தலைப்பு

வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

ஆளுநர் தமிழிசையின் ஆழ்மனதில் யாழ் மீட்டும் சுவாமி எனும் தெய்வீக இசை!

தெலுங்கானாவின் ஆளுநரும் மற்றும் புதுவையின் துணைநிலை ஆளுநருமான திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் சுவாமி அனுபவங்களும்... அவர் இதயம் திறந்து பகிர்ந்து கொண்ட சுவாமியின் எங்கும் நிறைந்த இறைத்தன்மையும் அவர் செயல்பாட்டின் பாணியிலேயே விறுவிறுப்பாய் இதோ...


பூமா தேவி என பெண்மையையே வலியுறுத்துகிறது பாரதம்... அதன் நிறமற்ற குருதியாகிய கங்கையையும் கங்கா தேவி என்றே பாரதவாசிகள் அதில் நனைந்து புனிதமடைந்து போற்றிக் கொண்டாடுகிறோம்! சமூகக் களத்தில் பெண்களின் பங்கு குறைவாகவே இருந்து வந்த காலக்கட்டத்தில் புயலாய் வெளிக் கிளர்ந்த புரட்சிப்பூ திருமதி தமிழிசை சௌந்தரராஜன்... 


தந்தை மற்றும் கணவருடன்.... 

அவரின் தந்தை கர்மவீரரின் இதயம்... தமிழுரையில் இன்னொரு திரு.வி.க போல் திகழ்ந்த திரு. குமரி அனந்தன்... அந்தக் குமரிக்கு பிறந்த குமரிதான் தமிழிசை... காமராஜரின் மனசாட்சிக் குரலாகவே திகழ்ந்த குமரி அனந்தன் அவர்களின் வழித்தோன்றலும் விழுதுமாகிய அவர் திருமகள் தமிழிசை இன்று ஆலமரமாக சமூக சேவையில் பெண்களுக்கான ராஜபாட்டையை அகலமாய்த் திறந்து விட்டவர்! ஆலமரமான குமரி அனந்தனின் விழுதும் இன்றைக்கு ஆலமரமாக திகழ்கிறது... ஆம் 'கை'யில் பூத்த 'தாமரை'யே தமிழிசை!


ஒருமுறை 1997 ல் டயாபடிக் டாக்டர் திரு மோகன் சாயிராம் அவர்களின் மூலமாக அவரின் அன்பு அழைப்பின் பேரில் சுவாமியை தனது கணவர் மகள் என குடும்ப சகிதமாக வொயிட் ஃபீல்டில் தரிசிக்கச் செல்கிறார்! அது தான் அவரின் முதல் தரிசனம்...  2 ஆண்டுகளுக்குப் பிறகு 1999'ல் பாரதிய ஜனதா கட்சியில் ஒரு சாதாரண அடிப்படை உறுப்பினராக சேர்கிறார்... தந்தை ஒரு கட்சி...மகள் ஒரு கட்சி... தந்தையின் பெருந்தகுதிக்கு கிடைக்க வேண்டிய மிக நியாயமான பதிவிப் பெருமைகள் எல்லாம்  அவரின் மகளுக்கு கிடைத்தது என்பது தந்தையின் ஆசியும்.. சுவாமி எனும் பிரபஞ்சத் தந்தையின் அனுகிரகமும்... மேல்படிப்பு (PG) பயின்று வரும் ஒரு இளம் டாக்டராக கட்சியில் சேர்கிறார்... சென்னை சுந்தரத்தில் சுவாமி வந்திருந்த போது நடைபெற்ற மருத்துவ சேவையிலும் ஒரு PG பயிலும் மருத்துவ மாணவியாக சேவையாற்றி.. சுவாமி தரிசனம் / ஆசீர்வாதம் என நிரம்பப் பெற்றிருக்கிறார்! இது இரண்டாவது சுவாமி தரிசனம்!


ஒருமுறை 2001ல் அப்போது கட்சி தலைவராக இருந்த திரு.வெங்கையா நாயுடு அவர்கள் கட்சி மேடையில் உரையாற்றவிருந்த நிகழ்வு ஏற்பாடாகி இருந்தது...! அந்த நிகழ்வை தொகுத்து வழங்கும் ஓர் அரிய வாய்ப்பு 2 ஆண்டுகள் கட்சியில் சேர்ந்த புத்தம் புதிய உறுப்பினரான திருமதி தமிழிசைக்கு கிடைக்கிறது! ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அந்த நேரத்தில் அவரின் தொண்டை கட்டிக் கொண்டிருந்தது...அவரால் வாய் திறந்து பேசவே முடியவில்லை... ரிக்கார்டில் விழுந்த கீறலாய் இசை அபஸ்வரத்தில்... ஆனால் அந்த அரிய பெரிய வாய்ப்பையும் அவரால் தவற விட இயலாது... ஆணாதிக்க அரசியலில்‌... அரசியல் வாரிசுகளில் கூட ஆண்களையே முன்னிறுத்தும் பொதுச்சபையில் ஒரு பெண் போராடி வெற்றி பெறுவது என்பது ஜான்சி ராணி.. வேலு நாச்சியார் என சுதந்திரப் போராட்ட காலத்தில் மட்டுமே நிகழ்ந்திருக்கிறது... தொண்டைச் செய்தாக வேண்டும் ஆனால் தொண்டை சரியில்லை... நேராக தான் துணைப் பேராசிரியராகப் பணியாற்றும் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு செல்கிறார்.. கணவரிடம் மாத்திரைகள் உடனடியாக குணம் தராது.. நான்கு ஐந்து நாள் ஆகும்... அடுத்த நாளே மேடையில் தொகுப்புரை என்பதால் ஊசி ஏதாவது இருந்தால் எடுத்து வைக்கும்படி கேட்டுவிட்டு லிஃப்'ட்டில் ஏறுகிறார்.. 


அந்த லிஃப்ட் அவர்களின் வாழ்வில் மிகப்பெரிய லிஃப்ட்'டாக...சுவாமியின் கிஃப்ட்'டாக அமைகிறது... அந்த லிஃப்ட்'டில் அவரோடு ஏறிய ஒரு சுவாமி பக்தர் சுவாமியின் அபயஹஸ்த மஞ்சள் உடையிலான திருப்படத்தையும்... சிறிய கல்கண்டு பாக்கெட்டையும் அளிக்கிறார்.. அந்த சுவாமி பிரசாதத்தை கண்களில் ஒற்றி வாங்கிக் கொள்கிறார்...அந்த கல்கண்டை அங்கேயே பிரித்து வாயில் போட்டுக் கொண்டதில்.. அதே நொடி.. கட்டிக் கொண்ட தொண்டை உடனேயே குணமாகிறது... ஆச்சர்யப்படுகிறார்.. பரவசமாகிறார்... கணவரிடம் மீண்டும் சென்று சாதாரண தனது பழைய கம்பீரக் குரலில் பேசுகிறார்.. கணவரால் நம்பவே முடியவில்லை... ஊசி வேண்டும் என கணவரிடம் அவர் சொல்லி அரை மணி நேரம் கூட இருக்காது... "சுவாமி குணமாக்கி விட்டார்!" என்கிறார் பரவசத்தோடு.. அதிலிருந்து அவர் ஒவ்வொரு வியாழனும் சுவாமியை தரிசிக்க தவறியதே இல்லை.. சுந்தரமே தமிழிசை சாயிராமின் தாய்மடி... அவர் அங்கே கனமனதோடு சென்றாலும் இளைப்பாறி இறகுப் பறவையாய் இதம் பெறுவார்...


அவரின் பொதுவாழ்வில் பிறகு நிகழ்ந்ததெல்லாம் சுவாமி சங்கல்பத்தில் நிகழ்ந்த சரிதம்! ஒரு அடிப்படை உறுப்பினர் முதல் ஆளுநர் எனும் பிரம்மாண்ட உயரம் சுவாமி வழங்கிய கருணா துரிதம்... தமிழிசை சாயிராம் அவர்கள் கடும் உழைப்பாளி.. அதோடு சுவாமி மேல் பரம பக்தி.. மிகுந்த எளிமையானவர்... இப்படி ஒரு கண்ணிய அரசியல்வாதியை யாரும் பார்த்திருக்கவே இயலாது! அவரின் அலுவலகம் மற்றும் வீட்டின் அறை முழுக்க சுவாமியின் திருரூபங்களே நீக்கமற நிறைந்திருக்கின்றன... அவர் கைப் பையில் கூட சுவாமி விபூதி பிரசாதங்களே நிறைந்து வழித்துணையாகவும்... சர்வ காவலாகவும் இன்றளவும் அமைகிறது! புதுவையின் துணைநிலை ஆளுநரான பின்பும் கூட சென்னைக்கு வருகிற போதெல்லாம் சுந்தர விஜயம் செய்யத் தவறியதே இல்லை.. 2020'ம் ஆண்டு புட்டபர்த்தியில் மகிளா தினத்தில் முதன்முறையாக ஒரு தெலுங்கானா ஆளுநராக அவர் பேசியதெல்லாம் கல்வெட்டில் வடித்து வைக்க வேண்டிய பேச்சு...தெய்வீக வீச்சு!


ஒரு ஆளுநராகத் தான் முதன்முறையாக புட்டபர்த்தியில் தான் கால் பதிக்க வேண்டும் என்பது சுவாமியின் ஆக்ஞையே என்பதை மிக திடமாக அவர் பதிவு செய்கிறார்! பெண்ணியத்திற்கும் கண்ணியத்திற்கும் உதாரணமான இந்தக் காவியத் தாமரை சுவாமியின் காலடித் தாமரையாய் சமூக சேவையில் பெண்குலத்திற்கே எடுத்துக்காட்டாய் திகழ்ந்து கொண்டே பெண்களுக்கு திசை காட்டுகிறது.. அந்த இசை காட்டுகிறது! 


  பக்தியுடன்

வைரபாரதி





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக