தலைப்பு

செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

தென்னாடுடைய சுவாமி போற்றி! தென்னாப்பிரிக்காவிலும் இறைவா போற்றி!

தென்னாப்பிரிக்க தேச பக்தர்களை சுவாமி எவ்வகையில் எல்லாம் காப்பாற்றி அருள் பொழிந்தார் எனும் சுவாரஸ்ய சம்பவங்கள் சரம் சரமாய் இதோ...

130 வருடங்கள் முன்பு மதுரையிலிருந்து தென்னாப்பிரிக்கா சென்றனர் பத்மாவதியின் மூதாதையர். அங்கே கரும்பு பயிரிடும் தொழிலாளர்களாகச் சென்றிருக்கிறார்கள்... முன்பே சென்றிருந்த போதும் முத்தமிழ்ப் பண்பாட்டினை மறக்காத வாழ்வியலை கொண்டிருந்தனர்...! பத்மாவதி ஜோஹன்ஸ்பர்க்கில் வசித்து கொண்டு வேலை பார்க்கிறார்... 600 மைல் தொலைவிலுள்ள டர்பனில் அவரது பெற்றோர் வசிக்கிறார்கள்! ஒருசமயம் அவரது மார்பில் கட்டி ஒன்று தோன்றி வலிக்கச் செய்கிறது... 4 வருடங்கள் கடக்கிறது..ஒரு நாள் வலி பொறுக்க முடியாமல் மருத்துவமனை செல்கிறார்... அங்கே அவரது தோழி பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருக்கிறது... அவருக்கு கட்டியால் வலி... அவரின் தோழிக்கு பேற்றால் வலி.. சுவாமி பக்தரான அந்தத் தோழியின் கணவர் "சுவாமி கூடவே இருக்கிறார்.. கவலைப்பட ஒன்றுமில்லை!" என சுவாமி விபூதியை வாயில் இட... மருத்துவர் அருகே இல்லாமலேயே சுகப்பிரசவம் நேர்கிறது... அதை கவனித்த பத்மாவதி "சுவாமி கடவுள் என்றால்... இந்த எனது கட்டியினால் ஏற்பட்ட வலி உடனே குணமடையட்டும்!" என சுவாமியிடம் மனதிற்குள் வேண்டிக் கொள்ள... அடுத்த நொடியே வலி பறந்து போகிறது. அவருக்கு ஆச்சர்யம் தாளவில்லை..."சுவாமி கடவுளே..! எனக்கும் அற்புதம் நிகழ்த்தி இருக்கிறார்... உண்மை...சுவாமி இறைவனே!" என டர்பனில் இருக்கும் பெற்றோர்க்கும் அதனைப் பகிர... பல அனுபவங்களை உணர்ந்து குடும்பமே சுவாமி பக்தராகிறது! 


1990ல் பிருந்தாவன சம்மர் கோர்ஸ் முன்பே பெங்களூர் வந்துவிடுகிறார் பத்மாவதி... அங்கே மாணவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களை கேட்டுப் பரசவப்படுகிறார்... அதில் ஒன்று அதே 1990 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவில் பெருத்த கூட்டமொன்றில் சுவாமியை பற்றி பேசிக் கொண்டிருந்த சாயி பக்தரின் குரல் திடீரென அடைத்துக் கொள்கிறது.. மதுரமான குரல் கூட்டத்தினர்க்கு கேட்கிறது..‌. அப்போது சுவாமி அவர்கள் முன் தோன்றி அனைவரையும் பரவசப்படுத்துகிறார்!

அதில் மற்றொன்று 1990 ஃபெப்ரவரியில் மதியம் கீழே இறங்கும் வழக்கமில்லாத சுவாமி கீழே இறங்குகிறார்.. காரணம் ஒரு மானின் அழுகுரல்... மாய மானின் அழுகுரல் கேட்டு அதைத் தேடிப் போன அதே சுவாமியே இப்போது நிஜ மானை தேடி எஜமானாகிய சுவாமி செல்கிறார்... அது உயிர் விடும் தருவாயில் இருக்கிறது! பல வருடம் சுவாமியின் கூடவே வாழ்ந்த மான் அது! அருகே வந்து பரிவோடு தடவிக் கொடுக்கிறார்... பழங்கள் கொடுக்கிறார்... மானை தனது மடியில் அமர்த்தி அதன் விழி நோக்கிப் பார்க்கிறார்.. தேன் விழியோடு மான் விழி கலக்க... மானின் ஜீவன் சுவாமியோடு கலந்து போகிறது... யானை மானை இப்படி சர்வ ஜீவராசிகளை கரையேற்ற வந்தவரே சுவாமி! காக்காய்க்கு சோறும் வைத்து அதன் மரக் கிளைகளையும் வெட்டுவதல்ல ஆன்மீகம்... இதயப் பிரேமைக்கு உயிர் பேதமே இல்லை...!


தென்னாப்பிரிக்காவில் திருடர்கள் பயம் அதிகம்! பொருட்களையும் பறித்து உயிரையும் எடுத்து தோளில் துண்டாய் மாட்டிப் போய்க் கொண்டே இருப்பார்கள்... அங்கே திருடர்கள் முதுகு சொறிவது கூட துப்பாக்கியால் தான்... அப்படிப் பயங்கரமான இரண்டு அனுபவத்தை பத்மாவதி நூலாசிரியரோடு பகிர்ந்து கொள்கிறார்... ஒரு வீட்டின் பாதி இரவில் துப்பாக்கி வைத்தபடி திருடர்கள் புகுந்து கொள்கிறார்கள்... அந்தக் குடும்ப நபர்கள் சுவாமி பக்தர்கள்...வேகமாய் சுவாமியின் திருப்படத்தை எடுத்து காட்டுகிறார்கள்... யானைக்கு முன் காட்டப்பட்ட தீப்பந்தம் போல் பின்னால் நகர்ந்து தப்பித்தோம் பிழைத்தோம் என சூழ்ந்த திருடர்கள் ஓடி விடுகிறார்கள்...!

ஒருமுறை டர்பனில் இருந்து ஜோஹன்ஸ்பர்க் சென்றது ஒரு இந்தியக் குடும்பம்... பாதி இரவில் கார் மறிக்கப்படுகிறது... துப்பாக்கிகளை அவர்களின் நெற்றிப் பொட்டில் வைத்தபடி வரவேற்கப்படுகிறார்கள்... புரியாத பாஷையில் ஏதேதோ திருடர்கள் பேசி... காரில் இருந்த பைகளை வேகமாய்க் கிழித்து தனது இருட்டுக் கைகளால் துளாவுகிறார்கள்... பையை தலைகீழாகக் குலுக்குகிறார்கள்... சுவாமியின் திருப்படம் 'தொப்' என கீழே விழுகிறது.. அதைக் கண்ட திருடர்கள்... பேச்சு மூச்சின்றி பைகளைப் போட்டது போட்டபடி ஜகா (escape) வாங்குகிறார்கள்... காரில் இருந்த சுவாமி பக்த குடும்பத்திற்கு முகத்தில் ஈ ஆடவில்லை... சுவாமி திருப்படத்தை எடுத்து மார்பில் அணைத்து "சாயிராம் சாயிராம்" எனக் கண்கலங்கி இதயம் உருகுகிறார்கள்!


பல வருடங்களாக பர்த்தியிலேயே வசிக்கும் சங்கரி அம்மா நூலாசிரியரின் தனது பழம்பெரும் அனுபவத்தை ஒருமுறை பகிர்ந்து கொள்கிறார்... "இப்போதெல்லாம் சுவாமியை அருகிலேயே தரிசிக்க முடிவதில்லை... அந்தக் காலம் எல்லாம் அப்படி இல்லை... சுவாமி மிகவும் குறும்புக்காரர்... பால கிருஷ்ண லீலைகள் மிகவும் புரிந்து எங்களை மெய் மறக்கச் செய்வார்.. சுவாமியை நாங்கள் "தொங்கா" "தொங்கா" (திருடன்) என்று தான் அதிப் பிரேமையோடு அழைப்போம்! ஒருமுறை சுவாமி "அதென்ன எப்பப் பாரத்தாலும் என்னை "தொங்கா தொங்கா!" என அழைக்கிறீர்கள்...அப்படி என்ன நான் உங்களுடைய உடைமைகளை திருடிவிட்டேன்? சொல்லுங்கள்!" எனக் கேட்டபோது... சங்கரி அம்மாவை போன்ற பழம்பெரும் மூத்த பக்தைகள் ஒன்று சேர்ந்து கொண்டு கோரஸாக "நீ எங்கள் மனதை திருடவில்லையா? என்ன திருடினேன் என எதுவும் தெரியாதது போல் கேட்கிறாயே!" எனச் சொன்ன போது... சுவாமி குலுங்கக் குலுங்கச் சிரித்தாராம்... அந்த சிரிப்பில் தானே அண்ட சராசரமும் அடிபணிந்து சுவாமியையே சுற்றிக் கொண்டிருக்கிறது.. வெறும் மனதை மட்டும் திருடுபவரா சுவாமி...? நம் ஆன்மாவையே அபகரித்து ஆன்மீகப்படுத்துபவர் அல்லவா! அதை அன்றாடம் நாம் அணு அணுவாய் அனுபவித்துக் கொண்டு தானே வருகிறோம்!


(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் -3 / பக்கம் : 159 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


நொடிக்கு நொடி சுவாமியின் திருவடி நம்மைச் சுற்றியே திருவலம் வருகிறது! சுவாமி நம் கூடவே நிறைந்திருக்கிறார்... அத்தனையையும் சொன்ன தென்னாப்பிரிக்க பத்மாவதி சுவாமியை "சர்வாந்தர்யாமி" என்கிறார்.. கடல் கடந்து இருந்த போதும் சுவாமி என் கூடவே இருப்பதை உணர்கிறேன் என்கிறார்... கடலை கடப்பதற்கு காற்றுக்கு ஒன்றும் கடினமில்லையே! ஜீவராசிகளின் உயர்ஜீவக் காற்று சுவாமி! காற்று எப்படிப் பிரியும்? பிரிந்தால் எவ்வாறு உயிர் ஜீவராசிகளின் உடம்பிற்குள் விரியும்?


 பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக