எவ்வாறு ஆரம்பிப்பது? 

நாம் நம் குடும்பத்தின் மீது வைத்திருப்பதை அன்பு என நினைக்கிறோம்... இல்லை அது பற்று.. அந்தப் பற்றால் ஏற்படுகிற பாசம். பற்றில் சுயநலம் உண்டு...எதிர்பார்ப்பு உண்டு... அதனால் ஏற்படும் சாதக பாதகம் உண்டு. இதற்கு நேர்மாறானது தான் அன்பு! அன்பில் எவ்வகையான எதிர்பார்ப்பும் இல்லை... தனக்கு சாதகமாக நபரையோ நிகழ்வையோ மாற்ற வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை...! பாசத்தால் தான் ஆன்ம நாசம் நிகழ்கிறது. ஆகையால் தான் எமன் கையில் இருப்பது அன்புக் கயிறல்ல அது பாசக் கயிறு என்றே அழைக்கப்படுகிறது! அன்புக்கு அமிர்த ருசி இருக்கவே செய்கிறது! உண்மையான அன்பு - பொய்யான அன்பு என இருவகை அன்பு எப்படி இருக்க முடியும்? அன்பே உண்மையானது தான்...! காக்கைக்கு சோறு வைப்பது மட்டுமல்ல அன்பு... காக்கைகளின் வீட்டை நாம் இடிக்காமல் (மரங்கள் வெட்டாமல்) இருப்பதும் அனைத்தையும் நேசி என்பதில் அடங்கி விடுகிறது!  அகமே அன்பின் கங்கோத்ரி... அதை வெளிக்கொண்டு வர... ஆத்ம சாதனை பழக வேண்டும்! முதலில் அன்பு செய் பிறகே சேவை செய் என்கிறார் சுவாமி! ஆக அன்பே பிரதானம். தன்னை காயப்படுத்தினாலும் மன்னிக்கும் அன்பு... அதுவே அன்பு... இயேசுவின் அன்பு... அப்படிப்பட்ட அன்பை நாம் அகத்திலிருந்து வெளிக் கொண்டு வர வேண்டும்! மண்ணை தோண்டினால் தான் தண்ணீர் ஊற்றெடுக்கிறது...அன்பை வெளிக்கொண்டு வரும் முயற்சியை ஆன்ம சாதனையே புரிகிறது..! ஆகவே தான் சுவாமி தியானத்தை நவவித கோட்பாடுகளில் முதலில் வைத்து... இனிமையாக பேசுவதான அன்பை ஏழாவதாக வைத்தார்... இது தான் காரணம்! தியானம் நாம் ஒன்றுமே இல்லை என உணர வைத்து கர்வ சுயநலம் அழிக்கிறது... எதையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை அளிக்கிறது... சுவாமியின் பேரதிர்வலைகளை உணர வைத்து...அந்த பேரதிர்வலைகள் நமது ஆன்ம மையத்தை அசைக்க... அன்பூற்று அகத்திலிருந்து பெருகுகிறது...! இதுவே ஆன்ம சாதனையின் அடிப்படை  அனுபவம்!! ஆக ஆத்ம சாதனை தினந்தோறும் பழகி நாம் அன்பை வெளிக் கொண்டு வருவோம்... இது தான் அடிப்படை!! 


❤️ அனைத்திற்கும் சேவை செய்:

அனைத்தையும் நேசி என்பதன் சங்கிலித் தொடர்பே அனைத்திற்கும் சேவை செய் என்பது...! ஆத்ம சாதனையால் முதலில் அன்பை வளர்க்க வேண்டும்... பிறகே நாம் சேவை செய்ய வேண்டும்! சுயநலமில்லாத அன்பால் சேவை செய்யும் போது நாம் சேவை செய்கிறோம் என்ற எண்ணத்திலிருந்தும் மீள முடியும்! சேவைகளால் எழுகிற அகந்தையை கரைக்க முடியும்! நான் இவ்வளவு சேவை செய்தேன் நீ எனக்கு என்ன செய்தாய்? என சுவாமியைப் பார்த்துக் கேட்கும் அபத்த கேள்விகள் அடங்கி.. சேவை செய்வதே தவமும் வரமும் என்றபடி நம்மால் திருப்தியோடு வாழ முடிகிறது! சேவை என்பது அரசியலோ வியாபாரமோ அல்ல...அது பவ்யத்தின் பரிமாற்றம்... வினயத்தின் விநியோகம்... இயந்தரத்தனமாக அன்றி இதயப்பூர்வமாக ஆற்ற வேண்டிய கர யாகம் என்பது சேவை! சுவாமி தனக்கு எண்ணிக்கைகள் (Quantity) அல்ல... தரமே முக்கியம் என்கிறார்! 


ஆக ஸித்த சுத்தியே அத்தகைய தரமான சேவையை செயலாற்ற முடிகிறது!! ஆஞ்சநேயரே அத்தகைய சேவை செய்தது.. அத்தகைய அனுமனைப் போல் நாமும் சேவையாற்ற வேண்டும்! அதற்கு முக்கியமாக தொடர்ஜபம் ஆஞ்சநேயருக்கு உதவியது... அன்பு ஒரு சிறகு - சேவை மறு சிறகு! சேவையை மட்டும் வைத்து நாம் ஒன்றும் செய்துவிட முடியாது! சுத்தமில்லாத பாத்திரத்தில் சுத்தமான பசும்பாலை காய்ச்சினாலும் பால் திரியவே செய்கிறது! சுத்தமான இதயமில்லாமல் நாம் செய்கிற எதுவும் ஓட்டைக் கிணற்று வாளியைப் போலவே பயனின்றிப் போகிறது! இங்கே பிறர் என யாருமே இல்லை.. எல்லாம் ஆன்மாவின் வெவ்வேறு உடற்போர்வைகளே.. நாம் நமக்குத்தான் சேவை செய்து கொள்கிறோம் என்பதை நாம் உணர்கிற போது சேவை புனிதமாகிறது! ஏவுதல் அடங்கி பணிவு பிறக்கிறது! காட்டிக் கொள்ளுதல் அடங்கி கரைதல் ஏற்படுகிறது! மனிதனுக்கு சேவை செய்து விட்டு மழைக்கு ஒதுங்கும் தெரு நாயை வீட்டை விட்டு விரட்டினால் சேவை உணர்வே நமக்கு எழவில்லை என்று தானே அர்த்தம்! பாம்பு நுழைந்தால் பால் ஊற்ற வேண்டுமா? எனக் கேட்டால்...அதை துன்புறுத்தாமல்/ அடித்துக் கொள்ளாமல் அப்புறப்படுத்தலாம்! நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எவரையும் துன்புறுத்தாமல்/ துயரம் தராமல் இருப்பது என்பது பெரிய சேவையே!!


❤️ எப்போதும் உதவி செய்:

இது ஒரு ஆன்ம சங்கிலித் தொடர்பே!! அன்பும், சேவை உணர்வும் இருந்தால் மட்டுமே நமக்கு உதவி செய்யத் தோன்றும்...! அவ்வையே அறம் செய் எனச் சொல்லவில்லை..அறம் செய்ய விரும்பு என்று மட்டும் தான் சொல்கிறார்!... அப்படி உதவி செய்ய நாம் விரும்ப வேண்டும்! அந்த விரும்புதல் என்பது ஆசையல்ல.. அது இதய விரிவால் ஏற்படுகிறது! ஆசையின் ஊற்று மனம்... அன்பின் ஊற்று இதயம்! அதே சமயத்தில் எதனோடும் மனதை ஒட்டாமல் நாம் உதவி செய்யும் போதே பற்றின்மை தொடர்கிறது!

உணர்ச்சிவசப்பட்டு நாம் செய்கிற உதவிகள் அல்ல பேரன்போடு நாம் செய்கிற உதவிகளே சுவாமிக்கு மகிழ்ச்சி அளிக்கிறது! உணர்ச்சிவசப்படுதல் எதிர்பார்ப்பையும் , நான் அவர்களுக்கு உதவி செய்தேன் கொஞ்சம் கூட நன்றியே இல்லை எனும் எண்ணத்தையும் வளர்த்து துயரத்தை நமக்கு ஏற்படுத்திவிடுகிறது! யாரையும் நம் சுயநலத்திற்கு பயன்படுத்த நினைக்காமல் இருப்பதே பெரிய அறம்! அதுவே  மனித சமூகத்திற்கு நாம் செய்கிற முதல் உதவி! முதலில் பிறரை இடைஞ்சல் படுத்தாமல் இருப்பதே பெரிய உதவி! நமக்கு பொழுது போகவில்லை என பிறரின் நேரங்களை நாம் எதையாவது பேசி வீணடிப்பது என்பது கூட நாம் அவர்களுக்கு செய்கிற தீங்கே! அதே போல் பாரதியே சொல்கிறார் "பொருள் உள்ளோர் பொருள் தந்து உதவுங்கள்.. உடல் வலு உள்ளோர் சேவையாற்றுங்கள்.. குறைந்த பட்சம் சுதந்திர வேள்விக்காக வாய்ச்சொல் அருள்வீர்!" என்கிறார்! இந்த வாய்ச்சொல் அருள்வது தான் பிறருக்கு நாம் அளிக்கும் ஆறுதல்.. இனிமையான பேச்சு... எடுத்தெறிந்து பேசுவது என்பது அறமற்ற தன்மை! அதிகாரத் திமிரோடு பேசுவது இன்னும் தீய கர்மாக்களையே நம்மை சேகரிக்க வைக்கிறது...! அப்படி செய்தவப் புண்ணியங்கள் எல்லாம் போய்...பாவம் மிஞ்சி நிற்க...'சுவாமி...சுவாமி' என்றால் சுவாமி எங்கிருந்து நம்மை காப்பாற்றுவார்?! இந்த நான்கு ஆன்மீக நெறிகளும் நம் தீய கர்மாக்களை கரைப்பதற்கே சுவாமி அருள்வது! நமக்கு அகநோய் இருக்கிறது... இந்த நான்கு மாத்திரைகளையும் நாம் சாப்பிட்டாக வேண்டும்!


❤️ ஒருபோதும் புண்படுத்தாதே:

புண்படுத்துவது இரண்டு விதம் ஒன்று சொல்லால் இன்னொன்று செயலால்... அதாவது நடத்தும் தன்மையால்.. நமது நடவடிக்கையால்... இன்னொரு விதம் இருக்கிறது.. மிக கர்வமான விதம்...அலட்சியப்படுத்துவது! வார்த்தையைக் கூட தாங்கி பொறுமையாக இருப்பவர்களால் அந்த அலட்சியங்களை தாங்க முடிவதில்லை! ஆனாலும் நாம் தாங்கித் தான் ஆக வேண்டும்.. புண்படுத்துகிறது எதுவோ அதுவே நம்மை பண்படுத்துகிறது! மூங்கிலையே துளையிட்டால் தான் புல்லாங்குழலாய் ஆகிறதல்லவா! புண்படுத்துபவர்கள் நம் பாவங்களை வாங்கிக் கொள்கிறார்கள்...எவ்வளவு பெரிய மனம் அவர்களுக்கு... கீழே கிடக்கும் குப்பையை எடுத்து யாராவது பூஜையறையில் வைப்பார்களா? ஆனால் அவர்கள் புண்படுத்துகிற பெயரில் அதை வைக்கிறார்கள். நம் குப்பைகளை எல்லாம் அவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்! பிறர் ஏளனமாய் பேசுவதில் நம் பாவங்களே அவர்களிடம் செல்வதால் நம்மிடமிருந்த துர்நாற்ற கர்மா மறைந்து போகிறது! ஆகவே தான் சுவாமி "பிறரை நீ புண்படுத்தி பாவங்களை சேர்த்துக் கொள்ளாதே!" என்கிறார்! இதனால் தான் உடல் பலமும் , செல்வ செறுக்கும்.. பதவி ஆணவமும்... நீடிப்பதில்லை என்கிறார் ஆதிசங்கரர். அதையும் நாம் பார்த்துத்தானே வருகிறோம்! சக்கரவர்த்திகளின் சாம்ராஜ்ய சுவடுகள் கூட இப்போது இல்லை... கோட்டைகள் தரைமட்டம்... சுவாமி அவதரித்த ரகுவம்சமே இல்லை...தசாவதார புத்தரின் பரம்பரையே இல்லை... சுவாமி எழுப்பிய துவாரகை மாளிகையே கடலடியில் தான் கிடக்கிறது... இந்த பூமியில் எதுவும் நிலையில்லை...  சிருஷ்டிப் பொருள் நிரந்தரமற்றது... சுவாமி எனும் சிருஷ்டிக்கும் பரம்பொருளே நிரந்தரம்...! நிலையாமையை ஆன்ம சாதனையே உணர வைக்கிறது... உணர வைக்கையில் அந்த அக அன்பு நம்மை ஆக்கிரமிக்கிறது நிலையாமையை உணர்ந்து விட்டால் யாரையும் புண்படுத்தும் எண்ணம் கூட நமக்கு வராது அல்லவா! நேரடியாகவோ மறைமுகமாகவோ பாராமுகமாகவோ நாம் பிறரைப் புண்படுத்துவதில் அப்படி என்ன பெரிய பொக்கிஷப் பயன் கிடைத்துவிடுகிறது? எதுவுமில்லை... அகந்தை திருப்திப்படுகிறது... அவ்வளவு தான்... அகந்தைக்கு தீனி அளித்துக் கொண்டே வந்தால் நம் ஆன்மா செல்லரித்துப் போகிறது... தீய கர்மா நம் முதுகு மேல் விக்ரமாதித்தன் மேல் ஏறிக் கொள்கிற வேதாளம் போல் ஏறிக் கொள்கிறது! இருக்கிற கர்மாக்களை கரைப்பதற்கே நாம் பெரும்பாடு படுகிறோம்...இதில் ஏன் நாம் தேவையில்லாத தீய கர்மாக்களை வேறு சேகரித்துக் கொள்ள வேண்டும்? 

சுவாமி இந்த நான்கையும் மிக எளிமைப்படுத்தி வகுத்தது நமது கர்மாக்களை கரைப்பதற்கும்...பிறவாமையை அருள்வதற்குமே... இதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டு இன்றிலிருந்து நாம் அனைவரும் சேர்ந்தே செயல்படுவோம்! எது வாழ்க்கை எனக் கேட்பவர்க்கு? இந்த நான்கே வாழ்க்கை என்பதை நாம் வாய்வார்த்தையாக இன்றி வாழ்ந்தே காண்பிப்போம்! 


வாழ்வதை விட வேறென்ன சிறந்த போதனையை ஒருவரால் நிகழ்த்திவிட முடியும்?!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக