தலைப்பு

வியாழன், 10 பிப்ரவரி, 2022

விஜயநகர சாம்ராஜ்ய மகாராஜாவின் மகள் ரூபவதியின் சுவாமி அனுபவங்கள்!

பல சாம்ராஜ்ய அரச குடும்பத்திற்கு சுவாமி வழிகாட்டி இருக்கிறார்... பரிவு காட்டி நற்கதி அளித்திருக்கிறார்.. அந்த வரிசையில் விஜயநகர சாம்ராஜ்ய அரச வம்சரின் மகள் ரூபவதியின் சுவாமி அனுபவங்கள் சுவாரஸ்யமாய் இதோ...


விஜயநகரம் பெரிய சாம்ராஜ்யம்... தெனாலிராமனின் அறிவொளியாலும் ஹாஸ்ய ஒலியாலும் மிளிர்ந்த சபை... கிருஷ்ணதேவராயர் ஆண்ட சாம்ராஜ்யம்...  கஜபதி ராஜு வம்சத்தினராலும் ஆளப்பட்டது.. அந்தப் பட்டத்தில் ஒருவர் பசுபதி அலக நாராயண கஜபதி ராஜு - 4 (1902 - 1937)..

 இப்போது போலீஸ் பெட்டாலியனாக இருக்கும் அலகானந்தா அரண்மனையை சிறப்புற கட்டியவர் அவர்... அவரின் மகள் ரூபவதி! அவரை 62 ஆவது வயதில் சந்திக்கிறார் நூலாசிரியர். அப்போது அவர் தனது சுவாமி அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொள்கிறார்! ரூபவதியின் தாயார் சிம்ஹாசலம். முத்தாத்தாவே சிம்மாசலம் என்ற பிரசித்தி பெற்ற திருக்கோவிலை கட்டியவர் அவர். அதிலுள்ள வராஹ நரசிம்மரின் உக்கிரத்தை பக்தர் தாங்க முடியாத காரணத்தினால் சந்தனக்காப்பிலேயே சந்நதி விக்ரஹம் திகழ்கிறது!

தனது 9 வயதில் ரூபவதி தந்தையை இழக்கிறார்.. அதிலிருந்து கஷ்டம் தொற்றுகிறது! தாயோ பக்திப் பூர்வமாய் மகளை வளர்க்கிறார்.. அதுதான் சரியான வளர்ச்சி.. கார்ட்டூன் காட்டி வளர்ப்பதல்ல குழந்தை வளர்ப்பு... இராமாயண மகாபாரத ஹரிகதைகளை கேட்டே ரூபவதி வளர்கிறார்.. ரூபவதி ரூபவதியாகிறபோது அவரது 16 ஆவது வயதிலேயே திருமணம் நிச்சயிக்கிறார் தாய். ஒரு கனவு ரூபவதியின் தாய்க்கு... வராஹ நரசிம்மர் கோவிலுக்கு உள்ளே தாயும் மகளும் செல்ல.. வெளியே தாய் மட்டும் வர... வாசலில் இருக்கும் ஐந்து துறவிகள் மகள் வருவதற்குள் கதவை சாற்றி விடுகிறார்கள்..."என் பெண்ணை விட்டுவிடுங்கள்" என தாய் அழ.. "அவள் இனி எங்கள் பொறுப்பு" என துறவிகள் பதிலுரைக்க கனவு கலைகிறது...ரூபவதியின் தாய் சிம்ஹாசலம் திடுக்கிடுகிறாள்.. அடுத்த நாள் ஒரு முதியவர் வர... உன் தாய் எங்கே என மகளிடம் விசாரிக்க.. இதை கொடுத்து விடு என ஒரு புகைப்படத்தை தந்துவிட்டு சென்றுவிடுகிறார்.. அதை தாய்க்கு தர.. ரூபவதியின் தாய் அதை பார்த்து திடுக்கிடுகிறார்... அந்த கனவில் தோன்றிய அதே ஐந்து துறவிகளின் புகைப்படம்.. வந்திருந்த முதிர் தோற்றத்தை தாய் பகிர ஷிர்டி சுவாமி தான் இந்தப் புகைப்படத்தை தந்திருக்க வேண்டும்... அவரின் ஐந்து வித தோற்றமே இது.. நாங்கள் ஷிர்டி சாயி பக்தர்கள்.. நாங்களே உங்களை மகளைப் பார்த்துக் கொள்ள இருப்பதால்... ஷிர்டி சுவாமியே கனவில் தோன்றியது என்கின்றனர்... திருமணம் நிகழ்கிறது.. ரூபவதியும் புகுந்த வீட்டில் ஷிர்டி சுவாமியை வழிபட்டு வருகிறார்!


வியாபார நிமித்தமாக சிலோன் குடிபெயர்கிறார்கள். ரூபவதியின் குழந்தை ஜுரத்தில் தவித்து அசைவற்றிருக்க... ஷிர்டி சுவாமியை வேண்ட.. உயிர் திரும்புகிறது... பிறகு வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டபின் சென்னைக்கு வருகிறார்கள். அரண்மனை வாசி காலத்தின் கோலத்தால் வாடகைவீட்டு வாசியாக மாறுகிறார்! காலம் அனைத்தையும் புரட்டிப் போட்டு விடுகிறது... செய் கர்மா அத்தனையையும் தலைகீழாக மாற்றிவிடுகிறது! கர்மா நிகழ்த்தும் பொம்மலாட்டத்தில் காலதாளத்தின் படி அசைந்து கொண்டிருக்கும் வெறும் பொம்மைகளே எல்லாவித மனிதர்களும்...!

அவர்கள் சென்னையில் குடிவருவதோ பழம்பெரும் பக்தரான பார்த்தசாரதி முதலியார் இல்லத்திற்கு... அவர் சுவாமியின் அத்யந்த  பக்தர்... அவரே இரு சாயியும் ஒன்றே தான்.. ஷிர்டி சாயியின் மறு அவதாரமே ஸ்ரீ சத்ய சாயி என அவர்களுக்கு எடுத்துரைக்கிறார்... ஒருமுறை வேங்கடமுனி இல்லத்திற்கு சுவாமி விஜயம் புரிய.. முதல் தரிசனம் ரூபவதிக்கு... சுவாமியின் அங்கியை தொட்டு வணங்குகிறார்... பார்த்தசாரதி முதலியார் வார்த்தையால் சொன்னதை சுவாமியின் தரிசனத்தில் அனுபவப்பூர்வமாய் உணர்ந்து கண் கலங்குகிறார் ரூபவதி... பலஜென்ம ஆன்மத்தொடர்பை தரிசன மாத்திரத்திலேயே உணர்கிறார்... கற்பூரமாய் தாய் வளர்த்ததால் சைதன்ய ஜோதியை கண்ட அந்த நொடியே பக்தி பற்றிக் கொள்கிறது!


ஒருமுறை 1963 ல்.. சுவாமி ஸ்ட்ரோக் வந்து சயனித்திருந்த பக்தரின் கருப்பு நாட்கள் அவை... ரூபவதி தரிசிக்க செல்கிறாள்... சுவாமி தரிசனம் கிடைக்காது போது.. செய்தியையும் கேள்விப்பட்டு... உடைந்து அழுகிறார்.. அந்த ஸ்ட்ரோக்கை எனக்கு தந்து விடுங்கள் சுவாமி! என பிரார்த்தனை செய்கிறார்... என்ன ஒரு பக்தி!! அது 6/07/1963 குரு பூர்ணிமா...சுவாமிக்காக காத்திருந்த பலரில் ரூபவதியும் ஒருவர்.. ராஜா ரெட்டியும் ஸ்ரீமான் கஸ்தூரியும் சுவாமியை நாற்காலியில் வைத்து கொண்டுவர... தூய பக்தர் ஸ்ரீமான் கஸ்தூரி மைக் முன்னே..."இந்த குருபூர்ணிமா அமாவாசையாக இருண்டிருக்கிறது.." எனப் பேச.. சுவாமி ஸ்ட்ரோக்கிலிருந்து நீர்தெளித்து முழுவதும் வெளியே வந்து "இதோ பௌர்ணமி ஒளிர ஆரம்பித்துவிட்டது!" என சுவாமி பக்தரை பரவசப்படுத்த.. அன்றே சுவாமி தனது மூன்று சாயி அவதாரங்கள் பற்றிப் பேசியதும்... 5000 ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த மூன்று சாயி அவதார சங்கல்ப திருச்செய்தியையும்.. ஸ்ரீபரத்வாஜ முனிவருக்கு அளித்த வரத்தைப் பகிர்ந்ததும்... தனது அடுத்த திருஅவதாரமான ஸ்ரீ பிரேம சுவாமி பற்றி முதன்முறையாகப் பகிர்ந்ததும் அன்று தான்... அந்த பேரானந்த பொழுதில் சாட்சியாகவும் இருந்தவர் ரூபவதி. அதற்கு அடுத்த நாளே ரூபவதிக்கு சுவாமி நேர்காணல் தருகிறார்.

"இனிமேல் நான் பார்த்துக் கொள்கிறேன்! போலீஸ் ஒன்றும் செய்யமுடியாது!" என்கிறார் சுவாமி.. அதற்கு காரணம் அப்போது அவர் சிலோன் பிரஜையாக இருந்ததால்... காவல்துறை திரும்பிச் செல்லும்படி நச்சரித்துக் கொண்டிருந்தது... 


இரண்டாவது நேர்காணலில் "உன் அண்ணனிடம் பணம் கேட்காதே.. கிடைக்காது! 2 மாதத்தில் உனக்கு ஒரு கடிதம் வரும்... அதன் மூலம் உனக்கு பணம் கிடைக்கும்!" என்கிறார்.. சுவாமி சொல்லியபடியே 2 மாதத்தில் எப்பொழுதோ வங்கியில் சேமித்த தொகையை எடுத்துக் கொள்ளும்படி வங்கியிலிருந்து கடிதம் வர.. வராத பணம் .. அவர்கள் மறந்தே போன பணம்.. சுவாமியால் மீட்டுத் தரப்படுகிறது! 

பிறகு சுவாமி உடனான 3ஆம் நேர்காணலில்... "இனி உன் கஷ்டம் தீரும் வரை... நீ புட்டபர்த்திக்கு வரமாட்டாய்!" என்கிறார்... அதே போலவே 25 ஆண்டுகளுக்குப் பிறகே ரூபவதியால் பர்த்தி விஜயம் புரிய முடிகிறது! பிறகு ரூபவதியின் 4ஆவது மகன் வளர்ந்து படித்து லண்டனில் வேலை பார்ப்பதில்... சுவாமி சங்கல்பத்தோடு பொருளாதாரமும் உயர்கிறது! 

அருளாதாரத்தை அள்ளித் தருபவர் சுவாமி.. அப்பேர்ப்பட்ட அருளாதாரம் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் பொருளாதாரம் திருப்தி தரும்படி அமைந்துவிடுகிறது! திருப்தி என்பது அளவில் அல்ல தரத்தில்...! அந்தத் தரம் மனப்பக்குவத்தால் மட்டுமே வாய்க்கிறது!

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -3 / பக்கம் : 62 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


எத்தனையோ சாம்ராஜ்யங்கள் சரிந்திருக்கின்றன... எத்தனையோ பதவிகள் உதவிகள் அற்று வீதியில் அலைந்திருக்கின்றன... எத்தனையோ சிம்மாசனங்கள் தூள் துளாகியிருக்கின்றன... இந்த உலகில் எதுவும் நிரந்தரமே இல்லை... இது வெறும் தத்துவமல்ல... வாழ்வியல் நியதி! இதை விழிப்போடு தரிசித்து மனிதன் உணர்ந்து கொண்டுவிட்டால் அகந்தையின்  அடிவேரை ஞானம் பெயர்த்து எறிகிறது! அதிகாரம் - கொக்கரிப்பு- ஏவல் - திமிர் இவை எல்லாம் கடைசியில் பிடி சாம்பலால் தனது அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது! இந்த ஞானம் தரவே பரப்பிரம்மம் அவதாரம் எடுத்து மண்ணில் உலவுகிறது! சுவாமியின் இதயத்தில் இடம் பிடிக்க முயல்பவர் எவரும் பதவி நாற்காலியில் இடம் பிடிக்க யோசிப்பதே இல்லை! பக்தியை விட அப்படி ஒரு இதய அமர்வை எவராலும் தந்துவிட முடியாது!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக