தலைப்பு

புதன், 2 பிப்ரவரி, 2022

சிக்கிம் முதலமைச்சர் நர் பகதூர் பண்டாரி அவர்களின் சுவாரஸ்ய சுவாமி அனுபவங்கள்!

தேசத்தை ஆள்பவர்களின் சுவாசத்தையும் சுவாமியே ஆள்கிறார்... அரசாட்சி அமைப்பவரின் ஒவ்வொருவர் உள்ளத்திலும் சுவாமியே அரசாட்சி நடத்தி உலகத்தை நல்வழிப்படுத்துகிறார்... அந்த வரிசையில் சிக்கிம் முதலமைச்சர் நர் பகதூர் பண்டாரி அவர்களின் சுவாமி அனுபவங்கள் இதோ...


இமயத்தாய் ஈன்றெடுத்த மாநிலக்குழந்தை சிக்கிம்... காணக் காண தியான லயம் சூழும் இமயமலைத் தொடரில் அமைந்திருக்கிறது அழகு சிக்கிம்.. ஹிந்து மதமும்.. பௌத்த மதமும் இதன் சமயங்கள்... கேங்டாக் தலைநகரம்... நேபாள மொழியை கொண்டிருக்கும் இதன் குளிரும் மொழியில் ஒளிரும்! அதில் 1979 முதல் 1994 வரை முதலமைச்சராக இருந்தவர் திரு நர் பகதூர் பண்டாரி! சிக்கிம் சங்க்ராம் பரிஷித்தின் நிறுவன தலைவராக இருந்திருக்கிறார். நேபாள மொழியை இந்திய அரசியலமைப்பின் 8 வது அட்டவணையில் சேர்க்க அவர் செய்த பெரும் முயற்சி பாராட்டுதலுக்குரியது.. நேபாள மொழிகளுக்கான பங்களிப்புகளுக்காக அவருக்கு "ஜகதாம்பா ஸ்ரீ புரஸ்கார் விருது" வழங்கப்படுகிறது.. முதல் கூர்க்கா வம்சாவளியை சேர்ந்த முதலமைச்சர் அவர்.. நூதன கட்டிடக்கலைஞர் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது!

1990ல் மே மாதம் 6'ஆம் தேதி ஈஸ்வராம்பா தினத்தன்று தனக்கு ஒருமுறை சுவாமி அளித்த அனுபவத்தை சிக்கிம் மாநில மேடையில் விவரித்துக் கூறுகிறார்!  அதற்கு முன்னதாக திடீரென ஒருநாள் இரண்டு கைகளும் அவருக்கு உணர்வற்று அசைக்கவே முடியாமல் போகிறது! இந்நிலையில் தனது அலுவலகத்தில் மிகக் கவலையோடு அமர்ந்து கொண்டிருக்கிறார்... முதலமைச்சர் பதவி மிகப் பொறுப்புள்ள பதவி... பொறுப்பு என்பது பொருப்பாக (மலையாக) மாறி இருக்கும் உயர்பதவி அது! செய்வதறியாது  திணறுகிறார்... அந்த நேரத்தில் ஒரு ஒளிப்பந்து அவர் அலுவலக அறை முன் தோன்றி அந்தரத்தில் உருள்கிறது... அந்த ஒளிப்பந்திற்குள் இருந்து சுவாமி வெளியே வர.. "நீ புட்டபர்த்திக்கு என்னிடம் வா" என அழைப்பு விடுக்கிறார்... 

பிறகு சுவாமி ரூபமும் ஒளியும் மறைந்து விடுகிறது! இது கனவா? பிரமையா? என தன்னைத் தானே சோதித்துப் பார்க்கிறார்... அவரால் அந்த பேராச்சர்யத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை! உடனே தனது காரியதரிசையை அழைத்து மூன்று டிக்கெட்டுகள் பெங்களூருக்கு எடுக்கும் படிச் சொல்ல... சிக்கிம் முதலமைச்சர்... அவரின் பெர்சனல் காரியதரிசி... ஒரு புகைப்படக் கலைஞர் என மூவரும் சிக்கிம் டூ பெங்களூர்... விமானம் பறக்கிறது... அதை விட சுவாமியை தரிசிக்கும் முதலமைச்சரின் பேரார்வம் விமானத்தை முந்திக் கொண்டு பெங்களூர் விரைகிறது!

பெங்களூரில் ஒரு ஹோட்டல். சிக்கிம் முதலமைச்சர் தங்குகிறார்! காரியதரிசையை புட்டபர்த்திக்கு சென்று நேரம் வாங்கித் தர அனுப்புகிறார்... சுவாமியும் பர்த்திக்கு 10 மணிக்கு வரட்டும் என நேரம் குறித்துக் கொடுக்க... நேர்காணல் அறையில்... சிக்கிம் முதலமைச்சர் நர் பகதூர் பண்டாரிக்கு ஒரு சிருஷ்டி வைரமோதிரமும்... ஒரு தங்கச் சங்கிலியையும் தந்தருள்கிறார்...! பிறகு பிரசாதம் தர... அதைக் கொஞ்சம் எடுத்து மீதத்தை தன் குடும்பத்திற்கு கொடுப்பதற்கு அவர் நினைப்பதற்குள்.. "நீயே முழுவதும் சாப்பிடு... வீட்டிற்கு வேறு தருகிறேன்" என புன்னகைத்து சுவாமி இமயப்பனியாய் உருகி உருகி பரிவு காட்டுகிறார்! சுவாமியின் பரிவுக்கு முன் எரிமலையே பனிமலையாய் சுவாமி காலடியில் குழைந்து வழிபடும்!

 


பிறகு சுவாமி அவரின் தோளை தடவிக் கொடுத்தபடி "சிக்கிம் கோ பலா கரோ... பலா கரோ" என கட்டளை இடுகிறார்! சிக்கிம் மாநிலத்தை பலப்படுத்தச் சொல்கிறார் சுவாமி.. அதே நொடியில் சுவாமியின் அந்த திருத்தீண்டுதலிலேயே அவரின் கைகளும் பலமடைந்துவிடுகின்றன...! கைப் பிரச்சனையை அவர் சுவாமியிடம் பேசவும் இல்லை... அனைத்தும் அறிந்த சுவாமி எதுவும் கேட்காமல் அதைத் தன் திருச்செயலாலேயே குணமாக்கிவிடுகிறார்! 

பிறகு ஏப்ரல் இறுதியில் சிக்கிம் செல்லும் முதலமைச்சர் தனது சுவாரஸ்ய சுவாமி அனுபவத்தை தனது மாநிலத்திலேயே ஈஸ்வராம்பா தினத்தன்று பகிர... அதை நேரடியாக கேட்ட டார்ஜலிங் கீதாஞ்சலியை சுவாமி சங்கல்பத்தோடு சந்திக்கும் நூலாசிரியர் அந்த நூதன அனுபவத்தைப் பதிவு செய்கிறார்! அந்த டார்ஜலிங் கீதாஞ்சலியின் ஊர் "சாம்சிங்காஸ்" அதில் வாழும் 90 சதவிகித மக்களும் சுவாமி பக்தர்களே என்பது குறிப்பிடத்தக்கது! 

பக்திக்குப் பாலமிடும் நேபாளமும்... முக்திக்குத் தாளமிடும் இமயக் காற்றலைகளும் சிக்கிம்வாசிகளை ஆன்மீக வழியில் முன்னேற்ற நாள்தோறும்  திருக்கொஞ்சுதல் நடைபெறுகிறது...!

(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் - 3 / பக்கம் : 51 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு) 


ஆள்பவர்களை சுவாமி ஆள வைக்கிறார்..

வாழ்பவர்களை சுவாமி வாழ வைக்கிறார்...

சுவாமியின் திருச்சங்கல்பம் இன்றி ஒரு பூ கூட பூமியில் மலர்வதில்லை! சுவாமி அனைத்தும் அறிபவர்... எப்போது எதை செய்ய வேண்டும் என நன்கு தெரிபவர்.. பக்தர் சொல்லித்தான் தன் பக்தருக்கு ஒரு பிரச்சனை என அறிய வேண்டிய அவசியமே சுவாமிக்கு இல்லை... தகுந்த கர்ம கரைதலை சுவாமியே சில நாட்களில் பக்தர் அனுபவிப்பதன் வாயிலாக திருவினை புரிகிறார்! சுவாமி திருவுடல் எடுத்து அவதரித்து வந்ததற்கான அதிமுக்கிய காரணம் நமக்கு மனப் பக்குவத்தை அளிக்கவே! தர்ம ரட்சணத்திற்கு மனப்பக்குவமே மிகப் பெரிய அஸ்திவாரம் இடுகிறது! கலி இருளை பிரேம வெளிச்சமே தன் நீள் விரலால் தொடுகிறது!! இருளைச் சுடுகிறது!


  பக்தியுடன்

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக